Monday, 9 March 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 2

பிரபலங்களின் கடைசி வார்த்தைகள்......

* காந்தி இறக்கும்போது ' ஹே ராம்!'

* ஜூலியஸ் சீஸர் ' யூ டூ புரூட்டஸ்? '

* கலிகுலா ( ரோம் ராஜ்ஜியத்தின் கொடுங்கோலன் ) : தன்னைக் கத்தியால் குத்திய பாதுகாவலர்களிடம்,  'நான் இன்னும் இறக்கவில்லை!'

* தாமஸ் ஆல்வா எடிசன் : 'விளக்கை எரியவிடுங்கள் . என் ஆவி பிரியும்போது வெளிச்சம் இருக்கட்டும் !'

* பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் : 'இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது!'

* பாபர் ( மொகலாயப் பேரரசர் ) : தன் மகன் ஹுமாயூனிடம், 'இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!'

* ஜுல்ஃபிகர் அலி புட்டோ ( பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ) : 'இறைவா .....நான் ஒரு குற்றமும் செய்யாதவன்!'

* டயானா : 'கடவுளே ! என்ன நடந்தது எனக்கு?'"

* ஜொன் ஆஃப் ஆர்க் ( பிரெஞ்சுப் புரட்சியாளர் ) : தீயில் எரிந்துகொண்டு இருந்த நேரத்தில், 'ஜீஸஸ்!'

* வால்டேர் : (தூக்க்கிலிடப்படும் முன்) ' சாத்தானை உன்னிடம் இருந்து துரத்திவிடு ' என்று சொன்ன பாதிரியாரிடம், ' எதிரிகளை உருவாக்கிக்கொள்வதற்கான நேரம் இது அல்ல!'
* கிளியோபாட்ரா : பூ நாகத்தைக் கையில் பிடித்துக் கொண்டு , 'ஆஹா... இதோ ... என் முடிவு இங்கே இருக்கிறது!'
* பீத்தோவன் : 'நண்பர்களே கை தட்டுங்கள்... இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது!'
* ஆன் ( இங்கிலாந்து ராணி ) ; தன் உதவியாளரிடம் ,' மக்களின் நன்மைக்காக கருவூலப் பணத்தை பயன்படுத்துங்கள்!'

* நெப்போலியன் : ' ஃபிரான்ஸ் ... ஆர்மி...ஜோஸஃபின்!'

* மேரி க்யூரி : 'என்னைத் தனிமையில் இருக்க விடுங்கள்!'

* எழுத்தாளர் ஜேன் ஆஸ்டஸ் : ' வேறு எதுவும் வேண்டுமா' என்று கேட்ட தங்கையிடம் , ' இறப்பைத் தவிர எதுவும் தேவையில்லை'

* வின்ஸ்டன் சர்ச்சில் : 'எனக்கு எல்லாமே போர் அடிக்குது!' (இந்த வார்த்தைகளுக்குப் பின் கோமாவுக்குச் சென்று , ஒன்பது நாட்களுக்குப் பின் மரணத்தைத் தழுவினார்)

* பெருந்தலைவர் காமராஜர் : தன் உதவியாளரிடம் , ' வைரவா ! விளக்கை அணைத்துவிடு..'

நோய்த் தீர்க்கும் மூலிகைகள்

1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர், நெல்லிக்கனி
2) இதயத்தை வலுப்படுத்த , செம்பருத்திப் பூ.
3) மூட்டு வலியை போக்கும், முடக்கத்தான் கீரை
4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி
5) நீரழிவு நோய் குணமாக்கும், அரைக்கீரை
6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும், மணத்தக்காளிகீரை.
7) உடலை பொன்னிறமாக மாற்றும், பொன்னாங்கண்ணி கீரை
8) மாரடைப்பு நீங்கும், மாதுளம் பழம்
9) ரத்தத்தை சுத்தமாகும், அருகம்புல்
10) கான்சர் நோயை குணமாக்கும்,  சீதா பழம்
11) மூளை வலிமைக்கு ஓர், பப்பாளி பழம்
12) நீரிழிவு நோயை குணமாக்கும்,  முள்ளங்கி
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட, வெந்தயக் கீரை
14) நீரிழிவு நோயை குணமாக்க,  வில்வம்
15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், துளசி
16) மார்பு சளி நீங்கும், சுண்டைக்காய்
17) சளி, ஆஸ்துமாவுக்கு, ஆடாதொடை
18) ஞாபகசக்தியை கொடுக்கும், வல்லாரை கீரை
19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும், பசலைக்கீரை
20) ரத்த சோகையை நீக்கும்,  பீட்ரூட்
21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்,  அன்னாசி பழம்
22) முடி நரைக்காமல் இருக்க, கல்யாண முருங்கை (முள் முருங்கை)
23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.
24) மார்புசளி, இருமலை குணமாக்கும், தூதுவளை
25) முகம் அழகுபெற, திராட்சை பழம்
26) அஜீரணத்தை போக்கும்,  புதினா
27) மஞ்சள் காமாலை விரட்டும், கீழாநெல்லி
28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும், வாழைத்தண்டு


படிச்சுப் பாருங்க கண்டிப்பா சிரிப்பிங்க அல்லது சிந்திப்பீங்க..

கோர்ட்டில்  விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.

அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார், “அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே? “

ஒரு முன்னாள் ஃபாஸ்புட் கடைக்காரரின் ஒப்புதல் வாக்குமூலம் - படிச்சுப் பாருங்க அப்படியே ஷாக் ஆயிடுவீங்க..  

1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம். அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கெட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை …

2) சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம். ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள். அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும். அப்ப அது உங்கள் வயிற்றுக்குள் போனால் ?

3) சோயா சாட்ஸ்.  இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு முன்னர் யூஸ் பண்ணின எண்ணையையோ கலந்து செய்றோம்.

4) எந்த பாஸ்ட் ஃபுட் கடையிலும் சன் பிளவர் எண்ணை யூஸ் பண்ணுவதில்லை. பாமாயில் தான் யூஸ் பண்றோம்.

5) ரைஸ் கடாயில் யூஸ் பண்ணும் பொது சோறு கடாயில் ஓட்ட கூடாது என்பதற்காக அதிக அளவு பாமாயிலை அதில் கொட்டுகிறோம்.

6) இன்னொன்னு சொன்ன நம்ப மாட்டிங்க. அந்த ரைஸ் போட்டு கிண்டும் கடாயை நாங்கள் ஒரு வாரத்திற்கு கழுவ மாட்டோம்.  காரணம் அதில் உள்ள எண்ணை பசை போக கூடாது என்பதற்காக. நாங்கள் கழுவி எண்ணை பசை போய்விட்டால் அடுத்த நாள் எங்களுக்கு அதிக கேஸ் செலவாகும்.

7) அஜினமோட்டோ. இதை அதிகமாக யூஸ் பண்றோம். உடலுக்கு கேடு உண்டாக்கும் பொருள். இதை தொட்டு உங்கள் நாக்கில் வைத்தால் அந்த இடம் மரத்து விடும். சோதித்து பாருங்கள்.

8) வெள்ளை பெப்பர். இதில் வெண்மை நிறத்திற்காக கோல மாவு கலப்படம் செய்ய படுகிறது. அதை தான் நாங்கள் உபயோகப்படுகிறோம்.
9) தக்காளி சாஸ். இதுவும் நீண்ட நாள் ஸ்டாக் வைத்த, காலாவதியான சாஸ் விலை கம்மியாக கிடைப்பதால் அதை யூஸ் பண்றோம்.

10) சில்லி சாஸ். அத கிட்ட பொய் மோர்ந்து பார்த்தா முகம் சுளிக்கிற அளவுக்கு கேட்ட வாடை அடிக்கும்.

இது தான். நாங்கள் பாஸ்ட் ஃபுட் செய்ய யூஸ் பண்ணும் பொருட்கள். 5 நிமிடத்தில்  8 பிளேட் போடுவோம் .. ஒண்ணு 50 ருபாய் என்று விற்பனை செய்தால்,  400 ருபாய் சம்பாதிப்போம். அதை நானும் சாப்பிட்டு என் உடலும் கெட்டு விட்டது விட்டது .. மற்றவர்களின் உடலையும் கெடுக்குமே என  என் மனசாட்சி உறுத்தியது. அதனால் அதை மூடிவிட்டு 8000 ருபாய் சம்பளத்திற்கு நிம்மதியாக வேலைக்கு செல்கிறேன்.

( இனிமே ஃபாஸ்ட் ஃபுட் கடை பக்கம் போறவங்க கொஞ்சம் யோசிச்சுக்கோங்க)

பெருந்தலைவர் காமராஜர் 

தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரும், முன்னாள் பிரதமர் நேருவும், கூட்டமொன்றில் பங்கேற்க மதுரைக்கு  காரில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நேரு. "மிஸ்டர் காமராஜ் உங்கள் சொந்த ஊர் இந்த பக்கம் தானே..? " என்று கேட்கிறார்.
"ஆமாங்க இன்னும் கொஞ்சம் தூரத்தில் தான் இருக்கிறது" - காமராஜர்
"அப்படியானால் உங்கள் தாயாரை பார்த்து விட்டு.. நலம் விசாரித்து விட்டு செல்ல வேண்டும் அல்லவா..? " என்று நேரு கேட்க, "இப்பவே கூட்டத்திற்கு நேரம் ஆகி விட்டதே..?" என்று காமராஜர் மறுக்கிறார்.
அதற்கு நேரு, "இவ்வளவு தூரம் வந்து விட்டு, உங்கள் தாயாரை பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நான் பார்த்தே ஆக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்!" என்கிறார். 

வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுனரிடம், "தம்பி வண்டியை இப்படி ஓரங்கட்டு!" என்கிறார். அது வீடுகளே இல்லாத பகுதி விவசாய நிலங்களில் பெண்கள் களை பறித்து கொண்டிருந்தனர். 'தாயாரை பார்க்க வீட்டுக்கு அழைத்து செல்ல சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே..! என்ற வினாவுடன் வண்டியை விட்டு இறங்குகிறார் நேரு.
காமராஜர், களை பறித்து கொண்டிருக்கும் பெண்கள் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார்."ஆத்தா நான் காமராசு வந்து இருக்கிறேன்" என்று கூவுகிறார்.
வயலில் உழைத்து வியர்வை முகத்துடன்.. "காமராசு வந்திட்டியாப்பா, நல்லாயிருக்கியா..?" என்று தன் மகனை கண்ட மகிழ்ச்சியில், உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராஜரின் தாயார். தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள்.
பிறகு நேரு அவர்களை காட்டி அறிமுக படுத்துகிறார் காமராஜர்.
நேருவால் தன் முன்னால் நடப்பதை பார்த்து நம்ப முடியாமல் சிலையாக நிற்கிறார்.



கோவில் அதிசயங்கள்..!

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
அவற்றில் சில:

1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம். - நடராஜ கோயில்

2. கும்பகோணம் அருகே “தாராசுரம்” என்ற ஊரில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில்உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டை இடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

4. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.

5. கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்தலம் கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டும் இது போல் காட்சிதருகிறார்.

6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதியில் 4 பேர் தூக்குவார்கள் பின்பு 8,16, கோவில் வாசலில் 64 பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.

7. ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமானுஜர் உருவம் விக்ரஹமோ, வேறு உலோகப் பொருளால் ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

8. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோயிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.

9.  கும்பகோணம் அருகே திருநல்லூரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.

10. விருதுநகர், சொக்கநாதன்புத்தூரில் உள்ள தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்திக்கு கொம்போ, காதுகளே இல்லை.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிரதான சாலைகளில் சந்திப்பில் உள்ள 72 அடி ஆஞ்சநேயர்சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திருவடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12. வேலூர் அருகே உள்ள விருஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ள கோயில் தூணின் தென்புறம் அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6முதல் 12 வரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தில் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

13. சென்னை-திருப்பதி சாலையில் ஊத்துக் கோட்டைதாண்டி நாகலாபுரம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம், கிழே மீன்வடிவம் கொண்டுள்ளார்.

14. தருமபுரி – பாப்பாரப்பட்டியில்  இருக்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவிலில் நவக்கிரகங்கள் பெண்வடிவில் உள்ளன.

15. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயிலில் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு கோபுரங்கள் கிடையாது.

16. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக்கு படி தாண்டா பத்தினி என்ற பெயரும் உண்டு - பெருமாளோடு எக்காலத்திலும் வெளியே வராத காரணத்தால் தானாம். 

அறிவியல் அல்லது ஆன்மீக உண்மை

முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?!

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!

ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன.  அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

இதற்காகத்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்களோ?



Friday, 6 March 2015

தெரியுமா இவரை - 3 சார்லி சாப்ளின்


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள், எனவே, நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்கள் மருத்துவர்களுக்கு சமம் எனலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்தவர், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த கால கட்டத்தில் மொழியின் துணையின்றி, தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்.

சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1889 ஏப்ரல் 16 -ம் தேதி லண்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் ஏழை மேடை இசை கலைஞர்கள். கிடைக்கும் சொற்ப வருமானத்தை குடித்தே அழித்தார் அவரது தந்தை. எனவே, நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறுவன் சாப்ளின். 5 வயதில் அவனுக்கு முதல் மேடை அரங்கேற்றம். 

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. 

1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ' என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்' என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே  முதல் திரைப்படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. 

வெற்றிகரமான திரைப்பட நடிகராக இருந்த சாப்ளினுக்கு சொந்த வாழ்க்கை சோகமாகவே இருந்தது. 1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தன. 

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது. அதில் தனது ஆரம்ப வாழ்கையை சித்தரித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்' என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை. மேலும் அவர் கம்யூனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்' என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது. மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.



வாட்ஸ் ஆப் வறுவல் - 1

நம்பிக்கை தான் வாழ்க்கை 


(கழுதையும், நாயும் பேசிக்கொண்டன)
 கழுதை : என் முதலாளி என்னை ரொம்ப அடிக்கிறான்..
 நாய் : அப்போ எங்கயாவது ஓடிப்போய்ட வேண்டியதுதானே.. 
கழுதை:  நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால், முதலாளி பொண்ணு எப்போ எக்ஸாம்ல குறைவா மார்க் வாங்கினாலும் 'இந்த கழுதையைத்தான் உனக்கு கட்டி வைக்கப்போறேன்' சொல்றான்.. அதான் வெயிட் பண்றேன். 

••••••

( ஜோடி ஒன்று பேசிக்கொண்டது )
பெண்: என் பிறந்தநாளுக்கு என்ன பரிசு தருவே..
ஆண்: என்ன வேணும்..
பெண்: ஒரு ரிங் குடு..
ஆண் : ஓகே.. ஒரு ரிங் குடுக்கறேன். ஆனா.. காலை அட்டெண்ட் பண்ணக் கூடாது. பேலன்ஸ் போய்டும். 
                                                                          
                                                                            ••••••


( வகுப்பறையில் ஆசிரியர் மாணவனிடம் ) 

ஆசிரியர் : கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்குது. அதுல ஒரே ஒரு மாங்காய் இருக்கு.. அதை நீ எப்படி பறிச்சிட்டு வருவே..

மாணவன் :  என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சி, பறவை மாதிரி பறந்துபோய் அதை பறிச்சிட்டு வருவேன் சார்..
ஆசிரியர்:  முண்டம், உனக்கு திடீர்னு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து குடுப்பான்? 

மாணவன்: கடல் நடுவுல போய் மாமரத்தை வெச்சது உங்க அப்பனா சார்? 

                                                                         ••••••

ஐந்து முட்டாள்கள் 

மன்னருக்கு திடீர்னு ஒரு சந்தேகம் தோன்றியது. அமைச்சரை அழைத்து, ''இந்த நாட்டை நான் திறமையாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன். அப்படி இருந்தாலும் இந்த நாட்டில் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?
''இருப்பார்கள் மன்னா..''
''அப்படியானால், இந்த நாட்டில் உள்ள முதல் 5 முட்டாள்களை கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்'' என்று உத்தரவு போட்டார் மன்னர். 
அமைச்சர் ஆடிப்போனார். ஆனால், மன்னர் அல்லவா? எதிர்த்து பேசமுடியுமா? எனவே, தனது தலைவிதியை நொந்துகொண்டு, முட்டாள்களைத் தேடி புறப்பட்டார் அமைச்சர். 

ஒரு மாதம் கழித்து 2 பேருடன் அரசவைக்கு வந்தார் அமைச்சர். 

''என்ன அமைச்சரே.. நான் ஐந்து முட்டாள்களை அழைத்து வரச்சொன்னேன்.. நீர் 2 பேரை அழைத்து வந்திருக்கிறீர்களே'' என்றார்.

''ஐந்து முட்டாள்கள் இங்கே இருக்கிறார்கள் மன்னா..''

''அப்படியா.. எங்கே காட்டுங்கள் பார்ப்போம்'' என்றார் அரசர்

தன்னுடன் இருந்த ஒரு நபரைக் காட்டி, ''இவன் மாட்டு வண்டியின் மேல் அமர்ந்துகொண்டு, துணி மூட்டையை தன் தலைமேல் வைத்துக் கொண்டிருந்தான். கேட்டதற்கு என்னை சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக் கூடாது அல்லவா என்றான்.  எனவே, இவன் நாட்டில் உள்ள ஐந்தாவது முட்டாள்''

''சரி அடுத்து?''

அடுத்தவனைக் காட்டி, ''இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமை மாட்டை தன் வீட்டுக் கூரைமேல் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தான், இவன் நாட்டின் நான்காம் முட்டாள்''

''சரி அடுத்து?''

''அரசவையில் தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ இருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு, முட்டாள்களை நாடு முழுவதும் தேடியலைந்த மூன்றாவது முட்டாள் நான்தான்''

மன்னர் சுவாரஸ்யமானார், "சரி இரண்டாது முட்டாள் யார்?"

"நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்க, அதைவிட்டுவிட்டு, முட்டாள்களை கண்டுபிடிக்கச் சொன்ன நீங்கள்தான் இரண்டாவது முட்டாள்"

அரசவையே ஆடிப்போனது. மன்னர் தனது தவறை உணர்ந்து கொண்டார். ஆனால், முதல் முட்டாள் யார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆவல் அவரை ஆட்கொண்டது. "சரி அமைச்சரே.. முதல் முட்டாள் யார்?"

"வேலைவெட்டியையெல்லாம் விட்டுவிட்டு இதை படித்துச் கொண்டிருப்பவர்கள்தான் அரசே.."


                                                                         ••••••


 தமிழில் என்ன?

டீக்கு தமிழில், 'தேநீர்' என்பது நமக்குத்தெரியும். காபிக்கு 'குளம்பி' என்பதும் தெரியும். மேலும் சில 

உணவுப் பொருட்களின் தமிழ் பெயர் இதுவாம். பார்த்துவிட்டு சரியா சொல்லுங்க... தப்பா 

இருந்தாலும் சொல்லுங்க.. 

சப்பாத்தி - கோந்தடை 

புரோட்டா - புரியடை 

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு அல்லது காய்மா

கேக் - கட்டிகை அல்லது கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயாசம் - பாற்கன்னல் 

சாம்பார் - பருப்புக் குழம்பு, மென் குழம்பு 

பஜ்ஜி- தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழுப்பம், பழுப்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு 

சோடா - காலகம் 

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல் 

கூல்டிரிங்ஸ் - குளிர் குடிப்பு 

பிஸ்கெட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை 

சர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி 

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன் 

ரோஸ்ட் - முறுவன்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு 

                                                                               ••••••

அரசியல் என்றால் என்ன?

மகன், தன்னோட அப்பாக்கிட்ட, "அப்பா, அரசியல்னா என்ன? என்று கேட்டான். 
அதற்கு அப்பா உதாரணத்தோட நீண்ட விளக்கம் கொடுத்தார், " நம்ப குடும்பத்தை எடுத்துக்கோ.. என்கிட்ட நிறைய பணம் இருக்கு அதனால நான்தான் மேல் தட்டு வர்க்கம். அம்மா என்கிட்ட பணம் வாங்கி செலவு செய்யறாங்க.. அவங்க அரசாங்கம். நம்ம வீட்டுல வேலை செய்யற வேலைக்காரி உழைக்கும் வர்க்கம். நீதான் மக்கள், உன் தம்பி பாப்பாதான் எதிர்காலம். இப்போ புரியுதா?"

"சுத்தமா புரியலை டாடி?"

"நல்லா யோசிச்சுப் பாரு புரியும்" என்றுவிட்டு அப்பா போய்விட்டார். 

அன்று இரவு நன்றாக தூங்கிக் கொண்டிருந்த மகன், தம்பி பாப்பாவின் அழுகுரல் கேட்டு விழித்துக் கொண்டான். தம்பிப் பாப்பா, ஆடையிலோ ஆய் இருந்து நாஸ்தியாக இருந்தது. அம்மாவை எழுப்பினான்.  எழவே இல்லை. அம்மா பக்கத்தில் இருந்த அப்பாவைக் காணோம். வேலைக்காரியை கூப்பிடலாம் என்று அவள் அறைக்குப் போனால், அவளுடன் அப்பா ஜாலியாக இருந்தார். அறைக்கு வெளியே நின்று கத்திப் பார்த்தான் ஆனால், கடைசி வரைக்கும் யாரும் அவனுக்கு உதவி செய்யவே இல்லை. 

மறுநாள் காலை அப்பா அவனிடம் வந்து, "என்னடா அரசியல்னா என்னன்னு புரிஞ்சுதா?" என்று கேட்டார். 

"ரொம்பத் தெளிவா புரிஞ்சுதுப்பா" என்றான் மகன்

"அப்படியா, வெரிகுட் என்ன புரிஞ்சுது சொல்லு"

"மேல்தட்டு வர்க்கம்(அப்பா), உழைக்கும் வர்க்கத்தை(வேலைக்காரியை) சுரண்டி எடுக்கும். அதை அரசாங்கம் (அம்மா) கட்டுக்காம தூங்கிட்டு இருக்கும். மக்களுக்கு (எனக்கு) உதவி செய்ய யாரும் வரமாட்டாங்க. எதிர்காலம் (தம்பி பாப்பா) நாறிப்போய்டும்" 



அந்த மூன்று விஷயங்கள் 

காத்திருக்காத மூன்று விஷயங்கள் 
நேரம், மரணம், வாடிக்கையாளர் 


சகோதர, சகோதரிகளை பகையாளியாக்கும் 3 விஷயங்கள்
நகை, பணம், சொத்து


யாராலும் திருட முடியாத மூன்று விஷயங்கள் 
புத்தி, கல்வி, நற்பண்புகள் 


இந்த மூன்று விஷயங்களை எப்போதும் நினைவு வைத்திருப்பது அவசியம் 
உண்மை, கடமை, மரணம் 


திரும்பப் பெற முடியாத மூன்று விஷயங்கள் 
வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு, வாயிலிருந்து வந்த சொல், உடலிலிருந்து பிரிந்த உயிர் 

வாழ்க்கையில் ஒரே முறை கிடைக்கும் மூன்று பொருட்கள் 
தாய், தந்தை, இளமை 


திரைமறைவில் இருக்க வேண்டிய 3 பொருட்கள் 
சொத்து, பெண், உணவு 


மரியாதை கொடுக்க வேண்டிய 3 நபர்கள் 
தாய், தந்தை, குரு 


இந்த மூன்றும் இருப்பவனே முழு மனிதன் 
குரு, நண்பன், மனைவி