Tuesday, 28 May 2013

உலகின் வயதான மனிதர்

19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ஜப்பானின் ஜிரோமன் கிமுரா என்ற 116 வயது தாத்தா மட்டும் தான் தற்போது உயிருடன் உள்ளார். 

ஜப்பானைச் சேர்ந்தவர் ஜிரோமன் கிமுரா. உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். ஜப்பானில் உள்ள அஞ்சலகம் ஒன்றில் 45 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1962ம் ஆண்டு கிமுரா ஓய்வு பெற்றார். அவருக்கு 5 குழந்தைகள், 14 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப்பேரப்பிள்கள் உள்ளனர். அவரின் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுக்கு பிறந்த பிள்ளைகள் 13 பேர் உள்ளனர்.


19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் கிமுரா மட்டும் தான் உயிருடன் இருக்கிறார். அதே சமயம் அதே 19ம் நூற்றாண்டில் பிறந்த பெண்களில் 21 பேர் உயிருடன் உள்ளனர். கிமுரா தற்போது கியோடாங்கோவில் தனது 83 வயது மூத்த மருமகள் மற்றும் பேரனின் 59 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த இரண்டு பெண்களுமே விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, 7 May 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
பெட்டிக்கடை ரேஞ்சுக்கு ஆட்களை கடத்தி, அதிகபட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து சுயதொழில் செய்துவரும் விஜய் சேதுபதி ஆபத்தில்லாத நல்ல கடத்தல்காரன். பணம் கிடைத்ததும், கடத்தப்பட்டவருக்கு டிப்ஸ் உண்டு. நயன்தாராவுக்கு கோயில் கட்டிவிட்டு சென்னை வரும் இளைஞரும், காலை எட்டுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து முடித்து பயபக்தியோடு தண்ணி அடிக்க அமரும் இளைஞரும், விஜய்சேதுபதியுடன் கூட்டு சேருகிறார்கள். தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. 

இந்த கோஷ்டியுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கூட்டு சேர்கிறார். விஜய்சேதுபதி அன் கோ தங்கள் கொள்கைகளை மீறி, 2 கோடிக்கு ஆசைப்பட்டு அதிகார மட்டத்தில் இருப்பவரின் மகனை கடத்துகிறது. ஆனால், கடத்தப்பட்ட அரசியல்வாதியின் மகனோ இவர்களை விட பக்கா பிராடு என்பது தெரியவருகிறது. நாம் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தால், கடத்தல் கும்பலை பிடிக்க, என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரம்மா வருகிறார். ரவுடியை பிடித்து, தோட்டத்தில் உயிரோடு புதைப்பது என்று அவரது அறிமுகமே திகிலை ஏற்படுத்துகிறது. 

இன்டர்வெல் வரை விஜய் சேதுபதி கற்பனை காதலியோடு உலா வருகிறார். படத்தில், காதல், மரத்தை சுற்றி டூயட் என்ற அபத்தங்கள் ஏதுமில்லாதது ஆறுதல். விஜய்சேதுபதிக்கு ஏதாவது மனபிறழ்வா என்பது குறித்த விவரங்கள் ஏதும் படத்தில் இல்லை. நாற்பதை கடந்த கெட்டப் எதற்கும் என்றும் புரியவில்லை. 

படம் தொடங்கியது முதல், வசனங்களும், விஜய்சேதுபதி அன் கோவின் கோமாளித்தனங்களும் காமெடி சரவெடி. பிரம்மாவின் என்ட்ரிக்குப் பின்னர், படத்தை சீரியசாக்குவதா, காமெடியை தொடருவதா என்று இயக்குநர் தனது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். பின்னர், ஒருவழியாக காமெடியே போதும் என்று முடிவுக்கு வந்து, இன்ஸ்பெக்டர், கள்ளத் துப்பாக்கியால் பின்னால் சுட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரிக்குப் போகிறார். 

கற்பனை காதலி உத்தி நல்ல ஐடியாதான். ஆனால், அதற்கான காரணம் என்று ஏதாவது வைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

நேர்மையான அரசியல்வாதியாக வந்து, மகனைவிட தனது நற்பெயர்தான் முக்கியம் என்று கருதும் கேரக்டரில் எம்.எஸ். பாஸ்கர் அசத்துகிறார். 

சினிமா விமர்சனம் முன்னே பின்னே எழுதி பழக்கம் இல்லை என்பதால், எங்கே ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்பது தெரியாததால், இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மொத்தத்தில் படம் ஜாலியாக போகிறது என்பதால், திருட்டி வி.சிடியில் ஸாரி டி.வி.டியில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்கலாம். 

பின்குறிப்பு 1 -  நீண்ட நாட்களுக்குப் பிறகு.. ம்.. அனேகமாக.. படம் ரிலீசான அன்றே முதல் காட்சி பார்த்த மூன்றாவது படம் இது. ஆனாலும், சோம்பல் காரணமாக விமர்சனம் எழுத சற்றே லேட்டாகிவிட்டது. 

பின்குறிப்பு 2 -  முதல் காட்சி பார்த்த முதல் இரண்டு படங்கள் - காந்தி பிறந்த மண்( விஜயகாந்த்), உதயம் என்.எச்.-4 

இந்த வார குங்குமத்தில்..