Friday, 27 April 2012


'முதலும் முடிவும்' டைட்டானிக்கின் சோக வரலாறு

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவே சலிக்காத திரைப்படம் 'டைட்டானிக்'. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நேர்த்தியாக சொல்லப்பட்ட காதல் கதை எல்லா தரப்பினரையும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.  கவர்ந்தது. கடந்த 1997ம் ஆண்டு வெளியாகி, விருதுகளையும் வசூலையும் வாரிக்குவித்த இத்திரைப்படம், டைட்டானிக் கப்பல் மூழ்கி நூறாண்டை நிறைவு செய்ததையொட்டி, தற்போது, 3 டி தொழில்நுட்பத்தில் மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.

டைட்டானிக் ஒரு பிளாஷ்பேக்

             வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள ஹார்லாண்ட் மற்றும் ஊல்ப் நிறுவனத்தால் பயணிகளுக்கான சொகுசு கப்பலாக திட்டமிடப்பட்டுகட்டப்பட்டது.  1909ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய இக்கப்பலின் கட்டுமானப் பணிகள், 1911ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி நிறைவடைந்தது. 3 ஆயிரம் பணியாளர்கள் கட்டுமானப் பணியில் ஈடுத்தப்பட்டனர்.

           நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், பல்துறை அரங்குகள் என, ஒன்பது தளங்களுடன் உருவாக்கப்பட்ட இந்த சொகுசு கப்பலின் நீளம்,  882.6 அடி, உயரம் 175 அடி எடை, 52 ஆயிரத்து 310 டன். இதில்,  2 ஆயிரத்து 435 பயணிகளுக்கும், 892 பணியாட்களுக்கும் பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.  ஆபத்து காலத்தில் பயன்படுத்துவதற்காக,  20 உயிர்காப்புப் படகுகளும் சேர்க்கப்பட்டிருந்தன. மேம்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கப்பல் மூழ்கவே மூழ்காது என்று கூறப்பட்டது. உலகின் முதல் நீராவிக் கப்பல் என்ற பெருமையும் டைட்டானிக் கப்பலுக்கு உண்டு. இது,1911ம் ஆண்டு  மே மாதம் 31ம் தேதி  வெள்ளோட்டமிடப்பட்டது.

  கப்பலின் பயண தேதி அறிவிக்கப்பட்டதும், ஆர்மாக பலர் போட்டிப்போட்டுக்கொண்டு பயணச்சீட்டை வாங்கினர். அப்போதே அனுமதி கட்டணம், 4 ஆயிரத்து 350 டாலர் இன்றைய மதிப்பிற்கு, 80 ஆயிரம் டாலர்.
இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகரை நோக்கி 1912ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி புதன்கிழமை கேப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில்பெரும் ஆராவாரத்திற்கிடையே, ஆயிரத்து 343 பயணிகள் மற்றும் 885 சிப்பந்திகளை சுமந்துகொண்டு டைட்டானிக் தனது முதல் பயணத்தை உற்சாகமாக தொடங்கியது.

             புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயார்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்க்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ்டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர், 2 ஆயிரத்து 240 பயணிகளுடன் நியூயார்க் கடலலைகளின் உற்சாக தாலாட்டுடன் சென்றுகொண்டிருந்தது.

          டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர். பயணத்தின் ஐந்தாம் நாளானாக ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்க்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கிற்கு வந்தடையவில்லை.

     இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்புப் பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது, ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அருகில் இருந்த சில கப்பல்களுக்கு செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்க்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை.

            சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் தனது முதல் பயணத்தை நிறைவு செய்யாமலேயே தனது பயணத்தை பாதியிலேயே முடித்துகொண்டு முற்றிலுமாக மூழ்கியது. முழுவதுமாக மூழ்கும் போது, கப்பல் இரண்டாக பிளந்தது இன்னுமொரு சோகம். இந்த இடைப்பட்ட நேரத்தில், கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகுகளின் மூலம் பெண்கள், குழந்தைகள் என, 705 பேர் மட்டும் காப்பாற்றப் பட்டனர். கப்பல் சிப்பந்திகள் உட்பட, 1,523 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். மூழ்கியவர்களில், 300 பேரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. இந்த விபத்து, அமைதிக் காலத்தில் கடலில் நிகழ்ந்த பேரழிவாக கருதப்படுகிறது.
            
              1985ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி,  அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பாலர்டு, பிரான்சை சேர்ந்த ஜீன் லூயிஸ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வால் கப்பலின் உதிரிபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12 ஆயிரம் 000 அடி ஆழத்தில் மூழ்கிக்கிடக்கின்றது.  இவ்வாழத்தின் நீரின் அழுத்தம் ஒரு சதுர அங்குலத்திற்கு 6000 இறாத்தல் (2700 கிகி) ஆக உள்ளது.

        டைட்டானிக் மூழ்கியதற்கு, இன்றுவரை விதவிதமான காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டு வருகின்றன. இந்த ஆர்வத்தில்தான், டைட்டானிக் பற்றி 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், நூற்றுக்கணக்கான புத்தகளுங்களும் வெளியாகியுள்ளன. நூறாண்டுகளைக் கடந்தும் இன்றும் மக்கள் நினைவுகளின் டைட்டானிக் நீங்கா இடத்தைப் பெற்றுள்ளது.

( எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான் என்றாலும், எழுதாமல் இருக்க முடியாவில்லை. எழுதியும் பதிவிட கொஞ்சம் தாமதமாகிவிட்டது.)

Thursday, 26 April 2012


தமிழகம் முதலிடம்


    ஹிதேந்திரன் தமிழகத்தில் இன்று நெகிழ்வோடு உச்சரிக்கப்படும் பெயர். கடந்த 2008ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த அந்த 11ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவனது பெற்றோர் முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்த தமிழகம் நெகிழ்வோடு திரும்பிப்பார்த்தது. 

      உறுப்பு தானத்தின் உன்னதத்தை, ஹிதேந்திரன் தனது மறைவின் மூலம் உணர்த்திச் சென்றதால், இன்று தமிழகம் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

   தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பு தானம் தொடங்கினாலும், ஹிதேந்திரன் மூலமாகவே உறுப்பு தானம் பரவலான கவனம் பெற்றது. இதனால், உறுப்பு தானம் குறித்த செய்திகளை அடிக்கடி செய்திகளில் காண முடிகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் உறுப்பு தானத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போன்று, சென்னை முதலிடத்திலும், கோவை இரண்டாம் இடத்திலும் உள்ளது.

          மருத்துவ உலகம் மனித குலத்திற்கு கொடுத்த மகத்தான கொடை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. தினந்தோறும் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஆளில்லாத நிலையில், 15 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். ஒருவர் அளிக்கும் உறுப்பு தானம் மூலம், 10 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம். 

     சாலை விபத்திலோ அல்லது வேறு விதமாகவோ மூளைச் சாவு ஏற்பட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும். இதற்கு இறந்தவரின் குடும்ப ரத்த உறவு உறுப்பினர்கள் சம்மதத்துடனேயே இதனை செய்ய முடியும். 

       மனித உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், இதய வால்வு, எலும்பு, கருவிழி, தோல், தசை நாண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். தானமாக பெற்ற இதயம், ஆறு மணி நேரத்திற்குள்ளும், கல்லீரல் 8 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகம் 12 முதல் 16 மணி நேரத்திற்குள்ளும் நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டும். உடல் உறுப்புக்களை வாங்குவதும், விற்பதும் குற்றம். 

    உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சர்வதேச அளவில் இந்தியா பின் தங்கியே உள்ளது. மத ரீதியான பழக்க வழக்கங்களே உறுப்பு தானத்திற்கு தடையாக உள்ளது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

Wednesday, 18 April 2012

'மூழ்காத ஷிப்'

 உங்க விருப்பத்திற்கேற்ப நண்பர்கள் பேச வேண்டும் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். அவர்களுக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். 


 ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட எண்ணங்களும், செயல்களும் உண்டு. நட்பு என்ற போர்வையில் நண்பனின் சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்காதீர்கள். 


      நண்பனுக்கு உதவுங்கள். உங்களுக்குத் தேவையெனில் அவனுடைய உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். அதே சமயத்தில் அளவுக்கு மீறிய உதவியை இருவருமே செய்ய முயற்சிக்காதீர்கள். 


   நண்பன் பேசும்போது வாயைத் திறக்காதீர்கள். ஆலோசனைக்கு மட்டுமே வாயைத் திறக்கவும். 


       நண்பன் இல்லாத நேரத்தில் அவனைப்பற்றி நீங்கள் பேசவோ அல்லது மற்றவர் பேசவோ அனுமதிக்காதீர்கள். 


    நண்பனின் வெற்றியைக் கொண்டு பெருமைக் கொள்ளுங்கள். 


    திறந்த மனத்துடன் பாராட்டுங்கள். 


   திறந்த மனமே நட்புக்கு அடையாளம். நண்பனின் மேலுள்ள கோபத்திற்கு திரை போடாதீர்கள். முகத்திற்கு நேரே கூறிவிடுங்கள். 


        நண்பர்களிடையே பேதம் கிடையாது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்பதெல்லாம் நட்புக்குக் கிடையாது. எனவே நண்பனைத் தாழ்வாகவோ, உயர்வாகவோ எண்ணாதீர்கள். 


   குறைபாடுகள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்கிறோம். என்பதை நினைவில் கொண்டு, நண்பனின் குறைகளை பெரிது படுத்தாதீர்கள். 

       
          அப்புறம் என்ன.. என்றும் 'மூழ்காத ஷிப்' பிரண்ட் ஷிப் தான். 


( பத்தாண்டுகளுக்கு முந்ததைய வார இதழ் ஒன்று படிக்கக் கிடைத்தது. அதில், பளிச்சென்று கண்ணில்பட்ட விஷயம் இது. உங்களுக்கு எந்த விதத்திலாவது பயன்படுமானால் மகிழ்ச்சி. )