Sunday 21 April 2013

பேஸ் புக்




பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து ஒன்றிரண்டு வருஷம் வரை, அதை வாரத்திற்கு ஒருமுறையோ, மாசத்துக்கு ஒரு முறையோ மட்டுமே திறந்து பாக்கறது என்னோட வழக்கம். அண்மைகாலமாக, தினசரி அதை திறந்து பாக்கலைன்னா, அன்னைக்கு தூக்கமே சரியா வரமாட்டேங்குது. பேஸ் புக்கால என்ன பயன்னு, நேரம் போகாத நேரத்துல யோசிச்சி பார்ப்பேன். ஒண்ணுமில்லைன்னு தோணும். உடனே அந்த கணக்கை முடிச்சிக்கலாம்னு முயற்சிப்பேன். ஆனா, கடைசி நேரத்தில ஏதோ ஒண்ணு, அந்த முயற்சியை தடுத்துடும். 

இப்போ வரைக்கும் பேஸ்புக்ல நான் வெறும் பார்வையாளன் மட்டும்தான். பெருசா ஸ்டேட்டசோ, கமெண்ட்டுகளோ போட்டதில்லை. அரிதாக போடற ஸ்டேட்டசுகளுக்கு ஒரிரு லைக்குகள் மட்டுமே விழும். அவ்வளவுதான் நம்ம செல்வாக்கு. அதைப்பத்தி நான் கவலைப்படறதும் இல்லை. வேலை காரணமா, வெளியூருக்கு பிரிஞ்சு போன நண்பர்களை தொடர்பில் வெச்சிருக்க உதவுதுங்கறது மட்டும்தான் பேஸ்புக்கினால் நான் கண்ட பலன். 

சரி எதுக்கு இந்தனை பீடிகைங்கறீங்களா ? 
அண்மையில பேஸ்புக் பத்தின ஆய்வு ஒண்ணை படிச்சேன். 

பேஸ்புக்ல லைக் போடற ஒருத்தரோட ரசனையை வெச்சு, அவரோட பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை எல்லா குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்களாம். 

ஒருத்தர் தனது ஃபேஸ்புக்கில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப் பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த சொல்லியிருக்காங்க.

இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த இவர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.    

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஃபேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

அதேபோல ஃபேஸ்புக்கில் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் ஒருவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதையும் லைக் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த கணக்கீடு விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளிக்கிறது. உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம்.    

அதேசமயம், தனிமனிதரின் ஃபேஸ்புக் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்களுக்கு தெரியாதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஃ பேஸ்புக்கில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.  


Thursday 18 April 2013

இன்று உலக பாரம்பரிய தினம்


நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. 

* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது

*கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது

* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது 

* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது 
 பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது

*பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது 

* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது 

மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.  உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Monday 8 April 2013

அன்பை அடையும் வழி

ஒரு முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாக  தன்னிடம் அன்பாய் நடந்து  கொள்ளவில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.!