Wednesday 26 June 2013

முதலிடம்



தற்கொலை சாவு அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்துல இருக்காம். எத்தனை வேதனையான செய்தி இது..?

தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின்படி 2012ம் ஆண்டு இந்திய அளவுள தற்கொலை செஞ்சுக்கிட்டவங்கள்ல தென் மாநிலங்களைச் சேர்ந்தவங்கதான் அதிகம்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.  காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால தமிழ்நாட்டுல அதிக அளவுல தற்கொலைச் சாவுகள் நடந்திருக்காம். கடந்த சில ஆண்டுகளாவே தமிழகம் இந்த பெருமையை(?) தக்க வெச்சிருக்காம். 
2012ம் ஆண்டு மட்டும் 12.5 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் தற்கொலை மூலம் மரணத்தை தழுவிருக்காங்க. 


மெட்ரோ நகரங்கள்ல சென்னையில மட்டும் கடந்த ஆண்டு 2 ஆயிரத்த 183 பேர் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க. இதுக்கு அடுத்தபடியா, பெங்களூருவில் ஆயிரத்து 989 பேரும் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க.  கொண்டுள்ளனர். வறுமை, வேலையின்மை போன்றவைகளால  ஏற்படற மனஅழுத்தமே, பெரும்பாலாவங்களை தற்கொலைக்கு த தூண்டறதா சொல்றாங்க.  கடந்த 2011ம் ஆண்டு இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவங்களோட எண்ணிக்கை 41 ஆக இருந்துச்சு. இது 2012ல் 176 ஆக உயர்ந்திருக்கு.

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுக்க 14 ஆயிரத்து 151 முதியவர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்.  முதியவர்கள் தற்கொலையிலும் தமிழகம்தான் முதலிடமாம்.  எய்ட்ஸ், தீராத நோய், வலி போன்ற பிரச்சினைகளால் 25.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துக்கிட்டாங்க.  இந்த காரணங்களுக்காக, தமிழ்நாட்டில் 20.8 சதவீதம் பேர் தற்கொலைச் சாவை நாடியிருக்காங்க.  காதல் தோல்வி, பரிட்சையில் பெயில்  இந்த காரணங்களால அதிக அளவுல தற்கொலை முடிவினை தேர்ந்தெடுத்திருக்காங்க. குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்துக்கிட்டவங்க. 99 பேர். இதுல 47 பேர் பெண்கள்.

தற்கொலையை கோழை எடுக்கற தைரியமான முடிவுன்னு சொல்லுவாங்க.. இது எந்த அர்த்தத்துல சொல்லப்பட்டது தெரியலை. ஆனா.. எந்த விதத்துல பாத்தாலும் இது தப்பான முடிவு. தற்கொலை சாவுகளை தடுக்க அரசாங்கமும், சமுக ஆர்வலர்களும் ஓரணியில சேரணும். 


விரைவில் முதலிடம்

உலகத்துலயே மக்கள் தொகையில முதல்ல இருக்கற நாடு சீனான்னு பாட புத்தகத்துல படிச்சது.. இப்போ.. அந்த சாதனையை நம்ம நாடு செஞ்சிடும் போல.. இதை நான் சொல்லலைங்க.. ஐக்கிய நாடுகள் சபை சொல்லியிருக்கு. வரும் 2028-ம் ஆண்டுல இந்த சாதனை நடந்துடுமாம். இது சம்பந்தமா ஐ.நா. சபை உலக மக்கள் தொகை பத்தின அறிக்கை ஒண்ணை அண்மையில வெளியிட்டுச்சு.. 

அதுல.. உலக மக்கள்தொகை அடுத்த மாசம் 720 கோடியாக அதிகரிக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. இது 2100ஆம் ஆண்டுல 1090 கோடியாக உயருமாம். வளர்ந்த நாடுகளை விட  வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இருக்கும்னும்,  குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இது 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்னும் அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டிருக்கு. இந்திய மக்கள்தொகை வரும் 2028 ம் ஆண்டல  145 கோடியாக இருக்குமாம். அதாவது.. சீனாவை மிஞ்சிடுமாம். 

மேலும் அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்கன்னா..  ஒட்டுமொத்தமா உலகின் மக்கள்தொகை வளர்ச்சி இப்போது சரிஞ்சிக்குட்டு வந்தாலும், சில வளரும் நாடுகள்ல, குறிப்பா ஆப்பிரிக்காவுல மக்கள்தொகை வளர்ச்சி வேகமாக இருக்கு.  இப்போ தொடங்கி,  வரும் 2050 ஆம் ஆண்டு வரைக்கும், வளர்ந்த நாடுகளின் மக்கள்தொகை மாறாமல் சுமார் 130 கோடியாவே இருக்கும். அதுக்கு மாறா,  குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட 49 நாடுகளோட  மக்கள்தொகை 2013இல் 90 கோடியில் இருந் து, 2050ஆம் ஆண்டில் இரு மடங்காக, அதாவது 180 கோடியாக உயரும்.  நைஜீரியாவின் மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மக்கள்தொகையை மிஞ்சிடும்னு எதிர்பார்க்கப்படுது. 

எதிர்வரும் ஆண்டுகள்ல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்களின் ஆயுளும் அதிகரிக்கும்.  உலக அளவுல 2045-2050 காலகட்டத்தில, மக்களோட ஆயுள் சராசரியா  76 ஆண்டா அதிகரிக்குமாம்.  2095-2100 காலகட்டத்தில இது  82-ஆக இருக்கும்னும் எதிர்பாக்கறாங்க.  உலகெங்கிலும் உள்ள 233 நாடுகள் மற்றும் பகுதிகளின் மக்கள்தொகை குறித்த தகவல்களின்படி இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கு.

ஹேப்பி பர்த்டே டூ யூ

‘ஹேப்பி பர்த்டே டூ யூ ன்னு யாரும் சத்தம் போட்டு இனிமே பாட முடியாது போல இருக்கு. 

உலகம் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுன்னா.. அது இந்த ‘ஹேப்பி பர்த்டே டூ யூ ங்கற   பிறந்த நாள் வாழ்த்து பாட்டுதான். இந்த பாட்டு எழுதி இசையமைக்கப்பட்டு 120 வருஷம் ஆயிடுச்சி.  1893ம் ஆண்டு ‘குட் மார்னிங் டு ஆல் ‘ என்ற பாடல் அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்டு அறிமுகப்பட்டுச்சு.  இதை அடிப்படையா வெச்சு,  ஹேப்பி பர்த்டே டு யூ ங்கற பாட்டு உருவாக்கப்பட்டுச்சு. 

இப்போ விஷயம் என்னன்னா... இந்த பாட்டு யாக்குச் சொந்தம்னு சர்ச்சை வெடிச்சிருக்கு.. அமெரிக்காவில் உள்ள வார்னர் சேப்பல் இசை குழு நிறுவனம்,  ஹேப்பி பர்த்டே டு யூ பாட்டு எங்களுக்குத்தான் சொந்தம், இதுக்கு கோடி கணக்குல செலவு பண்ணி அதோட உரிமையை வாங்கியிருக்கோம்.. அதனால.. எங்க அனுமதி இல்லாம யாரும் இதை பயன்படுத்தக் கூடாது அப்படின்னு சொல்லிக்கிட்டு வருது... இந்த பாடலை பயன்படுத்தினவங்கக் கிட்ட பல கோடி ரூபாய் பணமும் வசூல் பண்ணியிருக்காங்க.  

இது சட்டவிரோதம்னு பல தரப்புல இருந்தும் கண்டனக் குரல் எழுந்திருக்கு.. மேலும்.. இந்த பாட்டு உலகம் முழுக்க இருக்கற பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமானதுன்னு உத்தரவிடக் கோரி ஒரு தரப்பினர் கோர்ட்ல வழக்கு போட்டிருக்காங்க.  

தீர்ப்பு யாருக்கு சாதகமா வரும்னு தெரியலை.. அதுவரைக்கும்.. யாருக்காவது பிறந்தநாள் சத்தம்போட்டு பாடாதீங்க.. 




Friday 14 June 2013

50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இந்தியாவில் எத்தனை குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டது. அதில் நம் நாட்டில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. 

 நாட்டிலேயே அதிகமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 17.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 4.05 லட்சம் பேரும், குஜராத்தில் 3.9 லட்சம் பேரும் உள்ளனர். 
    சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2013ம் ஆண்டை குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்து போராடும் ஆண்டாக அறிவித்துள்ளது. 
உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜிரோமேன் கிமுரா, ஜுன் 12 -ம் தேதி, தமது 116 வயதில் மரணமடைந்தார்.  ஜிரோமேன், போஸ்ட்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 116 வயதான அவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை கடந்த டிசம்பரில் பெற்றவர். கியோடாங்கோவில் அவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்,  அவர் காலமானார். 

இவருக்கு அடுத்தபடியாக, ஜப்பானின் ஒசாகா நகரைச் சேர்ந்த 115 வயது பெண்ணான மிசாவோ ஒகாவா உலகின் வயதான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளார். சீனாவில் 127 லுவோ மெய்ஜென் என்ற பெண் நேற்று முன்தினம்தான் இறந்தார். இவருடைய வயதை நிரூபிக்கும் சான்றுகள் சீனாவில் அங்கீகரிக்கப்பட்டபோதும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் இறந்த அடுத்த நாளிலேயே ஜிரோமேனும் இறந்துள்ளார்.

ஜூலை 15-ஆம் தேதியோடு ' தந்தி' சேவைக்கு மூடு விழா




தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), "ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.

முன்னர் சமிக்ஜைகள் மூலமும், மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.

மோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.

இவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.

இந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

தொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.

தந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர். குறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது. 
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும். அதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.

இதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.

அதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.

தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது 

இன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



எந்தெந்த நாடுகளில் தந்தி சேவை உள்ளது



உலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

பிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.

அமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

நேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

ஆஸ்திரேலிய அரசு 2011 மார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.

மலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

அயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.

நியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்



சாப்ட்வேர் அலுவலகம் தான் கதைக்களம். 
பெண்கள் வாடையே பிடிக்காத (அதற்கு சில குட்டிக் குட்டி காமெடி பிளாஷ்பேக்குகள் உண்டு) ஹீரோவுக்கு, அவர் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக சேரும் ஹீரோயின் மீது வழக்கம்போல் காதல் வருகிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி, அதற்கு காமெடியன்கள் அடங்கிய நண்பர்கள் பட்டாளம் உதவி ஏதும் செய்யவில்லை. மாறாக, தனி அலுவலகமே போட்டு, காதலிக்க கற்பதற்கு, ஐ.. மீன் பிடித்த பெண்களை மடக்குவதற்கு,பீஸ் வாங்கிக் கொண்டு சந்தானம் ஐடியாக்களை வழங்குகிறார். அவரிடம் போய் நம் ஹீரோ உதவி கேட்க, (ஐடியா சொல்வதற்கு முன்பே பீஸ் வாங்கிக் கொண்டு) அவரும் உதவுகிறார். திட்டப்படி, இரண்டாம் ஹீரோ உள்ளிட்ட சில பல தடைகளைத் தாண்டி ஹீரோயின் மனதில் இடம்பிடிக்கிறார் ஹீரோ. திடீரென கதையில் ஒரு ட்விஸ்டாக, காமெடியன் சந்தானத்தின் தங்கைதான் ஹீரோயின் என்று தெரியவர, சந்தானத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. பின்னர், காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து, ஹீரோவையும், ஹீரோயினை பிரிக்க முயல, நாரதர் கலகம் நன்மையில் முடிவதுபோல, அவரது முயற்சிகள் காதலர்களுக்கு சாதகமாக முடிகின்றன. பின்னர், சுபம்.சுபம். 

அவெஞ்சர் பைக்கில், சந்தானம் என்ட்ரி ஆகும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால், ஏனோ அவர்களது எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. வழக்கமான அவரது நையாண்டி வசனங்கள் மூலம் லேசாக புன்னகைக்க வைக்கிறார். "காலைல தென்னங்கன்னை வெச்சிட்டு, சாயங்காலம் சட்னி எதிர்பார்க்கறே", "செல்வராகவன் படம் செகண்ட் ஹீரோ போல அழகா இருக்கான்" என்பது மாதியான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

ஹீரோயின் வேஷம் கட்டியுள்ள ஹன்சிகா வழக்கம்போல அழகாக இருக்கிறார். சில சீன்களின் பப்ளியாகவும், சில சீன்களின் இளைத்தும் காணப்படுவது ஏனோ. ஹீரோவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாய்ஸ் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறார். நடிப்பும் அப்படியேத்தான் இருக்கிறது. 

சுந்தர்.சி. படமாயிற்றே காமெடிக்கு கண்டிப்பாக உத்திரவாதம் இருக்கும் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி தியேட்டருக்குள் போனால், ஏமாற்றம்தான் மிச்சம். லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவ்வளவே..