Tuesday, 28 February 2012

கொஞ்சம் சிரிப்பு ... கொஞ்சம் சிந்தனை


நாம் மனித மாமிசம் உண்டவர்கள்

டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் மகாத்மா காந்தி, ''பசுவின் பாலைக்குடிக்காதீர்கள். அது மாட்டுக்கறியின் சாறு '' என்றார். உடனே ராதாகிருஷ்ணன், ''அப்படியானால், நாம் எல்லோருமே மனித மாமிசம் உண்டவர்கள்தான்'' என்றார். ''எப்படி?'' என்று கேட்டார் காந்திஜி. '' நாம் அனைவரும் தாயின் பால் குடித்துதானே வளருகிறோம். அதை மனித மாமிசத்தின் சாறு என்று கூறலாம் அல்லவா?'' என்றார்.
காந்திஜி பதில் சொல்லாமல் அமைதியானார். 

எனக்கு தகுதி இல்லை

ஒரு குடும்பக் கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைக்க, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியை அழைத்திருந்தார்கள். லால்பகதூர் சாஸ்திரி ஒரு நிமிடம் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அவர் என்ன  பேசினார் தெரியுமா? 
''நான் 6 குழந்தைகளுக்கு தந்தை. எனவே, இங்கு பேசுவதற்கு எனக்கு சிறிதும் தகுதி இல்லை'' என்றார். 

முழுமையான ருசி

மாவீரன் நெப்போலியன் தன் அமைச்சரவை சகாக்களுடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டார். விருந்தில் எல்லோருக்கும் பழச்சாறு பரிமாறப்பட்டது. குடிக்கத் தொடங்கும் சமயத்தில் ஒரு மாபெரும் சத்தம் அனைவரின் காதுகளையும் துளைத்து திடுக்கிட வைத்தது. நெப்போலியனைத்தவிர மற்ற அனைவரும் பதறி பழச்சாறை கொட்டிவிட்டார்கள். நெப்போலியன் மட்டும் எவ்வித மாற்றமும் இன்றி அமைதியாக பழச்சாற்றை ருசித்துக்கொண்டிருந்தார். இது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இது எப்படி என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு, ''பழச்சாற்றை அருந்த துவங்கி செயலில் இறங்கிவிட்டால், அடுத்த சிந்தனை கூடாது. நாம் மேற்கொள்ளும் காரியம் அருந்துதல் மட்டுமே. அதில், முழுமையான ஈடுபாடு இருந்தால் மட்டுமே காரியம் கைநழுவாது. முழுமையான ருசியும் கிடைக்கும்.'' என்று விளக்கமளித்தார். 

தாயின் பாரம்

விவேகானந்தரிடம் ஒருவன் ''சுவாமி! குழந்தை உருவாக தந்தையும், தாயும் தான் காரணமாக இருக்கிறார்கள். ஆனால், எல்லோருமே தாயை மட்டும் போற்றுகிறார்களே?'' என்று கேட்டான். அவனிடம் விவேகானந்தர், ''அதோ அங்கே தெரிகிறதே.. அந்த கல்லை எடுத்துவா'' என்றார். அவன் அந்த கல்லை தூக்கி வந்தான். அது இரண்டு கிலோ எடை கொண்டது. '' இந்த கல்லை உன் மடியில் நாலுமணி நேரம் கட்டிக்கொண்டு இரு. பிறகு என்னிடம் வா'' என்றார் விவேகானந்தர். அவனும் அந்த கல்லை நாலு மணிநேரம் கட்டிக்கொண்டு இருந்தான். அவனுக்க சிரமமாக இருந்தது. எழும்பிப் போனான். ''சுவாமி, என்னால் இந்த பாரத்தை தாங்க முடியவில்லை. சிறு சந்தேகம் கேட்டதற்கு இவ்வளவு பெரிய தண்டனை தந்துவிட்டீர்களே? என்றான். விவேகானந்தர் புன்னகைத்தார். ''இந்த இரண்டு கிலோ கல்லை உன்னால் நாலு மணிநேரம் கூட வைத்திருக்க முடியவில்லை. ஆனால், ஒரு தாயானவள் ஏறக்குறைய பத்து மாதம் குழந்தையை சுமக்கிறாள். அதை அவள் பாரம் என்று அலுத்துக்கொள்கிறாளா? அதனால்தான் தாய்க்கு அதிக முக்கியத்துவம்'' என்றார்.அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகின்றன?

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, மாஸ்கோ சென்றிருந்தார். அவர், கம்யூனிச எதிர்ப்பாளர். ரஷ்ய அதிபராக இருந்த பிரஷ்னேவுக்கும், தேசாய்க்கும் இடையே விண்வெளி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக அமையவில்லை. ''நான் சந்தோஷமான நேரங்களில் விருந்தினருடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவேன். ஆனால், உங்களுடன் டீ மட்டும்தான் குடிக்கலாமென தோன்றுகிறது '' என்றார் பிரஷ்னேவ். அதற்கு,''நான் டீ குடிப்பதை விட்டு 70 ஆண்டுகள் ஆகின்றன'' என்றார் தேசாய்.  பிரஷ்னேவ் விடவில்லை. ''சரி, நாம் சாப்பிடலாம். நான் அசைவம், நீங்கள்?'' என்று கேட்டார். '' நான் சைவம். அசைவ விரும்பிகள் ஏன் சைவ விலங்குகளை சாப்பிடுகிறீர்கள் என்றுதான் எனக்கு தெரியவில்லை'' என்றார் தேசாய், கிண்டலாக. பிரஷ்னேவுக்கு கடுங்கோபம் என்றாலும், தேசாயின் மதிநுட்பத்தை ஆச்சரியத்துடன் ரசித்தார். 


படித்து விடுகிறேனே..

அறிஞர் அண்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தும், அவர் தேதியைத் தள்ளி வைக்கச் சொன்னார். 'பகுத்தறிவுவாதியான அண்ணா, நாள் நட்சத்திரம் பார்க்கிறாரே?' என்று பலரும் யோசித்தனர். ''நான் ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். 'ஆபரேஷன்' தேதிக்குள் படித்து முடிக்க முடியாது. படித்து முடித்துவிட்டு திருப்தியாக ஆபரேஷனுக்கு போகலாம் என்பதே என் விருப்பம்'' என்றார், அண்ணா.  

நானும் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்

சர்ச்சில், இங்கிலாந்து பிரதமராக இருந்த நேரம். மனநல மருத்துவமனை ஒன்றை பார்வையிட சென்றார். அப்போது மனநோயாளி ஒருவர், நீங்கள் யார் என்று சர்ச்சிலைப்பார்த்து கேட்டார். ''நான் பிரதமர்'' என்றார் சர்ச்சில். அதைக்கேட்டதும் அந்த மனநோயாளி பலமாக சிரித்தார். ''இங்கே வந்த புதிதில் நானும் இப்படித்தான் பிரதமர், ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போகப்போக குணமாகிவிடும்'' என்றார். அதைக் கேட்டு அதிர்ச்சியாகி விட்டார் சர்ச்சில். 

இதுதான் சுகாதாரமானது

இங்கிலாந்து நாட்டின் பெரும் தலைவரான சர்ச்சிலும், முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனும் ஒரு விருந்துக்குச் சென்றனர். சர்ச்சில் ஸ்பூனால் சாப்பிட்டார். ராதாகிருஷ்ணன் கைகளை சுத்தமாக கழுவிய பின்னர் சாப்பிட அமர்ந்தார். கையால் சாப்பிட்டார். இதனை கவனித்த சர்ச்சில், ''என்ன இது.. ஸ்பூனால் சாப்பிடுவது தான் சுகாதாரமானது. கையால் சாப்பிடுவது தவறு'' என்றார். அதற்கு ராதாகிருஷ்ணன், ''உலகத்திலேயே கையால் சாப்பிடுவதுதான் சுகாதாரமானது.. காரணம் இதை வேறு யாரும் உபயோகப்படுத்த முடியாதே'' என்றார். 

உபதேசம்

புத்தரின் சீடன், ஒரு பிச்சைக்காரனுக்கு உபதேசம் செய்தான். ஆனால், அதை அவன் காதில் வாங்கவில்லை. சீடனுக்கு கோபம் வந்தது. புத்தரிடம் போய் சொன்னான். ''அந்த பிச்சைக்காரனை என்னிடம் அழைத்துவா'' என்றார் புத்தர். அவ்வாறே செய்தான் சீடன். பிச்சைக்காரனைப் பார்த்தார், புத்தர். உடல் மெலிந்து, பல நாளாகப் பட்டினி கிடந்து பசியோடு காணப்பட்டான். புத்தர், அவனுக்கு வயிறு நிறைய உணவு கொடுத்தார். பின்பு, ''நீ போகலாம்'' என்று அனுப்பிவிட்டார். சீடனுக்குப் பொறுக்கவில்லை. ''நீங்கள் அவனுக்கு உணவு மட்டும்தானே அளித்தீர்கள். உபதேசம் ஏதும் செய்யவில்லையே?'' என்று கேட்டான். ''இன்று அவனுக்கு உணவுதான் உபதேசம். இதுவே அவனுக்கு இப்போது முதல் தேவை. அவன் உயிரோடு இருந்தால்தான் நாளை உபதேசத்தைக் கேட்பான். பசித்தவனுக்கு என்ன சொன்னாலும் பயன்படாது '' என்றார். 

காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்

தத்துவமேதை பெர்னார்ட்ஷா ஒல்லியாகவும், உயரமாகவும் இருப்பார். ஒருநாள் தன் குண்டான நண்பருடன் வெளியில் சென்றார். அப்போது அந்த நண்பர், பெர்னார்ட்ஷாவைப் பார்த்து, ''உங்களை யாராவது பார்த்தால், இங்கிலாந்தில் ஏதோ உணவுப் பஞ்சம் ஏற்பட்டு இருப்பதாக நினைத்துக்கொள்வார்கள்!'' என்று கிண்டலடித்தார். இதைக்கேட்டு சிரித்த பெர்னார்ட்ஷா, ''ஆமாம், ஆனால், உங்களையும் பார்த்தால், இந்த பஞ்சம் ஏற்பட்டதன் காரணத்தைத் தெரிந்துகொள்வார்கள்'' என்றார். கிண்டலடித்த நண்பர் வாயை திறக்கவில்லை. 

`தி ஆர்டிஸ்ட்' படத்திற்கு 5 ஆஸ்கார் விருதுகள்


       மெரிக்காவின்  லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 27 ம் தேதி   நடந்த 84-வது ஆண்டு ஆஸ்கார் விருது விழாவில்`தி ஆர்டிஸ்ட்' என்ற கருப்பு-வெள்ளை படத்திற்கு சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்கம், சிறந்த ஆடைவடிவமைப்பு, சிறந்த இசை ஆகிய பிரிவுகளில் 5 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன. இது வசனமே இல்லாத படம்.

 படத்தின் இயக்குநர் மிச்சேல் ஹசானாவிசியசுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. இதற்கு முன் 1929-ம் ஆண்டு 'விங்க்ஸ்' என்ற வசனம் இல்லாத (சைலன்ட்) படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.    ஆஸ்கார் விருதுபெற்ற முதல் படமும் இதுதான். 

     சிறந்த காட்சியமைப்பு (விஷுவல் எபக்ட்), சிறந்த பின்னணி இசை, எடிட்டிங் மற்றும் சிறந்த ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப பிரிவில் 5 விருதுகளை ' ஹுகோ' என்ற படம் தட்டிச்சென்றது. 

          சிறந்த ஒலிப்பதிவு மிக்ஸிங் ‘ஹுகோ படத்தில் பணியாற்றிய டாம் பிலிஸ்மேன், ஜான் மிக்லே, சிறந்த ஒலிப்பதிவு எடிட்டிங் பிலிப் ஸ்டாக்டன், எஜின் கியேட்டி (ஹுகோ), சிறந்த எடிட்டிங் தி கேர்ள் வித் தி டிராகன் டாட்டூ படத்துக்காக கிர்க் பாக்ஸடர் மற்றும் அங்கஸ் வால் விருது வென்றனர். 

       சிறந்த காஸ்டியூம் ‘தி ஆர்ட்டிஸ்ட்‘ படத்துக்காக மார்க் பிரிட்ஜஸ், சிறந்த அரங்கத்துக்கு ஹுகோ படத்துக்கு அரங்கம் அமைத்த டான்டே பெரெட்டி, பிரான்சிஸ்கா லோ ஸ்கிவோ, சிறந்த ஒளிப்பதிவு ராபர்ட் ரிச்சர்ட்சன் (ஹுகோ) வென்றனர். சிறந்த விஷுவல் எபெக்ட் விருதை ‘ஹுகோ படத்துக்கு பணியாற்றிய ராப் லெகடோ தலைமையிலான குழு வென்றது. சிறந்த அனிமேஷன் படம் ‘ராங்கோ, சிறந்த செய்தி படம் ‘அன்டிபிடட், சிறந்த திரைக்கதை, மிட்நைட் இன் பாரிஸ் ஆகியவை பெற்றன.

          சிறந்த நடிகர் விருதை 'தி ஆர்டிஸ்ட்' படத்தில் நடித்த ஜீன் டுஜார்டின் பெற்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது, ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான மெரில் ஸ்டிரீப்புக்கு (தி அயர்ன் லேடி) கிடைத்தது. 62 வயதான ஸ்டிரீப் 3-வது முறையாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றார். இவர், நடித்து 1979 -ம் ஆண்டில் வெளி வந்த `கிராமெர் வர்சஸ் கிராமெர்' மற்றும் 1982-ம் ஆண்டு வெளி வந்த `சோபீ'ஸ் சாய்ஸ்' என்ற 2 படங்களுக்கு ஏற்கனவே இவர் ஆஸ்கார் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

      சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது 82 வயதாகும் பழம்பெரும் நடிகரான கிரிஸ்டோபர் பிளம்மர் ' பிகின்னர்ஸ்' படத்துக்காக பெற்றார். சிறந்த துணை நடிகை விருதை 'ஹெல்ப்' படத்தில் நடித்த அக்டாவிய ஸ்பென்ஸர் பெற்றார். சிறந்த திரைக்கதைக்கான விருது ஆலனுக்கு கிடைத்தது.

       சிறந்த குறும் படத்திற்கான விருது ``சேவிங் பேஸ்'' என்ற படத்துக்கு கிடைத்தது. குறும் படத்துக்கு ஆஸ்கார் விருது கிடைப்பது இதுவே முதல்முறை. 

சிறந்த பிற மொழி படத்துக்கான விருது ஈரான் நாட்டு படமான ``தி செப்பரேசன்'' என்ற படத்துக்கு கிடைத்தது.

சிறந்த படம், இயக்கம் உள்பட 5 முக்கிய விருதுகளை வென்ற தி ஆர்ட்டிஸ்ட் பட கதை சுருக்கம்: 

 1927ம் ஆண்டில் கதை நடக்கிறது. வசனங்களே இல்லாமல் படங்கள் வெளியான காலம். பட ஹீரோ ஜீன் துஜார்டின் விரைவில் வெளிவரவிருக்கும் தனது புதிய படத்தின் முன்னோட்ட காட்சியை காண வருகிறார். அவரை பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்கின்றனர். அங்கு வரும் ரசிகை பெஜோ, கூட்ட நெரிசலில் ஜீன் மீது விழுகிறார். அவரை ஹீரோ தாங்கிபிடிக்கிறார். மறுநாள் பத்திரிகைகளில் ஹீரோ ஜீனுடன் இருக்கும் பெண் யார்? என்று கேட்டு காதல் கிசுகிசு கிளப்பிவிடுகின்றன. 


பின்னர் நடன குழு பெண் தேர்வுக்கு வரும் பெஜோவை சினிமா கம்பெனியில் சேர்த்துவிடுகிறார் ஜீன். படிப்படியாக பெஜோ பெரிய நடிகை ஆகிறார். இந்நிலையில் ஸ்டுடியோ அதிபர் தனது நிறுவனத்தின் கடைசி ஊமை படத்தின் தயாரிப்பு பற்றி அறிவிக்கிறார். இதில் கோபம் அடையும் ஜீன் அப்படத்தை தானே இயக்கி, தயாரிக்க முடிவு செய்கிறார். இதில் பெருத்த நஷ்டத்தை சந்திக்கும் ஜீனை அவரது மனைவி விரட்டியடிக்கிறார். ஜீனின் சொத்துக்கள் ஏலத்துக்கு போகிறது. இறுதியில் ஜீனுக்கு பெஜோ உதவுகிறார்.


'ஆஸ்கார்' ஒரு முன் கதைச் சுருக்கம் 

1927 ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி 'தி அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்' என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு 1929 ம் ஆண்டு முதல் ஆஸ்கார் விருது 'அகாடமி விருது என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அமைப்பில் உலகப் புகழ்பெற்ற திரைப்படக்கலைஞர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் உறுப்பினர்களாக உள்ளனர்.  மொத்தம் 36 பேர் இதன் அங்க உறுப்பினர்களாவர். இதன் முதல் தலைவராக சர். டக்ளஸ் பேர்பேங்க் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர் பிராங்க் கேப்ரா, பெட்டி டேவிஸ், ஜீன் ஹர்ஹோல்ட், ஜார்ஜ் ஸ்டீவன்ஸ், ராபர்ட் இ. வைஸ், கார்ல் மால்டன், ஆர்தர் ஹில்லர், ராபர்ட் ரெஹ்மே, பிரேங்க பியர்சன் உள்ளிட்டோர் இந்த அமைப்பின் தலைவர்களாக பதவி வகித்துள்ளனர்.

           'அகாடமி விருது', 'ஆஸ்கார்' விருதாக பெயர் மாறியதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அகாடமி விருதாக வழங்கப்படும் சிலை, பெட்டி டேவிஸ் என்ற நடிகையில் அங்கிளான 'ஆஸ்கார்' என்பவரின் உருவ அமைப்பை ஒத்திருப்பதாக அந்த நடிகை சொன்னதைக் கேட்டு, அன்றிலிருந்து அந்த விருது ஆஸ்கார் என்று பெயர் மாறியதாக சொல்லப்படுகிறது. 

           ஆஸ்கார் என்னும் பெயரை 1934 ம் ஆண்டில் தான் பிரபல ஹாலிவுட் செய்திப் பத்திரிகையாளர் சிட்னி ஸ்கோவ்ஸ்கி முதன் முறையாக பத்திரிகையில் பயன்படுத்தினார். காத்ரீன் ஹெபர்ன் என்ற நடிகை சிறந்த நடிகைக்கான விருதை பெற்றபோது, 'நடிகை ஆஸ்கார் விருதுபெற்றார்' என்று அவர் தனது பத்திரிகையில் குறிப்பிட்டார். 

     1929ம் ஆண்டில் முதன் முதலாக வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது 33 செ.மீ, நீளமுடையதாகவும், தங்கமுலாம் பூசப்பட்டதாகவும் இருந்தது. மேலும், ஒரு திரைப்படச்சுருளின் மீது நிற்பது போன்ற மனித உருவத்துடனும் அச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வமாக1940ம் ஆண்டில் தான் ஆஸ்கார் சிலைகள் ஒரே வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உள்ள சிலையை வடிவமைத்தவர், 'செட்ரிக் கிப்சன்' என்ற கலை இயக்குநர். 

       1931ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான விருது வாலஸ் பெர்ரி மற்றும் பிரட்ரிக் மார்க் ஆகிய இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறந்த நடிகர் விருது 'டாம் ஹேங்க்' என்ற நடிகர் பெற்றார். 1993ம் ஆண்டில் 'பிலடெல்பியா' என்ற படத்திற்கும், 1994ம் ஆண்டில் 'பாரஸ்ட் கேம்ப்' என்ற படத்திற்கும் அவர் விருதுபெற்றார். ஜாக்கஸ் ஒய்ஸ் கோல்டியூ என்ற நடிகர் 1956, 1959, 1964, ஆகிய ஆண்டுகளில் 3 முறை விருதுகளை பெற்றுள்ளார். 
Sunday, 26 February 2012

ஒரு காதல் கதை


            புதிதாக செய்த புத்தக அலமாரியில், என்னிடமிருந்த புத்தகக் கட்டுக்களை பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, என் நண்பன் கொடுத்த கவிதை நோட்டு கையில் சிக்கியது. கிப்ட் பேக் செய்யும் காகிததத்தால், அட்டைப் போடப்பட்டுள்ள அந்த நோட்டு முழுவதும் அவனே எழுதிய காதல் கவிதைகள். சந்தோஷம், துக்கம், விரக்தி, கோபம், வெறுப்பு என பல்வேறு உணர்வுகளை கொண்டவை. அனுபவித்து எழுதப்பட்டவை. நாங்கள் இருவரும் பள்ளிக்கூட காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள். அவன் பெங்களூருவாசியாகிவிட்ட பின்னர், சில ஆண்டுகளுக்கு முன் நேரில் பார்த்த அவன் காதல் கதையை இரவு முழுவதும் தூங்காமல் சொல்லிக்கொண்டிருந்தான். நானும் கொட்டாவி விட்டபடியே கேட்டுக்கொண்டேன். இரவு முழுவதும் அவன் சொன்னதன் சாராம்சம், அவனை காதலிப்பதாக உசுப்பேற்றிய பெண், பின்னர் ஏனோ அவனை விட்டு விலகிப்போகத் தொடங்கிவிட்டாள் என்பதே. 
அவனுக்கு என்னால் முடிந்த அல்லது தெரிந்த  அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் சொல்லி அனுப்பி வைத்தேன். 

      அவனது அம்மா சிறுவயதிலேயே தவறிவிட்டார். ஒரு தங்கை உண்டு. வழக்கம்போல, குழந்தைகளை கவனிப்பதற்காக என்று இரண்டாம் திருமணம் செய்துக்கொண்ட அவனது தந்தை, அவர்களை கவனிக்காமலேயே தனிக்குடித்தனம் போய்விட்டார். பாட்டி வீட்டில் வளர்ந்த அவன், சிறுக சிறுக சேமித்து, ஒரே தங்கைக்கு திருமணம் செய்து வைத்தான். மகளின் திருமணத்திற்கே, அந்த தந்தை வரவில்லை என்பது தனிக்கதை. வாழ்நாள் முழுவதும் அன்புக்காக ஏங்கியவன் அவன். அவன் பேச்சில் இந்த ஏக்கம் எப்போதும் தொனித்துக்கொண்டே இருக்கும். 

      அடுத்த முறை நேரில் சந்தித்தபோது, அவனது காதலில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஆனால், அந்த பெண்ணை நினைத்து உருகி, உருகி எழுதிய கவிதைகள் அடங்கிய கவிதை நோட்டை என்னிடம் கொடுத்து, 'இதை படிச்சாதான் என்னோட வலி உனக்கு புரியும்டா' என்றான். அந்த நோட்டை பத்திரமாக வைத்திருந்து கேட்கும் போது கொடுக்கச் சொல்லியும் உத்தரவிட்டான். அந்த சந்திப்பின்போது, வேறு முகவரிக்கு மாறப்போவதாகவும், மாறிய பின்னர், புதிய விலாசமும், போன் நம்பரும் தெரிவிப்பதாக கூறிச்சென்றான். ஆனால், அதன்பிறகு அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. அதன்பிறகு, சில ஆண்டுகளாக அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை. இப்போது உள்ளது போல செல்போன்கள் அப்போது புழக்கத்தில் இல்லை. ஒரு இன்கமிங் காலுக்கு 3 ரூபாய் என்று ஞாபகம். எங்கள் தகவல் தொடர்பு எல்லாம் கடிதம் மூலம் மட்டுமே.  எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்வோம்.  

இந்த இடைவெளியில், அவனது கவிதைகள் சிலவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பி, அவை அவனது பெயரிலேயே பிரசுரமாகின. (அவ்வப்போது எனது கவிதைகளும் பத்திரிகைகளில் வரும். அதை படித்துவிட்டு பாராட்டும் ஒரே ஜீவன் அவன்தான்). அடுத்த முறை பார்க்கும் போது, பத்திரிகைகளில் பிரசுரமான அவனது கவிதைகளை பைண்ட் செய்து அவனுக்கு பரிசளித்து, இன்ப அதிர்ச்சி தர வேண்டும் என்பது எனது எண்ணம். 

       வேறு நண்பர்கள் மூலம் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவே இல்லை. நான் எழுதிய கடிதங்களுக்கும் பதில் இல்லை. சில ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு மதிய நேரத்தில், செல்போனில் அழைத்த வேறொரு நண்பன் ஒரு செய்தியைச் சொன்னான். 'நம்ம சூசை இறந்துட்டான்டா' சம்மட்டியால் நடுமண்டையில் அடித்ததுபோல இருந்தது அந்த செய்தி. சில நிமிடங்களுக்கு வார்த்தைகள் வரவில்லை. என்னால், நம்பவும் முடியவில்லை.  பின்னர், நிதானித்துக்கொண்டு, விசாரித்தபோது, காதல் விவகாரத்தில் உயிரை இழந்தது தெரியவந்தது. கடைசிவரை அன்புக்காக ஏங்கியே உயிரைவிட்ட ஜீவன். 

        காதல் அடங்கிய நோட்டு இன்னும் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. அதை ஒப்படைப்பதற்குத்தான் அவன் இல்லை. 

Monday, 20 February 2012

கொஞ்சமா சிரிக்கலாம்
பெண்:  (செல்போனில்) ஹலோ.. இது கஸ்டமர் கேர் தானே ?
குரல் :   ஆமாம். சொல்லுங்க மேடம் என்ன பிராப்ளம் ?
பெண்:   என் 5 வயது பையன் சிம்கார்டை முழுங்கிட்டான்.
குரல் :   சரி ?
பெண்:  அவன் பேசும்போது, காசு போகுமா?


====================================================================


ஒருவன்:  ஏன் ரொம்ப நேரமாக ஏன் ஐஸ்கட்டியையே பார்த்துக்கிட்டே இருக்கே ? 
சர்தார்ஜி:  இந்த ஐஸ் கட்டியில எங்கயே தண்ணி லீக் ஆகுது. எங்கேன்னுதான் தெரியலை 


====================================================================


செந்தில்: அண்ணே சாஃப்ட் வேருக்கும், ஹார்டு வேருக்கும் என்ன
வித்தியாசம் ?
கவுண்டமணி: அடேய் புளூ டூத் தலையா.. செடியை புடுங்குனா வரும். அது சாஃப் வேரு..மரத்தை புடுங்குனா வராது அது ஹார்டு வேரு..


====================================================================


மந்திரி:  மன்னா..நீங்க ஏன் போருக்கு போகும்போது 'கவசம்' போடறீங்க ?
மன்னர்:  நான் கவசம் போடலைன்னா, எனக்கு 'தெவசம்' செஞ்சிடுவாங்க 


======================================================================


கல்யாணம் பண்றதும், செல்போன் வாங்குறதும் ஒண்ணு
ரெண்டுமே கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தா நல்ல மாடல் கிடைச்சிருக்குமேன்னு பீல் பண்ண வைக்கும். 


======================================================================
சொந்த சரக்கு இல்லீங்.. எஸ்.எம்.எஸ்ல வந்தது.

Sunday, 19 February 2012

லூயிஸ் ஜாராவின் 10 குறிப்புகள்


        முன், பின் நவீனத்துவம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. அதற்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமும் இல்லை.  பொழுது போகாமல் மளிகை கடை அண்ணாச்சி கட்டிக்கொடுத்த பொட்டல காகிதத்தை திருப்பி பார்த்தபோது கண்ணில் பட்டது இது. உங்கள் பார்வைக்கு வைத்திருக்கிறேன். 

எழுத்தாளர்களுக்கு லூயிஸ் ஜாரா என்ற எழுத்தாளர் சொன்ன 10 குறிப்புகள்

1.   பணப்பெட்டியில் ஒரு காதை வைத்துக்கொண்டு எழுதாதீர்கள். காசு குலுங்கும் சப்தம் உங்கள் உரைநடையின் சந்தத்தை மறைத்துவிடும்.

2.    உங்கள் வாசகனை வெறுக்காதீர்கள். சில சமயம் அவன் உங்களுக்கு வழிகாட்டலாம். 

3.  வாசகனை உங்களுக்கே புரியாத பெரிய வார்த்தைகளால் குழப்பாதீர்கள். 

4. மற்றவர்களின் வெற்றிக்கு ஆசைப்படாதீர்கள். அவன் நடையையோ, கருத்துக்களையோ, பாத்திரப்படைப்பையோ, ராயல்டியையோ எதையும் விரும்பாதீர்கள். 

5.  உங்கள் மொழிக்கு மரியாதை கொடுத்து உண்மையாக எழுதுங்கள். உங்கள் வார்த்தைகளை தேர்ந்த தச்சன் போல இழைக்கப் பழகுங்கள். 

6.   புகழைத் துரத்தாதீர்கள். புகழ் உங்களைத் தேடி வரவேண்டும். பேராசை இல்லாதவர்களை புகழ் மெல்லத்தான் தேடி வரும். ஆனால், நீண்டநாள் உங்களுடன் வசிக்கும். 

7.     உங்களுக்கு முன் எழுதிய பெரிய எழுத்தாளர்களை வெறுக்காதீர்கள். அவர்களை கண்மூடித்தனமாக உபாசிக்கவும் வேண்டாம். 

8.    இலக்கியத்தை காப்பாற்ற வந்த அவதார புருஷராக நடிக்காதீர்கள். திறமையின் விதைகள் கடல் மணல் போல பல்லாயிரம் வகையில் மலர்ந்து காளான்களைக் காட்டிக்கொடுத்துவிடும். 

9. உங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையைப் புறக்கணிக்காதீர்கள். அதில்தான் உங்கள் எழுத்தின் ஊற்று இருக்கிறது.

10.   ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழுதுங்கள். அதன் தரத்திலிருந்து மக்கள் உங்களை அறிந்துகொள்வார்கள். 
  
-------------------------------------------------------------------------------------------------------------------------

நன்றாக எழுதுவதற்கு அறிஞர்களைப் போல சிந்தித்து, சாதாரண மக்களைப்போல வெளிப்படுத்து - அரிஸ்டாட்டில் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நான் பார்ப்பதை, உணர்வதை என்னால் முடிந்தவரை மிகச்சிறந்த, மிக எளிய முறையில் எழுதுவதே எனது குறிக்கோள் - எர்னஸ்ட் ஹமிங்வே 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு கதை மாந்தனுடன் எழுத ஆரம்பிக்கிறேன். அவன் உருப்பெற்று, நின்று, நடக்கத் தொடங்கியதும் நான் செய்வதெல்லாம் பேப்பர் பென்சிலுடன் அவன் கூடவே ஓடி, அவன் செய்வதையும் சொல்வதையும் படி எடுக்கிறேன். அவ்வளவுதான் - வில்லியம் பாக்னர். 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, 17 February 2012

காதலர் தினம்

            புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நிகராக இந்த ஆண்டும் 'காதலர் தினம்' உற்சாகமாக கொண்டாடப்பட்டுவிட்டது. பத்திரிகைகள் காதல் சிறப்பிதழ்களை வெளியிட்டும், தொலைக்காட்சிகள் சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பியும் தங்கள் பங்குக்கு காதலர்களை உற்சாகப்படுத்தினர். 

         கடற்கரை, பூங்கா போன்ற காதல்தேசங்களில் வழக்கத்தைவிட பல மடங்கு கூட்டம் அதிகரித்ததாக கேள்வி. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்பாடு செய்யப்படும் கொண்டாட்டங்கள் போன்று கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அன்றைய தினம் இரவு, காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டதாக தொலைக்காட்சி செய்திகளில் சொன்னார்கள். 

            காதல் தோல்வியால், சிலர் தற்கொலை செய்துகொண்டதாக அடுத்த நாள் செய்தித்தாள்களில் பார்க்க முடிந்தது. 

          காதலர் தின வேடிக்கையாக, வழக்கம் போல ஒரு கோஷ்டி கிளம்பி, நாய்களுக்கு திருமணம், நாய்க்கும், கழுதைக்கும் திருமணம், சமயத்தில் காதலர்களுக்கே கூட கட்டாய திருமணம் என்று காமெடி கலாட்டாக்கள் நடத்தியதையும் பார்க்க முடிந்தது. நியாயமாக, இவர்கள், காதலை வைத்து வியாபாரம் செய்யும் ஊடகங்கள் மற்றும் சினிமாக்காரர்களுக்கு எதிராகத்தான் போராட்டம் நடத்த வேண்டும். காதலர்களுக்கு எதிராகவோ, காதலுக்கு எதிராகவோ அல்ல. ( இவர்கள் அடிக்கும் கூத்தில், நாயும், கழுதையும் சிக்கி அவஸ்தை படுவது பரிதாபம்) 
    
            பால் குடிக்கும் குழந்தை தொடங்கி, பல்போன கிழடுகளின் காதல்வரை சினிமாக்காரர்கள் காதல் சினிமாக்களை சகட்டுமேனிக்கு எடுத்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் கருவில் இருக்கும் குழந்தைகள் காதலிப்பது போலத்தான் படம் வரவில்லை. (ஒருவேளை அப்படியும் படம் வந்து, நான் பார்க்காமல் இருக்கலாம்). காதல் என்பது, தமிழ் சினிமாவின் சுவாசம் மாதிரி. இந்த அக்கப்போரில், சிக்கி சின்னாபின்னப்படுவது என்னவோ, அந்த கண்றாவி சினிமாக்களைப் பார்க்கும் ரெண்டுங்கெட்டான் வயது பிள்ளைகள். காந்திமண்டபத்திற்கு ஒரு நடை போனால், அங்குள்ள புதர்களில், பள்ளி யூனிபார்ம் போட்ட காதலர்களை சர்வ சாதாரணமாக பார்த்து தலையிலடித்துக் கொண்டு வரலாம் (நம்முடைய தலையிலதாங்க). 


Saturday, 11 February 2012

ஆகவே..


   சிரியை படுகொலை சம்பவத்திற்கு அடுத்தபடியாக மனதை பதற வைத்த செய்தி, தோழியை நான்கு நண்பர்கள் குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து கொடூரமாக கற்பழித்த சம்பவம். இப்போது, நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு முக்கால்வாசி காரணம் குடிபோதை.  

                 கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லா எழவுக்கும் இப்போது குடித்து கொண்டாடுவது நாகரீகமாகிவிட்டது. மாணவர்கள் மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வருவதாக எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் வருத்தப்பட்டார். கடந்த மாதம், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மீசை கூட அரும்பாத இளவட்டங்கள், கையில் மது பாட்டிலோடு நடுராத்திரியில் திரிந்துகொண்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஒரு நாளைக்கு இரண்டு தடவை மட்டுமே, அதுவும் கூட்டம் சேர்ந்தால் மட்டுமே பேருந்து வந்து போகிற எங்கள் கிராமத்திற்குள்ளும் மதுக்கடை முளைத்துவிட்டது. அரசாங்கம், தெருவுக்கு தெரு மதுக்கடைகளை திறந்து வைத்து, குடிகாரர்களை ஊக்கப்படுத்துகிறது. மதுக்கடை வாசலில் நின்று முட்ட குடித்துவிட்டு, வருவோர் போவோரை வம்பிழுப்பதில் தொடங்கி, மேற்படி செய்திவரை உருவாகும் பிரச்னைகள் ஏராளம். பல பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கம் தருவது அரசின் கடமையாகிவிட்டது. 

                கொண்டாட்டங்கள் தவிர, குடிப்பதற்கு நம்மவர்கள் சில விநோதமான காரணங்களைச் சொல்கின்றனர். கவலைகளை மறக்க, மனத்தெம்புக்காக, கலவி இன்பத்தை அதிகரிப்பதற்காக, ஏன் மது ஒரு சத்தான உணவுப் பொருள் என்று வாதிடும் அறிவாளிகளும் உண்டு. ஆனால், மது மனித உடலுக்கு எவ்வித நன்மைகளையும் செய்வதில்லை. 

         இது ஒருபக்கம் இருக்க, கடந்த வாரம் ஒடிசா மாநிலத்தில் கள்ளச் சாராயத்திற்கு 30 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 'டாஸ்மாக்' சரக்கு விலையெல்லாம் கட்டுப்படியாகாத கிராம மக்களின் தேர்வு, கள்ளத்தனமாய் காய்ச்சி விற்கப்படும் கள்ளச்சாராயம். இது ஒருவகையில் விஷம். 

             பொதுவாக, எல்லா மதுவகைகளிலும் 'ஆல்கஹால்' கலந்திருக்கும். இது. 'ஈதைல் ஆல்கஹால்' என்று அழைக்கப்படும். 'எத்னால்' என்ற பெயரும் உண்டு. இது, நிறமற்ற, கடுமையான எரிச்சல் சுவையுடைய, விரைவில் ஆவியாகக் கூடிய திரவம். 'புளிக்க வைத்தல்' மூலம் இது பெறப்படுகிறது. 
கரும்பு, தேன், பழவகைகள், தானியங்கள் ஆகியவை ஈஸ்ட்டுடன் கலக்கும் போது, ஒரு என்சைம் உண்டாகிறது. இந்த என்சைம் மேற்கண்ட பொருட்களில் உள்ள சர்க்கரையை கரியமில வாயுவாகவும், ஆல்கஹாலாகவும் மாற்றுகிறது. 

       நாம் சாப்பிடும் உணவுப்பொருட்கள் ஜீரணமாகி, சத்துப்பொருட்கள் ரத்தத்தில் கலக்கின்றன. ஆனால், ஆல்கஹால் ஜீரணிப்பதில்லை. மெலிதான இரப்பை மற்றும் குடல் சுவர்கள் வழியாக ஆல்கஹால் மிக எளிதாக ஊடுருவி நேரடியாக ரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு கலந்த ஆல்கஹால் உடல் முழுவதும் சுற்றி, மூளை, இதயம், கல்லீரல் ஆகியவற்றை அடைந்து கல்லீரலில் எரிமாற்றம் அடைகிறது. 

      இந்த வகையான சாராயம் அருந்தும்போது, ஈதைல் ஆல்கஹால் மூளையின் ஒரு பகுதியான 'பெரிபெல்லத்தை' பாதிக்கிறது. இதன் காரணமாக மூளை குழப்பம் அடைகிறது. மேலும், மனிதனை நிலைநிறுத்தக் கூடிய, காதில் அமைந்துள்ள 'பாலன்சிங்' உறுப்பை நிலைகுலைய வைக்கிறது. இதனால்தான் சாராயம் குடித்தவர் நிலைதடுமாறுகிறார். இந்த தடுமாற்றத்தையே அவர், போதையாக உணருகிறார். 

            சாரயத்தில் போதையை அதிகரிப்பதற்காக ஈதைல் ஆல்கஹாலுக்கு பதிலாக மெத்னால் எனப்படும் மீதேல் ஆல்கஹாலை சாராயத்தோடு கலக்கிறார்கள். இந்த மெத்னால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனப்பொருளாகும். இந்த பொருள் ரத்தத்தில் கலந்ததும், மனித ரத்தத்தின் மிக முக்கியப் பொருளான 'ஹீமோகுளோபின்' எனப்படும் உயிர்ச் சத்தை அழிக்கிறது. (உடலுக்குத் தேவையான பிராணவாயு மற்றும் சத்துப் பொருட்களை செல்லுக்கு வழங்குவது ஹீமோகுளோபினின் முக்கியப் பணி.)  ஹீமோகுளோபின் அழிக்கப்படுவதால்,  செல்கள் பிராண வாயுவும், சத்துப்பொருட்களும் கிடைக்காமல் மெல்ல செயல் இழக்கின்றன. இதனால், மூளைக்குப் போகவேண்டிய பிராணவாயு தடைபட்டு மூளைச் சாவு ஏற்பட்டு, பின்னர் மரணம் நேரிடுகிறது. 

        அதைத் தவிரவும், மெத்னால், கண்களின் நரம்பு மண்டலங்களையும்  செயல் இழக்கச் செய்கின்றன. இதனால், விஷச் சாராயம் குடித்தவர்கள், தெய்வாதீனமாக பிழைத்துக்கொண்டாலும், பார்வை இழப்பை தடுக்க முடியாது. 

                         ஆகவே... நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ? 

Sunday, 5 February 2012

யாசகன்


எல்லா நாளையும் என்ஜாய் பண்ணுங்க


எந்த ஒரு நாளையும் குற்றம் சொல்லாதீங்க.
வெறுக்காதீங்க.


நல்லநாள் மகிழ்ச்சியை தந்திருக்கும்.


சுமாரான நாள் ஒரு அனுபவத்தை தந்திருக்கும்.


மோசமான நாள் ஒரு நல்ல ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கும். 


மகிழ்ச்சி மட்டுமின்றி,
அனுபவமும், பாடமும் வாழ்க்கைக்குத் தேவையானதான்.


அதனால.. ஒவ்வொரு நாளையும்
என்ஜாய் பண்ணுங்க.

Thursday, 2 February 2012

பகை வளர்ப்போம்.


  கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில், நம்மூர் இளம் பெண்கள் இரண்டு பேர் சிகரெட்டை வாங்கி, சிம்னி விளக்கில் பற்ற வைத்து ஊதிக் கொண்டே சென்றதைப் பார்க்க நேர்ந்தது. திரைப்படங்களில் மட்டுமே அதுவும் வெள்ளைக்கார பெண்கள் சிகரெட் பிடித்துப் பார்த்திருக்கிறேன். (இன்றைய தேதி வரை ஒரு சிகரெட்டின் விலை என்னவென்று கூட எனக்கு தெரியாதாக்கும்) ஆண்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கையில் ஆறாவது விரலைப் போல எந்நேரமும் சிகரெட் புகைந்துக்கொண்டே இருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை இருந்தும், அடுத்தவரைப் பற்றி கவலைப்படாமல் பழைய ரயில் இஞ்ஜின்கள் போல புகை விடுபவர்களை என்னவென்று சொல்ல? 

  புகைப்பதற்கென்று விதவிதமான காரணங்கள் உலா வருகின்றன. பெண்களை கவர்வதற்காக, (சிகரெட் பிடிப்பவன் தான் உண்மையான ஆண்மகன் என்று பெண்கள் நம்புவதாக கேள்வி), மனக் கவலைகளைப் போக்க, டென்ஷனை குறைக்க, சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக, காலைக் கடன்களை எளிதாக முடிக்க என்று பலவிதமான விநோதமான காரணங்கள். (எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க..) ஆனால், இவை எல்லாமே ஜமுக்காளத்தில் வடி கட்டின மூட நம்பிக்கைகள். 

       மாறாக புகைப்பவர்களின் ஆயுள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை குறைவதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு சிகரெட்டை முழுமையாக புகைப்பவர்களது ஆயுள் 14 நாட்கள் குறைகிறதாம். இதைவிட முக்கியமாக, புகைப்பிடிப்பவர்களில் 60 சதவீதம் பேர் புற்று நோய்க்கு ஆளாகின்றராம். 

   புற்றுநோயை உற்பத்தி செய்வதில் புகையிலைப் பொருட்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மெல்லும் வகை புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்.  இதேபோன்று, புகைக்கும் வகை புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளதாம். இதைத் தவிர, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்றவையும் ஏற்படுமாம். 

   ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 70 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் ஏற்படுவதற்கு 60 சதவீத காரணம் புகைப்பது. 

     உலகிலேயே புகையிலையை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  சிகரெட், பீடி, சுருட்டு எல்லாமே புகையிலையிலிருந்து தயாரிக்கப்படுபவை. புகையிலையில் 'நிக்கோடின்' என்ற மிகக் கொடிய விஷம் அடங்கியுள்ளது. ஒரு சிகரெட்டில் 8 முதல் 20 மி.கி. வரை நிக்கோடின் அடங்கியுள்ளது. இரண்டு சிகரெட்டுகளில் அடங்கியுள்ள நிக்கோடினை நேரடியாக ரத்தத்தில் செலுத்தினால், உடனடியாக மரணம் நேரிடும். ஆனால், சிகரெட் புகைக்கும் போது, பெரும்பான்மையான நிக்கோடின் காற்றில் கரைந்துவிடுகிறது. நான்கில் ஒரு பங்குதான் உடலுக்குள் செல்கிறது. இப்படித்தான், மனித உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு உள்ளே செல்கிறது. 

          நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பகுதி மூளை. இந்த மூளையானது உட்புறமும், வெளிப்புறமும் மிக நுட்பமான சுவர்களால் பாதுகாக்கப்படுகிறது. இந்த நுண்சுவர்களைக் கடந்து உள்ளே நுழைய மூன்று நுண் துளைகள் உண்டு. வேறு எந்த பொருளும் இதன் வழியே உள்ளே நுழைய முடியாது. ஆனால், 'நிக்கோடின்' மிக எளிதாக நுழைந்து மூளையைத் தாக்குகிறது. 
புகைபிடிப்பதால் ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது. பசி உணர்வு குறைந்து போய்விடுகிறது. புகைப்பிடிப்பவர்களை, மூச்சுக்குழல், நுரையீரல் புற்றுநோய் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். ஏனென்றால், ஒவ்வொருமுறை புகையை உள்ளிழுக்கும் போதும்,  'கார்பன் மோனாக்சைடு' என்ற விஷ வாயு உள்ளே செல்கிறது. 

    புகை, மது போன்ற போதை வஸ்துகளுக்கு மிக எளிதாக இலக்காவது இளைய தலைமுறையினர். நண்பர்களுடன் இருக்கும்போது, ஜாலிக்காக ஆரம்பிக்கும் இந்த பழக்கங்களுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் அடிமையாகிப் போகின்றனர். இன்னும் சிலர், 'ரிலாக்ஸ்' செய்துகொள்ள என்று போதை வஸ்துகளை நாடுகின்றனர். ஆனால், இது மனித உடலுக்கும், மனதுக்கும் எந்தவிதமான நன்மையை தருவதில்லை. மாறாக நோய்களையே உண்டாக்குகிறது. எனவே, புகைக்கு எதிராக பகையை வளர்ப்போம். 

'கவலையை மறக்க மதுவை நாடாதீர்கள். கடினமான வேலையை நாடுங்கள். தொழிலில் வளர்வதைவிட போதையான விஷயம் வேறு இல்லை' - எமர்ஸன் 

    பிப்ரவரி - 4  சர்வதேச புற்றுநோய் எதிர்ப்பு தினம்