Showing posts with label உடல்நலம். Show all posts
Showing posts with label உடல்நலம். Show all posts

Thursday, 15 March 2018

பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பாதுகாப்பனதா ?

கிராமங்கள்ல வாய்க்கால், கிணறு, குளம், ஆறுகள்ல இருக்கிற தண்ணியை ரெண்டு கையாலயும் அப்படியே அள்ளி குடிச்ச காலம் உண்டு. அதனால யாருக்கும் எந்த பிரச்சினையும் வந்தது இல்லை. ஆனா இப்போ அப்படியான காலம் இல்லை. தண்ணியை காசு கொடுத்து வாங்கி குடிக்கிற நிலைக்கு வந்துட்டோம்.

பிளாஸ்டிக் பாட்டில்,  பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்தறது இப்போ நாகரீகமாவும், ஃபேஷனாவும் மாறிடுச்சு.அதுல, பல ஆபத்துக்கள் ஒளிஞ்சிருக்கிறதா கூறுது ஆய்வு ஒண்ணு. அண்மையில அமெரிக்காவில் உள்ள ‘ஆர்ப்  மீடியா’ என்ற பத்திரிகையாளர் அமைப்பு நியூயார்க் பல்கலைக்கழகத்தோட  இணைஞ்சு ஒரு ஆய்வு மேற்கொண்டது.

அதாவது, உலகம் முழுவதும் உள்ள 11 முன்னணி நிறுவனங்களோட 250 குடிநீர் பாட்டில்களை சோதனை பண்றதுதான் அ ந்த ஆய்வு. அந்த பரிசோதனையின் முடிவுல பல அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவந்திருக்கு. அது என்னன்னா, ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 93 சதவீத தண்ணீர் பாட்டில்கள்ல பிளாஸ்டிக் மற்றும் ரசாயன துகள்கள் ஏராளமா இருந்த்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கு. அதாவது, பாலிபுரோப்லின், நைலான், பாலித்தீன், டெரபதலேட் (பெட்)  ஆகிய ரசாயன துகள்கள் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரில் கலந்திருந்திருச்சாம்.

சராசரியா ஒரு லிட்டர் தண்ணீரில் 0.1 மில்லி மீட்டர் அளவு கொண்ட 10.4 பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததாம். சில பாட்டில்கள்ல ஒரு லிட்டர் நீரில் 10 ஆயிரம் துகள்கள் கூட இருந்தனவாம்.

இந்த துகள்களை செரிமானம் செய்யும் சக்தி மனித உடலுக்கு கிடையாதாம். ரத்த சிவப்பணுவை விட சிறிய அளவிலான இந்த துகள்கள், குடல்வழியாக நேரடியா ரத்த குழாய்களுக்குள் போய் கலந்துடுமாம். அப்புறம், அந்த துகள்கள், ஒவ்வொரு உறுப்புகளிலும் தேங்கி,  ஈரல், சிறுநீரகம் போன்ற மோசமான நோய்கள் மனிதனை தாக்குமாம். அதனால, பாட்டில் அடைச்சு விக்கப்படற தண்ணீரும் பாதுகாப்பானதில்லைன்னு ஆய்வாளர்கள் குறிப்பிடறாங்க.

நீதி : பளபளப்பா இருக்கிற எதுவுமே பாதுகாப்பானது இல்லை. (அடடே!)



Monday, 9 October 2017

கொசுவுக்கு பிடிக்காத செடிகள்

கொசுவை விரட்ட வீடுகளில் வைக்கப்படும் ரசாயனம் கலந்த கொசுவர்த்தி சுருள் போன்ற பொருட்கள் மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. நமக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், கொசுக்களுக்கு பிடிக்காத, ஆனால், நமக்கு பயன்தரக்கூடிய சில  செடிகளை வீடுகளில் வளர்ப்பதன் மூலம் கொசுக்களை எளிதாக விரட்ட முடியும். அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?

காட்டுத்துளசி 
நிறைய மருத்துவக் குணங்களைக் கொண்டிருக்கும் காட்டுத்துளசி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. கொசுவையும், சிறு பூச்சிகளையும் விரட்டும் தன்மைகொண்டது. இதன் சாறு, பூச்சி விரட்டிக்குப் பயன்படுத்தப்படும் டீட்டைவிடப் (DEET-Diethyltoluamide) பலமடங்கு சக்தி வாய்ந்தது. காட்டுத்துளசியின் வாசம் இருக்கும் இடத்தில் கொசுக் நெருங்காது.

ஓமம் (Basil)
ஓமத்தின் விதை சமையலுக்கு நல்ல நறுமணத்தைத் தரக்கூடியது. ஓம இலைகளில் இருக்கும் வாசனை, கொசுக்களை விரட்டும். இதை வளர்க்க சின்ன மண்பாண்டம் போதும்.
புதினா
சின்ன தொட்டியில் நட்டு, ஜன்னல் ஓரத்தில் வைத்தால் போதும். சீக்கிரம் வளர்ந்துவிடும். இதன் வாசனைக்கு கொசுக்கள் உள்ளே வராது.

மாரிகோல்டு
கண்களைக் கவரும் மலர்களைக் கொண்ட இந்தச் செடி அழகுக்காக மட்டும் வளர்க்கப்படுவதில்லை. இந்தச் செடியை வீட்டுத் தோட்டத்தைச் சுற்றி நட்டுவைத்தால் கொசுவிடம் இருந்து நம்மைப் பாதுகாகாக்கலாம்; அதோடு, இந்த மாரிகோல்டு செடியால் மற்ற செடிகளுக்கும் பாதுகாப்பு. இந்தச் செடி இருக்கிற இடத்தில் செடிகளை அழிக்கும் பூச்சிகளும் அண்டாது.

லாவெண்டர் (Lavender)
லாவெண்டர் மணம் கொசுக்களை அண்ட விடாது, அதனால்தான் கொசு கடிக்காமல் இருக்க, நாம் பூசிக்கொள்ளும் நிறைய தோல் பூச்சுக்கள், லாவெண்டர் மணத்தில் இருக்கின்றன. இந்தியாவில் இது வளரும். செடிகளுக்கான பொட்டிக்கில், லாவெண்டர் செடி கிடைக்கும்.

சிட்ரோசம்
ஐந்து அல்லது ஆறு அடி வரை வளரக்கூடியது சிட்ரோசம் செடி. இதன் நறுமணம் கொசுவை விரட்டப் பயன்படும், காரணம் இதிலிருந்து எடுக்கப்படும் `சிட்ரோனெல்லா' (Citronella) எனும் ரசாயனம் சிறந்த கொசுவிரட்டி. இந்தத் தாவரத்திலிருந்து கிடைக்கும் மெழுகை ஏற்றினாலும், அதன் வாசத்துக்குக் கொசுக்கள் அண்டாது.

கற்பூரவல்லி
சாதாரணமாக எல்லாச் சூழலிலும் வளரக்கூடியது. நிறைய இடமோ, பொருள் செலவோ பிடிக்காத இந்த செடியின் வாசமும், இலைச் சாறும் கொசுவுக்குப் பிடிக்காது. 10 அடி தூரம் தாண்டியும் இந்தச் செடியின் மணம் மணக்கக்கூடியது. 

ரோஸ்மேரி
அழகிய செந்நீல நிறப் பூக்கள்கொண்ட இந்தச் செடியின் மணம், கொசுவைத் தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது..

செவ்வந்தி
இந்த பூச்செடியும் சிறந்த பூச்சிவிரட்டி. பயிர்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க, இந்த செடியை ஓரங்களில் நட்டு வைத்தால், பயிர்கள் பாதுகாக்கப்படும். கொசுக்களுக்கும் இந்த செடி எதிரி. இதேபோன்று கற்றாழை செடியும் வளர்க்கலாம்.

இதைத் தவிர, இயற்கை முறையில் கொசுக்களை விரட்ட மேலும் சில வழிகளும் உள்ளன.

✍  கற்பூரவல்லி இலைச் சாற்றை சோற்றுக் கற்றாழைச் சாற்றுடன் சேர்த்து தண்ணீரில் கலந்து பாட்டிலில் ஊற்றி, வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் கொசு வராது. 

✍  புகைப் போடுதல் மிகவும் பழமையான முறை. யூகலிப்டஸ் இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து புகை போடலாம். வேப்ப இலை, நொச்சி இலைகளை நெருப்புக் கங்குகளில் போட்டுப் புகை போடலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்துப் புகை போடலாம். ஆஸ்துமா நோயாளிகள், சுவாசப் பிரச்னை உள்ளவர்கள் புகை போடுவதைத் தவிர்க்கவேண்டும்.

✍  வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை,  குப்பைமேனி ஆகியவற்றின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொள்ளவேண்டும். அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சினால் பச்சிலைத் தைலம் கிடைக்கும். இந்தப் பச்சிலைத் தைலத்தை கற்பூரத்துடன் சேர்த்து சாம்பிராணி புகையாகப் போடலாம். 

✍  தேங்காய் எண்ணெய்,  லாவண்டர் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், வேப்பெண்ணெய் போன்றவற்றில் ஒன்றை கை, கால்களில் தேய்த்துக்கொள்ளலாம். கொசு அண்டாது. 

✍  புதினாவுடன் சிறிது நீர் சேர்த்து அரைக்க வேண்டும். கிடைக்கும் சாற்றை வீடு முழுவதும் தெளிக்கலாம். எலுமிச்சை பழத்தைப் பாதியாக வெட்டி ஜன்னல், கதவுகளின் மூலையில் வைக்கலாம். இவற்றிலிருந்து வரும் வாசனையும் கொசுவை விரட்டும். 






Saturday, 7 October 2017

டெங்குவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள செய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


சிறிதளவு தேங்காய் எண்ணெய்யுடன், கற்பூரத்தைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சி, அதை முழங்காலுக்குக் கீழே தடவிக்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைக்கும் இந்த எண்ணெய்யைத் தடவலாம்.

மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற காரமான மூலிகைப் பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் கிழங்கை நன்றாக உரசி, கரைத்து ஒரு கைக்குட்டையில் நனைத்துக்கொள்ள வேண்டும். கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலம் இவை மூன்றையும் அரைத்துப் பொடியாக்கி அந்தக் கைக்குட்டைக்குள் வைத்து குழந்தைகள் பயன்படுத்த கொடுக்கவும். இதை அவர்கள் நுகரும்போது, காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க முடியும்.

அடிக்கடி தேங்காய் எண்ணெய்யை உடம்பில் தடவிக்கொள்ள வேண்டும்.

நிலவேம்பு கசாயத்தைத் தொடர்ந்து மூன்று நாள்கள் குடிப்பது நல்லது.


நிலவேம்பு குடிக்கும் முறை:

20 கிராம் சூரணத்தை 100 மிலி தண்ணீர் ஊற்றி 25 மிலி அளவுக்கு வருமாறு சுண்டக் காய்ச்சவும். இதைக் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். குடித்த பின்னர் கசப்பு நீங்க தேன் அல்லது வெல்லத்தை எடுத்துக்கொள்ளலாம். ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு 10 மிலி கொடுக்கலாம்.


Sunday, 10 September 2017

தரமான நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பது எப்படி?

டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல்களை தீர்க்க கிடைத்த அரிய வரப்பிரசாதமான நிலவேம்புக் குடிநீர் சரியாகவும் தரமாகவும் இல்லாவிட்டால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. தரமான நிலவேம்பு குடிநீரில் உள்ள மூலப் பொருட்கள் என்ன, அதை எப்படி தயாரிப்பது தெரியுமா?

மூலப்பொருள்கள்
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகை தாவரம்),  பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு,  மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான மூலப்பொருள்களாகும்.
மருத்துவக் குணங்கள்
இந்த ஒன்பது மூலப்பொருள்களில் நோய் தீர்ப்பதில் நிலவேம்புக்குத்தான் முக்கியப் பங்கு உள்ளது.  இதனால்தான் இதை நிலவேம்புக் குடிநீர் என்கிறோம். இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. 
கோரைக்கிழங்கு , பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்
வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம் ஆகியவை உடல் ஜுரத்தால் ஏற்படும்  சூட்டைத் தணிக்கும். சுக்கு, மிளகு ஆகியவை உடல் சூட்டை அதிகரிக்கும் இயல்பு உடையது. ஆனால், வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம்  ஆகியவை இந்த சூட்டைத் தணித்து சமநிலையில் பராமரிக்க உதவுகிறது

தயாரிக்கும் முறை
இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். 
அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து,  அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர்  ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார். 
எப்படிக் குடிக்க வேண்டும்?
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல,   முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை,  அடுத்த நாள்வரை  வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது. 
எப்போது, எவ்வளவு  குடிக்கலாம்?
நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு  10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம்.
நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ளும்.

.


Sunday, 6 August 2017

கீரைகளும் அதன் மருத்துவ பயன்களும்


அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
காசினிக்கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.
கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.
புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.
முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
வல்லாரை கீரை  - மூளைக்கு பலம் தரும்.
முடக்கத்தான்கீரை - கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும்.
புதினாக்கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும்.
தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும்.
முருங்கை கீரை - சளி, இருமலை துளைத்தெரியும்.
முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும்.
பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
மணலிக்கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும்.
வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
தூதுவலை - ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
தவசிக்கீரை - இருமலை போக்கும்.
சாணக்கீரை - காயம் ஆற்றும்.
வெள்ளைக்கீரை - தாய்பாலை பெருக்கும்.
விழுதிக்கீரை - பசியைத்தூண்டும்.
கொடிகாசினிகீரை - பித்தம் தணிக்கும்.
துயிளிக்கீரை - வெள்ளை வெட்டை விலக்கும்.
துத்திக்கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
காரகொட்டிக்கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
மூக்கு தட்டைகீரை - சளியை அகற்றும்.
நருதாளிகீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.



Sunday, 23 July 2017

ஜிகா ஜூரம்


   சிக்குன்குன்யா, டெங்கு, வரிசையில் லேட்டஸ் அச்சுறுத்தல் ஜிகா. ‘தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரியில் ஒருவர் ஜிகா காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார், இன்னும் நான்கு பேருக்கு அதே அறிகுறிகள்...’ என்றெல்லாம் பீதி கிளப்புகின்றன பிரேக்கிங் நியூஸ்கள். ஜிகாவின் சரித்திரம் தெரியுமா?
      
     1947-ம் ஆண்டு, முதன்முதலாக உகாண்டா நாட்டில் இருக்கும் ‘ஜிகா’ காடுகளில் வாழும் ரீஸஸ் குரங்குகளுக்கு ஜிகா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஜிகா காடுகளில், இந்த வைரஸ் கண்டறியப்பட்டதால், ‘ஜிகா வைரஸ்’ என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் மனிதர்களுக்குள்ளும் ஊடுருவி, ஆப்பிரிக்கா நாடுகளில் பல்கிப் பெருகியிருந்த து 1952-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஜிகா, அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு தனது எல்லைகளை விஸ்தரித்து ஜிகா. தற்போது, 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா பரவியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு பிரேசில் நாட்டில் நோய்த் தாக்கம் ஏற்பட்டபோதுதான் ஜிகா பரவலான கவனம் பெற்றது.

  காய்ச்சல், தோலில் சிவப்பு நிறத்தில் தடிப்புகள், தசைகளிலும் மூட்டுகளிலும் வலி, உடல் சோர்வு, கண் சிவத்தல், தலைவலி போன்றவை ஜிகா தாக்குதலின் அறிகுறிகள். டெங்கு நோயின் அறிகுறிகளும் ஜிகாவுக்கான அறிகுறிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை.  

  ஜிகா கர்ப்பிணிகளுக்கு பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. கர்ப்பிணிகளை ஜிகா வைரஸ் தாக்கும்போது, கருவிலிருக்கும் குழந்தையையும் அது பாதிக்கிறது.  சிறிய தலையுடனும், (Microcephaly), மனவளச்சி குன்றிய நிலையிலும் குழந்தைகள் பிறக்கும் என்றும் எச்சரிக்கிறது மருத்துவ உலகம்.  ‘கில்லியன் - பேர் சிண்ட்ரோம்’ (Guillain – Barre syndrome) எனும் நரம்பியல் சார்ந்த நோயையும் ஜிகா வைரஸ் ஏற்படுத்துகிறது. 2015-ம் ஆண்டு, பிரேசிலில் ஜிகா வைரஸ் பரவியபோது,  குழந்தை பெறுவதை தள்ளிப்போடும்படி பெண்களை அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.   

   சிக்குன்குன்யா நோய்களைப் பரப்பும் அதே ஏடிஸ் (Aedes) கொசுக்கள்தான் ஜிகா வைரஸையும் பரப்புகின்றன. எனவே, கொசுக்களை நெருங்க விடாமல் செய்வதுதான் ஜிகாவை தடுப்பதற்கான முதன்மை மற்றும் முக்கியமான வழி. சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது அடுத்த வழி. சுற்றுப்புற சுகாதாரத்தை பேணுவது சிறந்த வழி.
   
   ரத்தம் செலுத்துதல் மூலமாகவும், உடலுறவு மூலமாகவும் ஜிகா வைரஸ் கிருமி பரவும் என்பது கூடுதல் தகவல். எனவே, நோய் வந்தபின் வருந்துவதை விட, வருமுன் காப்பதே சாலச் சிறந்த்து என சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?


Sunday, 16 July 2017

இதம் தரும் இஞ்சி


      `Zingiber officinale’ என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட இஞ்சிக்கு, `அல்லம்’, `ஆசுரம்’, `ஆத்திரகம்’, `ஆர்த்திரகம்’, `கடுவங்கம்’ என வேறு பெயர்களும் உண்டு. பூமிக்குக் கீழே விளையும் இஞ்சிக்கு, தமிழ்நாட்டுச் சமையலில் முக்கிய இடம் உண்டு.
      மருத்துவ குணம் கொண்ட இஞ்சி துவையல், குழம்பு, பச்சடி, கஷாயம், ஜூஸ்... எனப் பல வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது.
      இஞ்சியின் சாறை வடிகட்டி, அதன் தெளிந்த நீரை எடுத்து, தேன் சேர்த்துக் குடித்துவந்தால், குறைந்த ரத்த அழுத்தம் இயல்புநிலைக்குத் திரும்பும்.
      இஞ்சிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தேன், சர்க்கரை கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ் உடல்நலத்துக்கு நன்மை தரக்கூடியது.
      இஞ்சியை வெறும் சாறாகவோ, ஜூஸ் செய்தோ அருந்திவந்தால் உடல் எடை குறையும்.
      இஞ்சி சாறு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். சுவாசப் பிரச்னைகளை நீக்கும். புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.  
      பசியின்மை, அஜீரணகோளாறு, வயிற்றுப்பொருமல், தொண்டை கம்மல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இஞ்சி அருமருந்து. இஞ்சி பசியைத் தூண்டுவதோடு, உமிழ்நீரைப் பெருக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு வெப்பத்தை அளித்து, குடலில் உள்ள வாயுவை நீக்கும்.  கபம், பித்தம், வாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்.