தங்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அருதியிட்டுக் கூறமுடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் தங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். அந்நாட்களில் எகிப்தும், லிபியாவும் தான் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக இருந்தன. லிபியாவில் 6-ம் நூற்றாண்டில் தங்கத்தில் காசுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தனர்.
தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும்.
தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. தங்கத்தின் உருகுநிலை 1064.43 டிகிரி செல்சியஸ் பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு 100 கோடி பாகத்தில் 3ல் ஒரு பகுதியில்தான் தங்கம் உள்ளது. இன்று புழக்கத்தில் இருக்கும் தங்கத்தில் பெரும் பகுதி வரலாற்றுக்காலத்தில் வெட்டி எடுக்கப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 2500 டன் தங்கம் எடுக்கிறார்கள்.
உலகில் அதிகமாக தங்கம் கிடைக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. தங்கம் அதிகமாக புழங்கும் நாடு அமெரிக்கா. உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தங்கம் கிடைக்கிறது.
இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் 'கோலார்' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. கோலார் தங்க வயல் பகுதியில் முதன்முதலில் தங்கம் எடுத்தவர் திப்பு சுல்தான். 1880ம் ஆண்டு 'ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ்' நிறுவனம் முறையாக சுரங்க வேலையை தொடங்கியது. 1986ம் ஆண்ட அரசுடமையாக்கப்பட்டது. உலகில் கிடைக்கும் தங்கத்தில் 4ல் 3 பாகம் நகை செய்யவே பயன்படுகிறது.
தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க் பி.ஐ.எஸ் முத்திரைகள் உள்ளன. ஆனால், ஆரம்ப காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்துப் பார்த்து நம்பகத் தன்மையை சோதிக்கும் முறை இருந்தது. தங்கம் லேசான உலேலகம் என்பதால், பல் அடையாளம் பதிந்துவிடும். அந்த அடையாளத்தை வைத்துதான் தங்கத்தை தரம் பார்த்தனர்.
தங்கம் 'காரட்' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளியைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும்.
மற்ற உலோகங்களைப் போல் அல்லாமல் அரிதாய் கிடைப்பதால், தங்கத்திற்கு மதிப்பு அதிகம். இதனால், வரலாற்று காலத்தில் இருந்தே ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிக்கும் அளவுகோலாக தங்கம் இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில்தான் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பில் உள்ளது. இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 3 சதவீதத்தை அந்த வங்கி வைத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.
அமெரிக்க அரசு ஒரு காலத்தில் 1 டிராய் அவுன்ஸ் தங்கம் (31.1 கிராம்) என்பதை 20.67 டாலருக்கு சமமாக வைத்திருந்தது. 19-ம் நூற்றாண்டில் பெரிய அளவில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கிராக்கி அதிகரித்தது. இதனால், டாலர் மதிப்பு சரிந்துகொண்டே போனது. உடனே மேற்கொண்டு சரிவை தடுக்க ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் மார்க்கெட்டில் மாற்றம் செய்ய தீர்மானித்தன. அந்நேரத்தில் பொருளாதார சூழ்நிலைகளால் தங்கத் தொகுப்பில் சிக்கல் வந்ததால், 1968ம் மார்ச் 17ல் இரட்டை விலை முறை வந்தது.
அதில் ஒன்றுதான் வெளிச்சந்தையில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது. பின்னர், 1975ல் இந்த முறை போய், முழுக்க முழுக்க வெளிச்சந்தைப்படியே தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டதால், விலை பறக்க ஆரம்பித்தது.
1844ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை 11.6 கிராம் (ஒன்றரை பவுன்) தங்கம் 21 ரூபாய் 18 காசுகளாக இருந்தது. தற்போது 22 ஆயிரத்தை கடந்துவிட்டது. தங்கத்தின் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தேவை அதிகரிப்பு ஆகியவை விலை உயர்வுக்கு காரணங்களாக இருக்கின்றன.
No comments:
Post a Comment