Monday, 2 February 2015

பூண்டி மாதா - இயேசுவின் திருச்சிலுவையை கொண்ட தேவாலயம்


இத்தாலி நாட்டைச் சேர்ந்த மறை போதகரான வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கி பணியாற்றியபோது, பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டினார். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி மாதா தேவாலயமும் அவரால் உருவாக்கப் பட்டதுதான். 1714-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப்பணிகள் 1718-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த ஆலயம் கட்டப்பட்ட நேரத்தில் இது ராணி இமாகுலேட் மேரி தேவாலயம் என்றே அழைக்கப்பட்டது. 

1858-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னெதெத் என்ற சிறுமிக்கு மேரி மாதா காட்சியளித்தார். பெர்னதெத்திற்கு மாதா காட்சியளித்த அதே தோற்றத்துடன் செய்யப்பட்ட 3 மாதா சுரூபங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒரு சுரூபம் இந்த பூண்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த சுரூபத்தை பொதுமக்கள் பக்தியோடு வழிபட்டு வருகின்றனர். 

கால சுழற்சியில் இந்த தேவாலயத்தின் சில பகுதிகளில் பழுது ஏற்பட்டது. 1955-ம் ஆண்டு, இந்த ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை லூர்துசேவியர், ஆலயத்தை பழுது பார்க்கத் திட்டமிட்டார். அதற்காக, தேவாலயத்தின் நடுச்சாலைப் பகுதியை இடிக்க வேண்டும். ஆனால், போதிய நிதி இல்லை. கையில் இருக்கும் பணத்தை இடிப்பதற்கு செலவிட்டால், கட்டுமானப் பணிகளுக்கு காணாது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். மேரி மாதாவிடம் தமது வேண்டுதலை முன் வைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. 


அப்போதுதான், ஆலயத்தில் அந்த அதிசய சம்பவம் நடைபெற்றது. 1956-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி இரவு, தேவாலயத்தின் எந்த பகுதியை இடிக்க வேண்டும் என்று அருட்தந்தை திட்டமிட்டாரோ, அந்த பகுதி மட்டும் அளவெடுத்தாற்போல் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தேவாலயத்திற்கு சிறு கீறலும் ஏற்படவில்லை. பின்னர், ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அடுத்தடுத்து இங்கு பணியாற்ற வந்த பங்குத் தந்தையர்கள் தேவாலயத்தை மேலும் அழகு படுத்தினார்கள். 1995-ம் ஆண்டு இந்த தேவாலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. 


இந்த ஆலயத்தின் சிறப்பு முக்கிய அம்சமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து சுமந்து சென்ற சிலுவையின் சிறு பகுதி, இங்குள்ள மாதா பீடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை பக்தர்கள் தொட்டு வணங்கி வருகின்றனர். வாட்டிக்கன் நகரத்தில், போப் ஆண்டவருக்கு உதவியாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. 

போப் இரண்டாம் ஜான்பால் அனுமதியுடன் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த ஆலயம் பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. பசிலிக்கா என்பதற்கு 'பெரிய ஆலயம்' என்பது பொருள். தமிழ்நாட்டில் உள்ள நான்கு பசிலிக்காக்களில் பூண்டி தேவாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment