Tuesday, 31 July 2012

நொறுக்ஸ்

குடிப்பது இப்போது சமூக அந்தஸ்தாக மாறி வருகிறது. குடிக்கும் பழக்கம் இல்லையென்றால் சற்றே அதிர்ச்சியாகவும், விநோதமாகவும் பார்க்கிறார்கள்.  பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மதுக்கடைகளை திறந்து, சிறந்த 'குடி'மக்களை உருவாக்கும் மகத்தான பணியை அரசு செய்துகொண்டிருக்கிறது.
               
அண்மையில், செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில், பள்ளி பெஞ்சுகளை விற்று மாணவர்கள் சிலர் மது குடித்ததாகவும்,  சில மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். 
               
இதனை, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் எனது உறவுக்காரர் ஒருவரும் உறுதிபடுத்தினார். அப்படி தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலை இப்போது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரணம், மாணவர்களை கண்டித்தால், ஆசிரியர் அடித்ததாக பொய் புகார் அளிப்போம் என்று பகிரங்கமாவே மிரட்டுவதாக வருத்தப்பட்டார். 
               
எனவே, எதற்கு வம்பு என்று, வந்ததோமா, வேலையை பார்த்தோமா, முதல் தேதியானால் சம்பளம் வாங்கினோமா என்று ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.  
             
மதுவிலக்கு இப்போது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், பார்களை ஒழிப்பதுடன், பொது இடங்களில் குடித்துவிட்டு நடமாடுவதற்கும் தடை விதித்தால், பள்ளி மாணவர்கள் சீரழிவதையாவது ஓரளவேணும் தடுக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

                       
மதுக்கடைகள், ஒயின் ஷாப்புகளாக தனியார் வசம் இருந்தபோது, கடை முன்பு நின்று குடிக்க கடைக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாதி தெரு வரை குடிமகன்கள் ஆக்ரமித்துக் கொண்டு, சாலையிலேயே நின்று குடித்து, அழிச்சாட்டியம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பெண்கள் அந்த பகுதியிலேயே நடமாட முடியாத சூழல் உருவாகிறது. 

                       
சில இடங்களில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகிலேயே அரசு மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வதை என்னவென்று சொல்வது ? 

எலைட் பாரெல்லாம் திறந்து, பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கமும், மிக்சி, கிரைண்டர், ஆடுமாடுகள் தருவதால் எந்த பிரயோஜனமும் இல்லையென்பதை அரசு உணருமா தெரியவில்லை. 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு, டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில், ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சேலம் அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திய நான்கு மாணவர்கள், கண்டித்த ஆசிரியரை  தாக்கினர் என்பதே அது.

 நாடு நல்லாத்தான் முன்னேறிக்கிட்டிருக்கு. 


*****************************

"ஹலோ யார் பேசறீங்க.."

"நான்.. கோட்டூர்புரத்திலேர்ந்து ராஜா பேசறேன்."

"உங்க ரேடியோ வால்யூமை குறைச்சி வைங்க.ராஜா..."

"ம் குறைச்சிட்டேன் மேடம்.." 

"ம்.. இப்போ சொல்லுங்க.. நீங்க யாரை, லவ் பண்றீங்க சார்.."

"நான்.. திவ்யாவை லவ் பண்றேன்.." 

"வெரிகுட்.. எத்தனை வருஷமா லவ் பண்றீங்க.."

"ரெண்டு வருஷமா மேடம்.." 

"அப்படியா.. ம் நீங்க சொல்லுங்க ராஜா.. அவங்களை வெளில எங்கேயெல்லாம் கூட்டிட்டு போயிருக்கீங்க.. 'மேட்டரை'யெல்லாம் முடிச்சிட்டீங்களா ?"

"ஹி ஹி.. அதுவந்து.. மேடம்.." 

- இப்படி போன அந்த உரையாடல்..சத்தியமாக நம்புங்கள்.. ஒரு தனியார் பண்பலை வானொலியில் நான் காதாரக் கேட்டது. அதே வானொலியில், ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளர்.. தன் சக தொகுப்பாளரைப் பார்த்து உதிர்த்த தத்துவ முத்து ஒன்று.. '' எருமைக்கு சுடிதார் போட்டா மாதிரி இருக்கற சப்ப ஃபிகர் நீ '' 

கலையை எப்படியெல்லாம் வளர்த்து டெவலப் பண்றாய்ங்க..

*****************************


பெர்னாட் ஷா தன்னோட வீட்ல உட்கார்ந்து நண்பர்களோட சுவாரஸ்யமாக பேசிக்கிட்டிருந்தாரு. பக்கத்து ரூம்ல.. அவரோட மனைவி பெரிய இரைச்சலோட தையல் மிஷின்ல துணி தெச்சிக்கிட்டிருந்தாங்க.  பெர்னாட் ஷாவோட நண்பர்கள் அவங்கக்கிட்ட போய், 'உங்க கணவர் இவ்வளவு சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருக்காரு.. அவரோட பேச்சை கேக்கறதுல உங்களுக்கு ஈடுபாடு இல்லையா'ன்னாங்க.   அதுக்கு கோபத்தோட அந்தம்மா.. 'என் கைல மட்டும் இந்த தையல் மிஷின் இல்லேன்னா.. நேரா போய் அவரோட கழுத்தை திருகியிருப்பேன். உருப்படியான வேலை பார்க்காம எப்போ பார்த்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு'ன்னாங்களாம். 


*****************************



ஆண்டுக்கு பல்லாயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைவதாக அண்மையில் ஒரு புள்ளி விவரத்தை படிக்க நேர்ந்தது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்க நேர்கிறதாம். குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு, தலைக்கவசம் அணியாதது என்று பொத்தாம் பொதுவாக பழியை வாகன ஓட்டிகள் மீது போடப்படுவது வழக்கம். ஆனால், மோசமான, பராமரிப்பில்லாத சாலைகளும் ஒரு காரணம் என்பதை ஏனோ யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. அண்மையில், சென்னையில், ஒரு அமைச்சரின் மகன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத்தடையில் இடறி விழுந்து மரணமடைந்தார். அவர் அமைச்சரின் மகன் என்பதால், இரவோடு இரவாக, சில இடங்களில் வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. அப்போதுதான், வேகத்தடையில் வர்ணம் பூசியிருக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரணர்களுக்கு தெரியவந்தது. இறந்தவர், சாதாரண பொது ஜனம் என்றால், அதுவும் நடைபெற்றிருக்காது. வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகளில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சென்னையில், இதுவரை என் கண்ணில் பட்டதே இல்லை. ஒருவேளை எங்காவது இருந்து நான்தான் கவனிக்காமல் போகிறேனோ என்னவோ ? 


*****************************

பிரிட்டிஷ் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட டைனிங் டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு.  அப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான். உடனே, மன்னர் அவனை கையமர்த்தி, 'இதோ பாரு.. ஆல்பர்ட்..சாப்பிடும் போது டைனிங் டேபிள்ல பேசக் கூடாது. ராஜ குடும்பத்துல இது அநாகரீகமான விஷயம் அதனால.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்'ன்னாரு.   அமைதியா எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுட்டு எழுந்ததும், பேரன்கிட்ட மன்னர், ' ஏதோ சொல்ல வந்தியே என்ன'ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த பேரன், ' இப்போ அதைச் சொல்லி பயனில்லை'ன்னான். 'பரவால்ல.. எதுவானாலும் சொல்லு'ன்னாரு மன்னர். அதுக்கு அந்த பேரன் கூலா, 'நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்து கிடந்துச்சி.. அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனா.. நீங்க அதையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்க'ன்னான். 

*****************************

Thursday, 26 July 2012

ஒர் அதிர்ச்சி தகவல்



     வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போது, அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று சரித்திரம் படைக்கிறவர்கள் ஒரு ரகம். தோல்விகளை சந்திக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு செல்பவர்கள் ஒரு ரகம். 

        இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2010ம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேரும், 2011ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். 

        நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்கம். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முறையே மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  பெருநகரங்களை பொருத்தவரை சென்னை முதலிடத்தில் உள்ளது. பெங்களுரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

 அதிக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆண்கள். மேலும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 5 பேரில் ஒருவர் குடும்பத்தலைவிகளாம். பெரும்பாலானோர், சமூக, பொருளாதார காரணங்களாலேயே தற்கொலை முடிவை நாடுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


Monday, 23 July 2012

நெருப்பு கோழி பறவையா, விலங்கா ?


    நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, அது விலங்கு என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபை அறிவித்துள்ளது.
    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நெருப்பு கோழி பற்றி சுவாரசியமான சர்ச்சை எழுந்தது. கடைசியில் நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, விலங்கு இனத்தை சேர்ந்ததுதான் என்று சட்ட திருத்தம் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது என்று கூறி சட்ட திருத்தத்தில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த புதன்கிழமை (18.7.2012) சட்டசபையை மீண்டும் கூட்டி நெருப்பு கோழி பற்றி விரிவாக விவாதம் நடத்தினர். கடைசியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நெருப்பு கோழி விலங்குதான் என்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் சட்டத் துறை அமைச்சர் ரானா சனா கூறுகையில், ஆடு போன்ற விலங்குகள் பட்டியலில் நெருப்பு கோழியும் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இறைச்சி பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க நெருப்பு கோழி விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
    உலகம் முழுவதும் இறைச்சிக்காக நெருப்பு கோழி மற்றும் அதன் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. நெருப்பு கோழியின் இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

நெருப்புக்கோழி சில சில சுவாரஸ்யங்கள் 

** நெருப்புக்கோழியின் எடை 60 முதல் 120 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் ஐந்து முதல் ஆறு அடி வரை இருக்கும். சாதாரண கோழிகளுக்கு கால்களில் நான்கு விரல்கள் இருக்கும் இதற்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். இதன் ஆயுள் 68 ஆண்டுகள். 

** இது ஆண்டுக்கு 10 முட்டைகள் மட்டுமே இடும். நெருப்புக்கோழியின் முட்டைதான் உலகிலேயே மிகப்பெரியது. சாதாரண கோழி முட்டையை விட இது 40 மடங்கு பெரியது. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தியும் அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால் கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடுமாம். பின்னர், கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வை திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்க்கக் கூடிய சக்தி உள்ளது. 

** நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடிக் கூடியவை. உறுதியான கால்களும், இரும்பு போன்ற அலகும் கொண்டது. ஒரே உதையில் மனிதனை கொல்லக் கூடிய அளவுக்கு இதன் கால்கள் வலிமையானவை. அதேபோன்று, இது தனது அலகால் கொத்தினால், மனிதனின் மண்டை ஒட்டிலேயே ஓட்டை விழுந்துவிடுமாம். 

** நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியவை. மாமிச பட்சிணிகளுக்குத் தேவையான உப்பு அவற்றின் இரையின் சதையிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கிடைத்து விடுகிறது. ஆனால், சாகபட்சிணிகளுக்கு தாவரங்களிலிருந்து சோடியம் குளோரைட் உப்பு கிடைப்பதில்லை. எனவே, அப்பிராணிகள் உவர் மண்ணைத் தின்று உப்பைப் பெறுகின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷியத்தை சிறுநீர் மூலமாக வெளியே தள்ள உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. 







Friday, 20 July 2012

இந்திய சினிமா 100 - 2



* இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 1931ம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தின் கதாநாயகன் விட்டல், கதாநாயகி சுபைதா. 

* இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம், 1959ம் ஆண்டு வெளிவந்த ' காகஸ் கி பூல்'

* ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம், 'மதர் இந்தியா' 

* விசேஷ ஆஸ்கார் விருதுபெற்ற ஒரே இந்தியர், சத்யஜித் ரே. 

* முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த முதல் இந்திய திரைப்படம், 'ருக்மாபாய் கீ ஹவேலி'

* பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ் 

* இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இடம் பூனா. இது 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

* தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்'  படத்தை இயக்கியர் எச்.எம்.ரெட்டி. இப்படம் 1937ம் ஆண்டு வெளியானது.

* தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கீசகவதம்' இதன் தயாரிப்பாளர், மோட்டார் கார் பாகங்களை விற்பனை செய்துவந்த நடராஜ முதலியார்.

* தமிழ் திரையுலக முதல் நட்சத்திர நடிகை டி.பி. ராஜலட்சுமி 





Thursday, 19 July 2012


பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று (19.7.2012), அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Monday, 9 July 2012

கள்ளநோட்டை கண்டுபிடிக்க புதிய இணையதளம்



நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும், கள்ளநோட்டுக்களை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது. 

கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும். எனவே,   கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி, www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. 

    ரூ. 10, 50,100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து, கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை


     தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக,  இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.

     தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.  அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம் என்றார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சில குறிப்புகள் 

* இச்சட்டத்தின்படி அரசு அலுவலகங்கள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் முதலியவை பற்றிய எந்த தகவலையும் கோரி பெற இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. 

* தகவல் கோருகிறவர், அதற்கு எந்த எவ்வித காரணமும் கூற வேண்டியதில்லை. 

* இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தைக்காட்டிலும் இந்த சட்டம் மட்டுமே உயர்வானது. அதாவது எந்த ஒரு சட்டத்தையும் சுட்டிக்காட்டி அரசு அலுவலர்கள் தகவல் தர மறுக்க முடியாது. 


* தமிழக அரசு அதனுடைய அலுவலகங்களில் தகவலைக் கோர ரூ. 50 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 

*  தகவல் கோருபவர் ரூ. 50 கட்டணம் செலுத்தி, அசல் ரசீதோடு, தான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக குடும்ப அட்டையின் நகலையும் இணைத்து வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித்தாலே போதுமானது. 

* ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு உதவிப் பொதுத்தகவல் அலுவலரும், மேல்முறையீட்டு அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதலில் உதவிப் பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

* கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களில் வந்து சேரவில்லையென்றாலோ,  போதுமான தகவல்கள் இல்லையென்றாலோ, மேல்முறையீட்டு அலுவலருக்கு முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

* மேல் முறையீட்டிலும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் 90 நாட்களுக்குள் மாநிலத் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் முறை மேல்முறையீடு செய்யலாம். 

 * சரியான தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு நாளொன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவிர அந்த அதிகாரி மேல் துறைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். 

* அச்சுத்தாள், குறுந்தகடு அல்லது மென்தகடு ஆகியவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். 

* அரசு அலுவலகங்களில் எந்த கோப்பையும் நாமே நேரடியாக பார்வையிடலாம். சான்றிட்ட நகலையும் பெறலாம். நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணிநேரம் இலவசம் ஆகும். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும். 

* மத்திய அரசைப் பொருத்த வரை தகவல் அறிய ரூ. 10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

* தகவல் பெற விரும்புபவர் ஊரில் உள்ள தலைமை அஞ்சல் நிலைய தலைவரிடம் விண்ணப்பித்தால் போதுமானது. அவர் உரிய அலுவலகங்களுக்கு அனுப்பித் தகவல் பெற்றுத் தருவார். 

* தகவல் பெறுவதற்காக கட்டணத்தையும் ரொக்கமாக அந்ததந்த அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தி ரசீது பெறலாம்.