Tuesday, 31 January 2012

ஜனவரி - 30


* மகாத்மா காந்தி எக்காலத்திலும் இயற்கையாக இறந்த மாடுகளின் தோலால் செய்த செருப்புகளையே அணிந்து வந்தார். 

* மகாத்மா காந்தி 1913 ம் ஆண்டிலிருந்து 1947 வரை 17 முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். 

* காந்தியடிகள் முதன் முதலாக எழுதிய நூல், 'இந்திய சுயராஜ்யம்'. அவர் நடத்திய பத்திரிகையின் பெயர், 'யங் இந்தியா' 

* அயல்நாட்டு துணியை எரித்த குற்றத்திற்காக (1929) கைது செய்யப்பட்ட காந்திஜிக்கு நீதிமன்றம் ஒரு ரூபாய் அபராதம் விதித்தது. 

* காந்திஜியை 'தேசப்பிதா' என்று முதன் முதலாக அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

* காந்திஜிக்கு முதன் முதலாக தபால் தலை வெளியிட்ட நாடு, அமெரிக்கா. 
'அரிஜன்' என்ற சொல்லுக்கு 'கடவுளின் குழந்தைகள் என்று அர்த்தம் சொன்னவர் மகாத்மா. 

* மகாத்மா காந்திக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தவர், கன்னியப்ப செட்டியார். 'சத்ய சோதனை' என்ற தனது சுயசரிதையை, காந்திஜி தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். 

* 'மகாத்மா' என்ற பெயரை காந்திஜி ஒருபோதும் விரும்பியதில்லை. 

* காந்திஜி தனது வாழ்நாளில் 249 நாட்கள் ஆப்ரிக்க சிறையிலும், 2089 நாட்கள் இந்திய சிறையிலும் இருந்திருக்கிறார். 

* மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது. அக்டோபர் 2 ம் தேதி 'சர்வதேச அகிம்சை தினமாக' உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

* 'என்னுடைய பிறந்த நாளை புனித நாளாக கருதி, அரசு விடுமுறை அறிவித்திருப்பது சட்டப்படி குற்றம் என்று காந்திஜி தனது அரிஜன் பத்திரிகையில் எழுதியுள்ளார். 

* தென்னாப்பிரிக்காவில் காந்திஜி நடத்திய அறப்போரில் பங்குகொண்ட ஒரே தமிழ்ப் பெண், தில்லையாடி வள்ளியம்மை. 

* காந்திஜி தனது வாழ்நாளில் பார்த்த திரைப்படங்கள் இரண்டே இரண்டுதான்.  'மாஸ்கோ' என்ற ஆங்கிலப்படத்தையும், 'ராம ராஜ்யா' என்ற இந்தி படத்தையும் அவர் பார்த்திருக்கிறார். 

* மகாத்மா காந்தி, தனது வாழ்நாளில் விமானத்தில் பயணம் செய்ததே இல்லை. அமெரிக்கா அழைத்தும் கூட அவர் அமெரிக்கா சென்றதே இல்லை. அவரது தென்னாப்பிரிக்க பயணத்தையும், இங்கிலாந்து பயணத்தையும் கப்பலில் தான் மேற்கொண்டார். இந்திய சுற்றுப்பயணம் முழுவதும் ரயிலில் தான். 

* காந்திஜி குண்டடிப்பட்டு மூச்சு நின்ற நேரத்தில், அவரது இடுப்பில் தொங்கிக் கொண்டிருந்த கடிகாரமும் நின்றுவிட்டது. காந்திஜி மறைந்த சரியான நேரத்தைக் காட்டும் இந்த கடிகாரம், டெல்லி ராஜ்கோட்டில் வைக்கப்பட்டுள்ளது. 
* காந்திஜியின் இறுதி ஊர்வலத்தை, இந்திய வானொலி விடாமல் தொடர்ந்து 7 மணி நேரம் வர்ணனை செய்தது. 

* காந்திஜி மறைந்த அன்று அவருக்கு அனுதாபம் தெரிவிக்காத நாடு ருஷ்யா. காரணம், அவரது அகிம்சை கொள்கைகளை ஏற்காத அதிபராக ஸ்டாலில் இருந்து வந்தார். 

* 1948 ஜனவரி 13 ல் இருந்து சமுதாய நல்லிணக்கம் உருவாக வேண்டும் என்று கோரி காந்திஜி கல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். அவர் வாழ்க்கையில் மேற்கொண்ட கடைசி உண்ணாவிரதம் இது. ஐந்து நாட்களில் உண்ணாவிரதத்தை அவர் முடித்துகொண்டார். 

* அமைதிக்கான நோபல் பரிசை மகாத்மா காந்திக்கு தர வேண்டும் என்று 1937 ம் ஆண்டு முதல் 1948 வரை 5 முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இறுதிவரை அவருக்கு கொடுக்கப்படவே இல்லை. 

ஜனவரி - 30 அகிம்சை என்ற பயங்கர ஆயுதத்தால், ஆங்கிலேயர்களை அலற வைத்த அரையாடை மனிதரின் 65 ம் ஆண்டு நினைவு நாள் 
 

என்ன கொடுமை சார் இது ?
இந்த காலத்துல இளைஞனா இருக்கிறது ரொம்ப இம்சை தெரியுமா ?
அழகான பொண்ணுங்களை பாக்கறதே கஷ்டம்.


அப்படியே அழகா இருந்தாலும் நல்ல பொண்ணா இருக்கறது இல்லை.
ஒருவேளை அழகா, நல்ல குணமா இருந்தா, கல்யாணம் ஆன பொண்ணா இருக்கா.


சப்போஸ் கல்யாணம் ஆகாம இருந்தா, அண்ணன்காரன் கூடவே இருந்து தொலைக்கிறான்.


அழகா இருந்து, நல்ல குணமும் இருந்து, கல்யாணமும் ஆகாம இருந்து, இம்சை போடுற அண்ணனும் இல்லாம இருந்தா..


அந்த பொண்ணு எங்களை அண்ணனா நினைக்க ஆரம்பிச்சிடுறா..
என்ன கொடுமை சார் இது ?

ஒரு புதிர்


  மூன்று யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுக்கொண்டிருந்தன. 

  முதல் யானை 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. 

  இரண்டாவது யானை, 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. 

  மூன்றாவது யானையும், 'எனக்குப் பின்னால் இரண்டு யானைகள் வருகின்றன' என்றது. இதில், எந்த யானை சொல்வது உண்மை? 

விடை :  மூன்று யானைகள் சொன்னதுமே சரி. ஏனென்றால், அவை வட்ட வடிவமாக சென்றுக்கொண்டிருந்தன. 

Monday, 30 January 2012

தொன்போஸ்கோத்தாலி நாட்டில் 'மேல்மோன்பெராத்தா' என்னும் பகுதியில் உள்ள 'பெக்கி' என்னும் சிற்றூரில் பிரான்சிஸ் லூயி போஸ்கோ - மார்கரீத் ஒக்கியேனா தம்பதிக்கு 1815-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் தொன் போஸ்கோ பிறந்தார். அவரது இயற்பெயர் ஜான் போஸ்கோ. ( இத்தாலி மொழியில் 'தொன்' என்பதற்கு 'குரு' என்று பொருள். பின்னாளில் அவர் பாதிரியார் ஆன பிறகு 'தொன் போஸ்கோ' என்று அழைக்கப்பட்டார்)

    தொன் போஸ்கோவுக்கு ஜோசப் என்ற உடன் பிறந்த அண்ணனும், தந்தையின் முதல் தாரத்திற்குப் பிறந்த அந்தோணி என்ற மூத்த அண்ணனும் உண்டு. தமது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்த போஸ்கோவை, அவரது அன்னை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தெய்வ பக்தியில் பழக்கி வளர்த்தார். 

          ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போஸ்கோவுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. ஆனாலும், கொடிய வறுமையை பொருட்படுத்தாமல் ஆடு, மாடு மேய்த்தும், கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து, அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டும் கல்வி பயின்றார். அவருடைய லட்சியம் பாதிரியாராகி, ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படியே, 1841-ம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் நாள் குரு பட்டம் பெற்று பாதிரியாரானார். அதே ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் அவருடைய துறவற வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்ந்தது. அன்று அவர் தேவாலயத்தில் திருப்பலி பூசை நிறைவேற்ற தயாராகி கொண்டிருந்தபோது, 'பார்த்தலோமே காரெல்லி' என்ற அனாதைச் சிறுவனை கோயில் கணக்கர் அடித்துக்கொண்டிருந்தார். அவரைத் தடுத்து, அந்த சிறுவனை தனியே அழைத்து வந்து, அவனைப் பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்டார். தெருவில் அனாதையாக திரிந்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் தான், அவர் தொடங்கிய கல்வி மற்றும் சமுதாயப்பணியின் அடிக்கல். 

       அதன் பின்னர் தான் அவர், 'ஆரட்டரி' (இளைஞர் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க நிழலின்றி வீதிகள்தோறும் சுற்றித் திரிந்த அனாதை சிறுவர்களையும், இளைஞர்களையும் கூட்டி உணவு, உறைவிடம், உடை போன்றவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்து, கல்வி, கைத்தொழில் ஆகியவற்றை கற்பித்து சமூத்திற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கினார். 

      தான் தொடங்கிய பணி, தன்னோடு முற்றுப் பெற்றுவிடக் கூடாது என்று டான் போஸ்கோ விரும்பினார். அவரது அனாதை ஆசிரமத்தில் பயின்ற சில இளைஞர்கள் அவரைப் போலவே சேவை செய்ய ஆர்வம் கொண்டு பாதிரியாரானார்கள். அவர்களை கொண்டு, 1874-ம் ஆண்டு போப்பாண்டவரின் அனுமதியோடு 'சலேசிய சபை' என்ற அமைப்பை நிறுவினார்.தொன்போஸ்கோ ஏற்படுத்திய துறவற சபையைச் சேர்ந்த பாதிரியார்களும், கன்னியாஸ்தீரிகளும் உலகம் முழுவதும் இன்றுவரை அவருடைய கல்வியுடன் கூடிய சமுதாயப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

       இளைஞர்களுக்காகவே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த தொன்போஸ்கோ, 1888-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தமது 72-வது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுகொண்டார். 1934-ம் ஆண்டு போப் 11-ம் பத்திநாதர் தொன் போஸ்கோவுக்கு 'புனிதர்' (செயிண்ட்) பட்டம் வழங்கினார். 


        தொன்போஸ்கோ மறைந்து , 123 ஆண்டுகளாகியும் அவரது வலது கரம் இன்னும் அழியாமல் உள்ளது. அவரது வலது கரம் ஒருபேழையில் வைக்கப்பட்டு,  மெழுகு உடலின் நெஞ்சுப்பகுதியில் பொருத்தப்பட்டது. 

       வரும் 2015-ம் ஆண்டு தொன் போஸ்கோவுக்கு 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொன் போஸ்கோவின் புனித கரம் வைக்கப்பட்டுள்ள மெழுகு வடிவ சிலை உலகம் முழுவதும் புனித பயணம் மேற்கொண்டு 130 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.கடந்த ஆண்டு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.   ஏராளமான மக்கள், அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

          சிறுவர்களை முன்னேற்ற கல்வியால் மட்டுமே முடியும் என்பதை அறிந்த தொன் போஸ்கோ முறை சாரா கல்வி முறையை கொண்டு வந்தார். இம்முறையில் கல்வி பெற்ற இளைஞர்கள் தகுதியான வேலை வாய்ப்பு பெற்று சமுதாயத்தில் உயர்வு பெற வழி வகை செய்தார். தொன் போஸ்கோவின் கல்வி முறையை 130 நாடுகளில் முறையான கல்வியாகவும், முறைசாரா கல்வியாகவும் பின்பற்றப்படுகின்றது. 

ஜனவரி - 31 தொன்போஸ்கோ நினைவு நாள் 

Friday, 27 January 2012

தலைமைச் செயலகம்


 வ்வொரு மனிதனும் தன் மூளையை 7 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறான். அறிவாளிகள் 10 சதவீதமும், விஞ்ஞானிகள் 12 சதவீதமும் மூளையை பயன்படுத்துகின்றனர் என்பது ஒரு ஆய்வுத் தகவல். 
    
    அதிகபட்சமாக 12 சதவீத மூளையை மட்டுமே பயன்படுத்தும் மனிதன், இத்தனை அறிவியல் அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறான். அதுவே 100 சதவீத மூளையை பயன்படுத்தினால்? யோசிக்கும் போதே தலையை சுற்றுகிறதா? அந்த தலை சுற்றலினூடே மனித மூளையைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள் இதோ : 

           பிறந்த குழந்தையின் 370 கிராமிலிருந்து 400 கிராம் வரை இருக்கும். ஒரு வயதாகும் போது அதே மூளையின் எடை இரண்டு மடங்கு அதிகரிக்கும். நல்ல ஆரோக்கியமான ஒரு மனித மூளையின் எடை 1கிலோ 360 கிராம் இருக்கும். தவிர மனித மூளை 2 முதல் 6 வயது வரை மட்டுமே வளரும். 

           மனித மூளை மண்டை ஓட்டில் 'செரிப்னோஸ்மைனஸ்' என்ற திரவத்தில் மிதந்துக்கொண்டிருக்கிறது. இந்த திரவம் மூளைக்குப் பாயும் ரத்தத்திலிருந்து உற்பத்தியாகிறது. மூளைக்கு நிமிடத்திற்கு 800 மிலி ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த நாளங்கள் வழியாக மூளைக்குத் தேவையான ரத்தம் பாய்கிறது. இது தடைபட்டால் மயக்கம் ஏற்படுகிறது. அதிக ரத்தம் பாய்ந்தால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. 

         இனவிருத்திக்கு இனச்சேர்க்கை முக்கியமானது என்பது நமக்குத் தெரியும். அவ்வாறு மனிதனுக்க பாலுணர்ச்சியைத் தூண்டுவது மூளையில் உள்ள 'ஹைப்போதாலம்ஸ்' என்ற பகுதியாகும். 

  மூளை பழுப்பு நிறம் கொண்டது. அத்துடன், இதன் நரம்புகள் கோடிக்கணக்கான உயிரணுக்களால் ஆனதாகும். மூளைக்கு வலி கிடையாது. ஆனால், உடலின் மற்ற பாகங்களில் இருந்து வரும் நரம்புச் செய்திகளை வலியாக உணருகிறது. மூளையின் ஒரு பகுதியான 'செரிப்ரம்' என்ற சாம்பல் நிற மடிப்புக்களைக் வைத்தே ஒருவனின் புத்திசாலித்தனம் அமைகிறது. இது மூளையின் மூன்றில் இரண்டு பகுதிகளை ஆக்ரமித்துள்ளது. மேலும், மூளையின் 'பெர்னிக்' என்ற பகுதியில் தான் நமது ஞாபகசக்தி அடங்கியிருக்கிறது. 
       
       மனித மூளைக்கு வயதாகும் போது அதற்கு போக்கும் ரத்தத்தின் அளவு குறைகிறது. இதனால், 'அல்சைபர்' என்ற மறதி நோய் ஏற்படும். இது ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படுவதாகும். 

Friday, 20 January 2012

தானம்


சென்னை போன்ற பெருநகரங்களில், விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் அதிக ரத்த போக்கின் காரணமாகவே உயிரிழக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைக்கும்போது, விலைமதிப்பற்ற மனித உயிர் காப்பாற்றப்படுகிறது. எனவேதான், தானத்தில் ரத்த தானம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

  ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். உயிர் வாழ்வதற்கு நான்கரை லிட்டர் ரத்தம் போதுமானது. உபரியாக அரைலிட்டர் இருக்கிறது. அதிலிருந்து 300 மி.லிட்டர் ரத்தம் தானமாக எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட ரத்தம் ஊற்றுநீர் போல ஊறிவிடும். புதிய ரத்தம் ஊறிவிடுவதால், புத்துணர்ச்சி கிடைக்கிறது. ரத்த தானம் செய்வதால், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. 

   ஆண்டிற்கு 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. நாட்டிற்கு, ஆனால், கிடைப்பதோ 30 லட்சம் யூனிட்கள் மட்டுமே. 1818 ஆம் ஆண்டில்தான் உலகில் முதன்முதலாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் தான் முதல் ரத்த வங்கி ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கிங் நிலையத்தில் டாக்டர் அரங்கநாதன் என்பவரால் ரத்த வங்கி தொடங்கப்பட்டது. 

   நம்மில் பலபேருக்கு ரத்த தானம் செய்ய ஆர்வம் இருக்கும். ஆனால், கூடவே, அதுகுறித்த பயங்களும் குழப்பங்களும் அதிகம் உண்டு. எனவே, ரத்த தானம் பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக.. 

   ரத்தம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக சிவப்பு நிறமாக இருந்தாலும், வெவ்வேறு ரத்தப் பிரிவுகளாக மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. இதற்கு காரணம் ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், ரத்த சிவப்பணுக்களின் மேல் படிந்துள்ள ஆன்டிஜின் மூலக்கூறுகள் மனிதனுக்கு மனிமதன் வேறுபடுகிறது. எனவே தான் இத்தனை வகையான ரத்தப்பிரிவுகள் உள்ளன.

   இரத்ததை 'A' குரூப் என்றும், 'B' குரூப் என்றும், 'AB' குரூப், 'O' குரூப் என்றும் வகைப்படுத்தியவர் லான்ஸ்ட்டீனர் என்றும் மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி ஆவார். 1909 ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுபிடித்தார். இரத்தம் செலுத்தும் துறைக்கு ஹீமட்டாலஜி என்று பெயர் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய இரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
   
   பொதுவாக, 'O' குரூப் ரத்தம் பெற்றிருப்பவர்களை 'யூனிவர்சல் டோனர்' என்றும், 'AB' குரூப் ரத்தம் பெற்றிருப்பவர்களை 'யூனிவர்சல் ரெசிப்டன்ட்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். 'O' குரூப் ரத்தம் கொண்டர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். 'AB' குரூப் ரத்தம் கொண்டவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம். 

   இந்தியாவின் மிகப்பெரிய ரத்த வங்கி சென்னையில் உள்ள அரசு பெரிய மருத்துவமனையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் சேமித்து வழங்கப்படுகிறது. 

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

18 முதல் 60 வயது உள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ரத்ததானம் செய்யலாம். 

நம்முடைய ஒவ்வொருவர் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில், இரத்த தானத்தின் போது, 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 

இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். 
ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும். 
இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 

ஒருவர் 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். 

இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே போதுமானது. 

இரத்த தானம் செய்தவுடன், வழக்கம் போல அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். 

யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது?

பெண்கள் கருவுற்றிருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்த தானம் செய்யக்கூடாது. 

பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 6 மாதங்களுக்கும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 3 மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

மலேரியாவுக்கு சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

பால்வினை/ எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.