Tuesday 12 March 2013

நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம்..




ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம், இரண்டு வாரங்களில், ஒரே வாரத்தில் குறைக்கலாம்னு ஏகப்பட்ட விளம்பரங்களை டி.வியிலயும் பேப்பர்லயும் பாத்திருக்கேன். இன்னிக்கு காலைல ஒரு டி.வியில் ஆறு மணி நேரத்தில் உங்கள் இடுப்பு சுற்றளவு மற்றும் தொப்பையை ஆறு இன்ச் அளவுக்கு குறைக்கலாம்னு (நோ ஆப்பரேசன், நோ உடற்பயிற்சி, நோ மாத்திரை / இது ஒரு சர்வதேச சிகிச்சைன்னு வேற சொன்னாங்க..)ஓடிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பாத்து உண்மையிலயே 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.' (வடிவேலு பாணியில் படிக்கவும்) 

ஆனா.. தொப்பையை அப்படியெல்லாம் குறைக்க முடியாதுங்கறதுதான் நிஜம். அந்த விளம்பரத்தை நம்பி போனா உங்க பர்சோட கணம் ஒரு சில வினாடிகள்ல குறைஞ்சுடும்ங்கறதுக்கு நூத்துக்கு நூறு சதவீதம் கேரண்ட்டி குடுக்க முடியும். 

தொப்பைங்கறது என்ன? மனிதர்களோட உடல்ல சேர்ற அதிகப்படியான கொழுப்பு ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில சேகரமாகுது. அதை தொப்பைங்கறோம். பெண்களுக்கு பின்பக்கம், தொடைகள்ல சேகரமாகுது. அதனால அந்த பகுதிகள் பெருசாகுது. அதை குறைக்கறது ஒண்ணும் கஷ்டமான விஷயம் கிடையாது. நினைச்சவுடனே குறைச்சிடணும்னு பேராசை படறவங்களை குறி வெச்சிதான் இத்தகைய விளம்பரங்கள் வருது. 

தொப்பை வளர வளர, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், முதுகுவலி, மூட்டுவலின்னு ஏகப்பட்ட பிரச்னைகளும் வளரும். அதனால.. தொப்பையை குறைச்சே ஆகணும்ங்கறதில எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. ஆனா.. அது எப்படிங்கறதுதான் விஷயமே. 

தொப்பை ஓவர் நைட்டுல உருவாகறது இல்லை. சில மாதங்கள் தேவைப்படுது. அதே மாதிரிதான் அவசரப்படாம கீழ் சொல்லியிருக்கற விஷயங்களை கடைபிடிச்சா சில மாசங்கள்ல உங்க தொப்பை காணாம போயிடும். 

1. தொப்பையை குறைக்கறேன் பேர்வழின்னு எந்த காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்க்காதீங்க. அதனால பிரச்னைகள் கூடுமே தவிர குறையாது. பசியெடுக்கும் போது அளவா சாப்பிடுங்க.. சாதத்தை குறைச்சு, காய்கறி பழங்களை அதிகம் சாப்பிடுங்க. நொறுக்குத் தீனி சாப்பிடணும் தோணினாலும், காய்கறி, பழங்களையே சாப்பிடலாம். 

2. சாப்பாட்டுல வர்ற கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை ஒதுக்காதீங்க. அதையும் சாப்பிடுங்க. முடிஞ்சா வெறும் வாயில அவ்வப்போது மிளகை மென்னு சாப்பிடுங்க. கறிவேப்பிலை செஞ்சு அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். 

3. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணி குடிங்க (குடிநீர் என்பதை கவனத்தில் கொள்க)

4. தொப்பையை குறைக்கறதுக்கு டயட்லாம் இருக்கத் தேவையில்லைதான். அப்படி இருந்துதான் தீரணும்ங்கறவங்க.. சாப்பாட்டு அளவை குறைக்காம பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்க. 

5. வாய்ப்பும் வசதியும் இருக்கறவங்க தினசரி கொஞ்ச நேரம் புட் பால், டென்னிஸ் மாதிரியான விளையாட்டுக்களை விளையாடுங்க. (கேரம், செஸ், பல்லாங்குழியெல்லாம் இதுக்கு சரிபடாது)

6. சிகரெட், தண்ணியை விட்ருங்க ( இது டாஸ்மாக் தண்ணி). முடிஞ்சா தினசரி கொஞ்ச நேரம் யோக பண்ணலாம்.

7. அப்பறம் ரொம்ப முக்கியமா.. தினசரி குறைச்ச பட்சம் 45 நிமிஷம் நடையோ நடைன்னு நடங்க. இல்லைன்னா.. வேர்க்க விறுவிறுக்க அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்ங்க.

8. மாத்திரை மருந்ததால எல்லாம் நிச்சயமா தொப்பையை குறைக்க முடியாது. முடியாது நான் மருந்து சாப்பிட்டே தீருவேன்னு பிடிவாதம் பிடிக்கறவங்க.. காலையில எழுந்ததும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணியில (குடிநீர்) எலுமிச்சை சாறு கலந்து, ரெண்டு டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயத்துல குடிச்சிட்டு வாங்க. தொப்பை குறையும். 

இதையெல்லாம்.. செஞ்சும் தொப்பை குறையலைன்னா.. மேற்படி விளம்பரதாரர்களை அணுகலாம். உங்க பர்சோட எடையை வினாடிகள்ள குறைச்சிடுவாங்க. 

4 comments:

  1. நடையா நடந்து, உணவுக் கட்டுப்பாடு கொஞ்சம் பண்ணி இப்ப நான் கொஞ்ச்ச்சம் தொப்பைய குறைச்சிருக்கேன். இதையே கன்டின்யூ பண்ணி இன்னும் கம்மி பண்ண உத்தேசம். இந்த விளம்பரங்களை நம்பி ஏமாறுறவங்க நிறையப் பேர் இருக்காங்க. சரியா, அழகா எச்சரிக்கை மணி அடிச்சிருக்கீங்க தாஸ்! மிகப் பயனுள்ள பகிர்வு!

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள். நமக்கும் தொப்பை குறைய மாட்டேங்குது. இன்னிக்கு தான் ஒரு பதிவுல படிச்சேன் - திரிபலா சூரணத்தினை வயிற்றில் தடவிக்கொண்டு சில நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டுமாம்... இது போல தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை குறையுமெனெ எழுதியிருக்கிறார்.....

    ReplyDelete