Friday, 16 March 2012

ஜலகண்டேச்வரர் ஆலயம் / வேலூர் கோட்டை







நண்பரை பார்ப்பதற்காக, சென்னையில் இருந்து வேலூருக்கு நானும், மற்றொரு நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்றோம். நண்பர் வர தாமதம் ஏற்பட்டதால், கிடைந்த இடைவெளியில் வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்றோம். (கோயிலின் உள்பகுதில் ஒரு கிணறு இருக்கிறது. தண்ணீர் நிரம்பிய அக்கிணற்றில், ஒரு நாணயத்தை போட்டால், அது கரை ஒதுங்கி, படி மற்றும் சுவர் இடுக்கில் நின்றுவிட்டால், நாம் நினைத்த காரியம் நிறைவேறுமாம். கடந்த முறை சென்றபோது, நான் போட்ட நாணயம் படியில் ஒதுங்கியது. ஆனால், நான் நினைத்த காரியம் மட்டும் நிறைவேறிவில்லை. இதே போன்று ஏகப்பட்ட நாணயங்கள் பலரது வேண்டுதலை, ஆசைகளை, கனவுகளை சுமந்தபடி, அந்த கிணற்றில் கதை ஒதுங்கிக் கிடக்கின்றன)




ஒரு சில முறை அக்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். பிரம்மாண்ட கற்களால் உருவாக்கப்பட்ட அந்த ஆலயம் ஒவ்வொரு முறை பார்க்கும்போது பிரமிப்பையே ஏற்படுத்துகிறது. வழக்கம் போல, கோயில் மண்டபத்தில் அமர்ந்து காதல் ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. (அந்த விவஸ்தைக்கெட்ட ஜென்மங்களுக்கு வேறு இடமே கிடைக்காதா)

ஒரு மணிக்கு வாட்ச்மேன் வந்து விரட்டத் தொடங்கியதால், சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டோம். வேறொரு நாளைக்கு நிதானமாகச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும். 


கோயில் வாசலில் தொல்பொருள் துறையினரால் வைக்கப்பட்டிருந்த கோயில் வரலாறு குறித்த கல்வெட்டு 






இக்கோயில் வேலூர் கோட்டையைப் போலவே கி.பி. 1566 ம் ஆண்டிற்கு முன்பாக, வீரப்ப நாயக்கரின் மகனும், லிங்கபூபாலரின் தந்தையுமான சின்னபொம்மி நாயக்கர் காலத்தில் எழுப்பப்பட்டது. இம்மன்னன் மஹாமண்டலேச்வரர் திருமலைய தேவருக்கும் மஹாராஜ சதாசிவதேவருக்கும் (அவருக்குப் பின் ஸ்ரீரங்கதேவ மஹாராஜருக்கும்) உட்பட்ட சிற்றரசாக வேலூர்ச் சீமையில் ஆண்டான். இக்கோவில் விஜயநகரக் கட்டடப்பாணியின் இறுதி வடிவில் கட்டப்பட்டு, கருவறையும், உண்ணாழியும் அதனுடன் ஒருமித்த மஹா மண்டபமும் கூடியது. மஹா மண்டபத்து வடப்புறம் நடராஜருக்குரிய சிறிய சந்நிதி அறையின் அடித்தளத்தில் நிலவறை ஒன்று உண்டு. 
கோயிலமைப்பின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு முகமாக உயர்ந்த கோபுர வாயிலொன்றும், தென்மேற்கே கலியாண மண்டபமும், வடமேற்கே அகழியுடன் தொடர்புள்ள நிலவறையுடன் கூடிய மண்டபமும், அம்மன் சந்நிதியும் உள்ளன. கலியாண மண்டபத்தின் சிறந்த நுண்ணிய சிற்ப வேலைபாடு விஜயநகர பாணியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கோட்டை 'ஜ்வரகண்டேசுவரருக்கு' மானியமாக வழங்கப்பட்ட அருகிலுள்ள ஏழு கிராமங்களைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் இருக்கின்றன. இதனின்றும், சிவனுக்குரிய ஜ்வரகண்டேசுவரர் எனும் பெயர் காலப்போக்கில் ஜலகண்டேசுவரர் என்று மாறியதையும் அறியலாம். 17,18,19ம் நூற்றாண்டில் தொடர்ந்து விளைந்த பீஜப்பூர் ஆதில்ஷாஹி, மராட்டிய, கர்நாடக நவாபிய படையெடுப்புகளின் போது, இக்கோயில் படை முகாமாக உபயோகிக்கப்பட்டு, சிதைந்து பூசனையற்ற நிலையை அடைந்தது

4 comments:

  1. இன்னொரு வாட்டி வேலூர் போலாமா தாஸ் ?

    ReplyDelete
    Replies
    1. நான் ரெடி. எப்போன்னு சொல்லுங்க..

      Delete
  2. கலியாண மண்டபத்தின் சிறந்த நுண்ணிய சிற்ப வேலைபாடு விஜயநகர பாணியின் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

    சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete