தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), "ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.
முன்னர் சமிக்ஜைகள் மூலமும், மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்த கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.
ரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.
மோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.
இவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.
இந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.
1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
தொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.
தந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர். குறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது.
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும். அதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.
இதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.
அதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.
தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது
இன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எந்தெந்த நாடுகளில் தந்தி சேவை உள்ளது
உலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.
ஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.
பிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.
அமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.
நேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
ஆஸ்திரேலிய அரசு 2011 மார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.
மலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.
அயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.
நியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment