Wednesday 30 March 2016

சாதனை படைத்த பி. சுசீலா

பிரபல பின்னணிப் பாடகி பி. சுசீலா 17,695 பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர் பி. சுசீலா. பள்ளியில் படிக்கும்போதே இசையில் ஏற்பட்ட ஆர்வத்தால் ஆந்திரத்தில் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் டிப்ளமோ முடித்தார்.

பதினைந்து வயதில் சென்னை வானொலியில் "பாப்பா மலர்' நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட இயக்குநர் கே.எஸ். பிரகாஷ்ராவ் தனது படத்தில் இவரை முதல்முதலாக பின்னணி பாட வைத்தார். 1955-இல் இவர் பாடிய 'எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்..,' , 'உன்னைக் கண் தேடுதே' பாடல்களால் பிரபலமடைந்தார். தனித்தன்மை வாய்ந்த தனது குரல் இனிமையால் தொடர்ந்து பல மொழிகளில் சிறந்த பாடல்களை அளித்துள்ள பி.சுசீலா, சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக பாடி வருகிறார்.

1955 முதல் 1985 வரை வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களில் இவர் பின்னணி பாடியுள்ளார். தெலுங்கில் கண்டசாலா, தமிழில் டி.எம்.செüந்தரராஜன், கன்னடத்தில் பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இவர் பாடிய டூயட் பாடல்கள் தென்னிந்திய திரையிசை உலகில் சரித்திரம் படைத்தன. 

பத்மபூஷண், தேசிய விருது, கலைமாமணி விருது, ஆந்திர மாநில அரசின் ரகுபதி பெங்கையா விருது, கம்பன் புகழ் விருது உள்ளிட்ட பல விருதுகளை பி.சுசீலா பெற்றுள்ளார்.

இசைக்காகவே வாழ்ந்தேன், இசைக்காகவே என் வாழ்க்கையை அர்ப்பணித்ததில் மகிழ்ச்சி. நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும் பாடத் தயாராகவே இருக்கிறேன் என்று கின்னஸில் இடம்பிடித்த பாடகி பி.சுசீலா தெரிவித்துள்ளார். 


பெண்களுக்கு ஏன் கோபம் வருகிறது? (படித்ததில் யோசிக்க வைத்தது)


பெண்ணிற்கு சட்டென கோபம் வருகிறது, அடிக்கடி கோபம் வருகிறது என்பது ஆண்களின் குற்றச்சாட்டு. அது மறுப்பதற்குமில்லை.ஆனால் பெண்களின் கோபத்தை கவனித்துப் பார்த்தால், மிக சின்ன சின்ன விஷயங்களுக்கு தான் அதிகம் கோபம் கொள்வார்கள். 
தன் கணவனின் பெரிய தவறை கூட , அவன் சரியான விளக்கம் கொடுத்தால் புரிந்துக்கொண்டு கோபப்படாமல் இருக்கும் பெண், 

'ஏன் சொன்ன நேரத்துக்கு வீட்டுக்கு வரவில்லை?' 
'ஏன் என் மெசேஜு க்கு ரிப்ளே பண்ண லேட்? ' 
'ஏன் நேரத்திற்கு சாப்பிடவில்லை? '  

போன்ற குட்டி குட்டி காரணத்திற்காக கோபித்துக்கொள்வார்கள். 
இதற்கு காரணம் தன் கணவன் மீது அவள் வைத்திருக்கும் அதிகமான பிரியத்தின், எதிர்பார்ப்பின் பிரதிபலிப்பு தான். 

இதை புரிந்த்துக்கொள்ளாமல் ஆண்கள் அவளது கோபங்களை தொந்தரவாக நினைத்து சலித்துக்கொள்ளும் போது அவள் மனமுடைந்து மௌனாமாகி போகிறாள். அதன்பின் அவன் மீது அக்கறைக்கொள்வதை வெளிக்காட்டி கொள்ளாமல் இருக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்கிறாள். 

சிறு சிறு தவறுகளுக்கு கூட பெரிய குற்றம் போல் அனுமானித்துக்கொண்டு, நீண்ட நேரம் யோசித்து, மனதை குழப்பி சண்டைவிடுவதை பெண்களும் தவிர்க்க வேண்டும். 

ஆண்களும் பெண்ணின் கோபத்தை தொந்தரவாக கருதாமல்,அடிப்படை காரணத்தை உணர்ந்துக்கொண்டு மீண்டும் அந்த தவறு நிகழாவன்ணம் நடந்துக்கொள்ளலாம். 

முறியடிக்கப்படாத சாதனை

'டைட்டானிக்' திரைப்படம் ரசிகர்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மாறாமல் உள்ளது.  அதேபோல ஆஸ்கர் விருது தொடர்பாக இந்த திரைப்படம் செய்த சாதனை 18 ஆணடுகளாக இன்னும் முறியடிக்கப் படாமல்  இருந்து வருகிறது.  அது என்ன தெரியுமா? 

20 ஆண்டுகள் தவமிருந்து இந்த ஆண்டு ஆஸ்கர் விருதை வாங்கிய லியார்னடோ டிகாப்ரியோ தான் டைட்டானிக் படத்தின் நாயகன். டிகாப்ரியோவுடன் இணைந்து கதே வின்ஸ்லெட் நடித்திருந்த இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் தயாரித்து, இயக்கியிருந்தார். சரியாக 19 வருடங்களுக்கு முன் வெளியான இப்படம் படத்தின் பட்ஜெட்டைவிட 10 மடங்கு வசூலைக் குவித்து சாதனை புரிந்தது.

வசூல் மட்டுமின்றி விருதுகளிலும் டைட்டானிக் எந்தக் குறையும் வைக்கவில்லை. ஆஸ்கர் விருதுகளில் அதிகம் பரிந்துரை செய்யப்பட்ட படம் என்ற பெருமையை இப்படம் இன்னும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிறந்த படம் சிறந்த இயக்குநர் உட்பட மொத்தம் 14 பிரிவுகளில் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு முன் 1950 ம் ஆண்டு வெளியான 'ஆல் அபௌட் எவே' என்னும் படம் அதிகபட்சமாக 14 பிரிவுகளில் பரிந்துரை செய்யபட்டிருந்தது. என்றாலும் டைட்டானிக் படத்திற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்படவில்லை. 

இதன் மூலம் ஆஸ்கர் விருதுகளில் டைட்டானிக் படத்தின் 18 வருட சாதனை இன்னும் முறியடிக்கப்படாமலேயே உள்ளது. அதேபோல 88 வருட ஆஸ்கர் விருதுகள் வரலாற்றில் அதிக விருதுகளை வென்ற படம் என்ற சாதனையையும் டைட்டானிக் படைத்திருக்கிறது. இதுவரை ’பென்ஹர்’ (1959), ’டைட்டானிக்’ (1997) மற்றும் ’தி லார்ட் ஆப் தி ரிங்: தி ரிட்டர்ன் ஆப் தி கிங்’ (2003) ஆகிய 3 படங்கள் மட்டுமே அதிகபட்சமாக 11 விருதுகளை வென்றிருக்கின்றன. 2003 ம் ஆண்டிற்குப் பின் வேறு எந்தப் படமும் இவ்வளவு விருதுகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டைட்டானிக் காலத்தால் அழியாத காவியம் என்பது நிஜம்தானே? 


Monday 28 March 2016

தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டும் (2016) கணிசமான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது இந்த ஆண்டு. இரு மொழிப் படம் என்ற வகையில் ‘பாகுபலி' யையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகள்

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்கு உரியது ‘விசாரணை'.

இந்தப் படத்தை தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த காக்காமுட்டை படமும் தேசிய விருதைப் பெற்றது

இதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தன.
விசாரணை படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

அதே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


'இறுதிச் சுற்று' படத்திற்காக  சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருதினை ரித்திகா சிங் பெற்றுள்ளார். 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துச் சாதனைப் புரிந்த இளையராஜாவுக்கு, அவரது ஆயிரமாவது படமான 'தாரை தப்பட்டை' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, 'சலங்கை ஒலி' , 'சிந்து பைரவி' , 'ருத்ர வீணை' படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற இளையராஜா, 'பழஸிராஜா' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார். இப்போது 5-வது முறையாக 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


'பாகுபலி' தெலுங்குப் படம் என்றாலும், அது தமிழிலும் நேரடிப் படமாகவே வெளியானது. அந்தப் படத்துக்கு தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த கிராபிக்ஸுக்கான விருதும் கிடைத்துள்ளது.


Saturday 26 March 2016

கறிவேப்பிலையின் நன்மைகள்!


உணவுக்கு மணமூட்டும் கறிவேப்பிலைக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. எனவேதான், நாட்டு மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கறிவேப்பிலை அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது.


கறிவேப்பிலையில் 63 சதவீதம் நீரும், 18.7 சதவீதம் மாவுச்சத்தும், 6.4 சதவீதம் நார்ச்சத்தும், 6.1 சதவீதம் புரதமும், 4 சதவீதம் தாது உப்புகளும், கொழுப்பு ஒரு சதவீதம் மட்டுமே உண்டு. சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், இரும்புச் சத்து, தாமிரச் சத்து, கந்தகச் சத்து, குளோரின், ஆக்சாலிக் ஆசிட் போன்றவையும் கறிவேப்பிலையில் உள்ளன.

கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் போல தயாரித்தோ அல்லது துவையல் செய்தோ சாப்பிடலாம். நாம் சாப்பிடும் உணவுகள் செரிமானம் ஆகாமல் இருந்தால் கொழுப்புகள் படிந்து தொப்பை ஏற்படும். கறிவேப்பிலையை தினமும் காலையில் சிறிதளவு உட்கொண்டு வந்தால் கொழுப்புகளைக் கரைப்பதுடன், உடல் செயலியல் மாற்றத்தையும் அதிகரிக்கும்.

கறிவேப்பிலை, உடலில் உள்ள நச்சுகளையும் வெளியேற்றுகிறது, எனவே உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. கெட்ட கொழுப்புகளை எரிக்கும் பொருள் கறிவேப்பிலையில் அதிகம் உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்படும் நபர்கள் இதை தினமும் காலையில் உட்கொண்டு வரலாம்.

கறிவேப்பிலையில் இரும்பு மற்றும் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால், உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் சீராக ஆக்சிஜன்  கிடைக்க வழிவகை செய்கிறது. அதன் மூலம், உடலில் ரத்த அணுக்கள் குறைந்துவிடாமல் பாதுகாக்கிறது.

இதில் ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால் சருமத்துக்குப் பொலிவைக் கொடுக்கிறது. கறிவேப்பிலையை 'பேஸ்ட்' போல அரைத்து, அதனுடன் மஞ்சள் சேர்த்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவினால் பருக்கள் மறைந்துவிடும்.

கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்ளும்போது, ரோமத்தின் கருமை காக்கப்படும்.  ரத்தத்தில் சர்க்கரை அளவை கறிவேப்பிலை குறைப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாகும். அவர்கள், உணவில் கறிவேப்பிலையை தாராளமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.