இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக மதிக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. நாசிக் அருகே உள்ள திரும்பகேஸ்வரில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார்.
ஆரம்பக் கல்வியை நாசிக்கில் பயின்ற அவர், 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை முடிந்து சரியான வேலை கிடைக்காத நிலையில், ஓவியராகவும், மேஜிக் செய்தும் பிழைப்பை நடத்தினார்.
அந்த காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சினிமா அறிமுகமானது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஊமைப்படங்கள் மக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அப்போது காட்டப்பட்ட படங்கள் அனைத்தும், ஒலி இல்லாத ஊமைப்படங்களாகவே இருந்தன. படத்தின் கதையை விளக்குவதற்காக, அப்போது தியேட்டர்களில் நாடக க் கலைஞர்கள் இடையிடையே கதையை விளக்கிச் சொல்வார்கள். படத்திற்கு சுவாரஸ்யத்தைச் சேர்ப்பதற்காக இசைக் குழுவும் நேரடியாக பின்னணி இசையை வாசிப்பார்கள்.
அந்தப் படங்களைப் பார்த்த பால்கேவுக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்த து. இங்கிலாந்தில் உள்ள வால்டன் ஸ்டுடியோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டு திரும்பிய பால்கே, சொந்தமாக கேமரா வாங்கிக் கொண்டு வந்து, படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.
தயாரிப்பு, கதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என சகலத்தையும் அவரே கவனித்துக் கொண்ட அவருக்கு பெரும் சவாலாக இருந்தது நடிகர்கள்தான்.
நாடகங்களில் பெண்கள் நடிப்பதே பெரும் பாவமாக கருதப்பட்ட அந்த நாளில், ஆண்களை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார். மேலும், படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத தால், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைத்தார். தீவிர முயற்சியால் 1913-ல், ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற திரைப்படத்தை எடுத்தார். அதுதான், இந்தியாவின் முதல் சினிமா. மவுனப் படமான அதில் வரும் டைட்டில்கள் மராத்தியில் எழுதப்பட்டிருந்தன. அது மும்பையில் தயாரிக்கப்பட்டு, திரையிடப்பட்டது. 1940-ம் ஆண்டு வரை 70-க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கிய அவர், பெரும்பாலும் அந்த திரைப்படங்களை அவரே இயக்கினார்.
பெரும் சிரமங்களுக்கு சினிமா வாழ்க்கையை நடத்திய தாதா சாகேப் பால்கே, 1944-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தமது 73-ம் வயதில் காலமானார். அவரது நினைவாக திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.