Thursday 22 October 2015

வாட்ஸ் ஆப் வறுவல் 20 "பரம்பரை "யின் உண்மையான பொருள்!


நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும் பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது என்று சொல்வதுண்டு. பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக
என்று சொல்லலாம் என்றாலும், "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும்.

அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள் :
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி

நமக்கு முந்தைய தலைமுறைகள் :

நாம் - முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி -
ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் -
ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை
ஒரு தலைமுறை - சராசரியாக  60 வருடங்கள்
என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..
(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன்
பொருள் ஈரேழு, பதினான்கு தலைமுறையாக
என்று பொருள் வரும்.
நமக்குத் தெரிந்து, வேறெந்த மொழிகளிலும்
இப்படி உறவு முறைகள் இல்லை..

இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!..

வாட்ஸ் ஆப் வறுவல் 19 படிச்சிட்டு காண்டாவாதீங்க.. முடிஞ்சா சிரிங்க பாஸ்

 "பிளேடு ஹோட்டல்"

SERVER        : வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க?
CUSTOMER : தோசை வேணும்.
SERVER        : சாதா தோசையா? வெங்காய தோசையா?
CUSTOMER : வெங்காய தோசை.
SERVER        : சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா?
CUSTOMER : சின்ன வெங்காயம்.
SERVER        : சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா?
CUSTOMER : நாட்டு வெங்காயம்.
SERVER        : சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா?
CUSTOMER : சின்னதா நறுக்குனது.
SERVER        : வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா?
CUSTOMER : அதிகமா.
SERVER        : வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா?
CUSTOMER : அறுத்துட்டே போடு.
SERVER        : சிவப்பு வெங்காயமா? வெள்ள வெங்காயமா?
CUSTOMER : சிவப்பு.
SERVER        : நெடி அதிகமா உள்ளதா? கம்மியா உள்ளதா?
CUSTOMER : அதிகமா உள்ளது.
SERVER        : உரம் போட்ட வெங்காயமா? போடாத வெங்காயமா?
CUSTOMER : உரம் போடாதது.
SERVER        : வெங்காயத்த கழுவிட்டு போடவா? தொடச்சிட்டு போடவா?
CUSTOMER : கழுவிட்டு போடு.
SERVER        : வெங்காயம் நல்லா வேகணுமா? கம்மியா வேகணுமா?
CUSTOMER : நல்லா வேகணும்.
SERVER        : வெங்காயத்துக்கு எண்ணெய் ஊத்தவா? நெய் ஊத்தவா?
CUSTOMER : நெய்.
SERVER        : சாதா நெய்யா? பாக்கெட் நெய்யா?
CUSTOMER : பாக்கெட் நெய்...தம்பி போதும் பா.டிபன் எடுத்துட்டு வா.
SERVER        : சரி சார்.இருங்க கொண்டு வாறேன்.
(சாப்பிட்ட பிறகு)
SERVER        : இந்தாங்க சார் பில்.மொத்தம் 50 ரூவா.
CUSTOMER : கேஷா வேணுமா? செக்கா வேணுமா?
SERVER        : கேஷ்
CUSTOMER : சில்லரையா தரவா? நோட்டா தரவா?
SERVER        : நோட்டா தாங்க.
CUSTOMER : பழயை நோட்டா? புதிய நோட்டா?
SERVER        : புதியது.
CUSTOMER : காந்தி படம் போட்டது? போடாததா?
SERVER        : காந்தி படம் போட்டது.
CUSTOMER : காந்தி படத்துல கண்ணாடி போட்டதா? கண்ணாடி போடாததா?
SERVER        : கண்ணாடி போட்டது.
CUSTOMER : சாதா கண்ணாடியா? கருப்பு கண்ணாடியா?
SERVER        : சாதா கண்ணாடி.
CUSTOMER : கண்ணாடில ஓட்டை விழுந்ததா? வீழாததா?
SERVER        : சார்ர்ர்ர்ர்ர்ர் என்னை மண்ணிச்சிடுங்க.உங்ககிட்ட தெரியாம வாய கொடுத்துட்டேன். நீங்க போங்க சார்.நானே உங்க பில்ல கட்டிக்கிறேன்.
CUSTOMER : அது...மவனே இனிமே நீ யார்கிட்டயும் இப்படி பண்ணுவே.


வாட்ஸ் ஆப் வறுவல் 19 எதில் மகிழ்ச்சி?

ஒரு பெரிய ஹாலில் செமினார் நடந்து கொண்டிருந்தது. அப்போது பேச்சாளர் எல்லார் கையிலும் ஒரு பலூனை கொடுத்து அதில் தங்கள் பெயரை எழுத சொன்னார். எல்லோரும் தங்கள் பெயரை பலூனில் எழுதி முடித்தவுடன், அதை இன்னொரு அறையில் நிரப்ப சொன்னார். 

இப்பொழுது அந்த பேச்சாளர், உங்கள் பெயர் எழுதிய பலூனை அந்த அறைக்குள் இருந்து எடுத்து வாருங்கள் என்று அறிவித்தார். உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து அந்த அறைக்குள் ஓடிச் சென்று ஒவ்வொரு பலூனாக எடுத்து தேடினர் . ஒருவருக்கொருவர் நெக்கி தள்ளிக்கொண்டு கீழே விழுந்து தங்கள் பெயருக்குரிய பலூன் கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர். 5 நிமிடம் கடந்த போதிலும் ஒருவராலும் தங்களுக்குறிய பலூனை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’ஒவ்வொருவரும் ஒரு பலூன் மட்டும் எடுங்கள், அந்த பலூனில் யார் பெயர் இருக்கிறதோ அதை, அந்த பெயர் உடைய நபரிடம் கொடுங்கள்’ என்றார். அடுத்த ஒரே நிமிடத்தில் தங்கள் பெயர் எழுதப்பட்ட பலூன் எல்லோருக்கும் கிடைத்துவிட்டது.

இப்பொழுது அந்த பேச்சாளர் சொன்னார், ’இதுதான் வாழ்க்கை. எல்லோரும் மகிழ்ச்சியை தேடுகிறோம். ஆனால் அது எங்கே, எப்படி, எதில் கிடைக்கும் என்று நினைப்பது இல்லை. நம் சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில் தான் இருக்கிறது. அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள், உங்கள் மகிழ்ச்சி உங்களை தேடி வரும்'.

வாட்ஸ் ஆப் வறுவல் 18 எதுவும் சாத்தியம்

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர்.

ஆனால் பின் மூவரும் முயற்சி எடுப்பது என்று முடிவு செய்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியாபாரி, அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான், “நான் இரண்டு சீப்புகள் புத்த மடாலயத்திற்கு விற்றேன்”

“எப்படி?” என்று வியாபாரி கேட்டான்.

“புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் பயன்படுத்தலாம் என்று சொல்லிப் பார்த்தேன்.
இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான், “நான் பத்து சீப்புகள் விற்பனை செய்தேன்”

“எப்படி?” என்று வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான்.

“காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்திற்குப் செல்பவர்களின் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது.

அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்ற ஆலோசனையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கினார்கள்”

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினான்.

மூன்றாம் மகன் சொன்னான், “நான் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தேன்”

“எப்படி?” என்று வியாபாரி ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றான்.

“அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பலரும் புத்த மடாலயத்திற்கு உதவி செய்யத் தூண்ட உதவும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று மடாலயத் தலைவர் என்னை கேட்டார். நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும். அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத்தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்”

அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என்று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வேலை என்று நினைப்பது தான் பொதுவாக நாம் காணக்கூடிய மனோபாவம். ஆனால், புத்திசாலித்தனமாக யோசித்தால் எதுவும் சாத்தியம் தானே? 

Monday 19 October 2015

வாட்ஸ் ஆப் வறுவல் - 17 தளபதி கேட்ட பரிசு

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து "உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று கூறினான். 

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் "மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை" என்றான். "உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்" என்றான் நெப்போலியன். 

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான். மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான். 

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான். 

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் "உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்" என்றான். 
அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து "சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?" என்று ஏளனம் செய்தார்கள். 

அதற்கு அவன் "நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்" என்றான். 

மற்ற தளபதிகள் "அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே" என்றார்கள். 

யூதத் தளபதி சொன்னான் "நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்" 

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான். அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

வாட்ஸ் ஆப் வறுவல் - 16 கிணத்தைக் காணோம்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான். 

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான். 

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான். 

விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான். 

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான். 

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.  நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார். 

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

வாட்ஸ் ஆப் வறுவல் - 15 நோயின்றி வாழ நம்மாழ்வாரின் 4 வழிமுறைகள் !

ஒன்று... பசி வந்து சாப்பிட வேண்டும், இரண்டு... தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், மூன்று... சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், நான்கு... தூக்கம் வந்து தூங்க வேண்டும்.’ 

இந்த நான்கு விஷயங்களும் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான விஷயங்கள். ஆனால், நகர வாழ்க்கையில் வேலைப் பளு காரணமாக இந்த விஷயங்கள் எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருக்கிறது’ நோய் வந்த பிறகுதான் உடலைப் பற்றிய நினைவே மக்களுக்கு வருகிறது; மருத்துவமனைகளைத் தேடிப் போய்ப் பணத்தைக் கொட்டுகிறார்கள். ஆனால், நோய் வருவதற்கு முன் தங்களது உடலைக் காப்பதற்காக நேரம் செலவழிப்பது இல்லை. 
உணவு, நீர், காற்று... இந்த மூன்றில் இருந்துதான் நம் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இந்த மூன்றில் இருந்து தவறான விஷயங்கள் ஏதேனும் உடலுக்குள் சென்றுவிட்டால்தான் நோய் வருகிறது. 
நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கும் நாளமில்லாச் சுரப்பிகளை தியானம், யோகாசனம் போன்றவைதான் ஊக்குவிக்கின்றன. அதனால், ஒவ்வொருவரும் தங்கள் உடலைப் பராமரிப்பதற்காக ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். உடலுக்குள் தேங்கிவிடும் கழிவுகளை வெளியேற்றுவதற்கும், உணவின் கலோரிகள் எரிக்கப்படுவதற்கும் காரணம் இந்த மூச்சுக்காற்றுதான். நாம் சுவாசிக்கும் இந்த பிராண வாயுதான் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. மூச்சை இழுக்கும்போது, காற்று நுரையீரலுக்குள் முழுமையாகச் சென்று சேர வேண்டும். ஆனால், நாம் பெரும்பாலும் மேலோட்டமாகவே சுவாசிக்கிறோம். இதனால், நுரையீரல் முழுமையாகச் சுருங்கி விரிவது இல்லை. நுரையீரல் நன்றாகச் சுருங்கி விரிய மூச்சுப் பயிற்சி அவசியம். 
எந்த ஒரு வலியும் இல்லாமல் நம்மைக் குணப்படுத்தும் வல்லமை மூச்சுப் பயிற்சி மற்றும் யோகாசனங்களுக்கு நம்மிடத்தே உண்டு’ என்கிறார் நம்மாழ்வார்.!