Friday, 10 April 2015

தெரியுமா இவரை - 10 சாக்ரடீஸ்

மக்களை சிந்திக்கத் தூண்டியதற்காக, ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளாகி மரண தண்டனை பெற்றவர் தத்துவஞானி சாக்ரடீஸ். கிரேக்க நாட்டின் தலைநகரான ஏதென்சில் கி.மு. 470-ம் ஆண்டு பிறந்தவர் சாக்ரடீஸ். இவரது தந்தை ஒரு சிற்பி. தாயார் மருத்துவச்சி. அந்த காலத்தில் முறையான கல்வி கற்க வசதியில்லாததால், சுயமாகவே அவர் அறிவை வளர்த்துக் கொண்டார். சதா சிந்தனையுடன் இருப்பதும், ஊர் சுற்றுவதும் அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்குகள். குடும்பத்தின் வறுமை காரணமாக, தந்தையின் சிற்பத் தொழிலை கற்றுக் கொண்டு, சில காலம் அந்த வேலையை செய்தார். எனினும், அதில் போதிய வருவாய் கிடைக்கவில்லை. 

அந்த காலக்கட்டத்தில், ஏதென்சில் வசிப்பவர்கள், குடும்பத்திற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது அந்நாட்டு சட்டம். எனவே, சாக்ரடீசை அவரது பெற்றோர் ராணுவத்திற்கு அனுப்பினர். குறிப்பிட்ட காலம் வரை ராணுத்தில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பிய, சாக்ரடீஸ் அதன் பிறகு வேறு எந்த தொழிலும் செய்யவில்லை. காலையில் எழுந்ததும் ஊர் சுற்றக் கிளம்பிவிடுவார். மக்கள் கூடும் இடங்களில் நின்று, பகுத்தறிவு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விடுவார். 

சாக்ரடீஸ் மெர்டன் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களது இனிய இல்லறத்தின் விளைவாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. தனது கணவர் சிறந்த அறிவாளி என்று மெர்டன் பெருமை கொண்டிருந்தாள்.
ஆனால், மெர்டன் உடல்நலம் குன்றி இறந்துவிட்டாள். மனைவியின் இறப்பால், பெரிதும் துயரம் அடைந்த சாக்ரடீஸ், தன் குழந்தைகளை பராமரிப்பதற்காக, சாந்திபி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாள். சாந்திபி, மெர்டனுக்கு நேரெதிரான குணங்களை கொண்டிருந்தாள். சாக்ரடீசின் பகுத்தறிவு பிரச்சாரங்களை, வெறும் வெட்டிப்பேச்சு என்றாள் அவள். இவளுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தன. 

சாக்ரடீசின் பகுத்தறிவு பிரச்சாரம், ஆட்சியாளர்களுக்கு கிளியை ஏற்படுத்தின. அவருடைய பேச்சைக் கேட்டு, மக்கள் சிந்திக்கத் தொடங்கினால், அது தங்களுக்கு ஆபத்து என்று கருதினார்கள். எனவே, பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுமாறு அவரை எச்சரித்தார்கள். ஆனால், சாக்ரடீஸ் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த ஆட்சியாளர்கள், நாத்திக பிரச்சாரம் செய்து, இளைஞர்களின் மனதை கெடுக்கிறார் என்று குற்றம்சாட்டி, அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். 

விசாரணைக்குப் பின், சாக்ரடீஸ் குற்றவாளியா, இல்லையா என்று நீதிமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி இல்லை என்று 220 பேருக்கும் வாக்களித்தனர். 61 ஓட்டு வித்தியாசத்தில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று முடிவாயிற்று. இனி பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தால், தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்று ஆட்சியாளர்கள் ஆசை காட்டினர். சாக்ரடீஸ் அதை மறுத்து, உயிருள்ளவரை பிரச்சாரத்திற்கு ஓய்வு கொடுக்கமாட்டேன் என்றார். எனவே, நாடு கடத்துவது, அல்லது பெருந்தொகை ஒன்றை அபராதமாக செலுத்துவது என்று இரண்டு தண்டனைகள் அவர் முன் வைக்கப்பட்டன. இரண்டையும் சாக்ரடீஸ் ஏற்க மறுத்தார். 

சாக்ரடீசின் போக்கு ஆட்சியாளர்களை அவமதிக்கும் வகையில் உள்ளது என்று கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தனர். அவரை தண்டனையிலிருந்து காப்பாற்ற, உறவினர்களும் நண்பர்களும் முயற்சி செய்தனர். ஆனால், அதற்கு சாக்ரடீஸ் சம்மதிக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, 'ஹெமலாக்' என்ற கொடிய விஷம் கோப்பையில் கொடுக்கப்பட்டது. அதை வாங்கி, கொஞ்சமும் அஞ்சாமல் குடித்துவிட்டு, தரையில் சரிந்தார் சாக்ரடீஸ். அப்போது அவருக்கு வயது 70. 


1 comment: