Thursday, 2 April 2015

தெரியுமா இவரை - 8 கிளியோபாட்ரா


பேரழகி என்ற சொல்லுக்கு இலக்கணமாக திகழ்ந்தவள் எகிப்து நாட்டின் ராணியான கிளியோபாட்ரா. கி.மு. 51-ம் ஆண்டில் எகிப்து நாட்டை ஆண்டை தாலமி மன்னனின் மகள் இவள். தாலமி இறப்பதற்கு முன், கிளியோபாட்ராவும், அவள் தம்பியும் திருமணம் செய்துகொண்டு நாட்டை ஆள வேண்டும் என்று மன்னர் விருப்பப் பட்டார். தாலமி வம்சத்தில், பிற வம்சத்தின் ரத்தக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அக்காலத்தில் இத்தகைய திருமணங்கள் சாதாரணம். தந்தையின் ஆசைப்படி, கிளியோபாட்ரா, தனது தம்பி ஏழாவது தாலமியை மணந்துகொண்டு, நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்போது, கிளியோபாட்ராவுக்கு வயது 16. தம்பிக்கு 10 வயது. 

அமைச்சர்களும், பிரபுக்களும் தாலமியை தங்கள் கைப்பாவையாக்கிக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலால், கிளியோபாட்ராவை விரட்டியடித்துவிட்டு, தாலமி ஆட்சியை கைப்பற்றினான். சிரியாவுக்கு தப்பி ஓடிய கிளியோபாட்ரா, மீண்டும் ஆட்சியை பிடிக்க, படை திரட்டும் முயற்சியில் இறங்கினாள். 

ரோம் நாட்டை ஆண்டு வந்த ஜூலியஸ் சீசர், இந்த நேரத்தில், எகிப்து மீது படையெடுத்தார். அவரிடம் உதவி கேட்டாள் கிளியோபாட்ரா. அவளது அழகில் மயங்கிய சீசர், உதவுவதாக வாக்களித்தார். பின்னர், ஜூலியஸ் சீசருக்கும், தாலமிக்கும் நடந்த சண்டையில் தாலமி கொல்லப்பட்டான். ரோமாபுரி ஆதிக்கத்தின் கீழ் வந்த எகிப்துக்கு கிளியோபாட்ராவை ராணி ஆக்கிய சீசர், அவளுடன் வாழத் தொடங்கினார். அவர்களுக்கு 'சிசேரியன்' என்ற மகன் பிறந்தான். 

சில காலத்துக்குப் பின்னர், கிளியோபாட்ராவுடன், ரோமாபுரிக்கு திரும்பிய சீசரை, அவரது நெருங்கிய நண்பன் புரூட்டஸ் சதிகாரர்களுடன் இணைந்து, கி.மு. 44-ம் ஆண்டு மார்ச் 15-ம் நாள் கத்தியால் குத்தி கொலை செய்தான். மனம் உடைந்த கிளியோபாட்ரா எகிப்து திரும்பினாள். 

சீசரின் நம்பிக்கைக்குரிய தளபதியான ஆண்டனி, சதிகாரர்களை நாட்டை விட்டு விரட்டி, ஆட்சியை கைப்பற்றினான். பின்னர், சீசரின் வளர்ப்பு மகன் ஆக்டேவியசும், ஆண்டனியும் ரோமாபுரியை ஆண்டு வந்தனர். ரோமாபுரியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த எகிப்துக்கு ஆண்டனி சென்றபோது, கிளியோபாட்ராவின் அழகில் மயங்கினான். இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினார்கள். ஏற்கனவே, ஜூலியஸ் சீசருடன், கிளியோபாட்ரா வாழ்ந்திருந்தாலும், அவரை விட பன்மடங்கு ஆண்டனியை நேசித்தாள். 

இவருவரது உல்லாச வாழ்க்கைப் பற்றி, தவறான தகவல்கள் ரோமாபுரியில் பரவியதால், மக்கள் ஆண்டனியை வெறுக்கத் தொடங்கினர். ஆக்டேவியசின் செல்வாக்கு பெருகியது. ரோமுக்கு வந்த ஆண்டனி, ஆக்டேவியசுடன் நட்பை புதுப்பித்துக் கொண்டான். ஆனாலும், ஆக்டேவியசின் செல்வாக்கு வளர்வதைக் கண்டு மனம் புழுங்கிய ஆண்டனி, மீண்டும் எகிப்து திரும்பினான். இதனால், ஆக்டேவியசுக்கும், ஆண்டனிக்கும் இடையில் பகை முற்றியது. இதற்கு இடையில், கிளியோபாட்ரா-ஆண்டனியின் காதல் வாழ்க்கைக்கு சாட்சியாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. 

கிளியோபாட்ரா மூலம் தனக்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும், சீசருக்கு பிறந்த சிசேரியனுக்கும் ஆசிய நாடுகளின் அரசுரிமையை அளிப்பதாக ஆண்டனி அறிவித்தான். கிளியோபாட்ராவுடன் சேர்ந்து எகிப்து பேரரசை உருவாக்க ஆண்டனி முயற்சிப்பதாகவும், இது ரோமாபுரிக்கு பெரும் ஆபத்தாக முடியும் என்றும் ஆக்டேவியஸ் கருதினான். இதனால், ஆத்திரமடைந்த ஆக்டேவியஸ், கி.மு. 31-ல் எகிப்து மீது படையெடுத்தான். ஆண்டனியின் கடற்படையும், ஆக்டேவியசின் கடற்படையும் 'ஆகடியம்' என்ற இடத்தில் சந்தித்து மோதின. இதில், ஆண்டனியின் படைகள் தோற்றன. 

ஆக்டேவியசுடன் ஆண்டனி சமாதானம் செய்துகொள்வதற்கான முயற்சிகளில் இருந்தபோது, கிளியோபாட்ரா தற்கொலை செய்துகொண்டதாக வதந்தி பரவியது. இதை உண்மை என்று நம்பிய ஆண்டனி, மனம் உடைந்து, கத்தியால் குத்திக் கொண்டு, தற்கொலை செய்துகொண்டான். ஆண்டனியின் மரணத் தகவல் கேட்டு, கிளியோபாட்ரா அதிர்ச்சியடைந்தாள். ஆண்டனியை பிரிந்து, அவளும் உயிர் வாழ விரும்பவில்லை. எனவே, கொடிய விஷப் பாம்புகளை தன்னை கடிக்கவிட்டு, கிளியோபாட்ராவும் தற்கொலை செய்துகொண்டாள். இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன. 

No comments:

Post a Comment