Monday, 2 February 2015

தேனீக்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.



உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சிஇனமாகும். இவை இதுவரை பத்து லட்சத்திற்கும் மேல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. ஆனால், தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையை மட்டுமே தரக்கூடிய பூச்சியினங்கள் வேறு இல்லை. 

தேனீக்களால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. பிரமாண்ட எண்ணிக்கையில் அமையப்பட்ட பூச்சி இனத்தில், மிக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சங்களை பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி ஆய்வு செய்யப்பட்டு கண்டறியப்பட்ட அம்சங்கள் வியப்பில் ஆழ்த்தக் கூடியவை. 


தேனீக்கள் ஆறுகால்கள் கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. தேனீக்கள் ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20 ஆயிரம் வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள் இனங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் ஏப்பிடே  என்னும் குடும்பத்தில் ஏப்பிஸ்  என்னும் இனத்தைச் சேர்ந்தவை

தேனீக்கள் குழுக்களாக வாழ்கின்றன. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். தேன்கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக எடையால், கீழே விழாமல் இருக்க, வேலைக்கார தேனீக்கள், மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு ஒட்டுகின்றன. கூடுகளில் ஏற்படும் விரிசலும் அந்த பிசின்போன்ற பொருளால் சரி செய்யப்படுகின்றன.


ஒவ்வொரு தேன்கூட்டிலும், ராணித் தேனீ, ஆண் தேனீக்கள், வேலைக்காரத் தேனீக்கள் என்று மூன்று பிரிவுகள் இருக்கும். இதில், 90 சதவீதம் வேலைக்காரத் தேனீக்களும், 10 சதவீதம் ஆண் தேனீக்களும், ஒரே ஒரு ராணித் தேனீயும் இருக்கும். ஒவ்வொரு கூட்டிலும் ஒரு ராணித் தேனீ இருக்கும். இதுதான் அளவிலும் பெரியது. இது, 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்லும். தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்ளும். 


அந்த ஒரு உறவின் மூலம் மட்டுமே லட்சக்கணக்கான ஆண் உயிர் அணுக்களை ராணி தேனீ பெற்றுக்கொள்கிறது. அதன் பின்னர் தன் ஆயுள் முடியும் வரை அது உறவில் ஈடுபடுவதில்லை. முதல் உறவின் மூலம் பெற்ற உயிரணுக்களைக் கொண்டே, தன் ஆயுள் இறுதிவரை முட்டையிட்டுக்கொண்டே இருக்கும். பொதுவாக, ராணி தேனீ, ஆண் தேனீயுடன் உறவில் ஈடுபட்ட பத்தாவது நாளிலிருந்து முட்டையிடத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் முட்டைகளையும், ஆண்டுக்கு, 2 லட்சம் முட்டைகளையும் ராணி தேனி இடும். ராணித் தேனீயின் ஆயுள் சுமார் 2 ஆண்டுகள். 


ஆண் தேனீக்களின்  ஒரே வேலை, ராணி தேனீயுடன் உறவு கொள்வது மட்டுமே. இவை தவிர பெரும்பாலான நேரத்தை அவை செயலற்ற நிலையிலேயே கழிக்கின்றன. இவை தேன் சேகரிக்க வெளியே செல்வதில்லை. எதிரிகளை தாக்கக் கூடிய வகையில் இவைகளுக்கு கொடுக்குகளும் கிடையாது. இவை உணவு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு வேலைக்காரத் தேனீக்களையே சார்த்திருக்கின்றன. 

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள். அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்ற இந்த வேலைக்காரத் தேனீக்கள், கூட்டில் இருக்கும் ராணித் தேனீக்கும், ஆண் தேனீக்களுக்கும் உணவு வழங்குகின்றன. மேலும், மலர்களிலிருந்து தேனை சேகரித்து வந்து கூடுகளில் சேமித்து வைப்பதும், கூடுகளை பாதுகாப்பதும் வேலைக்காரத் தேனீக்களின் வேலைகள். வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. அவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. ஒரு தேன் கூட்டில் 50 முதல் 60 ஆயிரம் தேனீக்கள் வரை இருக்கும். ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்காரத் தேனீக்களின் ஆயுள் அதிகபட்சமாக 6 மாதங்கள் மட்டுமே. 


தேன் மற்றும் தேனீக்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்:


தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள். இவை வாழ்நாளில் பறக்கும் மொத்த தூரம், பூமியை 4 முறை வலம் வந்ததற்கு சமமானதாகும்.

தேனீக்கள் பறக்கும்போது, அவற்றின் சிறகுகள் ஒரு நிமிடத்திற்கு 11 ஆயிரத்து 400 முறைகள் அடித்துக் கொள்கின்றன. தேனீக்கள் மணிக்கு 24 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கின்றன. 

500 கிராம் தேனை சேகரிக்க ஒரு தேனீக் கூட்டம் 55 ஆயிரம் மைல்கள் சுற்றித் திரிந்து 20 லட்சம் பூக்களில் இருந்து தேனை எடுக்கின்றன. தேன் சேகரிக்க புறப்படும் ஒரு தேனீ, 50 முதல் நூறு பூக்களை பார்த்துவிட்டு திரும்புகிறது. 

தேனீக்கள் பேசிக்கொள்வது இல்லை. ஆனால், அவை தமது பிரத்யேக நடனத்தின் மூலம் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றன.  

உலகில் இயற்கையாகக் கிடைக்கும் உணவுப் பொருட்களின் மிக மிக சுத்தமானது தேன். நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாத உணவுப் பொருளும் இதுதான். தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் மீட் என்று அழைக்கப்படுகிறது. தேன் பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. 

தேனீக்கள் சூரியனை நேருக்கு நேர் பார்க்கும் பார்வை திறன் பெற்றவை. தேனீக்கு தலைப்பகுதியில் ஒன்று சேரும் இரண்டு கண்களும், மூன்று தனிக் கண்களும் உண்டு. 

தேனீயின் முகத்தில் 5 ஆயிரம் மூக்குத் துவாரங்கள் உள்ளன. இதன் மூலம், அரை மைல் தொலைவில் உள்ள பூவிலிருக்கும் தேனை நுகர்ந்தறியும் திறன் பெற்றிருக்கின்றன.  

தேனீக்கு ஆறு கால்கள் உண்டு. தேனீக்கள் ஓய்வெடுக்காமல் ஏழு மைல் தொலைவு வரை பறக்கும் திறன் பெற்றவை. 

தேனீக்கள் ஒரே ஒரு முறை மட்டுமே கொட்டும். ஒரு முறை கொட்டியதும், அது தன் கொடுக்கை இழந்துவிடும். 


No comments:

Post a Comment