Monday, 2 February 2015

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயம் - திருக்காவலூர் கலம்பகம் பாடப்பெற்ற திருத்தலம்



தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து அமைந்துள்ள ஊர் ஏலாக்குறிச்சி. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஊரின் முந்தைய பெயர் திருக்காவலூர். தெய்வத் திருக்காவல் மிகுந்த இடம் என்ற பொருளில் இந்த பெயரை இந்த ஊருக்கு வைத்தவர் வீரமாமுனிவர். 

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவர்கள் இன்னல்களுக்கு ஆளானபோது, கொள்ளிடம் ஆற்றைக் கடந்த சில கிறிஸ்தவக் குடும்பங்கள் நடுக்காட்டில் அடைக்கலமடைந்தன. 1716-ம் ஆண்டில், அந்த பகுதிக்கு வந்த வீரமாமுனிவர், அவர்களுக்காக சேவையாற்றத் தொடங்கினார். கிறிஸ்தவர்கள் அடைக்கலமடைந்த அந்த பகுதியில் மேரி மாதாவுக்கு தேவாலயம் ஒன்றைக் கட்டி, அடைக்கல அன்னை என்று பெயரிட்டார். 

ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை  ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராயர நயினார் என்பவர், ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் துன்பப்பட்டார். மருத்துவ முறைகள் பயனற்றுப் போக, இறுதியாக அவர், அடைக்கல அன்னை தேவாலயத்தை நாடி வந்தார். வீரமாமுனிவர் அவருக்கு உதவ முன்வந்தார். அவரது நோய்க்கான மூலிகையைத் தேடி, வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் வீரமாமுனிவர் அலைந்தார். அன்னையின் அற்புத செயலாக, வறண்டுபோன பூமியிலிருந்து தண்ணீர் கொப்பளித்து வந்தது. வீரமாமுனிவர் அந்த தண்ணீரை சேற்றுடன் அள்ளி, மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசி விட்டாராம். ஆச்சரியமாக, ஏழு ஆண்டுகளாக ராஜப்பிளவை நோயினால் அவதிப்பட்டு உறக்கத்தைத் தொலைத்த மன்னர், அன்றிரவு நிம்மதியாக தூங்கினார். நோயும் படிப்படியாக குணமானது. 

தமக்கு ஏற்பட்ட தீராத நோயை அடைக்கல அன்னைதான் குணப்படுத்தியதாக நம்பிய மன்னர், அதற்கு நன்றியாக, வீரமாமுனிவர் எழுப்பிய அடைக்கல அன்னை தேவாலயத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்தார். அரசர் அளித்த இந்த காணிக்கைக்கு ஆதாராமாக கல்வெட்டு இன்றும் ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னையின் புதுமைக்கு சாட்சியாக இருந்து வருகிறது. 

வீரமாமுனிவர் இந்த பகுதியில் தங்கி பணியாற்றியபோதுதான், திருக்காவலூர் கலம்பகம் என்ற புகழ்பெற்ற நூலை உருவாக்கினார். தமிழ் மொழியில் உள்ள கலம்பக நூல்கள், ஆண்பால் கலம்பகங்களாக உள்ளன. அதாவது, பாட்டுடைத் தலைவர் ஆண்களாகவே உள்ளனர். ஆனால், வீரமாமுனிவர் உருவாக்கிய இந்த திருக்காவலூர் கலம்பக நூல், பெண்பால் கலம்பகமாக உள்ளது. திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரே கலம்பக நூலும் இதுமட்டுமே. திருக்காவலு£ரில் கோயில் கொண்டுள்ள அடைக்கல அன்னையின் அருமை பெருமைகளை இந்த செய்யுள்கள் மூலம் வீரமாமுனிவர் விளக்குகிறார். 

2 comments:

  1. thank you sir for the usful information

    ReplyDelete
  2. அடைக்கல அன்னையே எங்களுக்காக வேண்டியக்கொள்ளும்

    ReplyDelete