Monday, 18 November 2013

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை



எழுத்தாளர் புஷ்பா தங்கதுரை அவர்களோட படைப்புக்களை குறைஞ்ச அளவுலதான் படிச்சிருக்கேன். ஆனா.. அவரோட எழுத்து நடை ரொம்ப புடிக்கும். அவரோட 'ஊதாப்பூ' புத்தகத்தை அவ்வப்போது வாங்கியிருக்கேன். கதைகள் 'ஒரு மாதிரியா' இருக்கும்ன்றதால அதை படிக்கறதுக்கு வீட்டுல அனுமதிக்க மாட்டாங்க. 

'ஊஞ்சல்' மாத இதழ்ல வந்த அவரோட 'எனது பீத்தல் குடை' அப்படிங்கற கட்டுரைத்தொடர் ரொம்ப பிரபலம். அதுல அவரோட எழுத்து அனுபவங்களை சுவாரஷ்யமாக எழுதியிருப்பாரு. 

'ஊஞ்சல்' மாத இதழ்ல உதவி ஆசிரியராக வேலை பாத்திட்டிருந்தப்போ, ஒருமுறை பேட்டிக்காக, நானும், நண்பர் ஸ்ரீநிவாஸ் பிரபுவும் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையை அணுகினோம். வீட்டுக்கு வரச்சொன்னார். போனோம். புத்தகக் குவியலுக்கு மத்தியில உக்காந்திருந்தார். வீட்டுல எந்த பக்கம் திரும்பினாலும் புத்தகங்கள் தான். 

அதுதான் எங்களுக்கு அவரோட முதல் அறிமுகம். பாத்த மாத்திரத்திலேயே ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டார். எங்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கியிருந்தார். ஆனா.. பேச்சு நீண்டு.. கிட்டத்தட்ட அரைநாள் ஓடுடிடுச்சு. ஜோதிடம் சம்பந்தமாக.. ஏதோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிட்டிருந்தாரு. அதையெல்லாம் கூட்டிட்டு போய் காண்பிச்சு குழந்தை மாதிரி குதூகலப்பட்டார். 

புறப்படும்போது, பேட்டியை 'எடிட்' பண்ணி, அச்சுக்கு போறதுக்கு முன்னாடி.. அவரோட பார்வைக்கு காண்பிக்கச் சொன்னார். அவர் ஜாலியா சொன்ன சில விஷயங்களை பத்திரிகையில எழுதிடுவோமோன்னு அவருக்கு சின்ன சந்தேகம். நாங்களும், சரின்னுட்டு வந்துட்டோம். 

ஆனா.. வேலை நெருக்கடியால.. அவர் கேட்டுக்கிட்ட மாதிரி முன்னமே காண்பிக்க முடியலை. போன் பண்ணி கடுமையா கோவிச்சுக்கிட்டார். எங்களால அவரை சமாதானப்படுத்த முடியலை. ஆனா.. கடைகளுக்கு வந்த புத்தகத்தைப் பாத்துட்டு இரண்டொரு நாள் திரும்பவும் அவரே போன் பண்ணி, பேட்டி நல்லா வந்திருக்கிறதா பாராட்டினாரு. பேசினதோட மட்டுமில்லாம தன் கைப்பட அவர் கடிதமும் எழுதி எங்களை பெருமைப்படுத்தினாரு. 

இந்த பெரிய மனசு யாருக்கு வரும்?

'நேரம் கிடைக்கும்போது வாங்களேன்..பேசுவோம்'ன்னார். ஆனா.. மறுபடியும் அவரை சந்திக்கறதுக்கான வாய்ப்பு அமையலை. இனி அமையப்போறதும் இல்லை. 

No comments:

Post a Comment