Monday, 2 February 2015

கோபம் - மனித குலத்தின் எதிரி

தொலைக்காட்சி சேனல்களில் பேட்டிக் கொடுக்கும் மார்க்கெட் போன நடிகைகள், முன்னால் வந்த விழாத தலைமுடியை வம்படியாக பின்னால் ஒதுக்கி விட்டுக் கொண்டே, 'என்கு பல்வீனம் என்னன்னா.. என்கு நெற்யா கோபம்' என்பார்கள். தான் ஒரு முன்கோபி, தொட்டாலே தனக்கு கோபம் வந்துவிடும் என்று சிலர் பெருமையாக சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால், கோபம் கொள்வது என்பது ஒன்றும் பெருமையான விஷயம் கிடையாது. 

கோபம் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய இயல்பான உணர்ச்சி. அதை தேவையான இடத்தில், அளவாக பிரயோகித்தால் உரிய பலன் கிட்டும். அந்த கோபத்திற்கும் மரியாதை இருக்கும். நம் சுய மதிப்பை காத்துக்கொள்ள அளவான கோபம் அவசியம். அதே நேரத்தில், 'எனக்கு கோபம் வந்தால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது' என்ற ரகத்தில் கோபப்படுவது ஆபத்தானது. அப்படியான கோபத்தின் தீமைகளை நமது புராணங்கள் விபரமாகவே விளக்குகின்றன. 

துர்வாசர் என்ற முனிவர், அடிக்கடி கோபப்படக் கூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவ வலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம் இருக்கு முடியும்? எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, முதலில் நம்முடைய கோபத்தை அடக்கியாள பழக வேண்டும். 

தேவையில்லாமல் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டால், அழிவு நிச்சயம் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

சுவீடன் நாட்டில் உள்ள 'ஸ்ட்ரெஸ்' என்ற ஆய்வு மையம் இதைக் கண்டுபிடித்துள்ளது. ஆரோக்கியமான 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து, 1992 முதல் 2003 வரை அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில், அவர்களில் 47 பேர் மாரடைப்பு மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர் இறந்துவிட்டனர். இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம். 

பொருளாதார காரணங்கள், வேலைப்பளு, பிடிவாத குணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளே கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள். பணி செய்யுமிடத்தில், மேலதிகாரி மற்றும் உடன் பணி செய்பவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காதது அல்லது கொடுக்காதது உள்ளிட்டவை கோபத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள். இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

அதுசரி கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவதாம்? அதற்கும் அவர்களே வழி சொல்கிறார்கள். முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன். 

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதை பொருட்படுத்தாதீர்கள். அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் போனால், உங்கள் எதிரிகள் ஏமார்ந்து போவார்கள். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கையானது. எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதீர்கள். அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment