Tuesday, 31 July 2012

நொறுக்ஸ்

குடிப்பது இப்போது சமூக அந்தஸ்தாக மாறி வருகிறது. குடிக்கும் பழக்கம் இல்லையென்றால் சற்றே அதிர்ச்சியாகவும், விநோதமாகவும் பார்க்கிறார்கள்.  பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மதுக்கடைகளை திறந்து, சிறந்த 'குடி'மக்களை உருவாக்கும் மகத்தான பணியை அரசு செய்துகொண்டிருக்கிறது.
               
அண்மையில், செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில், பள்ளி பெஞ்சுகளை விற்று மாணவர்கள் சிலர் மது குடித்ததாகவும்,  சில மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். 
               
இதனை, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் எனது உறவுக்காரர் ஒருவரும் உறுதிபடுத்தினார். அப்படி தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலை இப்போது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரணம், மாணவர்களை கண்டித்தால், ஆசிரியர் அடித்ததாக பொய் புகார் அளிப்போம் என்று பகிரங்கமாவே மிரட்டுவதாக வருத்தப்பட்டார். 
               
எனவே, எதற்கு வம்பு என்று, வந்ததோமா, வேலையை பார்த்தோமா, முதல் தேதியானால் சம்பளம் வாங்கினோமா என்று ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.  
             
மதுவிலக்கு இப்போது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், பார்களை ஒழிப்பதுடன், பொது இடங்களில் குடித்துவிட்டு நடமாடுவதற்கும் தடை விதித்தால், பள்ளி மாணவர்கள் சீரழிவதையாவது ஓரளவேணும் தடுக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

                       
மதுக்கடைகள், ஒயின் ஷாப்புகளாக தனியார் வசம் இருந்தபோது, கடை முன்பு நின்று குடிக்க கடைக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாதி தெரு வரை குடிமகன்கள் ஆக்ரமித்துக் கொண்டு, சாலையிலேயே நின்று குடித்து, அழிச்சாட்டியம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பெண்கள் அந்த பகுதியிலேயே நடமாட முடியாத சூழல் உருவாகிறது. 

                       
சில இடங்களில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகிலேயே அரசு மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வதை என்னவென்று சொல்வது ? 

எலைட் பாரெல்லாம் திறந்து, பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கமும், மிக்சி, கிரைண்டர், ஆடுமாடுகள் தருவதால் எந்த பிரயோஜனமும் இல்லையென்பதை அரசு உணருமா தெரியவில்லை. 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு, டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில், ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சேலம் அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திய நான்கு மாணவர்கள், கண்டித்த ஆசிரியரை  தாக்கினர் என்பதே அது.

 நாடு நல்லாத்தான் முன்னேறிக்கிட்டிருக்கு. 


*****************************

"ஹலோ யார் பேசறீங்க.."

"நான்.. கோட்டூர்புரத்திலேர்ந்து ராஜா பேசறேன்."

"உங்க ரேடியோ வால்யூமை குறைச்சி வைங்க.ராஜா..."

"ம் குறைச்சிட்டேன் மேடம்.." 

"ம்.. இப்போ சொல்லுங்க.. நீங்க யாரை, லவ் பண்றீங்க சார்.."

"நான்.. திவ்யாவை லவ் பண்றேன்.." 

"வெரிகுட்.. எத்தனை வருஷமா லவ் பண்றீங்க.."

"ரெண்டு வருஷமா மேடம்.." 

"அப்படியா.. ம் நீங்க சொல்லுங்க ராஜா.. அவங்களை வெளில எங்கேயெல்லாம் கூட்டிட்டு போயிருக்கீங்க.. 'மேட்டரை'யெல்லாம் முடிச்சிட்டீங்களா ?"

"ஹி ஹி.. அதுவந்து.. மேடம்.." 

- இப்படி போன அந்த உரையாடல்..சத்தியமாக நம்புங்கள்.. ஒரு தனியார் பண்பலை வானொலியில் நான் காதாரக் கேட்டது. அதே வானொலியில், ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளர்.. தன் சக தொகுப்பாளரைப் பார்த்து உதிர்த்த தத்துவ முத்து ஒன்று.. '' எருமைக்கு சுடிதார் போட்டா மாதிரி இருக்கற சப்ப ஃபிகர் நீ '' 

கலையை எப்படியெல்லாம் வளர்த்து டெவலப் பண்றாய்ங்க..

*****************************


பெர்னாட் ஷா தன்னோட வீட்ல உட்கார்ந்து நண்பர்களோட சுவாரஸ்யமாக பேசிக்கிட்டிருந்தாரு. பக்கத்து ரூம்ல.. அவரோட மனைவி பெரிய இரைச்சலோட தையல் மிஷின்ல துணி தெச்சிக்கிட்டிருந்தாங்க.  பெர்னாட் ஷாவோட நண்பர்கள் அவங்கக்கிட்ட போய், 'உங்க கணவர் இவ்வளவு சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருக்காரு.. அவரோட பேச்சை கேக்கறதுல உங்களுக்கு ஈடுபாடு இல்லையா'ன்னாங்க.   அதுக்கு கோபத்தோட அந்தம்மா.. 'என் கைல மட்டும் இந்த தையல் மிஷின் இல்லேன்னா.. நேரா போய் அவரோட கழுத்தை திருகியிருப்பேன். உருப்படியான வேலை பார்க்காம எப்போ பார்த்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு'ன்னாங்களாம். 


*****************************ண்டுக்கு பல்லாயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைவதாக அண்மையில் ஒரு புள்ளி விவரத்தை படிக்க நேர்ந்தது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்க நேர்கிறதாம். குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு, தலைக்கவசம் அணியாதது என்று பொத்தாம் பொதுவாக பழியை வாகன ஓட்டிகள் மீது போடப்படுவது வழக்கம். ஆனால், மோசமான, பராமரிப்பில்லாத சாலைகளும் ஒரு காரணம் என்பதை ஏனோ யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. அண்மையில், சென்னையில், ஒரு அமைச்சரின் மகன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத்தடையில் இடறி விழுந்து மரணமடைந்தார். அவர் அமைச்சரின் மகன் என்பதால், இரவோடு இரவாக, சில இடங்களில் வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. அப்போதுதான், வேகத்தடையில் வர்ணம் பூசியிருக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரணர்களுக்கு தெரியவந்தது. இறந்தவர், சாதாரண பொது ஜனம் என்றால், அதுவும் நடைபெற்றிருக்காது. வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகளில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சென்னையில், இதுவரை என் கண்ணில் பட்டதே இல்லை. ஒருவேளை எங்காவது இருந்து நான்தான் கவனிக்காமல் போகிறேனோ என்னவோ ? 


*****************************

பிரிட்டிஷ் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட டைனிங் டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு.  அப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான். உடனே, மன்னர் அவனை கையமர்த்தி, 'இதோ பாரு.. ஆல்பர்ட்..சாப்பிடும் போது டைனிங் டேபிள்ல பேசக் கூடாது. ராஜ குடும்பத்துல இது அநாகரீகமான விஷயம் அதனால.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்'ன்னாரு.   அமைதியா எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுட்டு எழுந்ததும், பேரன்கிட்ட மன்னர், ' ஏதோ சொல்ல வந்தியே என்ன'ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த பேரன், ' இப்போ அதைச் சொல்லி பயனில்லை'ன்னான். 'பரவால்ல.. எதுவானாலும் சொல்லு'ன்னாரு மன்னர். அதுக்கு அந்த பேரன் கூலா, 'நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்து கிடந்துச்சி.. அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனா.. நீங்க அதையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்க'ன்னான். 

*****************************

Thursday, 26 July 2012

ஒர் அதிர்ச்சி தகவல்     வாழ்க்கையில் தோல்வியும், விரக்தியும் ஏற்படும்போது, அதிலிருந்து மீண்டு வந்து வெற்றி பெற்று சரித்திரம் படைக்கிறவர்கள் ஒரு ரகம். தோல்விகளை சந்திக்க முடியாமல் தற்கொலை முடிவுக்கு செல்பவர்கள் ஒரு ரகம். 

        இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில், கடந்த 2010ம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேரும், 2011ம் ஆண்டில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும் தங்களைத் தாங்களே மாய்த்துக்கொண்டுள்ளதாக கூறுகிறது அந்த புள்ளி விவரம். 

        நாட்டில் தற்கொலை மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலம் மேற்கு வங்கம். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. முறையே மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.  பெருநகரங்களை பொருத்தவரை சென்னை முதலிடத்தில் உள்ளது. பெங்களுரு, டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 

 அதிக அளவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் ஆண்கள். மேலும், தற்கொலை செய்துகொள்பவர்களில் 5 பேரில் ஒருவர் குடும்பத்தலைவிகளாம். பெரும்பாலானோர், சமூக, பொருளாதார காரணங்களாலேயே தற்கொலை முடிவை நாடுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. 


Monday, 23 July 2012

நெருப்பு கோழி பறவையா, விலங்கா ?


    நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, அது விலங்கு என்று பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில சட்டசபை அறிவித்துள்ளது.
    பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் நெருப்பு கோழி பற்றி சுவாரசியமான சர்ச்சை எழுந்தது. கடைசியில் நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது அல்ல, விலங்கு இனத்தை சேர்ந்ததுதான் என்று சட்ட திருத்தம் செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால், நெருப்பு கோழி பறவை இனத்தை சேர்ந்தது என்று கூறி சட்ட திருத்தத்தில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டார். இதையடுத்து கடந்த புதன்கிழமை (18.7.2012) சட்டசபையை மீண்டும் கூட்டி நெருப்பு கோழி பற்றி விரிவாக விவாதம் நடத்தினர். கடைசியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், நெருப்பு கோழி விலங்குதான் என்று மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து பஞ்சாப் சட்டத் துறை அமைச்சர் ரானா சனா கூறுகையில், ஆடு போன்ற விலங்குகள் பட்டியலில் நெருப்பு கோழியும் சேர்க்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் இறைச்சி பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க நெருப்பு கோழி விலங்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
    உலகம் முழுவதும் இறைச்சிக்காக நெருப்பு கோழி மற்றும் அதன் இறைச்சி விற்பனை அதிகரித்து வருகிறது. நெருப்பு கோழியின் இறைச்சி உடலுக்கு நல்லது என்றும் அமைச்சர் கூறியுள்ளார். 

நெருப்புக்கோழி சில சில சுவாரஸ்யங்கள் 

** நெருப்புக்கோழியின் எடை 60 முதல் 120 கிலோ வரை இருக்கும். இதன் உயரம் ஐந்து முதல் ஆறு அடி வரை இருக்கும். சாதாரண கோழிகளுக்கு கால்களில் நான்கு விரல்கள் இருக்கும் இதற்கு இரண்டு விரல்கள் மட்டுமே இருக்கும். இதன் ஆயுள் 68 ஆண்டுகள். 

** இது ஆண்டுக்கு 10 முட்டைகள் மட்டுமே இடும். நெருப்புக்கோழியின் முட்டைதான் உலகிலேயே மிகப்பெரியது. சாதாரண கோழி முட்டையை விட இது 40 மடங்கு பெரியது. நெருப்புக்கோழிக்கு மோப்ப சக்தியும் அதிகம். இதன் முட்டையை யாராவது தொட்டிருந்தால் கூட மோப்ப சக்தியின் மூலம் கண்டுபிடித்து விடுமாம். பின்னர், கோபத்தில் அந்த முட்டையை உடைத்து விடுமாம். அதேபோன்று இதற்கு பார்வை திறனும் அதிகம். ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்க்கக் கூடிய சக்தி உள்ளது. 

** நெருப்புக்கோழி மிக வேகமாக ஓடிக் கூடியவை. உறுதியான கால்களும், இரும்பு போன்ற அலகும் கொண்டது. ஒரே உதையில் மனிதனை கொல்லக் கூடிய அளவுக்கு இதன் கால்கள் வலிமையானவை. அதேபோன்று, இது தனது அலகால் கொத்தினால், மனிதனின் மண்டை ஒட்டிலேயே ஓட்டை விழுந்துவிடுமாம். 

** நெருப்புக்கோழி உப்பை மிட்டாய் போல உண்ணக் கூடியவை. மாமிச பட்சிணிகளுக்குத் தேவையான உப்பு அவற்றின் இரையின் சதையிலிருந்தும், எலும்புகளிலிருந்தும் கிடைத்து விடுகிறது. ஆனால், சாகபட்சிணிகளுக்கு தாவரங்களிலிருந்து சோடியம் குளோரைட் உப்பு கிடைப்பதில்லை. எனவே, அப்பிராணிகள் உவர் மண்ணைத் தின்று உப்பைப் பெறுகின்றன. இந்த உப்பு அவற்றின் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாஷியத்தை சிறுநீர் மூலமாக வெளியே தள்ள உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படுகிறது. Friday, 20 July 2012

இந்திய சினிமா 100 - 2* இந்தியாவின் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' 1931ம் ஆண்டு வெளியானது. அந்தப்படத்தின் கதாநாயகன் விட்டல், கதாநாயகி சுபைதா. 

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம், 1959ம் ஆண்டு வெளிவந்த ' காகஸ் கி பூல்'

ஆஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்தியப்படம், 'மதர் இந்தியா' 

விசேஷ ஆஸ்கார் விருதுபெற்ற ஒரே இந்தியர், சத்யஜித் ரே. 

முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடித்த முதல் இந்திய திரைப்படம், 'ருக்மாபாய் கீ ஹவேலி'

பத்மஸ்ரீ விருதுபெற்ற முதல் இந்திய நடிகை நர்கீஸ் 

இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைமை இடம் பூனா. இது 1964ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

தமிழின் முதல் திரைப்படமான 'காளிதாஸ்'  படத்தை இயக்கியர் எச்.எம்.ரெட்டி. இப்படம் 1937ம் ஆண்டு வெளியானது.

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படம் 'கீசகவதம்' இதன் தயாரிப்பாளர், மோட்டார் கார் பாகங்களை விற்பனை செய்துவந்த நடராஜ முதலியார்.

தமிழ் திரையுலக முதல் நட்சத்திர நடிகை டி.பி. ராஜலட்சுமி 

Thursday, 19 July 2012


பாலியல் குற்றத்திற்கு, ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நேற்று (19.7.2012), அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதில், பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தை திருத்துவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. அத்துடன், ஆசிட் வீசும் நபர்களுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கவும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும், இந்தச் சட்டத் திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.

Monday, 9 July 2012

கள்ளநோட்டை கண்டுபிடிக்க புதிய இணையதளம்நாட்டில் அதிகரித்து வரும் கள்ளநோட்டை ஒழிக்கவும், அது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவும், ரிசர்வ வங்கி புதிய இணையதளத்தை துவக்கியுள்ளது. இதன் மூலம் கள்ளநோட்டை முற்றிலும் ஒழித்துகட்டவும், கள்ளநோட்டுக்களை மக்கள் எளிதாக கண்டுபிடித்திடவும் முயற்சி செய்து வருகிறது. 

கள்ள நோட்டு புழக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் செயல் ஆகும். எனவே,   கள்ள நோட்டு புழக்கத்தை ஒழித்துகட்டவும், அவற்றை எளிதாக சாதாரண மக்கள் இனம் காணவும், விழப்புணர்வு ஏற்படுத்த ரிசர்வ் வங்கி, www.paisaboltahai.rbi.org.in என்ற புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளது. கடந்த 2010-2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் புழக்கத்தில் இருந்த 6.74 மில்லியன் கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்துள்ள விவரம் உள்ளிட்டவை இந்த இணைய தளத்தில் இடம் பெற்றுள்ளன. 

    ரூ. 10, 50,100, 500, 1000 ஆகிய கரன்சிகளின் வரிசைப்படி கள்ள நோட்டுகளுக்கும், ஒரிஜினல் கரன்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தினை கண்டுபிடிக்க முடியும், மேலும் கள்ளநோட்டு பற்றிய விவரங்கள் அடங்கிய குறும்படமும் காட்சியாக இடம் பெற்றுள்ளன. இவற்றினை டவுன்‌லோடு செய்து, கள்ள நோட்டினை எவ்வாறு இனம் காணலாம் என்பது குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை


     தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக,  இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.

     தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.  அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம் என்றார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சில குறிப்புகள் 

* இச்சட்டத்தின்படி அரசு அலுவலகங்கள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் முதலியவை பற்றிய எந்த தகவலையும் கோரி பெற இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. 

* தகவல் கோருகிறவர், அதற்கு எந்த எவ்வித காரணமும் கூற வேண்டியதில்லை. 

* இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தைக்காட்டிலும் இந்த சட்டம் மட்டுமே உயர்வானது. அதாவது எந்த ஒரு சட்டத்தையும் சுட்டிக்காட்டி அரசு அலுவலர்கள் தகவல் தர மறுக்க முடியாது. 


* தமிழக அரசு அதனுடைய அலுவலகங்களில் தகவலைக் கோர ரூ. 50 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 

*  தகவல் கோருபவர் ரூ. 50 கட்டணம் செலுத்தி, அசல் ரசீதோடு, தான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக குடும்ப அட்டையின் நகலையும் இணைத்து வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித்தாலே போதுமானது. 

* ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு உதவிப் பொதுத்தகவல் அலுவலரும், மேல்முறையீட்டு அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதலில் உதவிப் பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

* கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களில் வந்து சேரவில்லையென்றாலோ,  போதுமான தகவல்கள் இல்லையென்றாலோ, மேல்முறையீட்டு அலுவலருக்கு முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

* மேல் முறையீட்டிலும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் 90 நாட்களுக்குள் மாநிலத் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் முறை மேல்முறையீடு செய்யலாம். 

 * சரியான தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு நாளொன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவிர அந்த அதிகாரி மேல் துறைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். 

* அச்சுத்தாள், குறுந்தகடு அல்லது மென்தகடு ஆகியவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். 

* அரசு அலுவலகங்களில் எந்த கோப்பையும் நாமே நேரடியாக பார்வையிடலாம். சான்றிட்ட நகலையும் பெறலாம். நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணிநேரம் இலவசம் ஆகும். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும். 

* மத்திய அரசைப் பொருத்த வரை தகவல் அறிய ரூ. 10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

* தகவல் பெற விரும்புபவர் ஊரில் உள்ள தலைமை அஞ்சல் நிலைய தலைவரிடம் விண்ணப்பித்தால் போதுமானது. அவர் உரிய அலுவலகங்களுக்கு அனுப்பித் தகவல் பெற்றுத் தருவார். 

* தகவல் பெறுவதற்காக கட்டணத்தையும் ரொக்கமாக அந்ததந்த அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தி ரசீது பெறலாம். 

Sunday, 8 July 2012

தூக்கம் உங்கள் கண்களை தழுவட்டுமே
     மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது.
ஒரு முழு நாளைய சோர்வின் மிச்சங்களை சலவை செய்யும் ஓர் உன்னதமான செயல் தூக்கம்.  இது  நாள் முழுவதும் நாம் செலவிட்ட ஆற்றலை மீட்டெடுக்கும் நிலை. உடற்பயிற்சி மற்றும் சரிவிகித உணவு ஆகியவற்றுக்கு போதுமான முக்கியத்துவம் தரும் நம்மில் பலர் உடல்நலம் மற்றும் மனநலம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் தூக்கத்தில் அக்கறை செலுத்துவதில்லை.  முறையான தூக்கம் இல்லை என்றால் உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம், இதய நோயகள், மூளை தொடர்ப்பன குறைபாடுகள் என பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் தோன்றும். எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதைக் குறித்தெல்லாம் தெளிவான வரைமுறை இல்லை என்றாலும்,  ஐந்து மணி நேரம், எட்டு மணி நேரம் என சரியான தூக்க அளவுகளாக பல்வேறு நேரங்களைக் குறிப்பிடுகின்றனர். உண்மையில் மறு நாள் காலையில் எழுகையில் சுறுசுறுப்பாய் இருக்க முடிந்தால் அதுவே சரியான அளவு தூக்கம் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள். 

படுத்ததும் தூக்கம் வர என்ன செய்யலாம்

     படுத்த நில நிமிடங்களிலேயே தூங்கிப்போவது ஒரு வரம். ஆனால், எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. சிலருக்கு படுத்த பின்னரும்,  நீண்ட நேரத்திற்குப்பின்னரே தூக்கம் வரும். அப்படியும் தூக்கம் வராதவர்கள் ஒன்றிலிருந்து 100.... 200..... 300 வரை எண்ணத் துவங்குவார்கள். அப்படி எண்ணிக்கொண்டிருக்கும் போதே தூக்கம் வந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இப்படி எண்ணுவதற்கு 'கௌண்டிங் ஷீப்' என்று பெயர். இங்கிலாந்துகாரர்களுக்கு தூக்கம் பிடிப்பதற்கு குறைந்தது 37 நிமிடங்கள் ஆகிறது என்கிறது ஓர் ஆய்வு. அதற்காக அவர்கள் மெல்லிசையை விரும்பி கேட்கிறார்களாம். இந்த மெல்லிசையை கேட்டுக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவார்களாம். சுவாரசியமாக, இயற்கையான சப்தங்களை கேட்டுக்கொண்டே தூங்க முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக கிரீச்சிடும் பறவைகளின் ஒலிகள். மெல்லிய காற்றின் இரைச்சல், நீரோடையின் சலசலப்பு போன்றவை தூக்கத்தை எளிதில் வரவழைக்க பயன்படுபவையாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கெல்லாம் மேலாக, இருக்கவே இருக்கிறது பழமையான ஒரு முறை. அது தான் புத்தகம் படிப்பது. இதுவும் தூக்கத்தை வரவழைக்கிற விஷயங்களில் முக்கியமானது தான். துணையுடன் பேசிக்கொண்டே தூங்கிபோகிறவர்களும் இருக்கிறார்கள். விசித்திரமாக, கடிகாரத்தின் டிக் டிக் ஒசை, சாலையில் செல்லும் வாகனங்களின் சப்தம், வேக்குவம் க்ளீனர் மற்றும் ஹேர் ட்ரையரின் சப்தமும் தூக்கத்தை வரவழைக்கும் விஷயங்களின் பட்டியலில் இடம் பெறுகின்றன. இவையத்தனைக்கும் வில்லனாக இருப்பது பக்கத்தில் தூங்குபவரின் குறட்டை சத்தம் என்று ஆத்திரப்படுகிறார்கள் உண்மையில் பாதிப்புக்குள்ளானவர்கள்.

      குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இதைத்தான் நாம் குறட்டை என்கிறோம். உடல் பருமன், அலர்ஜியால் சுவாச குழாயில் ஏற்படும் சளி இவற்றால் குறட்டை வரும் வாய்ப்பு உள்ளது

     தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்திருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. 

குறட்டையை தவிர்க்க சில வழிகள்

1. குறட்டையை தவிர்க்க சி.பி.ஏ.பி. என்ற கருவி உள்ளது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. இதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இந்த கருவிகளின் விலை அதிகம் கொண்டவை.

2. சிலர் தூங்கும் போது வாய் திறந்த நிலையில் இருக்கும்.  ஏனெனில் அவர்கள் காற்றினை வாய் வழியாகவும் சுவாசத்திற்கு எடுத்து கொள்வதால் நடைபெறும் ஒன்று. இதற்கென கவசம் போன்ற கருவி ஒன்று உள்ளது. இதனை பொருத்தி கொள்வதால் தூங்கும் போதும் வாயானது திறந்த நிலையில் இருக்கும். இதனால் சுவாசம் நன்கு நடைபெறும்.

3. உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

4. நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.

5. சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும்.

6. இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.

7. குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம்.

     குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ள போதிலும் அவரவர்களுக்கு எது சரியாக அமையும் என்பதை மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையின் பேரில் கடைபிடித்து வருவது மிக்க நன்மை பயக்கும்.

தூக்கம் குறைவால் தாம்பத்ய வாழ்வில் பாதிப்பு ஏற்படுமாம். 

     அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒன்று தூக்கம் குறித்து மேற்கொண்ட ஆய்வில், வாரம் முழுவதும் ஒரு நாளைக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குவது, நீண்ட நாட்கள் குறைவான நேரமே தூக்கம் மேற்கொள்வது ஆகியவற்றால் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன் அளவு குறைவதாக தெரியவந்துள்ளது. இந்த ஹார்மோன் குறைவால், தாம்பத்ய ஆர்வமும் குறைந்துவிடுமாம். மேலும், தசைகளில் தளர்ச்சி, வலுவிழந்த எலும்புகள், ஆற்றல் குறைந்து போதல் மற்றும் கவனமின்மை ஆகியவை ஏற்படும் என்றும், மேலும், இதனால் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டு இருதய வியாதிகள், ஸ்ட்ரோக் மற்றும் டையாபடீஸ் 2 ஆகியவையும் ஏற்படுகின்றன என்றும் அந்த அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளளது.  குறிப்பிடப் பட்டுள்ளது.

தூக்கத்தில் மூச்சு நின்று போவதை தடுக்கும் நவீன கருவி

     தூக்கத்தில் சிலருக்கு மூச்சு விடுவது தற்காலிகமாக நின்று விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. இது சில சமயங்களில் பல அபாய விளைவுகளை ஏற்படுத்தி விடும். இதனால் உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் நீரிழிவு போன்ற வியாதிகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஸ்லீப் அப்னீ என்று மருத்துவர்களால் அழைக்கப்படும் இந்த வியாதி தூக்கத்தின் போது தொண்டையின் பின்புறம் அமைந்துள்ள மென்மையான திசு பாதிக்கப்படுவதால் மூச்சு குழாயில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் பின்னர் தூக்கத்தில் இருப்பவரின் மூளை விழித்து கொள்கிறது. மேலும் அவர் மூச்சு விடுவதற்காக மிகவும் சிரமப்பட்டு, மூச்சினை இழுத்து விடுகிறார். இந்த நிலை சுழற்சி முறையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு 30 முறை கூட நிகழ்கிறது. குறிப்பாக இந்த தூக்கத்தில் ஏற்படும் தற்காலிக மூச்சு நிறுத்தம் 1.2 கோடி அமெரிக்கர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. இது பற்றி அமெரிக்காவின் சான் டீகோ நகரில் அமைந்துள்ள கலிபோர்னிய பல்கலைகழகத்தை சேர்ந்த டாம்போர் மற்றும் அவரது குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அதில் 40 வயதிற்கு மேற்பட்ட 59 பேர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர். அவர்கள் தூங்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குறைந்தது 10 முறை இந்த தற்காலிக அல்லது நிரந்தர மூச்சு விடுவது முற்றிலும் நின்று விடும் நிலை காணப்பட்டது. அத்தகையோர்க்கு சுவாசத்தை சீர்படுத்தி மூச்சு விடுவதில் உள்ள சிரமத்தை தவிர்க்கும் சி.பி.ஏ.பி. என்ற கருவி பொருத்தப்பட்டது. அவர்கள் மூன்று வாரங்களுக்கு பிறகு நல்ல முறையில் முன்னேற்றம் கண்டனர். மேலும் அவர்களது உடல் பலமும் அதிகரித்து காணப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது. தற்போது அமெரிக்காவில் இந்த சிகிச்சை முறை நன்கு முன்னேற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

குறைந்த தூக்கம் மாணவர்களிடம் குற்ற எண்ணங்களை ஏற்படுத்துகிறதாம்

    குறைந்த அளவு தூக்கம் உடைய மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர் என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இது தொடர்பாக அமெரிக்காவின் நெப்ரஸ்கா பல்கலைகழகத்தை சேர்ந்த சமந்தா கிளின்கின்பியர்டு மற்றும் சக ஆய்வாளர்கள் 14 ஆயிரத்து 382 மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் ஆய்வு நடத்தினர். அவர்களில் பாதி பேர் ஆண்கள் மற்றும் மீதி பேர் பெண்கள். மேலும் அவர்களில் 63.5 சதவீதத்தினர் வெள்ளை நிறத்தவர்கள். அந்த ஆய்வில், 8 முதல் 10 மணி நேரம் வரை தூக்கம் கொண்ட மாணவர்கள் சாதாரணமாக நடந்து கொள்கின்றனர். ஆனால் 7 மணி நேரம் மற்றும் அதற்கு குறைவாக தூக்கம் கொண்ட மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபாடு நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது. 
Sunday, 1 July 2012

இந்திய சினிமா 100 - 1


*  1935ம் ஆண்டு தெற்கு பம்பாயில் கட்டப்பட்ட 'ரீகல் தியேட்டர்'தான் இந்தியாவின் முதல் ஏசி தியேட்டர். 

*  1934ம் ஆண்டு வெளியான 'பாக்ய சக்ரா' என்ற படத்தில் தான் முதன் முதலாக பின்னணி இசை அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படமாகும்.

*  சத்யஜித்ரேவின் கடைசிப் படம், 'அகன் துக்'

*  ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்த முதல் இந்தியர், சாபு

*  நமது தேசிய கீதம் இடம்பெற்ற முதல் திரைப்படம், 'ஹம்ராஹி'

*  வரி விலக்கு பெற்ற முதல் இந்தியத் திரைப்படம், 'கப்பலோட்டிய தமிழன்' (தமிழ்)

*  இந்தியாவின் முதல் பெண் சினிமா இயக்குநர், டி.பி. ராஜலட்சுமி. இவர் இயக்கிய முதல் படம், 'மிஸ். கமலா'


*  திரைப்படம் தயாரித்த முதல் இந்தியர் ஹரிச்சந்திர சகாரம் பட்வாடிகர்

*  தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம் 1960ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

*  இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக கருதப்படுபவர், தாதா சாகேப் பால்கே.