Friday 24 August 2012

லட்சியங்களை வகுத்துக்கொள்வது எப்படி?


சொந்த ஊருல, கிராமத்து பள்ளிக் கூடத்தில் மூணாப்பு படிச்சப்போ, எங்க கிளாஸ் டீச்சரா இருந்தவங்க கற்பகம் டீச்சர். எப்பவுமே நான் முத ரேங்க் எடுக்கறதாலயும், என்னோட அமைதியான சுபாவத்தாலும் எம் மேல அவங்களுக்கு பிரியம் அதிகம். ஒரு நா வகுப்பில, ''நீங்க படிச்சி என்னவாக போறீங்கன்னு வரிசையா ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க''ன்னாங்க. 
எல்லாருமே எழுந்து ''தெரியாது டீச்சர்''ன்னாங்க. என் முறை வந்தப்போ நானும், ''தெரியாது டீச்சர்''ன்னேன். ஒரே ஒருத்தன் மட்டும், ''எங்க மாமா மாதிரி நானும் போலீஸ் ஆகப்போகிறேன் டீச்சர்''ன்னான். மக்குப் பையனான அவனுக்கு அன்னிக்கு ஏக பாராட்டு. டீச்சர் எங்கிட்ட ரெண்டு நாள் பேசவே இல்லை. அப்போ எனக்கு லட்சியம்னா என்னன்னு கூட தெரியாது.  

பள்ளி படிப்பை முடிச்ச காலக்கட்டத்தில, ஒரு பிரபல பத்திரிகையில பத்திரிகையாளர் பயிற்சி முகாம் நடத்தினாங்க. அதுல நானும் கலந்துக்கிட்டேன்.  மொத்தம் நாங்க 25 பேர். குழு விவாதம் செஞ்சப்போ நாங்க தனித்தனியா எழுந்து, சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். அப்போ, எங்களோட லட்சியம் பத்தி பேசறப்போ, பத்திரிகையாளர் பயிற்சி முகாமில கலந்துக்க வந்துட்டு, சம்பந்தமே இல்லாம எல்லாரும், டாக்டராகணும், வக்கீலாகணும், இன்ஜினியராகணும் சொன்னாங்க. 25 பேர்ல நான் மட்டுந்தான், பத்திரிகையாளனாகணும்னேன். 

அதுக்கு ஏத்தமாதிரி, எழுதறது படிக்கறதுன்னு, எப்பவும் என் சிந்தனை அதை நோக்கியே இருந்திச்சி. என் இலட்சியம் நிறைவேறிட்டதாதான் இப்போ நினைக்கிறேன். 

நீங்க வெற்றியாளராகணும்னா, முதல்ல இலட்சியங்களைப் பத்தி சிந்திங்கங்கறாரு ஒரு அறிஞரு. வாழ்க்கையோட மாற்றத்துக்கும், வளச்சிக்கும் இலட்சிய நோக்கு முக்கியம். நாம் போக வேண்டிய இலக்கு முடிவாய்ட்டா, பாதையும், திசையும் அதுவாவே தெளிவாயிடும். அதனால, வாழ்க்கையோட இலங்கை தீர்மானிச்சு, அதை நோக்கி நீங்க கவனம் செலுத்தத் தொடங்கிட்டா.. பின்னால அதுவே உங்களை இயக்கும். 

இதுதான் இலட்சியமா இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல. உங்களுக்கு பிடிச்ச எந்த துறையிலயும் உங்க லட்சியம் அமையலாம். வாழ்க்கையில ஒருத்தருக்கு பல லட்சியங்கள் இருக்கலாம். ஆனா.. ஏதோ ஒண்ணுதான் முக்கிமானதா இருக்கும். பெரிய இலட்சியத்தை அடையறதுக்கு சின்ன லட்சியம் உதவியா இருக்கும். 

லட்சியங்களை உருவாக்கறது எப்படி ? அதுக்கான பத்து விதிகள் இது 

1. உங்களுக்கு ஆர்வமான துறையில, உங்க லட்சியம் எதுன்னு தீர்மானிச்சுக்கங்க. பணம் சம்பாதிக்கறதோ, பதவிய பிடிக்கிறதோ ஏன் ஒரு நடிகையை கல்யாணம் பண்றதாக் கூட உங்க லட்சியம் எதுவா வேணா இருக்கலாம். 

2. வகுத்துக்கிட்ட லட்சியத்தை எந்த காலக்கட்டத்துக்குள்ள அடையறதுன்னும் திட்டமிடுங்க. அதுதான் முக்கியம். 

3. அந்த லட்சியத்தை அடையறதுக்குள்ள வாய்ப்புக்களை உருவாக்குங்க. ( வாய்ப்பு கிடைக்கும்னு காத்திருக்காம, அதை நீங்களே உருவாங்குங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்க)

4. உங்க லட்சியம் இதுதான்னு தீர்மானிச்சப்புறம், அது தொடர்பான தகவல்களை சேகரிங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்க திறமைகளையும் வளர்த்துக்கங்க. அந்த துறை சம்பந்தமான மனிதர்களை சந்திச்சு, அவங்களோட ஆலோசனைகளை கேளுங்க. 

5. லட்சியத்தை அடையறதுக்கு நீங்க மேற்கொள்கிற முயற்சிகள்ல தடை ஏற்பட்டா, அதை சமாளிக்கவும் கத்துக்கங்க. 

6. திட்டமிட்ட குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ள லட்சியத்தை அடைஞ்சிட்டா, அதால கிடைக்கக் கூடிய சாதக பாதகங்களை தெரிஞ்சிக்கங்க. 

7. உங்க லட்சியத்தை அடையறதுக்கான மூலத்திட்டம் வடிவம் ஒண்ணையும் உருவாக்கிக்கங்க. 

8. உங்க லட்சியம் என்னங்கறது எப்பவும் உங்க ஞாபகத்துல இருக்கட்டும். நீங்க செய்யற செயல்கள் ஒவ்வொண்ணும் அதை நோக்கியே இருக்கணும். 

9. அப்புறம், உங்க லட்சியத்தை நீங்க அடைஞ்சிட்டதாவே கனவு காணுங்க. 

10. தகுந்த திட்டமிடல்களோட, உங்க லட்சியத்தை நோக்கி பயணப்பட துவங்குங்க. 


நிறைவா வார பத்திரிகையில படிச்ச குட்டிக்கதை ஒண்ணு 

ஒரு சாமியார்கிட்ட வந்த ஒருத்தன், 'நான் சாதிக்கணும்னா என்ன சாமி செய்யணும்' ன்னான். அதுக்கு அவரு, 'உன் பலத்தையெல்லாம் ஒண்ணா திரட்டி, தொடர்ந்து முயற்சி செய்'ன்னார். 'அது எப்படி?'ன்னு திரும்பவும் கேட்டான் அவன். அவனை ஒரு குளத்துக்கு கூட்டிட்டு போன சாமியார், 'கண்ணை மூடி, கடவுளை வேண்டிக்கிட்டு மூணு முறை முங்கி எந்திரி'ன்னாரு. அவன் முதல் தடவை முழ்கினதும், அவன் எதிர்பாராத நேரத்தில, அவன் தலையைப் பிடிச்சி பலமா அவன் எந்திரிக்காத மாதிரி தண்ணிக்குள்ள அமுக்கினாரு. கொஞ்சம் தாமதிச்சாரும் உயிர் போற நிலை. அவன், தன்னோட முழு பலத்தையும் திரட்டி, திமிரிக்கிட்டு வெளியே வந்தான். அப்போ சாமியார் சொன்னார், 'சாதிக்கணும்னா இந்த மாதிரிதான் முழு பலத்தோட முயற்சி செய்யணும்னாரு. சரிதானே.  


Tuesday 21 August 2012

வழக்கம் போல ஒரு அதிர்ச்சித் தகவல்





சில வருஷத்துக்கு முன்னால, போதை பாக்குகளை விக்கறதுக்கு தடை விதிக்கப்பட்டது ஞாபகமிருக்கலாம். நம்மாளுங்க சும்மா இருப்பாங்களா ? குழந்தைங்க சாப்பிடற மிட்டாய்கள் பாக்கெட்ல அந்த பாக்குகள் பெட்டிக்கடைகள்ல தொங்க ஆரம்பிச்சுது. இன்னிய வரைக்கும் அதான் நிலைமை. அந்த சட்டம் அமல்ல இருக்காங்கறது ஆண்டவனுக்கே வெளிச்சம். அப்புறம் பொது இடங்கள்ல புகை பிடிக்கக் கூடாது, எச்சில் துப்பக் கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா.. அதெல்லாம் சர்வ சாதாரணமா நடந்துக்கிட்டுதான் இருக்கு. 


பஸ் பயணம்னாலே ஜன்னலோர சீட்டுதான். ஆனா.. பாக்கு எச்சில் வழிஞ்சி காய்ஞ்சிருக்கிற அங்க உக்காரவே அருவெருப்பா இருக்கு. போகட்டும். மது விலக்கு, புகையிலை பொருட்களுக்கு தடைன்னு செய்திகள் ரெக்கை கட்டி பறக்குது. இது வதந்தியா இல்லாம உண்மையா இருந்தா நல்லா இருக்கும். பார்ப்போம். 

அப்புறம், மேட்டருக்கு வருவோம். உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில 2020ம் ஆண்டுல,  இந்தியாவில் மட்டும் 16 லட்சம் பேர் புகையிலை நோய்களால உயிரிழப்பை சந்திப்பாங்களாம்.   புகையிலையால நுரையீரல், கண்பார்வை போன்றவை தான் அதிகம் பாதிக்கப்படுது. புகைப்பழக்கம் காரணமா ஏற்படற நரம்புத்தளர்ச்சியால பாதிக்கப்பட்டு ஆண்மையை இழக்கறவங்களும் அதிகரிச்சிட்டாங்களாம்.  இந்த காலக்கட்டத்துல இந்தியாவுல வருஷத்துக்கு 9 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால உயிரிழக்கறாங்களாம். உலகத்துல, மனித இறப்புகளை தோற்றுவிக்கற முக்கிய காரணிகள்ல புகையிலை 2வது இடத்தை பிடிச்சிருக்காம். 

Sunday 19 August 2012

சென்னைக்கு 373 வயசு




சென்னை யாருக்கும், எப்போதுமே அலுக்காத நகரம். நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைங்கறதால, அதோட உருமாற்றங்களை ஒரளவு பாத்திருக்கேன். ஆள் நடமாட்டமில்லாத, இதெல்லாம் டெவலப் ஆகவே ஆகாதுன்னு நினைச்ச பல ஏரியாக்கள் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு மாறியிருக்கு.

ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், தபால் தலைகள் சேகரிக்கற மாதிரி சென்னையை பத்தின வரலாற்றையும், செய்திகளையும் சேகரிக்கறது என்னோட பொழுதுபோக்குகள்ல ஒண்ணு. சென்னை வரலாறுன்னு ஒரு தடியான புத்தகத்தை வாங்கி வெச்சிருக்கேன். இன்னும் முழுசா படிச்சி முடிக்கலை. அசோகமித்திரனோட எழுத்துக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரோட புலிக்கலைஞன் சிறுகதையை மறக்கவே முடியாது. அதோட, ஒரு பார்வையில் சென்னை நகரம்னு அவர் சென்னையைப் பத்தி எழுதின கட்டுரைத் தொகுப்பு ரொம்பவே சுவாரஸ்யமான புத்தகம். 

தி.நகரை பத்தி அவர் எழுதறப்போ, அவர் சென்னைக்கு வந்த புசுல, உஸ்மான் ரோட்டுல நடந்திட்டிருக்கும் போது, மாம்பலம் ரயில் நிலையத்தில ரயில் வர்ற சத்தம் கேட்டதும், ரங்கநாதன் தெருவழியா ஓடிப் போய் ரயிலை பிடிப்பாங்களாம். அப்புறம்.. பசங்க ரங்கநாதன் தெருவுல கிரிக்கெட் விளையாடுவாங்களாம். அப்படியான சூழ்நிலையையை இப்போது கற்பனை செஞ்சு கூட பாக்க முடியாது. ஒரு சாதாரண நாள்ல உஸ்மான் ரோட்டுலேந்து ரங்கநாதன் தெரு வழியா ரயில்நிலையத்துக்கு போறதுக்கு இப்போ குறைஞ்சபட்சம் அரைமணி நேரமாவது ஆகும். திருவிழா நாட்கள் சொல்லவே வேணாம். 

ஆனா.. இன்னமும் அந்த அசாதாரண சூழ்நிலையில ஒரே ஒரு வீடு அங்க இருக்கறதும், மனிதர்கள் அங்கு குடியிருக்கறதும் ஆச்சரியமான விஷயம். அது தவிரவும், பேச்சிலர்கள் தங்கியிருக்கிற மேன்சன்கள் ரங்கநாதன் தெருவில இருக்கறதா கேள்வி பட்டிருக்கேன். பாத்ததில்லை. அந்த தெருவுல மனிதர்கள் வசிக்கிறதை கற்பனை செஞ்சு பார்க்க முடியாத விஷயங்கள்ல ஒண்ணுங்கறது என்னோட தனிப்பட்ட கருத்து. 


பரங்கிமலையில உள்ள தேவாலயத்துக்கு எப்போவாவது போவேன். அங்கேயிருந்து பாத்தா முழு சென்னையையும் பாக்கலாம். ஆரம்பத்துல பாத்ததுக்கும், இப்போ பாக்கறதுக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியுது. முதல்ல சென்னையில் உயரமான கட்டிடம் எல்.ஐ.சி. கட்டிடம் மட்டும் தனிச்சு தெரியும். அப்புறம் கடலும் தெரியும். அப்புறம் வளைஞ்சி நெளிஞ்சி போற மவுண்ட் ரோடும், அதில எறும்பு ஊர்ந்து வாகனங்கள் போறதும் தெரியும். இப்போ சில மாசங்களுக்கு முன்னால பாத்தப்போ, இந்த காட்சியில நிறையவே மாற்றம். கடல் தெரியலை. ரோடுகளும் தெரியலை. காரணம் பெரிய பெரிய கட்டிடங்கள் முளைச்சி எல்லாத்தையும் மறைச்சிடுச்சி. 

அப்புறம் பசுமையா தெரிஞ்ச பல இடங்கள் நிறம் மாறியிருக்கு. நகரம் முழுக்க ஊசி ஊசியா செல்போன் கோபுரங்கள். புதுசா நடவு செஞ்ச வயல்ல நாற்றுக்கள் குச்சி குச்சியா நிக்குமே அதுமாதிரி தெரியுது. 

சென்னையோட பரபரப்பு ரொம்பவே அலுத்துப் போன ஒண்ணு. சென்னையை விட்டு, ஏதாவது ஒரு கிராமத்துல செட்டிலாகணும் ஆசை. ஆனா.. சென்னையை விட்டு, வேற இடத்துல வசிக்கிறதை கற்பனை செஞ்சு கூட பாக்க முடியலை. ரொம்பவும், பிடிச்ச அதே நேரத்துல பிடிக்காத நகரமும் சென்னைதான். 

சென்னை எல்லா தரப்பு மக்களும் பிழைச்சிருக்க ஏத்த நகரம். ஆனா.. இது வாழறதுக்கு ஏத்த நகரமில்லை. இதுவும் என்னோட தனிப்பட்ட கருத்துதான். 



உலக புகைப்பட தினம்



ந்தத் துறையாக இருந்தாலும் இப்போது புகைப்படம் என்பது தவிர்க்க முடியாத விஷயம். இன்னிக்கு (ஆகஸ்ட் 19) உலக முழுக்க புகைப்பட தினம் கொண்டாடப்படுது.


பக்கம், பக்கமா எழுதற எழுத்து ஏற்படுத்தாத தாக்கத்தை ஒரு புகைப்படம் ஈசியா உணர்த்திடும். புகைப்படம்ங்கிறது நிகழ்காலத்தோட ஒரு நொடியை காட்சியா உறைய வைக்கிற அபூர் கலை.  புகைப்படம் மனித வாழ்க்கையில முக்கியமான அம்சம். 

புகைப்பட கேமராவுக்கு முன்னோடியாக இரு படப்பெட்டி தான் கேமராவா இருந்திச்சாம். கி.மு. 5-ம் நூற்றாண்டுல சீன தத்துவ மேதை மோ ட்டி, ஒரு துளை வழியாக ஓர் இருண்ட பகுதிக்குள்ள ஒளி கடந்து போகும்போது ஒரு தலைகீழ் மற்றும் முகப் படத்தை உருவாக்க முடியும்னு சொன்னாரு. அதானல கேமராவோட  செயல்பாட்டை முதல் முதலா பதிவு செஞ்சவர் இவர்தான். 

இவருக்கு அடுத்தபடியா பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர் பாயில், அவரது உதவியாளர் ராபர்ட் ஹுக் ஆகியோர் இணைஞ்சு 1660-ம் ஆண்டு ஒரு சின்ன கேமரா மற்றும் இரு படப் பெட்டிகளை உருவாக்கினாங்க. 

அப்புறம், 1839-ல் கேமரா எனும் புகைப்படக் கருவிகள் உலகச் சந்தைக்கு வந்தன. இதன் வெளிப்பாடா ஜனவரி 9-ம் தேதிய உலக புகைப்பட நாளா கொண்டாடினாங்க. அப்புறம் இந்த நாள் ஆகஸ்ட் 19-ம் தேதிக்கு மாறிடுச்சி. 1920-ல் பல வகைகளில் கேமராக்கள் தயாரிக்கப்பட்டுச்சி. 

உலக புகைப்பட தினத்தையொட்டி, சிறந்தப் படத்துக்குப் பரிசுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் குடுத்தது. மரப்பெட்டியில் கேமரா கருவி பொருத்தி கறுப்புத் துணியால மூடி புகைப்படம் எடுத்த காலம் மலையேறிப் போச்சு. இப்போது, செல்போன், ஐ-பேட், கையடக்க கணினி என பலவற்றிலும் கேமராக்கள் வந்தாச்சு.

2009-ம் ஆண்டுதான் உலக புகைப்பட தினத்துக்கான அமைப்பு தொடங்கப்பட்டது. முன்னாடில்லாம் கேமராவை லேசாக அசைத்தாலோ, கை நடுங்கினாலா, குறிப்பிட்ட அளவுக்கு மேல திருப்பினாலோ அந்தப் புகைப்படம் சரியாக வராது. இப்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்துட்டதால கை நடுக்கம் இருந்தாலும் கவலையில்லை. 

முன்னாடி பிலிம் ரோல்களை பயன்படுத்தித்தான் புகைப்படம் எடுக்க வேண்டியிருந்துச்சி. இப்போ, குட்டியான மெமரி கார்டுகளே போதுமானது. நெட்டிவ், பாசிட்டிவ், டெவலப்பிங், பிரிண்டிங் அதை பாதுகாத்து வைக்கிற இம்சைகள் எதுவுமே இப்போ இல்லை. 



Sunday 5 August 2012

நொறுக்ஸ்


பெரிய விஷயங்களை விட 

சின்ன விஷயங்கள் தான் நம்மளை காயப்படுத்தும். 

உதாரணமா, குதிரை மேல உக்காரலாம். 
குண்டூசி மேல உக்கார முடியுமா ?



தலைகீழ் 'தாரகம் '

' Able was i ere i  saw Elba' என்பது மாவீரன் நெப்போலியனோட புகழ் பெற்ற வாசகம். இதோட சிறப்பு என்னன்னா.. இந்த வாசகத்தை வலமிருந்து இடமா படிச்சாலும் வார்த்தைகளும், அர்த்தமும் மாறாம வரும். 


கொடிய மிருகம் 

'' குருவே.. உலகத்துலயே மிகவும் கொடிய மிருகம் எது?'' ன்னு.. அரிஸ்டாட்டில் கிட்ட சிஷ்யர் ஒருத்தர் கேட்டாரு.
அதுக்கு அவர், '' உலகத்துலயே நாக்குதான் மிகக் கொடிய மிருகம். அதை ஒரு தடவை அவுத்து விட்டுட்டா..திரும்பவும் அதை கட்றது கஷ்டம்''ன்னாரு.



தொடர் பயணம் கூடாது. 


எப்பவோ படிச்ச சர்தாஜி ஜோக் ஒண்ணு..

ரயில்ல பிரயாணம் பண்ணிக்கிட்டிருந்த சர்தாஜி, ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் ரயில் நிக்கிறப்போ.. கீழே இறங்கி பிளாட்பாரத்துல நிப்பாரு. ரயில் புறப்பட்டதும் ஓடிவந்து ஏறிக்குவாரு. இதை ரொம்ப நேரமாக கவனிச்சிட்டிருந்த சக பயணி, 'ஏன் இப்படி பண்றீங்க' காரணம் கேட்டாரு. அதுக்கு சர்தாஜி ரொம்ப பொறுமையா, ' எனக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு. அதனால.. டாக்டர் தொடர்ச்சியா பிரயாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்லிட்டாரு.. அதனாலதான் இப்படி'ன்னாரு. 

என்னா ஒரு புத்திசாலித்தனம். 


பேஸ் புக்கை திறந்ததும் தான் இன்னிக்கு நண்பர்கள் தினம் தெரிய வந்துச்சு. விதவிதமாக நிறைய பேர் வாழ்த்து சொல்லியிருந்தாங்க. இதுவே.. பிப்ரவரி 14 ம் தேதியா இருந்தா.. ஊரே அதகளப்பட்டிருக்கும். எல்லா சேனல்லயும் சிறப்பு நிகழ்ச்சிகளை போட்டு கொலையா கொன்னிருப்பாங்க. பாவம்.. நண்பர்கள் மட்டும் என்ன பாவம் செஞ்சாங்களோ.. அவங்களை யாரும் கண்டுக்கறதே இல்லை. எனக்கு நண்பர்கள் வட்டம் கொஞ்சம் பெரிசு. எல்லாரையும் தினசரி சந்திக்க முடியறதில்லை. சிலரை சந்திச்சு மாசக்கணக்குல இருக்கும். ஏன் சிலரை சந்திச்சு வருஷக் கணக்குல கூட இருக்கும். சம்பிரதாயமா போன் பண்ணி யாருக்கும் நண்பர்கள் தின வாழ்த்து சொல்லணும்னு தோணலை. அதே மாதிரி எனக்கும் அப்படிப்பட்ட போன் எதுவும் வரலை. பேஸ்புக்ல கூட தனிப்பட்ட முறையில யாரும் வாழ்த்து தெரிவிக்கலை. பொதுவான அவங்களோட சுவத்துல எழுதியிருந்ததுதான். 
நட்புல எதுக்கு பாசாங்கு? 

'ஒவ்வொரு நாளும் ஆனந்தம்'னு ஒவ்வொரு நாளைக்கு ஒரு பொன்மொழி இருக்கற குட்டி புக் ஒண்ணு வாங்கினேன்.
அதுல இன்னிய தேதில இருந்த வாசகம்.. ' எதிர்காலத்தை உருவாக்குவதில் கனவைப் போல உதவுவது வேறொன்றில்லை.'



குறிப்பு ஒண்ணை எடுக்கறதுக்காக, பழைய நோட்டுக்களை புரட்டிக்கிட்டிருந்தேன். ஒரு நோட்டுல.. நட்பு பற்றி நான் எப்போதோ தொகுத்து வெச்சிருந்த பொன்மொழிகள் கிடைச்சது. என்ன ஆச்சரியமான ஒற்றுமை. 


** இன்பத்தை இரட்டிப்பாக்கி, துன்பத்தை பாதியாக குறைப்பது நட்பு - பிரான்சிஸ் - பேக்கன்


** ஆத்திர மிக்க நட்பு, சில வேளைகளில் அமைதியான பகைமையைப் போலவே கேடு விளைவிக்கக் கூடியது - ஷேக்ஸ்பியர்


** நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில் தலைசிறந்தது - பெஞ்சமின் டிஸ்ரேலி


**நட்பைக் கொடுத்துதான் நட்பை வாங்க முடியும் - தாமஸ் வில்லியம் நட்பு காதலாக மலரக்கூடும், மலரவும் செய்கிறது. ஆனால், காதல் ஒருபோதும் நட்பாக அடங்குவதில்லை - பைரன் பிரபு 


**பறவைக்கு ஒரு கூடு, சிலந்திக்கு ஒரு வலை, மனிதனுக்கு நட்பு - வில்லியம் பிளேக் 


*நூறு நண்பர்கள் கூட மிகக் குறைவுதான், ஒரு பகைவன் கூட மிக அதிகம்தான் - திபெத் 


**  சண்டைக்குப் பின் சமாதானமான நண்பன் இருமடங்கு எதிரி - யாரோஎதிரியின் முத்தங்களைவிட, நண்பனின் அடிகள் சிலாக்கியமானவை - தாமஸ் ஏ.பெக்கட்


** நண்பனுடன் உரையாடுவது, உரக்க சிந்திப்பதற்கு சமம் - ஜோசம் அடிசன்

** உன் உறவினரை தேர்ந்தெடுப்பது ஊழ்வினை, உன் நண்பர்களை தேர்ந்தெடுப்பது நீயே - ஜேக் 


Friday 3 August 2012

இந்திய சினிமா 100 - 3




** சினிமாவுக்காக வெளியிடப்பட்ட முதல் பத்திரிகை 'மூவி மிரர்' இந்த பத்திரிகையை 1927ம் ஆண்டு எஸ்.கே. வாசன் என்பவர் தொடங்கினாரு. தமிழ்ல வெளிவந்த முதல் சினிமா பத்திரிகை 'சினிமா உலகம்'. இதை 1935ம் ஆண்டு பி.எஸ். செட்டியார் என்பவர் வெளியிட்டாரு. 

** தென்னிந்திய மொழியில் 'டப்பிங்' செய்யப்பட்ட முதல் படம் 'அரிச்சந்திரா' இதை 1943ம் ஆண்டு தயாரிச்சவரு ஏவி.எம். 

** இந்தியாவுக்குள்ள முதல் முதலா காட்டப்பட்ட முதல் மௌனப்படம் 'ஏசுவின் வாழ்க்கை'. 'டூபாண்ட்'ங்கற பிரெஞ்சுக்காரர் 1896ம் ஆண்டு மும்பையில பொதுமக்களுக்கு போட்டு காட்டினாரு. 

** இந்திய சினிமாவுல முதன் முதலா கதாநாயகியா நடிச்சது ஒரு சிறுவன். 'சோலங்கி' என்ற அந்த சிறுவன் 'ராஜா அரிச்சந்திரா' படத்துல பெண் வேஷம் போட்டு, 'தமயந்தி' கதாபாத்திரத்துல நடிச்சான். உண்மையான முதல் கதாநாயகி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த கமலா'ங்கற பெண்மணிதான். 1913ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே தயாரிச்ச 'பாஸ்மாசூர் மோகினி'ங்கற படத்துல அவங்க முக்கிய வேடத்துல நடிச்சாங்க. 

** ஆரம்பகால சினிமா படங்கள் ஊமைப்படங்களாவே வந்திச்சுன்னு நமக்குத் தெரியும். பிறகு பேசும் படங்கள் வந்தன. பேசும் சினிமாக்கள் வந்த பிறகும் ஊமைப்படங்கள் வந்தா எப்படி இருக்கும்?
இப்படி உருவான முதல்படம் 'இங்கீத்'ங்கற பெங்காலி படம். 1961ம் ஆண்டு வெளியான இந்த படத்துல வசனமே கிடையாது. பின்னணி இசை மட்டும்தான் இருந்திச்சு. அதுக்கு அப்புறம் 1987ம் ஆண்டு சிங்கிதம் சீனிவாச ராவ் இயக்கத்துல பேசாத படம் வெளி வந்துச்சு. தமிழ்ல 'பேசும் படம்', தெலுங்குல 'புஷ்பக் விமானா', இந்தில,'புஷ்பக்'ன்னு வெவ்வேற பெயர்கள்ல வெளியாச்சு. இந்த படத்துல கதாநாயகனா நடிச்சவரு நம்ம கமல்ஹாசன். 

** சினிமாவை செட்டுகள் ஆட்டிப்படைச்ச காலத்துல ஒரு செட் கூட போடாம எடுக்கப்பட்ட படம், ' ஆஸ்மான் மஹால்'ங்கற படம். இது 1965ம் ஆண்டு வெளியாச்சு. 

** இயக்குநர் மணிரத்ம் எடுத்த 'தில்சே' (தமிழ்ல 'உயிரே') படத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. பிரிட்டன்ல 'டாப் டென்' படங்கள்ல இடம்பிடிச்ச முதல் இந்திய திரைப்படம் இதுதான். 

** உலகத்துலயே அதிக படங்கள்ல கதாநாயகனா நடிச்ச நடிகர் பிரேம் நசீர். அதுவுமில்லாம, ஒரே ஆண்டுல அதிக படங்களிலும் நடிச்சி சாதனை படைச்சிருக்காரு. 1979ம் ஆண்டுல மட்டும் இவரு நடிச்ச 39 படங்கள் வெளியாச்சு. உலக அளவிலான இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கலை. 

** ஆரம்ப காலத்துல வெளியான சினிமாக்கள் பெண்கள் நடிக்கலை. ஆண்கள்தான் பெண் வேஷம் போட்டு நடிச்சாங்க. அதுக்கு அப்புறம் பெண்களும் நடிக்க ஆரம்பிச்சாங்க. ஆனா, பெண் கதாபாத்திரமே இல்லாத ஒரு படம் வந்திருக்கு. மலையாள இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்துல மம்முட்டி கதாநாயகனா நடிச்ச 'மதிலுகள்'தான் அந்த படம். இதுல ஒரு பெண் கதாபாத்திரம் கூட இல்லை. 

** நடிகை மனோரமா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்கள் நடிச்சி சாதனை படைச்சிருங்காங்க. அதேபோல சத்தமில்லா வேறொரு சாதனையும் செஞ்சிருக்காங்க. பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் கூட நாடகங்களிலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கூட சினிமாவுலயும் நடிச்சிருக்காங்க. அதனால, அதிக முதல்வர்களோட நடிச்ச பெருமை அவங்களுக்கு இருக்கு. அதே மாதிரி, ஏவி.எம். நிறுவனம் தயாரிச்ச படங்கள் பணி புரிஞ்ச அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, என்.டி.ஆர். ஆகியோர் முதலமைச்சரா ஆகியிருக்காங்க.