Sunday 29 April 2018

தெரியுமா இவரை 19 - தாதா சாகேப் பால்கே

இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக மதிக்கப்படுபவர், தாதா சாகேப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. நாசிக்  அருகே உள்ள திரும்பகேஸ்வரில் 1870-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி பிறந்தார். 

ஆரம்பக் கல்வியை நாசிக்கில் பயின்ற அவர், 1885-ம் ஆண்டு மும்பையில் உள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் அவருக்கு ஆர்வம் இருந்தது. படிப்பை முடிந்து சரியான வேலை கிடைக்காத நிலையில், ஓவியராகவும், மேஜிக் செய்தும் பிழைப்பை நடத்தினார். 

அந்த காலக்கட்டத்தில் இந்தியாவுக்கு சினிமா அறிமுகமானது.  வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஊமைப்படங்கள் மக்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டன. அப்போது காட்டப்பட்ட படங்கள் அனைத்தும், ஒலி இல்லாத ஊமைப்படங்களாகவே இருந்தன. படத்தின் கதையை விளக்குவதற்காக, அப்போது தியேட்டர்களில் நாடக க் கலைஞர்கள் இடையிடையே கதையை விளக்கிச் சொல்வார்கள். படத்திற்கு சுவாரஸ்யத்தைச் சேர்ப்பதற்காக இசைக் குழுவும் நேரடியாக பின்னணி இசையை வாசிப்பார்கள். 

அந்தப் படங்களைப் பார்த்த பால்கேவுக்கு சினிமா மீது ஆர்வம் பிறந்த து. இங்கிலாந்தில் உள்ள வால்டன் ஸ்டுடியோவில் சினிமாவைக் கற்றுக் கொண்டு திரும்பிய பால்கே, சொந்தமாக கேமரா வாங்கிக் கொண்டு வந்து, படம் எடுக்கும் முயற்சியில் இறங்கினார்.

தயாரிப்பு, கதை, வசனம், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, இயக்கம் என சகலத்தையும் அவரே கவனித்துக் கொண்ட அவருக்கு பெரும் சவாலாக இருந்தது நடிகர்கள்தான். 

நாடகங்களில் பெண்கள் நடிப்பதே பெரும் பாவமாக கருதப்பட்ட அந்த நாளில், ஆண்களை பெண் வேடமிட்டு நடிக்க வைத்தார். மேலும், படத்தில் நடிப்பதற்கு ஆட்கள் கிடைக்காத தால், தமது குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடிக்க வைத்தார்.  தீவிர முயற்சியால் 1913-ல், ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற திரைப்படத்தை எடுத்தார். அதுதான், இந்தியாவின் முதல் சினிமா. மவுனப் படமான அதில் வரும் டைட்டில்கள் மராத்தியில் எழுதப்பட்டிருந்தன. அது மும்பையில் தயாரிக்கப்பட்டு, திரையிடப்பட்டது. 1940-ம் ஆண்டு வரை 70-க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கிய அவர், பெரும்பாலும் அந்த திரைப்படங்களை அவரே இயக்கினார்.

பெரும் சிரமங்களுக்கு சினிமா வாழ்க்கையை நடத்திய தாதா சாகேப் பால்கே, 1944-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தமது 73-ம் வயதில் காலமானார். அவரது நினைவாக திரைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. 

Monday 23 April 2018

தெரியுமா இவரை - 18 சாமுவேல் ஹானிமன்

ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையே ஹோமியோபதி மருத்துவம். ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் ஏப்ரல் 10, 1755 – ம் ஆண்டு பிறந்தார். 

லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, சிறந்த மருத்துவராகப் பணியாற்றினார். 

ஆங்கில மருத்துவம் மூலம் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியாமலும், அதற்காக உடகொள்ளும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதும் அவருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தின. இதனால், வெறுத்துப்போன ஹானிமன், மருத்துவத் தொழிலை விட்டு விலகி, புத்தகங்களை மொழி பெயர்க்கும் தொழிலை மேற்கொண்டார். 

வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். சின்கோனா மரப் பட்டைகளில் உள்ள கசப்புத் தன்மை மலேரியா காய்ச்சலை குணமாக்கும் என்ற வாசகம் அவரது கவனத்தைக் கவர்ந்த்து.  இதுதொடர்பான ஆய்வில் இறங்கிய ஹானிமன், சின்கோனா மரப்பட்டைச் சாறைக் குடித்து தமது உடலில் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டார். பின்னர், அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டைச் சாறைக் குடித்து காய்ச்சலை குணமாக்கிக் கொண்டார். தொடர்ந்த ஆய்வுகள் மூலம், ‘எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது’. இதனைக் கொண்டு ‘லைகாஸ்கேர்லைகாஸ்’ என்ற தத்துவத்தினை உருவாக்கினார். 

விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு ‘ஓமியோபதி’ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவமாகும். பக்க விளைவுகளோ, பத்தியமோ இல்லாத இந்த மருத்துவமுறையில், நோயின் தன்மைக்கேற்ப உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு. 

1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பின்னர், அவர் உருவாக்கிய மருத்துவமுறை ஹோமியோபதி மருத்துவமுறை என்று அழைக்கப்பட்டது. தனி மனிதனாக சுமார் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் 1843-ம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் சர்வதேச ஹோமியோபதி மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

இது எப்படி இருக்கு?

புதுசா கல்யாணமான ஜோடிகள், பொது இடங்களில் பண்ற அலப்பறைகளுக்கு அளவே இருக்காது. சுற்றிலும் இருக்கிறவங்க யாரையும் கண்டுக்காம அவங்க பண்ற சேட்டைகள் முகம் சுளிக்கிற அளவுக்கு இருக்கும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்று பெரியவங்க எந்த அர்த்ததுல சொன்னாங்களோ தெரியாது. 

ஆனால், ஆரம்பத்துல அவங்க கிட்ட இருக்கிற நெருக்கம் போகப் போக குறைந்து, பின்னாளில், எலியும், பூனையும் போலவும், கீரியும் பாம்பு மாறிடுவாங்க அப்படீங்கறது பொதுவான கருத்து. 

ஆனா, இந்த பொதுக் கருத்தை பொய்யாக்கற விதமாக புதுசா ஒரு ஆய்வு முடிவுகள் வந்திருக்கு. அதாவது தம்பதிகள் கல்யாணமான புதுசுல இருக்கிறதைவிட, 20 ஆண்டுகளுக்குப் பிறகே அவங்களுக்குள்ள நெருக்கம் அதிகமாகி ரொம்ப சந்தோஷமா இருப்பாங்களாம். 

அமெரிக்காவில், பென்சில்வேனியா ஆய்வாளர்களும், பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் இணைந்து இந்த ஆய்வை நடத்தியிருக்காங்க. 

சராசரியா 37 வயதான ஆண்களும், 35 வயதான பெண்களும் கொண்ட ‘2 ஆயிரத்து 34 தம்பதிகள் கிட்ட இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கு. அவர்கள்கிட்ட, ‘உங்களுக்கு கல்யாணமாகி எந்த காலக்கட்டத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க?’ அப்படின்னு கேட்ட கேள்விக்கு, பெரும்பாலானோர் 20 ஆண்டுகளுக்கு பிறகே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறதா சொல்லியிருக்காங்க. 

19-ம் நூற்றாண்டின் கடைசிப் பெண் மறைவு


உலகின் மிகவும் முதிய மூதாட்டியான நபி தாஜிமா உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 117.


ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் நகரைச் சேர்ந்த நபி தஜிமா 4-8-1900 அன்று பிறந்தவர். உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அவருக்கு மகன்கள் மற்றும் மகள் மூலம் பிறந்த வாரிசுகள் 160 பேர் உள்ளனர். 19-ம் நூற்றாண்டில் பிறந்த கடைசி பெண் என்ற பெருமைக்கும் சொந்தக்கா ர ரான நபி தாஜிமா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மருத்துவமனையில்  தங்கி சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் (22.04.2018) காலமானார்.

உலகின் மிகவும்  முதிய மனிதராக கருதப்பட்ட ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் பிரவுன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார். இதையடுத்து, நபி தாஜிமா, உலகின் மிக முதிய மூதாட்டி இடத்திற்கு முன்னேறினார். 

நபி தாஜிமாவின் மறைவைத் தொடர்ந்து, மற்றொரு ஜப்பானிய பெண்ணான சியோ மியாகோ உலகின் மிக வயது முதிர்ந்த பெண் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  10 நாட்களில் 117 வயதை எட்ட உள்ள  சியோ மியாகோ டோக்கியோ நகரின் கனகாவா பகுதியில் வசித்து வருகிறார்.

Saturday 21 April 2018

தெரியுமா இவரை – 17 சார்லி சாப்ளின்




ஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரும், உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவையையும் வாரிவழங்கியவரு மான சார்லி சாப்ளின் லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் ஏப்ரல் 16, 1889-ம் ஆண்டு பிறந்தார்.  

பெற்றோர் இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். குடிப்பழக்கத்தால் சீரழிந்த தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போக, தாய் மனநல பாதிப்புக்கு ஆளானார். எனவே, பிழைப்புக்காக 5 வயதிலேயே மேடையேறினார். அவரது தயார் கடைசியாக ஏறிய மேடையே, அவருக்கு முதல் மேடையாகவும் அமைந்தது. 12-வது தந்தை இறந்த போக, தாயார் நிரந்தரமாக மனநலம் பாதிக்கப்பட்டார். 

சகோதரருடன் அனாதை இல்லத்தில் வளர்ந்தார் சாப்ளின்.  14 வயதில் மேடை நாடகங்கள் மூலம் அவரது கலையுலகப் பயணம் தொடங்கியது.
அகதியாக  கார்னோ என்ற நாடக குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா சென்றார். நாடகங்களில் நடித்தபடியே சினிமா வாய்ப்புத் தேடிய அவர், கீ ஸ்டோன் சினிமா நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் நடித்த 
முதல்  மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ம் ஆண்டு வெளியானது.

 ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ என்ற இரண்டாவது படத்தில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் தோன்றிய கோமாளி கனவான் வேடத்தைப் பார்த்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. பரிதாபத்தையும், சிரிப்பையும் ஒன்றாக வரச்செய்யும்  இந்த தோற்றமே அவரது நிரந்தர அடையாளமாகவும் மாறிப்போனது. அதன் பின்னர் அவரது கலையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்த்து. ஒரே ஆண்டில் 35 திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகரானார். 

அவர் நடித்த அத்தனைப் படங்களும் சாதனைகள் படைத்தன. ஸ்லாப்ஸ்டிக் காமெடி எனப்படும் உடல் மொழி மற்றும் பாவனைகளால் உலக மக்களை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார்.

வெறும் நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், கதை, வசனம், இயக்கம், இசை, படத்தொகுப்பு நடனம், தயாரிப்பு என திரையுலகில் அத்தனை துறைகளிலும் கோலோச்சினார் சாப்ளின். அவரது படங்கள் நகைச்சுவை 
தோரணங்களாக இல்லாமல் ஏழைகளின் பரிதாப வாழ்க்கையும்,  முதலாளிகளின் பேராசையையும் விமர்சித்தன. பொங்கி பிரவாகமெடுக்கும் சிரிப்பும், மெலிதாக இழையோடும் சோகமும் கொண்ட அற்புத காவியங்கள் அவரது படங்கள்.

இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்ற சாப்ளினுக்கு  இங்கிலாந்து அரசு 1985-ம் ஆண்டு அஞ்சல் தலைவெளிட்டு கௌரவித்த்து. தனித்துவமான நகைச்சுவையால் உலகையே கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் தனிப்பட்ட வாழ்க்கை சோகங்களால் சூழப்பட்டது.

“நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்பது சார்லி சாப்ளின் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம்.

நான்கு முறை திருமணம் செய்த சாப்ளினுக்கு முதல் மூன்று திருமணங்கள் தோல்வியில் முடிந்தன. தமது 29-வது வயதில், 17 வயதான நடிகை மில்ட்ரெட் திருமணம் செய்த சாப்ளினுக்கு இரண்டே ஆண்டுகளில் மணமுறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு பிறந்த குழந்தையும் 3 நாட்களில் இறந்தது.

பின்னர், 16 வயது நடிகை லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. இந்த திருமணமும் தோல்வியில் முடிந்த்து. 2 குழந்தைகள் பிறந்த பிறகு, லிடா கிரேக்கும் சாப்ளினுக்கும் ஒத்துப் போகவில்லை. குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே, பின்னர் சட்டப்பூர்வமாக விவகாரத்து பெற்றார்.

பின்னர், 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகிய சாப்ளின், அவரை திருமணம் செய்து கொண்டார்.  அப்போது சாப்ளி னுக்கு வயது 43. இந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 

நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 16 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளின், சுவிட்சர்லாந்தில் குடியேறினார். 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.

சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால், அங்கும் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள்.

Sunday 15 April 2018

தெரியுமா இவரை - 16 ஆபிரகாம் லிங்கன்


  அடிமைத்தனத்தையும் இனவெறியையும் ஒழித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக திகழ்ந்தவர் அமெரிக்க முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஹார்டின் என்ற கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் 12.02.1809 – ம் தேதி பிறந்தார். தந்தை தாமஸ், தாய் நான்சி. தந்தை செருப்பு தைக்கும் கூலித் தொழிலாளி. தமது 9-வது வயதிலேயே லிங்கன் தாயை இழந்தார்.
   ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்ற லிங்கன் பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. குழந்தைப் பருவத்தில் இருந்தே அப்பாவின் அனைத்து வேலைகளிலும் அவருக்கு உதவியாக இருந்து வந்தார்.
  நியு ஆர்லியன்சில் அவர்கள் குடும்பம் வசித்தபோது, கறுப்பினத்தவர்கள் விலைக்கு வாங்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்படுவதையும், சாட்டையால் அடித்து கொடுமைப் படுத்தப்படுவதையும் கண்டு வருந்தினார். .
   இந்தக் கொடுமைகளை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று உறுதிபூண்டபோது இவருக்கு வயது 15. சுயமாக கல்வி பயின்ற அவர், சட்டப்படிப்பு படித்த அவர்,. சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். 1830-ல் குடும்பம் இல்லினாய்சுக்குக் குடியேறியது. பேச்சாற்றலில் வல்லவரான லிங்கன், அரசியலிலும் ஆர்வத்துடன் பங்கேற்றார்.
   ‘வீக் என்கிற கட்சியில் சேர்ந்து இல்லினாய்ஸ் மக்கள் பிரதிநிதி சபைக்கு 1834-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். நான்கு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எட்டு ஆண்டுகாலம் அந்த பதவியை வகித்தார். பின்னர், அமெரிக்காவின் குடியரசு கட்சியில் சேர்ந்து 1858-ல் அந்த கட்சியின் சார்பில் அமெரிக்க நாட்டு செனட் பதவிக்கு போட்டியிட்டு எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினார்.

    பிறகு, 1860-ம் ஆண்டு குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு வெற்றிப் பெற்று நாட்டின் 16-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   அரசியலில் நுழைந்த து முதல் கருப்பின மக்களின் அடிமைத்தனம் ஒழிய பாடுபடுவதையே லட்சியமாக கொண்டிருந்த லிங்கன், அடிமைகளை நிரந்தரமாக விடுவிப்பதற்கான விடுதலைப் பிரகடனத்தை 1863-ல் வெளியிட்டார். இதற்கு ஆதரவும், எதிர்ப்பு உருவானதால், அது உள்நாட்டு போர் வரை சென்றது. அதை முடிவுக்குக் கொண்டு வந்த லிங்கன், 1864-ம் ஆண்டு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
      1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந்தேதி புனித வெள்ளி அன்று,  அவர் அமெரிக்கன் கசின்என்கிற நகைச்சுவை நாடகத்தைக் காண தமது மனைவியுடன் சென்ற லிங்கன் துப்பாக்கியால் சுடப்பட்டார். பின்னர், ஏப்ரல் 15-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 56.  


Monday 2 April 2018

ஏப்ரல் 1-ம் தேதி ஏன் முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது?

அன்னையர் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம் போன்று ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தினம். கனடா, நியூசிலாந்து, லண்டன், ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் பாரம்பரிய விழாக்கள் போல் இந்த நாள் கொண்டாடப்ப டுகிறது. 

எதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பதற்கான உறுதியான காரணங்கள் தெரியவில்லை. வரலாற்று ரீதியாகவும், கற்பனையாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

பிரான்ஸ் நாட்டில்தான்  முதன் முதலில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டது.  16-ம் நுாற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில், அப்போதைய ஜூலியன் காலண்டரின்படி, ஏப்ரல் 1-ம் தேதிதான்  புத்தாண்டு தினமாக கடைபிடிக்கப்பட்டது. பின்னர், 13-ம் கிரிகோரி என்ற போப் ஆண்டவர், 1582 பிப்., 29-ல், புதிய காலண்டரை அறிமுகப்படுத்தினார்.அதில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக மாற்றப்பட்டது. 

ஆனால், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இந்த மாற்றத்தை உடனடியாக ஏற்கவில்லை. ஸ்பெயின், போர்ச்சுக்கல், இத்தாலி போன்றவை இந்த காலண்டரை 1582-ம் ஆணடு அக்டோபர் மாதம்  முதல் பயன்படுத்த தொடங்கின. 1752-ம் ஆண்டு இங்கிலாந்து, அமெரிக்காவிலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது இந்தியாவிலும் இக்காலண்டர் புழக்கத்திற்கு வந்தது. புதிய காலண்டரை ஏற்காமல், ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டு தினமாக கொண்டாடி வந்தவர்களை கேலி செய்யும் விதமாக ‘முட்டாள் தினம்’ உருவாக்கப்பட்டது. நாளடைவில் அனைத்து நாடுகளும் ஏப்ரல் 1- ம் தேதியை  முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கத் தொடங்கின. 

1508-ம் ஆண்டு முதலே பிரான்சில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்ததாகவும், 1539-ம் ஆண்டிலேயே டச்சு மொழியில் இத்தினம் பற்றி குறிப்பிடப்பட்டு இருந்ததென்றும், சில குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

பிரான்ஸ் நாட்டில்,  ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏப்ரல் மாதத்தில் நிறைய மீன்கள் கிடைக்கும். அதனை எளிதாக சிக்கிக் கொள்ளும் அந்த மீன்களை முட்டாள் மீன்கள் என அழைக்கப்பட்டன. இது பின்னர், இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுக்குள் ஏமாற்றி விளையாடத் தொடங்கினர். அதுவே ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள் தினமாக மாறுவதற்கு காரணம் என்போரும் உண்டு. 

1466-ம் ஆண்டு, பிலிப்பைன்ஸ் நாட்டு அரசனை  அவரது அவைக் கவிஞர் முட்டாளாக்கிய தினம் இது என்றும் அதனால், அந்த நாள் முட்டாள்கள் தினமாக மாறியதாகவும் ஒரு ஒருகதை உண்டு. 

ஆங்கில கவிஞர் ஜெஃப்ரி, 14 ஆம் நூற்றாண்டில் எழுதிய சேவல் நரி கதைதான் ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாக கடைபிடிக்கப்படுவதற்கு மூல காரணம் என மற்றொரு கதையும் உண்டு.  

நரியிடம் சிக்கிய சேவல் ஒன்று, பொய் சொல்லி, அதனிடமிருந்து தப்பும் என இருக்கும் அந்த கதையில், 'Syn March began' என்று ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கும். இதனை மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து 32 வது நாள் என்பதாக புரிந்துக் கொண்டு, ஏப்ரல் 1-ம் தேதியைதான் அவர் குறிப்பிட்டார் என்றனர். இதனால்தான் ஏப்ரல்-1 ஆம் தேதி முட்டாள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது என்போரும் உண்டு. 

ஏமாற்றங்கள் பெரும்பாலும் எதிர்பார்ப்புக்களாலேயே ஏற்படுகிறது. எல்லோர் வாழ்க்கையில் ஏமாற்றாமல் வருவது ஏமாற்றம் மட்டுமே. ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உணர்த்துவற்காக இந்த நாள் கடைபிடிக்கப்படுவதாக எடுத்துக்கொள்ளலாம். 

x