Showing posts with label கதைகள். Show all posts
Showing posts with label கதைகள். Show all posts

Sunday, 8 October 2017

குட்டிக்கதை

குரங்கு மனம் 

   ஒரு முறை காடு வழியே சென்ற ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்து அவன் ஒரு மரத்தின் மேல் ஏறினான். உச்சியை அடைந்தவனுக்கு ஒரு அதிர்ச்சி. அங்கே ஒரு பெரிய மனித குரங்கு உட்கார்ந்திருந்தது.
ᐅ
    நடுநடுங்கிய மனிதன் அந்த மனித குரங்கிடம் அடைக்கலம் கேட்டான். அந்த குரங்கு, “கவலை படாதே நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். என்னை அண்டி வந்த உனக்கு பாதுகாப்பு தருவேன்” என்றது.

   இரவு பொழுதும் வந்தது. புலியோ மரத்தின் கீழே பசியோடு இருந்தது.  ஆனால், இடத்தை விட்டு நகர்வதாக இல்லை. மனிதனும் குரங்கும் மரத்தின் மேலேயே மாறி மாறி உறங்க முடிவு செய்தனர். மனிதன் தூங்கிய போது குரங்கு காவல் காத்தது. குரங்கு தூங்கும் போது மனிதன் காவல் காத்தான்.

   அவர்களை பிரித்தாலன்றி நமக்கு உணவு கிடைக்காது என்று எண்ணிய புலி மனிதனிடம்,  “குரங்கு இப்போது தூங்குகிறது நீ அதை பிடித்து கீழே தள்ளிவிடு, எனக்கு வேண்டியது பசிக்கு இரை, உன்னை விட்டுவிடுகிறேன்” என்றது.

  குரங்கை தள்ளிவிட்டுவிட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணிய மனிதன், பிடித்து குரங்கை கீழே தள்ளிவிட்டான். ஆனால் புலியோ  குரங்கிடம், “எனக்கு மனித மாமிசம் தான் வேண்டும், உனக்கு மனிதனின் இயல்பை புரிய வைக்கவே இப்படி செய்தேன் இப்போதும் உன்னை விட்டு விடுகிறேன், நீ மேலே சென்று மனிதனை கீழே தள்ளிவிடு நான் பசியாற மனித மாமிசம் உண்டுவிட்டு போய்விடுகிறேன்” என்றது.

   அப்படியே செய்வதாக சொல்லிவிட்டு மரத்தின் மேலே ஏறி வந்த குரங்கு மனிதனின் அருகில் வந்தது. மனிதனோ பயத்தால் நடுங்கினான்.
குரங்கோ “பயப்படாதே மனிதா என்னை நம்பி அடைக்கலம் என்று வந்த உன்னை எப்போதும் காப்பேன்.  புலியிடமிருந்து தப்பிக்கவே நான் உன்னை கீழே தள்ளுவதற்கு ஒப்புக்கொண்டதாக நடித்தேன்.  நீ கவலை இல்லாமல் இருக்கலாம்.” என்றது.

  குரங்குக்கு துரோகம் இழைத்த மனிதன் வெட்கி தலைகுனிந்தான்.


Monday, 19 May 2014

முத்துக் கதை 2

அன்பை அடையும் வழி!
 ஒரு முனிவரிடம், ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாகத் தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று கூறி அதைச் சரிசெய்ய மருந்து ஏதாவது தரும்படி கேட்டுக் கொண்டாள்.
 முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அப்படி ஒரு மருந்து தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

 மறுநாளே அப்பெண் காட்டுக்குச் சென்றாள். ஒரு புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்துபோய் வீடு திரும்பி விட்டாள். மறுநாளும் காட்டுக்குச் சென்றாள். அதே புலியைக் கண்டாள். அப்போதும் உறுமியது. ஆனால் அன்று பயம் சற்றுக் குறைவாக இருந்தது.
 ஆனாலும் திரும்பி விட்டாள்.
 அவள் தினந்தோறும் காட்டுக்குள் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒருநாள் புலியின் ஒரு முடியை எடுக்கவும் முடிந்தது.
 அந்தப் புலியின் முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டுவிட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
 முனிவர் அவளைப் பார்த்து, ""இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படிப் பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?'' என்று கேட்டார்.
 முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. மனத்தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.


Saturday, 17 May 2014

முத்துக்கதை

பயம்

காட்டில் இளைஞன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைப் பார்த்தான். உடனே வேகமாக மரத்தில் ஏறி, அதை ஆசையாகப் பறித்துத் தின்றான். பசி அடங்கவில்லை. கிளையின் நுனியில் இன்னும் சில பழங்கள் இருந்தன.
 அதைப் பறிக்க நுனிக்குச் சென்றான். பாரம் தாங்காமல், கிளை முறிந்தது. அவன் கீழே விழும் சூழல் உருவானபோது, சட்டென்று சுதாரித்து வேறொரு கிளை தாவிப் பிடித்து, அதில் தொங்கினான்.
 தரை வெகு கீழே இருந்ததால், குதிக்கவும் முடியாமல், மேலே ஏறவும் முடியாமல் அந்தரத்தில் அவன் தொங்கிக் கொண்டிருந்தான். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டான்.
 அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார். கீழே குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார். இளைஞனுக்குக் கோபம் வந்துவிட்டது.
 காப்பாற்றச் சொன்னால், கல்லால் அடிக்கிறீர்களே என்றான். முதியவர் பதில் பேசாமல், மற்றொரு கல்லை எடுத்து எறிந்தார். வலி தாங்காத இளைஞன், பெரும் முயற்சி செய்து, மற்றொரு கிளையை தாவிப் பிடித்துக்கொண்டு, கீழே வந்தால், உம்மை சும்மாவிட மாட்டேன் என்று எச்சரித்தான்.
 அதைக் காதில் வாங்காமல், பெரியவர் மேலும் ஒரு கல்லை எடுத்து எறிந்தார். இளைஞன், மீண்டும் முயற்சி செய்து, மற்றொரு கிளை மீது கால் வைத்து, மரத்தில் ஏறிவிட்டான். பின்னர், வேகமாக கீழே இறங்கி வந்து, ""உதவி கேட்டால், கல்லால் அடிக்கிறீரே, பைத்தியமா நீர்'' என்று பெரியவரை சரமாரியாகத் திட்டித் தீர்த்தான்.
 பெரியவர், ""தம்பி நான் உனக்கு உதவிதானே செய்தேன்'' என்றார். எப்படி என்றான் இளைஞன் குழப்பத்துடன். ""மரத்தில் நீ தொங்கிக் கொண்டிருந்தபோது, பயத்தால், நீ உறைந்துபோய் இருந்தாய். அதனால், உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை உன் மீது எறிந்தபோது, உன் பயம் மறைந்து, என்னை எப்படி பிடிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினாய். அதனால், பெரும் முயற்சி செய்து, யாருடைய உதவியும் இல்லாமலேயே நீ கீழே இறங்கிவிட்டாய். பயத்திலிருந்து உன்னைத் திசைதிருப்பி, நீ கீழே இறங்க உதவியிருக்கிறேனே'' என்றார்.
 இளைஞன் வெட்கித் தலைகுனிந்தான்.

ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை.