Sunday 22 February 2015

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா - மூன்றாம் யுகத்தின் முதல் தேவாலயம்



மழை மலை மாதா 
மலைகள், குன்றுகள் கடவுளுடைய பிரசன்னத்தின் வெளிபாடுகளாக அமைந்துள்ளன. எனவே தான், விவிலியத்தில் இஸ்ராயேலின் கடவுள் மலைகளின் கடவுள் (1 அரச-20 23) எனக் காண்கிறோம். ஓரேபு மலை, 'கடவுளின் மலை' என்றே அழைக்கப்பட்டது. (வி.ப.3 1). இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் மலைகள் பெரும் பங்கு வகிப்பதை புனித விவிலியத்தில் காணலாம். மலை மேல் இயேசு சோதிக்கப்பட்டார் (மத், 4 8). மலை மேலிலிருந்து இயேசு போதனை செய்தார். ( மத்.5 1). இயேசு மலை மீது ஏறி ஜெபம் செய்தார்(மத்.14 23). மலை மீது இயேசு மறு உருவம் எடுத்தார் (மத்.17 1). மலை மீது இயேசு இரத்த வியர்வை சிந்தினார் (லூக்.22 39). இயேசு மலை மீது சிலுவையில் அறையப்பட்டு, உயிர் விட்டார். இயேசு மலை மேலிருந்து விண்ணகம் ஏறிச் சென்றார் (தி.ப. 1 12). எனவே தான் மலை மீது அமைக்கப்படும் திருத்தலங்களில் கடவுளின் பிரசன்னம் வெளிபடுவதாக மக்கள் நம்பிக்கையோடு வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அச்சிறுப்பாக்கம். இந்த ஊரின் எல்லையில், பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலை மாதா திருத்தலம். ரோமில் இரண்டாம் வத்திகான் சங்கம் தொடங்கப்பட்ட அதே நாள், அதே நேரத்தில் (1962 அக்டோபர் 13-ஆம் நாள், பகல் 12 மணிக்கு) அருட்தந்தை புஷ்பம் அடிகளார், 'நல்லாயன் குன்று' என அழைக்கப்படும் இந்த மலை மீது ஒரு சிலுவையை நட்டு வழிபட்டார். அன்று முதல் இந்த மலை திருத்தலமாக உருவெடுக்கத் தொடங்கியது. 

இந்த திருத்தலம், பிரபலமடைவதற்கு பெருமழை பெய்த ஒரு சம்பவம் காரணமாக கூறப்படுகிறது. 1967 முதல் 1969-ம் ஆண்டு வரை இப்பகுதியில் மழை இன்றி கடும் வறட்சி நிலவியது. குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நேரம். எனவே, மழை வேண்டி, 1969 ஆம் ஆண்டு, புஷ்பம் அடிகள், மேரி மாதாவின் சுரூபத்தை தேரில் வைத்து 30 மைல் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றார். செப்டம்பர் 27-ம் தேதி தேர், பங்கு ஆலயத்தை அடைந்த போது, மூன்று ஆண்டுகளாக கடும் வறட்சியை சந்தித்த அந்த பகுதியில் பெருமழை பெய்தது. மழை நின்ற பின்னர், மேரி மாதாவின் அந்த சுரூபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது கெபி உள்ள நடு மலையில் நிர்மாணிக்கப்பட்டு, மழை மலை மாதா என பெயரிடப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

40 அடி பிரம்மாண்ட சிலுவை 
1994-ம் ஆண்டு மலைக்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. பின்னர், இந்த தலத்தில் அழகிய தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு, மூன்றாம் யுகம் தொடங்கிய அந்த முதல் மணித் துளியில் (2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு) அபிஷேகம் செய்து, திறந்து வைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் முதல் நாளில், உலகம் முழுவதும் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சில தேவலாயங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

2009-ம் ஆண்டில், இம்மலை உச்சியில், 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருச்சிலுவை நிறுவப்பட்டது. 2002-ம் ஆண்டு முதல் இங்கு பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 2003-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி முதல் இந்த திருத்தலம் செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் திருத்தலமாகவும், 'மழை மலை மாதா' மறைமாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாகவும் அறிவிக்கப்பட்டார். கிறிஸ்தவ தேவாலயங்களில், தினந்தோறும் அன்னதானம் வழங்கும் ஒரே தேவாலயம் இது மட்டுமே. 

No comments:

Post a Comment