வில்லியனூர் மாதா திருத்தலம் பாண்டிச்சேரியில் இருந்து மேற்கே விழுப்புரம் செல்லும் சாலையில் சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் சிவபெருமான் ஆலயத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இத்திருத்தலம் உள்ளது
புதுச்சேரியில் அப்போதிருந்த மறைபோதக சபையினர் வில்லியனூரில் ஆலயம் அமைக்க வேண்டி சிறு நிலத்தினை 1867ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினர். இந்த இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்கு எதிர்ப்பு எழுந்ததால், திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
புதுவையைச் சேர்ந்த மருத்துவரான லெப்பீன் துரை, தனது குழந்தைக்கு ஏற்பட்ட கொடிய நோயை நீக்கி, மேரி மாதா உயிர்ப் பிச்சை அளித்தாக நம்பினார். எனவே, அவர், கோயில் கட்டுவதற்குப் பொருளுதவி செய்தார். இதனைப் பெற்றுக்கொண்ட அப்போதைய மறைபோதக சபையினர் வில்வநல்லூர் என்றழைக்கப்பட்ட வில்லியனூரில் மேரி மாதாவுக்காக தேவாலயம் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்கினர்.
1858ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில், மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற சிறுமிக்கு மேரி மாதா காட்சி கொடுத்தார். அதன் நினைவாக, லூர்துநகரில், தேவாலயம் கட்டப்பட்டது. அங்கு வீற்றிருக்கும் அன்னை மேரி, லூர்து மாதா என்று அழைக்கப்படுகிறார்.
எனவே, லூர்து மாதா பெயரில் வில்லியனூரில் தேவாலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பெர்னதெத்தின் உறவினரான தார்ப்ஸ் அடிகளார் இங்கு பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1877, ஏப்ரல் 4 அன்று ஆலயத்தின் கட்டுமான வேலைகள் முடிவடைவதற்கு முன்பாகவே பிரான்ஸ் நாட்டில் இருந்து பெரிய பெட்டியில் லூர்து அன்னையின் சொரூபம் கப்பல் மூலமாகப் புதுச்சேரிக்குக் கொண்டுவரப்பட்டது. கப்பலில் இருந்து அந்தச் சொரூபத்தை இறக்கியபோது, அது மூன்று முறை கீழே விழுந்தது. எனினும், மாதா சொரூபத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இது இன்று வரை பெரும் அதிசயமாகவே கருதப்படுகிறது.
1877, ஏப்ரல் 7 அன்று அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டு ராணுவ இசைக் கருவிகள் முழங்க, வாண வெடிகள் அதிர, பவனியாக வில்லியனூருக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம் கிறிஸ்தவர்கள் தேவ அன்னைக்கு பிரமாண்டமாய் வரவேற்பளித்துத் தங்கள் உற்சாகத்தினை வெளிப்படுத்தினர்.
தற்பொது அருமார்த்தபுரம் என்றழைக்கப்படும் அருமார்த்த பிள்ளைச்சாவடியிலிருந்து சுல்தான்பேட்டை வழியாக வில்லியனூருக்கு தேவ அன்னையின் சொரூபம் கொண்டு செல்லப்படவிருந்தது. ஒரு சிலர் இதை எதிர்த்ததன் காரணமாக இரு தரப்பினரிடையே கலகம் வெடித்தது. அப்போது தேவ அன்னையின் சொரூபம் தானாகத் திரும்பி வேறு வழியைக் காட்டியது என்று பக்தர்கள் கூறிப்பிடுகிறார்கள்.
தற்போது வி. மணவெளி என்றழைக்கப் படும் பகுதி அப்போது குறுகிய பாதையாக இருந்தபோதிலும் அவ்வழியாக மாதா சொரூபம் பவனியாக கொண்டு செல்லப்பட்டு, கணுவாப்பேட்டை என்ற இடத்தில் பக்தர்களின் பார்வைக்காகப் பந்தலில் வைக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின்னர், ஆலயத்தின் பீடத்தில் அருட்தந்தை குய்யோன் தாவீது நாதர் அவர்களால் தேவ அன்னையின் சொரூபம் தூக்கி நிலைநிறுத்தபட்டது.
1877, ஏப்ரல் 8 அன்று புதுச்சேரியின் பேராயர் மேதகு லெவணான் ஆண்டகை அவர்கள் திருமுறை ஒழுக்கங்களை நிறைவேற்ற, லூர்து அன்னையின் சொரூபத்தை அர்ச்சித்து கெபியில் அரியணையேற்றினார்.
1885ஆம் ஆண்டு பேராயர் லெவணான் ஆண்டகை ரோமாபுரி சென்றபோது, அப்போதிருந்த போப்பாண்டவர் 13ஆம் சிங்கராயரிடம் வில்லியனூரில் நடைபெறும் அற்புத அதிசயங்களை எடுத்துச் சொல்லி வில்லியனூர் புனித லூர்தன்னைக்கு முடிசூட்ட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வில்லியனூரில் உள்ள லூர்து அன்னை சொரூபத்திற்கு முடிசூட்டுவதற்கான உத்தரவினை 1886ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி போப்பாண்டவர் 13ஆம் சிங்கராயர் வழங்கினார். அதன்படி, வில்லியனூர் லூர்தன்னைக்கு சொரூபத்திற்கு முடி சூட்டப்பட்டதுடன், ஆலயம் திருத்தலமாகவும் உயர்த்தப்பட்டது.
ஆசியக் கண்டத்திலேயே சில சொரூபங்கள்தான் போப்பாண்டவரின் பெயரில் முடிசூட்டப்பட்டுள்ளன. அவற்றில் வில்லியனூரில் அமைந்துள்ள புனித லூர்தன்னை சொரூபமும் ஒன்று.
ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது.
ஆசியாவிலேயே, குளத்துடன் அமைந்துள்ள தேவாலயம், வில்லியனூரில் மட்டும்தான் உள்ளது. ஆரம்ப காலத்தில், கற்களால் கட்டப்பட்டிருந்த இந்தக் குளத்தின் கரைகள், 1923ஆம் ஆண்டில், செங்கற்களால் கட்டப்பட்டன. 1924ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில் இருந்து லூர்து அன்னையின் சொரூபம் வரவழைக்கப்பட்டு குளத்தின் மையப் பகுதியில் உள்ள தூண் மீது வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில், லூர்து நகரில் மாதா காட்சி கொடுத்தபோது, அங்குள்ள சுனையில் உற்பத்தியான புனித நீர் இந்தக் குளத்தில் ஆண்டுதோறும் கலக்கப்படுகிறது.
வில்லியனூர் புனித லூர்தன்னை திருத்தலத்தின் சிறப்பாக ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் புதுவையில் இருந்து பாதயாத்திரை நடத்தப்படுகிறது. 1977ஆம் ஆண்டு புயலினால் புதுவைக்கு மாபெரும் பேரழிவு ஏற்படுமென்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்தபோது, அப்போதிருந்த பேராயர் வெண்மணி செல்வநாதர் ஆண்டகை, புயலில் இருந்து புதுவையைக் காப்பாற்ற தேவ அன்னையிடம் ஜெபிக்கும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
புயலில் இருந்து காப்பாற்றப்பட்டால் வில்லியனூருக்குப் பாதயாத்திரையாக வந்து நன்றி செலுத்துவோம் என்றும் வாக்குக் கொடுத்தார். இதனால் புதுவையைத் தாக்கவிருந்த புயல் வேறு இடம் நகர்ந்ததாக பக்தர்கள் நம்புகிறார்கள். இதையடுத்து, 1977ஆம் ஆண்டு முதல் பாதயாத்திரை தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது.