Saturday, 28 February 2015

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடக்கம்


கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ராமேசுவரம் தீவில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் பாக்ஜலசந்தி நீர்பரப்பில் கச்சத்தீவு அமைந்துள்ளது.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சேர்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோரால் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயம் 1913-ம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோணியார் ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.

இலங்கையில் 1983-ம் ஏற்பட்ட உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக கச்சத்தீவு திருவிழா நிறுத்தப் பட்டது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல 112 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப் படகுகளில் 3,278 ஆண்கள், 832 பெண்கள், 222 குழந்தைகள் என மொத்தம் 4,336 பேர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள் ளனர். இதில் 250 பேர் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

முதல் நாளான பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5 மணியளவில் அந்தோணியார் ஆலயம் முன்பாக உள்ள கொடி மரத்தில் கொடி யேற்றப்பட்டு திருவிழா தொடங்கு கிறது. தொடர்ந்து சிலுவைப்பாதை திருப்பலி பூசையும், சிறப்புத் திருப்பலி பூசையும் நடைபெறும். இரவு அந்தோணியாரின் தேர் பவனி நடைபெறும்.

விழாவின் 2-வது நாளான மார்ச் 1 ம் தேதி காலை 6 மணியளவில் சிறப்பு திருப்பலி பூசைகள் நடத்தப்படும். பின்னர் தேர் பவனியும், அதைத் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெற்று விழா நிறைவடைகிறது. 

Thursday, 26 February 2015

பன்றிக்காய்ச்சல் - தடுப்பு முறைகள்

உலகை அச்சுறுத்தி வரும் பன்றிக்காய்ச்சல் 1920 - 1930 - ம் ஆண்டுகளில் பன்றிகளிடம் கண்டுபிடிக்கப்பட்டது.. ஆரம்பத்தில் பன்றிகளிடம் இருந்து பன்றிகளுக்கு காய்ச்சல் பரவி வந்தது. பின்னர் பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. பன்றிகளிடமிருந்து இந்த காய்ச்சல் பரவியதால் இது, பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது.
தற்போது பன்றிகள் மூலமாக மனிதர்களுக்கு இந்த காய்ச்சல் பரவுவதில்லை. 'எச்1என்1 - இன்ஃப்ளுயன்சா வைரஸ்' கிருமிகளால் பன்றிக்காய்ச்சல் பரவுகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு டாமி புளூ மாத்திரையை உட்கொண்டால் 5 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடும்.
பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சைப் பெற வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவத்தை அறவே தவிர்க்க வேண்டும்..
பன்றிக்காய்ச்சல் வீரியம் குறைந்து சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என்ற நிலையில் இருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு பன்றிக்காய்ச்சலை கொடிய நோய் என்று அறிவித்த உலக சுகாதார நிறுவனம், பருவ காலங்களில் காணப்படும் சாதாரண ஃப்ளூ காய்ச்சல் என அறிவித்துவிட்டது.
அறிகுறிகள்:
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, மயக்கம், சளியில் ரத்தம், சர்க்கரை நோய் அதிகமாகுதல், விரல்கள் நீல நிறமாக மாறுதல் போன்றவைகள் பன்றிக்காய்ச்சலின் அறிகுறிகள்.
எப்படி பரவுகிறது?
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும் போதும் வெளியே வரும் எச்சில் மற்றும் சளி துளிகள் மூலம் வைரஸ் கிருமிகள் காற்றில் பரவுகிறது. இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை, குளிர்சாதன பெட்டி போன்ற பல்வேறு பொருட்களை மற்றவர்கள் தொடும்போது, அவர்களின் கைகளில் கிருமி ஒட்டிக் கொள்கிறது. அதன்பின் அவர்கள்  கைகளை கழுவாமல் கண்கள், மூக்கு மற்றும் வாயை தொடும்போது  கிருமி தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் கிருமிகள் குளிர்ந்த இடங்களில் இரண்டு நாட்கள் வரை உயிருடன் இருக்கும். மற்ற இடங்களில் பல மணி நேரத்திற்கு வைரஸ் கிருமிகள் உயிருடன் காணப்படும்.
தடுக்கும் முறைகள்:
வீட்டில் இருந்து பள்ளி, அலுவலகம் சென்றவுடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை நன்றாக கழுவ வேண்டும். அதே போல வீடு திரும்பிய உடன் சோப்பு போட்டு கைகள் மற்றும் கால்களை கழுவ வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கைகளை சுத்தமாக கழுவினால் மிகவும் நல்லது. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மற்றும் இருமல், தும்மல் இருப்பவர்களிடம் விலகி  இருப்பது நல்லது.
பன்றிக்காய்ச்சல் 80 சதவீதம் கைகளை சுத்தமாக கழுவதாததால் தான் பரவுகிறது. கைகளை சுத்தமாக வைத்திருநத்தலே சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
பேருந்து, ரயில்களில் பயணிப்பவர்கள் மற்றும் திரையரங்கம், வணிக வளாகங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசங்கங்களை (மாஸ்க்) அணிந்து செல்ல வேண்டும்.
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இந்த கைக்குட்டை மற்றும் துணிகளை நன்றாக துவைத்து வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும். முடிந்தவரை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.


Monday, 23 February 2015

சென்னை புனித அந்தோணியார்


பதுவை அந்தோணியார் 
சென்னை பாரிமுனையில் உள்ள அரண்மனைக்காரன்  தெருவில் செவ்வாய்க் கிழமைகளில் கூட்டம் அலைமோதுவதைப் பார்க்கலாம். காரணம், அங்குள்ள தூய மரியன்னை தேவாலயத்தில் உள்ள பதுவை அந்தோணியாரின் சுரூபத்தை தரிசித்து, அவரிடம் அருள் வரங்களைப் பெற்றுச் செல்வதற்காகத்தான் இந்தக் கூட்டம். 

பாரிமுனையில் அர்மேனியர்கள் வாழ்ந்த பகுதி  அர்மேனியன் தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் காலப்போக்கில் மருவி அரண்மனைக்காரத் தெருவாக மாறிவிட்டது. 1660-ம் ஆண்டில் சென்னை வந்த அர்மேனியர்கள், பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியாளர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்தனர். 

கோ ஜா பெட்ரஸ் அஸ்கன் என்பவர்தான் அர்மேனியர்களுக்கும் தலைவராக இருந்தார். ஆலயம் எழுப்புவதிலும், ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும் தனது செல்வத்தை வாரி இறைத்தவர் அவர். சைதாப்பேட்டையையும், சின்னமலையையும் இணைக்கும் மர்மலாங் பாலத்தைக் கட்டியவர் இவரே. பக்தர்களின் வசதிக்காக தோமையார் மலையில் படிக்கட்டுகளையும் அவர் கட்டினார். 

தொடக்கத்தில் அர்மேனியர்களுக்கென தனியாக தேவாலயங்கள் ஏதும் அப்பகுதியில் இல்லை. கத்தோலிக்க கப்பூச்சியன் சபையினரின் தேவாலயங்களில் அவர்கள் வழிபட்டார்கள். பின்னர், தங்களுக்கென ஆலயம் அமைக்க ஆங்கிலக் கம்பெனியாரிடமிருந்து அர்மேனியன் தெரு முனையில் இடத்தை வாங்கி, 1712-ம் ஆண்டு 'அர்மேனியன் மாதா' என்ற ஆலயத்தை கட்டினர். (வாரிசு இல்லாத கோ ஜா பெட்ரஸ் அஸ்கன் தனது சொத்துக்களை தர்மத்திற்கு எழுதி வைத்தார். அவர் இறந்ததும், அவரது உடல் அர்மேனியன் மாதா தேவாலயம் முன்பு அடக்கம் செய்யப்பட்டது) 

அர்மேனியன் மாதா தேவாலயத்திற்கு அருகில் கத்தோலிக்க ஸ்பானிஷ் சபையினர் 1726-ம் ஆண்டு 'வானத்தூதரின் மாதா' ஆலயத்தைக் கட்டினார்கள். 1772-ம் ஆண்டு வரையப்பட்ட பிரம்மாண்டமான இயேசு மாதா ஓவியம் அந்த ஆலயத்தில் வைக்கப்பட்டது. 1928-ம் ஆண்டில் இந்த ஆலய நிர்வாகத்தை சலேசிய சபையினர் ஏற்றனர். முதல் பேராயராக மெதர்லேட் பதவி ஏற்றார். 1935-ம் ஆண்டு பேராயர் லூயிஸ் மத்தியாஸ் பொறுப்பேற்றார். 

இந்த பேராலயத்தின் இடதுபுறத்தில் உள்ள சிறு பீடத்தில், அற்புதங்கள் புரியும்
தூய மரியன்னை இணைப் பேராலயம் - பாரிமுனை 
புனித அந்தோணியாரின் சுரூபம் அமைந்துள்ளது. அவரது சுரூபம், பதுவை அந்தோணியாரின் தோற்றமல்லாத வித்தியாசமான தோற்றமாக இருந்தாலும், மக்கள் பதுவை அந்தோணியாராகவே அதைப் பாவித்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

இந்த சுரூபம் இந்த பேராலயத்திற்கு வந்த பின்னணி, சுவாரசியமான வரலாறைக் கொண்டது. சென்னை மெரினா கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட ராணுவ வீரர் ஒருவர், அலைகளால் இந்த சுரூபம் கரைக்கு அடித்து வரப்பட்டதைக் கண்டார். 

அது எப்படி, எங்கிருந்து வந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. அந்தோணியார் பக்தரான அந்த வீரர், தீவுத் திடலுக்கு அடுத்துள்ள புனித பாட்ரிக் கல்லறை ஜெப மண்டபத்தில் வைத்து, பூபோட்டி, மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு போய்விட்டார். அது அர்மேனியன் தெருவில் உள்ள பேராலயத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லறையாகும். 

அந்த பகுதி சேரிவாசிகள், அது அந்தோணியாரின் சுரூபம் என்று நம்பி அதை வழிபடத்தொடங்கினர். வேண்டும் வரங்கள் கிட்டியதால், புனித அந்தோணியாரின் புகழ் அப்பகுதியில் பரவி, மக்கள் அதிகம் அந்த ஜெப மண்டபத்திற்கு வரத்தொடங்கினார்கள். 1936-ம் ஆண்டு பேராலய பங்குத் தந்தை சுலூஸ் அடிகள், அந்த சுரூபத்தை எடுத்து வந்து, வானத்தூதரின் மாதா பேராலயத்தின் இடதுபுறத்தில் சிறு பீடம் அமைத்து, அங்கு வைத்தார். அற்புத அந்தோணியாரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. 

இயேசுவையும், அந்தோணியாரையும் மறந்து அந்தோணியாரிடம் மக்கள் செல்கிறார்களே என்று வெறுப்படைந்த சுலூஸ் அடிகள், அந்த சுரூபத்தை மீண்டும் கல்லறையிலேயே கொண்டுபோய் வைத்துவிட்டார். அங்கு மக்கள் கூட்டம் பெருக, வெறுப்படைந்த அவர், அந்தோணியாரின் சுரூபத்தை கொண்டுவந்து, பேராலய கிடங்கில் வைத்துவிட்டார். 

ஆத்திரமடைந்த மக்கள், பேராயர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மக்களின் கோபத்திற்கு மதிப்பளித்த பேராயர் லூயிஸ் மத்தியாஸ் ஆண்டகை, அந்த சுரூபத்தை ஆலயத்திலேயே வைக்க உத்தரவிட்டார். பின்னர் மீண்டும் அந்த இடத்திலேயே அற்புத அந்தோணியாரின் சுரூபம் நிறுவப்பட்டது. 

அன்று முதல், நாடி வரும் பக்தர்களுக்கு ஏராளமான அற்புதங்களை புனித அந்தோணியார் நிகழ்த்தி வருகிறார். அவரது மகிமை சென்னைவாசிகளிடம் மட்டுமல்லாமல், தமிழகம், இந்தியா என கடந்து வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. சென்னை வரும் பக்தர்கள், அற்புத அந்தோணியாரை தரிசிக்காமல் செல்வதில்லை. 

தெரியுமா இவரை 2 - ஹென்றி ஃபோர்டு

நல்ல வேலை, சொந்த வீடு பின்னர் ஒரு கார் இது சராசரி மக்களின் அதிகபட்ச கனவு. கார் என்ற சொன்னதும் நினைவுக்கு வருபவர் ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவில் கார் உற்பத்தியில் மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி, தன்னுடைய பெயரிலேயே கார்களை உலகுக்குத் தந்தவர். போக்குவரத்து துறையில் பெரும் புரட்சியை உருவாக்கி, பெரும் தொழிலதிபராக வளர்ந்தவர் ஹென்றி ஃபோர்டு. 

அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் வசதியான குடும்பத்தில் ஹென்றி ஃபோர்ட் 1863 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தார். ஆறு பிள்ளைகளில் இவர் மூத்தவர். சிறுவனாக இருந்தப்போது, தங்களது சொந்த  பண்ணையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். ஆனால், அந்த வேலை அவருக்கு சலிப்பைத் தர, தனது 16 வது வயதில் ஃபோர்ட் குடும்பத்தை பிரிந்து, டெட்ராய்ட் நகரத்தில் ஒரு கனரக தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். 

மூன்றாண்டுகளுக்குப் பின்னர், அவர் மீண்டும் மெக்சிகனுக்கு திரும்பினார்.  அந்த காலக்கட்டத்தில், புழக்கத்தில் இருந்த நீராவி இயந்திரங்களின் மேல் அவரது கவனம் திரும்பியது. அந்த இயந்திரங்களை இயக்குவதிலும், அதை கழற்றி ரிப்பேர் செய்வதிலும் ஆர்வமாக இருந்த போர்டு, பண்ணை வேலைகளுக்குப் பயன்படும் விதமாக, எரிவாயுவில் இயங்கும் சில இயந்திரங்களையும் உருவாக்கினார். 

தனது 30-வது வயத்தில், சிக்காக்கோவில் நடைபெற்ற ஒரு இயந்திரக் கண்காட்சிக்குச் சென்ற போர்டு, அங்கே பெட்ரோலில் இயங்கும் தண்ணீர் பம்ப் ஒன்றைப் பார்த்தார். அதைப் பார்த்ததும், இதை ஏன் வாகனத்தில் பொருத்திப் பார்க்கக் கூடாது என்று அவருக்கு யோசனை தோன்றியது. அதை செயல்படுத்தியும் பார்த்தார். 

அடுத்த இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்த அவர், 1896-ம் ஆண்டு மே மாதம், பழைய உலோகங்களையும், உதிரி பாகங்களையும் கொண்டு தனது வாகனத்தை வடிவமைத்தார். சைக்கிள் மாதிரியான தோற்றத்தில், நான்கு சக்கரங்களும், ஒரு இருக்கையும் கொண்டதாக இந்த வாகனம் இருந்தது. பிரேக் இல்லாத அந்த வண்டிக்கு குவாட்ரி சைக்கிள் என்று பெயரிட்டார். 

பின்னர், ஃபோர்டு, 1903 ஆம் ஆண்டு மெச்சிகனில் ஃபோர்டு மோட்டார் கம்பெனியை தொடங்கி, மாடல் டி  என்ற  காரை உருவாக்கினார். செல்வந்தர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களும் கார்களை பயன்படுத்த வேண்டும் என குறைந்த செலவில் கார்களை உருவாக்கினார். அவர் உருவக்கிய மாடல் டி காரின் அப்போதைய விலை வெறும் 500 டாலர்கள் மட்டுமே. அவரது தயாரிப்புகளை மக்கள் போட்டி போட்டு வாங்க, பதினெட்டு ஆண்டுகளில் 15 மில்லியன் கார்களை விற்பனை செய்து ஃபோர்டு நிறுவனம் சாதனை படைத்தது.  

உலகத்தின் மிகப்பெரிய தொழிலதிபராக உயர,  அவரது தயாரிப்புகள் மட்டுமில்லாமல், தனது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களை நடத்தின விதமும் காரணமாக அமைந்தது. ஊதியத்தை உயர்த்தி வேலை நேரத்தை குறைத்தார். 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம் என்ற முறையை மாற்றினார். 

குறைந்தபட்ச ஊதியம் 5 டாலர்களாகவும், 8 மணி நேரம் வேலை நேரமாகவும் மாற்றினார் போர்டு. அதுமட்டுமில்லாமல்,'டிசன் இன்ஸ்டட்டியூட்' என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூக நல பணிகளுக்காக தன்னோட சொத்துக்களின் பெரும்பங்கை செலவழித்தார். 

1943 ஆம் ஆண்டு எதிர்பாரத விதமாக அவரோட மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்டு நிறுவனத்தோட தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஃபோர்டு தன்னோட 84 வயதில் காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்' எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுச் சென்றார். 

Sunday, 22 February 2015

தெரியுமா இவரை - 1 முசோலினி

உலகைப் உலுக்கிய சர்வாதிகாரிகளில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமாக இருந்தவர் முசோலினி. இவர் 1922-ம் ஆண்டு முதல் 21 ஆண்டுகாலம் சர்வாதிகாரியாக இத்தாலியை ஆட்டிப்படைத்தார். இவரின் நெருங்கிய நண்பர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். சிறுவயதில் ஓவியனாக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஹிட்லர். ஆனால், விதி வேறு மாதிரியாக விளையாடி, உலக வரலாற்றையே மாற்றி எழுதிவிட்டது. இதேபோன்று, பள்ளிக்கூட ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய முசோலினி, சர்வாதிகாரியாக மாறினதும் விதியின் விளையாட்டுக்களின் ஒன்று. 

இத்தாலியில் 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி முசோலினி பிறந்தார். இவரின் தந்தை ஒரு கொல்லர். சொந்தமாக இரும்புப் பட்டறை ஒன்று நடத்திக்கொண்டிருந்தார். தாயார் பள்ளிக்கூட ஆசிரியை.
இத்தாலில் மன்னர் ஆட்சி ஒழிந்து, மக்கள் ஆட்சி மலர வேண்டும் என்று முசோலினியின் தந்தை, வருவோர் போவோரிடம் எல்லாம் டீக்கடை அரசியல் பேசும் வழக்கம் உள்ளவர். அவரைப் பார்த்துதான், முசோலினிக்கு அரசியல் ஆர்வம் பிறந்திருக்க வேண்டும். பள்ளிப்படிப்பை முடித்ததும், சிறிது காலம், பள்ளிக் கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்தார். அது போரடிக்கவே, அந்த வேலையை விட்டுவிட்டு, ராணுவத்தில் சேர்ந்தார். அதுவும் போரடிக்க, பத்திரிகை துறைக்குள் நுழைந்தார். பேச்சுத் திறமையும், எழுத்துத் திறமையும் கொண்ட முசோலினிக்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஆங்கிலம் 
ஆகிய மொழிகளும் தெரியும். 

பத்திரிகைகளில், காரசாரமாக அவர் எழுதிய கட்டுரைகள் பெரும் விவாதங்களையும் பரபரப்பையும் உண்டாக்கின. அவர் எழுதிய கட்டுரைக்காக ஓராண்டு சிறை தண்டனையைக் கூட அவர் அனுபவித்திருக்கிறார். இந்த காலக்கட்டத்தில், அதாவது 1914 ஆண்டு முதலாம் உலகப் போர் மூண்டது. பத்திரிகைத்துறையை விட்டு வெளியேறி முசோலினி மீண்டும் ராணுவத்தில் சேர்ந்தார். இதே காலக்கட்டத்தில்தான், ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தார். 

பின்னர், 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்டது. இப்போது, ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்று நேச நாடுகளை எதிர்த்தார்கள். முதலில், இவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்க, பின்னர், தோல்விகள் தொடர்ந்து, போரின் போக்கு மாறியது. போரில் தோற்ற பின்னர், ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயற்சித்தார். தனது காதலி கிளாரா பெட்டாசியையும் உடன் அழைத்துச் சென்றார். 

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றபோது, புரட்சிப்படை அவர்களை மடக்கியது. முசோலினியை அடையாளம் கண்டுபிடித்த அவர்கள், காதலியோடு சேர்த்து வேனில் இருந்து அவரை கீழே இறக்கினார்கள். முடிவு நெருங்கிவிட்டதை உணர்ந்த முசோலினி, அவர்கள் முன்பாக மண்டியிட்டு, 'என்னை கொன்னுடாதீங்க' என்று கெஞ்ச ஆரம்பித்தாராம். 

ஆனால், அவர் மீது இரக்கம் காட்டாத புரட்சிப் படையினர்,, துப்பாக்கியால் முசோலினியையும், காதலியையும் சல்லடையாக துளைத்து, அவர்களது உடல்களை மிலான் நகரின் நடுவீதியில போட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த உடல்களைபொதுமக்கள், காறி துப்புயும், சிறுநீர் கழிச்சும் அவமானப்படுத்தினார்கள். பின்னர், அந்த உடல்கள் மின்கம்பம் ஒன்றில் தலை கீழாக கட்டி தொங்கவிடப்பட்டது. 

சர்வாதிகாரிகளின் கடைசி காலம் மிகவும் கொடூரமானதாவே இருக்கும் என்பதற்கு முசோலினி மேலும் ஒரு உதாரணம். 

அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா - மூன்றாம் யுகத்தின் முதல் தேவாலயம்மழை மலை மாதா 
மலைகள், குன்றுகள் கடவுளுடைய பிரசன்னத்தின் வெளிபாடுகளாக அமைந்துள்ளன. எனவே தான், விவிலியத்தில் இஸ்ராயேலின் கடவுள் மலைகளின் கடவுள் (1 அரச-20 23) எனக் காண்கிறோம். ஓரேபு மலை, 'கடவுளின் மலை' என்றே அழைக்கப்பட்டது. (வி.ப.3 1). இயேசு கிறிஸ்துவின் வாழ்விலும் மலைகள் பெரும் பங்கு வகிப்பதை புனித விவிலியத்தில் காணலாம். மலை மேல் இயேசு சோதிக்கப்பட்டார் (மத், 4 8). மலை மேலிலிருந்து இயேசு போதனை செய்தார். ( மத்.5 1). இயேசு மலை மீது ஏறி ஜெபம் செய்தார்(மத்.14 23). மலை மீது இயேசு மறு உருவம் எடுத்தார் (மத்.17 1). மலை மீது இயேசு இரத்த வியர்வை சிந்தினார் (லூக்.22 39). இயேசு மலை மீது சிலுவையில் அறையப்பட்டு, உயிர் விட்டார். இயேசு மலை மேலிருந்து விண்ணகம் ஏறிச் சென்றார் (தி.ப. 1 12). எனவே தான் மலை மீது அமைக்கப்படும் திருத்தலங்களில் கடவுளின் பிரசன்னம் வெளிபடுவதாக மக்கள் நம்பிக்கையோடு வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அச்சிறுப்பாக்கம். இந்த ஊரின் எல்லையில், பள்ளிப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட மலைக்குன்றில் அமைந்துள்ளது மழை மலை மாதா திருத்தலம். ரோமில் இரண்டாம் வத்திகான் சங்கம் தொடங்கப்பட்ட அதே நாள், அதே நேரத்தில் (1962 அக்டோபர் 13-ஆம் நாள், பகல் 12 மணிக்கு) அருட்தந்தை புஷ்பம் அடிகளார், 'நல்லாயன் குன்று' என அழைக்கப்படும் இந்த மலை மீது ஒரு சிலுவையை நட்டு வழிபட்டார். அன்று முதல் இந்த மலை திருத்தலமாக உருவெடுக்கத் தொடங்கியது. 

இந்த திருத்தலம், பிரபலமடைவதற்கு பெருமழை பெய்த ஒரு சம்பவம் காரணமாக கூறப்படுகிறது. 1967 முதல் 1969-ம் ஆண்டு வரை இப்பகுதியில் மழை இன்றி கடும் வறட்சி நிலவியது. குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் இன்றி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளான நேரம். எனவே, மழை வேண்டி, 1969 ஆம் ஆண்டு, புஷ்பம் அடிகள், மேரி மாதாவின் சுரூபத்தை தேரில் வைத்து 30 மைல் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றார். செப்டம்பர் 27-ம் தேதி தேர், பங்கு ஆலயத்தை அடைந்த போது, மூன்று ஆண்டுகளாக கடும் வறட்சியை சந்தித்த அந்த பகுதியில் பெருமழை பெய்தது. மழை நின்ற பின்னர், மேரி மாதாவின் அந்த சுரூபம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, தற்போது கெபி உள்ள நடு மலையில் நிர்மாணிக்கப்பட்டு, மழை மலை மாதா என பெயரிடப்பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. 

40 அடி பிரம்மாண்ட சிலுவை 
1994-ம் ஆண்டு மலைக்கு ஏறிச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. பின்னர், இந்த தலத்தில் அழகிய தேவாலயம் ஒன்று கட்டப்பட்டு, மூன்றாம் யுகம் தொடங்கிய அந்த முதல் மணித் துளியில் (2001-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு) அபிஷேகம் செய்து, திறந்து வைக்கப்பட்டது. இந்த நூற்றாண்டின் முதல் நாளில், உலகம் முழுவதும் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரு சில தேவலாயங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

2009-ம் ஆண்டில், இம்மலை உச்சியில், 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருச்சிலுவை நிறுவப்பட்டது. 2002-ம் ஆண்டு முதல் இங்கு பவுர்ணமி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. 2003-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி முதல் இந்த திருத்தலம் செங்கல்பட்டு மறை மாவட்டத்தின் திருத்தலமாகவும், 'மழை மலை மாதா' மறைமாவட்டத்தின் துணைப் பாதுகாவலியாகவும் அறிவிக்கப்பட்டார். கிறிஸ்தவ தேவாலயங்களில், தினந்தோறும் அன்னதானம் வழங்கும் ஒரே தேவாலயம் இது மட்டுமே. 

Saturday, 21 February 2015

பிப்ரவரி 21 - உலக தாய்மொழி தினம்!


ஒருவருக்கு ஒருவர் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவிய மொழி பின்னாளில் இனத்தின் அடையாளமாக மாறியது. உலகளவில் மொழி நாட்டுக்கு நாடு, மாநிலத்துக்கு மாநிலம், சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகிறது.  

 உலக அளவில் 100 ஆண்டுகளுக்கு முன் 6 ஆயிரத்து 200 ஆக இருந்த மொழிகள் இன்று 3 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளதாக மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரப்பூர்வமாக உள்ளன. உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும் ஒற்றுமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 21 ஆம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது. 

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின் பாகிஸ்தானில் உருது அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952 ஆம் ஆண்டு அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் அதாவது தற்போதைய வங்கதேசத்தில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை தெரிவித்தனர். 

1952 பிப்ரவரி 21 ஆம் தேதி பாகிஸ்தான் அரசின் ஊரடங்கு உத்தரவையும் மீறி டாகா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நான்கு மாணவர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலியான மாணவர்களின் நினைவாக யுனெஸ்கோ அமைப்பு 1999 ஆம் ஆண்டு இத்தினத்தை உருவாக்கியது. 

உலக மக்களால் பயன்படுத்தப்படும் அனைத்து மொழிகளுக்கும் பாதுகாப்பும், உரிய மரியாதையும் அளிக்க வேண்டும், எந்த மொழியையும் அழிக்கக் கூடாது, ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ள வேண்டும்,  மொழிபெயர்ப்பு மூலம் அமைதியை உருவாக்க வேண்டும் என்று  உலக தாய்மொழிகள் தினம் வலியுறுத்துகிறது. 

இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய ஐரோப்பிய மொழிகளையும் 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Saturday, 14 February 2015

பிப்ரவரி - 14 காதலர் தினம்


பிப்ரவரி மாதம் என்றதும் நினைவுக்கு வருவது காதலர் தினம். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் அந்த நாளை ஒரு வாய்ப்பாக இளைஞர்களும், இளம் பெண்களும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

லூப்பர்காலியா என்ற திருவிழாவை ரோமானியர்கள் கொண்டாடி வந்தனர். பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக  கூறுகின்றனர்.

இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கி.பி.207ல் ரோம் நாட்டை ஆண்ட இரண்டாம் கிளாடியஸ், ரோமானிய வீரர்கள் பிரம்மச்சாரிகளாக இருந்தால் சலனங்கள் எதுவும் இல்லாமல் முழு ஆவேசத்துடன் போர் புரிவார்கள் என கருதினார். ஆகவே படையில் சேரும் இளைஞர்களுக்கு 'திருமணம் ஆகியிருக்கக் கூடாது; காதலிக்கக்கூடாது!' என்று சட்டம் கொண்டு வந்தார் மன்னர். காதலை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்? வீரர்கள் ரகசியமாகக் காதலித்தார்கள். அவர்களை ஆதரித்த வாலன்டைன் என்னும் பாதிரியார் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். விஷயம் தெரிந்து, பாதிரியார் சிறையில் தள்ளப்பட்டார். ஆனாலும், கோபம் தணியாத மன்னர் கிளாடியஸ், பாதிரியாரின் தலையைச் சீவும்படி ஆணையிட்டார். அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட்டது.


காதலர்களுக்கான உயிரைக் கொடுத்த வாலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய தேவாலயங்கள்  ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது பாகான்விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வாலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வாலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Friday, 13 February 2015

எழுத்தாளர்கள்


'குழந்தைகள் தெய்வத்துக்குச் சமமானவர்கள்' என்ற கோட்பாட்டைத் தவறு என, தனது நாவலில் சுட்டிக்காட்டியதற்காக, இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் இங்கிலாந்தைச் சேர்ந்த 'வில்லியம் கோல்டிஸ்' (1983) ஆவார். 

ஆங்கில எழுத்தாளர் 'ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ச'னுக்குத் திருமணம் நடைபெற்றது. அவர் தம் மனைவியோடு பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் ஒரு பிரசித்தி பெற்ற புத்தகத்தை எழுதினார். அந்த புத்தகத்தின் பெயர், 'ஒரு கழுதையோடு சுற்றுப் பயணம்' 

இலக்கியத்திற்கான நோபல் பரிசை 3 பேர் மறுத்திருக்கிறார்கள். முதலாவதாக பெர்னார்ட் ஷா, பரிசை முதலில் மறுத்தாலும், பின்னர், பிறர் வேண்டுகோளுக்கிணங்க அதனை வாங்கிய அவர், பரிசுத் தொகை முழுவதையும் ஸ்வீடிஸ் இலக்கியத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பதற்காக நன்கொடையாக கொடுத்துவிட்டார். இறுதிவரை வாங்காத மற்ற இருவர், ரஷ்ய எழுத்தாளர் போரிஸ் போஸ்டர், பிரெஞ்சு எழுத்தாளர் ஜூன்பாஸ் சார்த்ரே. 

தனது முதல் நாவலுக்கே புக்கர் விருதுபெற்ற முதல் இந்திய பெண் எழுத்தாளர், அருந்ததி ராய். இவரது தாய்மொழி மலையாளம். ஆனால், அவர் ஆங்கிலத்தில் நாவலை எழுதினார். 

ஞானபீட விருதுபெற்ற பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆஷா பூர்ணாதேவி. வங்கமொழி எழுத்தாளரான இவர், தமது 67 வது வயதில் இப்பரிசை பெற்றார். 85 வது வயதில் சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார். 

உலகின் முதல் துப்பறியும் நாவலை எழுதியவர் (1841) எட்கர் ஆலன்போ ஆவார். 

பத்திரிகைகளில் முதன் முதலில் தொடர்கதை எழுதும் வழக்கத்தை தொடங்கி வைத்தவர், உலகப் புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் 'சார்லஸ் டிக்கன்ஸ்' 

இயான் பிளமிங், டானியல் டீபோ, சாமர்செட் மாம் ஆகிய மூவரும் புகழ்பெற்ற எழுத்தாளர்கள். இவர்கள் மூன்றுபேரும் உளவாளிகளாக பணிபுரிந்த பின்னர், எழுத்தாளர்களாகி புகழ்பெற்றனர். இந்த மூவரில் இயான் பிளமிங் தன்னுடைய அனுபவங்களையும், கற்பனைகளையும் கலந்து எழுதிய 13 ஜேம்ஸ் பாண்ட் கதைகள் உலகப் புகழ்பெற்றன. டானியல் டீபோ நாவலின் தந்தையாகவும், சாமர்செட் மாம் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களாகவும் புகழ்பெற்றனர். 

கரன்சி நோட்டுகளில் எழுத்தாளர்களின் உருவங்களைப் பொறித்து, அவர்களை பெருமைப்படுத்திய நாடு, ஜப்பான். 

டார்ஜான் என்னும் காட்டு மனிதனை உருவாக்கி, அவனைப் பற்றிய பல சாகசக் கதைகளை எழுதியவர் எட்கர் ரைஸ் பர்ரோஸ். இவரது டார்ஜான் கதைகள் 56 மொழிகளில் வெளியாகியுள்ளன. இவருக்கு 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' பத்திரிகையில் போர்க்களத்திலிருந்து செய்தி அனுப்பும் நிருபர் வேலை கிடைத்தது. முக்கிய ஹவாய் துறைமுகமான 'பியர்ல்' துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை நேரில் பார்த்த மனிதர்களில் இவரும் ஒருவர். 
போர்ச் செய்திகளைக் கொண்டு அவர் பல புகழ்பெற்ற படைப்புகளை உருவாக்கியுள்ளார். 

தன்னுடைய படைப்புக்கள் அனைத்தையும் பென்சிலாலேயே எழுதியவர் 'எர்னஸ்ட் ஹமிங்வே. மீன் பிடிப்பதற்காக அவர் கடலுக்குள் நீண்ட து£ரம் பயணம் மேற்கொள்ளும் பழக்கமுடையவர். பின்னாளில், மனநிலை சரியில்லாமல் இருந்து, தன்னுடைய துப்பாக்கியாலேயே தன்னை சுட்டு, தற்கொலை செய்துகொண்டார். 

'பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழின் முதல் நாவல். இதை மாயூரம் வேதநாயகம் பிள்ளை 1879-ம் ஆண்டு எழுதினார். இந்திய மொழிகளில் வெளியான முதல் நாவல் இதுவே. இந்தியில் 1882-ம் ஆண்டு, லாலா ஸ்ரீநிவாஸ் தாஸ் என்பவர் எழுதிய 'பரிக்ஷா குரு' என்ற முதல் நாவல் வெளியானது. 

புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் மார்க் ட்வைனின் இயற்பெயர், சாமுவேல் லாஸ்கர்ன் கிளமெண்ட். சிறுவயதில் படகோட்டியாக மிஸிஸிபி நதியில் இவர் வேலைபார்த்தார். அப்போது, படகோட்டிகள் உரத்த குரலில் ஆற்றின் ஆழத்தை தெரிவிக்க, 'மார்க் ஒன், மார்க் ட்வைன்' என்று கூறுவார்கள். உள்நாட்டு போரின்போது, ஆற்று போக்குவரத்து தடை செய்யப்பட்டது. எனவே, இவர் பேனாவை பிடித்தார். அப்போது, தான் அடிக்கடி கேட்ட 'மார்க் ட்வைன்' என்ற வார்த்தையை தனது புனைப்பெயராக வைத்துக் கொண்டார். 

ஆங்கில இலக்கியத்தின் தந்தையாக மதிக்கப்படுபவர் 'ஜியாஃப்ரே சாசர்' ஆவார். இவர் 14-ம் நூற்றாண்டிலேயே  கிராமங்களில் திரிந்து நாட்டுப்புறக் கதைகளை தொகுத்து வைத்திருக்கிறார். 

ஷெர்லாக் ஹோம்ஸ் எனற் துப்பறியும் கதாப்பாத்திரத்தைப் படைத்து புகழ்பெற்றவர் ஆர்தர் கானன்டாயில். இவர் ஒரு நாவலில் ஷெர்லாக் ஹோம்ஸ் மலையுச்சியிலிருந்து விழுந்து உயிரை விடுவதாகக் கதையை முடித்திருந்தார். ஷெர்லாக் ஹோம்சின் உயிரை மீட்க வேண்டும்  என உரத்த கோரிக்கை எழுந்தது. பாராளுமன்றத்திலும் இதுபற்றி விவாதம் எழுந்தது. அவரை உயிர்ப்பிக்க வேண்டும் என்று பிரிட்டன் அரசு எழுந்தாளருக்கு கோரிக்கை விடுத்தது. வேறு வழியின்றி, ஆசிரியர், இறந்துவிட்ட தனது கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்தார். அவர் வாழ்ந்ததாக ஆசிரியர் வர்ணித்திருந்த வீட்டை நகரசபை ஒரு நினைவிடமாக மாற்றியது. 

தங்கமே தங்கம்...


தங்கம் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அருதியிட்டுக் கூறமுடியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு 2600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் தங்கத்தை பயன்படுத்தியுள்ளனர். அந்நாட்களில் எகிப்தும், லிபியாவும் தான் தங்கத்தை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாக இருந்தன. லிபியாவில் 6-ம் நூற்றாண்டில் தங்கத்தில் காசுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்தனர். 

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் மூன்று பங்கு ஹைட்ரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும். 

தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது. பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. தங்கத்தின் உருகுநிலை 1064.43 டிகிரி செல்சியஸ் பூமியின் மேற்பரப்பில் ஒவ்வொரு 100 கோடி பாகத்தில் 3ல் ஒரு பகுதியில்தான் தங்கம் உள்ளது. இன்று புழக்கத்தில் இருக்கும் தங்கத்தில் பெரும் பகுதி வரலாற்றுக்காலத்தில் வெட்டி எடுக்கப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் 15 சுரங்கங்களில் இருந்து ஆண்டுக்கு 2500 டன் தங்கம் எடுக்கிறார்கள். 

உலகில் அதிகமாக தங்கம் கிடைக்கும் நாடு தென்னாப்பிரிக்கா. தங்கம் அதிகமாக புழங்கும் நாடு அமெரிக்கா. உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தங்கம் கிடைக்கிறது.  

இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் 'கோலார்' என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. கோலார் தங்க வயல் பகுதியில் முதன்முதலில் தங்கம் எடுத்தவர் திப்பு சுல்தான். 1880ம் ஆண்டு 'ஜான் டெய்லர் அண்ட் சன்ஸ்' நிறுவனம் முறையாக சுரங்க வேலையை தொடங்கியது. 1986ம் ஆண்ட அரசுடமையாக்கப்பட்டது. உலகில் கிடைக்கும் தங்கத்தில் 4ல் 3 பாகம் நகை செய்யவே பயன்படுகிறது. 

தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க் பி.ஐ.எஸ் முத்திரைகள் உள்ளன. ஆனால், ஆரம்ப காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்துப் பார்த்து நம்பகத் தன்மையை  சோதிக்கும் முறை  இருந்தது. தங்கம் லேசான உலேலகம் என்பதால், பல் அடையாளம் பதிந்துவிடும். அந்த அடையாளத்தை வைத்துதான் தங்கத்தை தரம் பார்த்தனர்.

தங்கம் 'காரட்' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.

தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளியைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். 

மற்ற உலோகங்களைப் போல் அல்லாமல் அரிதாய் கிடைப்பதால், தங்கத்திற்கு மதிப்பு அதிகம். இதனால், வரலாற்று காலத்தில் இருந்தே ஒரு நாட்டின் பண மதிப்பை நிர்ணயிக்கும் அளவுகோலாக தங்கம் இருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில்தான் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பில் உள்ளது. இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட தங்கத்தில் 3 சதவீதத்தை அந்த வங்கி வைத்துள்ளது. 

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.


அமெரிக்க அரசு ஒரு காலத்தில் 1 டிராய் அவுன்ஸ் தங்கம் (31.1 கிராம்) என்பதை 20.67 டாலருக்கு சமமாக வைத்திருந்தது. 19-ம் நூற்றாண்டில் பெரிய அளவில் தங்க சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், கிராக்கி அதிகரித்தது. இதனால், டாலர் மதிப்பு சரிந்துகொண்டே போனது. உடனே மேற்கொண்டு சரிவை தடுக்க ஐரோப்பிய, அமெரிக்க வங்கிகள் மார்க்கெட்டில் மாற்றம் செய்ய தீர்மானித்தன. அந்நேரத்தில் பொருளாதார சூழ்நிலைகளால் தங்கத் தொகுப்பில் சிக்கல் வந்ததால், 1968ம் மார்ச் 17ல் இரட்டை விலை முறை வந்தது. 

அதில் ஒன்றுதான் வெளிச்சந்தையில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பது. பின்னர்,  1975ல் இந்த முறை போய், முழுக்க முழுக்க வெளிச்சந்தைப்படியே தங்கம் விலை நிர்ணயிக்கப்பட்டதால், விலை பறக்க ஆரம்பித்தது. 
1844ம் ஆண்டு முதல் 1914ம் ஆண்டு வரை 11.6 கிராம் (ஒன்றரை பவுன்) தங்கம் 21 ரூபாய் 18 காசுகளாக இருந்தது. தற்போது 22 ஆயிரத்தை கடந்துவிட்டது. தங்கத்தின் விலை உயர்வுக்கு உற்பத்தி குறைவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, தேவை அதிகரிப்பு ஆகியவை விலை உயர்வுக்கு காரணங்களாக இருக்கின்றன. 

Sunday, 8 February 2015

ருத்ராட்சை - சில சுவாரஸ்ய தகவல்கள்


 ருத்ராட்சையை நாம் பார்த்திருப்போம். ப்ரவுன் நிற மணிகளான இவைகளை, சிவபெருமானின் பக்தர்கள் கழுத்தில் அல்லது கையில் அணிவார்கள். ருத்ராக்ஷா என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது 'ருத்ரா' (சிவன் என்று பொருள்) மற்றும் 'அக்ஷா' (கண்கள் என்று பொருள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே ருத்ராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. அதனால் தான் அது ருத்ராட்சை என்ற பெயரை பெற்றது.

இமயமலை வட்டாரத்தில் இந்த ருத்ராட்சை மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.  இந்த மரம் நீடித்து வாழ, குறைந்த தட்பவெப்ப நிலையும் மாசற்ற சுற்று சூழலும் இருந்தாக வேண்டும். அதனால் தான் நேபால் மற்றும் ஹிமாசல பிரதேச மலை வட்டாரங்களில் மட்டுமே இது காணப்படும். இந்த ருத்ராட்சை மரம் 100 ஆண்டு காலம் வரை நீடித்து நிற்கும். ருத்ராட்ச மணிகளை மாலையாய் கோர்த்து தொடர்ச்சியான வழிபாடுக்கு அதனை பயன்படுத்தலாம். இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-14 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் உள்ளது. அதற்கு வியக்கத்தக்க சக்திகளும் உள்ளது. ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது.

ஒரு முக ருத்ராட்சை என்பது சிவபெருமானின் மிக நெருங்கிய வடிவமாக பார்க்கப்படுகிறது. இவ்வகை ருத்ராட்சையை அணிபவருக்கு அனைத்து வகையான சந்தோஷமும் செல்வ செழிப்பும் பெருகும்.

இரண்டு முக ருத்ராட்சை அனைத்து வகையான ஆசைகளையும் நிறைவேற்றும். மூன்று முக ருத்ராட்சை அறிவை நாடுபவர்களுக்கானது.  

நான்கு முக ருத்ராட்சை என்பது பிரம்மனின் வடிவத்தை குறிக்கும். இவ்வகை ருத்ராட்சை ஒரு மனிதனுக்கு தர்மம், அர்தா, காமம் மற்றும் மோட்சத்தை அளிக்கும். வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் மற்றும் தடங்களை நீக்க ஐந்து முக ருத்ராட்சை உதவுகிறது.


ஆறு முக ருத்ராட்சை முருக பெருமானை குறிக்கிறது.  வலது கையில் கட்டிக் கொண்டால், பிரம்மஹத்தி பாவங்கள் போகும். அளவுக்கு அதிகமான நிதி நஷ்டம் அல்லது போதிய அளவில் சம்பாதிக்க முடியாதவர்கள் ஏழு முக ருத்ராட்சையை அணியலாம்.
.

எட்டு முக ருத்ராட்சை பைரவரை குறிக்கிறது. இவ்வகை ருத்ராட்சை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. துரதிஷ்டவசமான விபத்துகளில் இருந்தும் காக்கும்.

ஒன்பது முக ருத்ராட்சை ஒன்பது வடிவிலான சக்தியை குறிக்கிறது.  இவ்வகை ருத்ராட்சையை அணிபவர்களுக்கு அனைத்து விதமான சந்தோஷங்களும் வளமையும் வந்து சேரும்.

10 முக ருத்ராட்சை விஷ்ணு பகவானை குறிக்கும். இந்த ருத்ராட்சையை அணிபவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கிட்டும். பதினொன்று முக ருத்ராட்சை வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி கிட்டிட பதினொன்று முக ருத்ராட்சையை அணியவும்.

சந்தோஷத்திற்கும் ஆரோக்கியமான உடல்நலத்திற்கும் பனிரெண்டு முக ருத்ராட்சையை அணிய வேண்டும். "ஓம் க்ரோம் ஷ்ரோம் ரோம் நமஹ" என்பதே இந்த ருத்ராட்சையின் மந்திரமாகும்.

விஷ்வதேவர்களை குறிக்கிறது பதிமூன்று முக ருத்ராட்சை. அதிர்ஷ்டத்திற்காக அணியப்படுகிறது இந்த ருத்ராட்சை. பதினான்கு முக ருத்ராட்சையும் சிவபெருமானையே குறிக்கும். இந்த ருத்ராட்சை உங்கள் நெற்றியை தொடுமாறு அணிய வேண்டும். பாவங்கள் நீங்க இதனை அணியலாம்.


தண்ணீர்.. தண்ணீர்


தண்ணீர் தாகத்தை தணிப்பதோடு, உடலில் ஏற்படும் நோய்களுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், கழிவுகள் வெளியேறி வயிறு சுத்தமாவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.  

தண்ணீர் உடலின் மூலைமுடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது.  இதனால் உடல் நச்சுக்கள் இன்றி சுத்தமாக இருக்கும். கழிவுகள் வெளியேறுவதால், நன்றாக பசி எடுக்கும்.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அடிக்கடி தலைவலி ஏற்படும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, தலைவலி குறையும்.

காலையில் சாப்பிடாமல் அலுவலகத்திற்கு செல்பவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிக் விகிதமானது 24 சதவீதம் அதிகரிக்கும். இதனால் உணவு விரைவில் செரிமானமடையும்..

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிப்பதுடன்  ரத்தத்தில் ஆக்ஸிஜனும் அதிகரிக்கும். இதனால், நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள நச்சுக்களுடன், உடலின் மெட்டபாலிசம் அதிகரிப்பதுடன், தேவையற்ற கொழுப்புக்களும் கரைந்து வெளியேறி, உடல் எடை குறையும்..

குடல் சுத்தமாக இல்லாவிட்டால், முகத்தில் பருக்கள் வர ஆரம்பிக்கும். இப்படி பருக்கள் வந்தால் சருமம்  அழகை இழந்துவிடும். எனவே தினமும் தண்ணீரைக் குடித்து வந்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, முகம் பருக்களின்றி பொலிவோடு இருக்கும்.

உடலுக்கு மிகவும் இன்றியமையாதது தண்ணீர். இத்தகைய தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, நோய்கள் உடலை தாக்காதவாறு பாதுகாக்கும்.


Thursday, 5 February 2015

எந்தெந்த ஊர் எது எதற்கு பிரபலம்?


தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்

தஞ்சாவூரின் அடையாளமாக திகழும் தலையாட்டி பொம்மைகள் களிமண்ணால் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக காவிரி ஆற்றின் களிமண்ணை கொண்டு செய்யப்படும் இந்த வகை பொம்மைகளை உருவாக்கும் பணியில் 19-ஆம் நூற்றாண்டிலிருந்தே இங்குள்ள கைவினைக் கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருநெல்வேலி அல்வா


வட இந்தியாவிலிருந்து திருநெல்வேலி வந்த ஒரு குடும்பம் அல்வா தயாரித்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். அது தாமிரபரணி நதியின் நீரில் தயாரிக்கப்பட முன்பை விட சுவையாக இருந்திருக்கிறது. எனவே அவர்கள் தொடர்ந்து திருநெல்வேலியில் அல்வா வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இப்படியாக திருநெல்வேலி அல்வா இன்று உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. அதிலும் நெல்லையப்பர் கோயிலின்  அருகே விற்பனை செய்யப்படும் 'இருட்டுக்கடை' அல்வா கடை வெகு பிரசித்தம்.


கொடைக்கானல் ஆப்பிள்


இந்தியாவில் காஷ்மீர் ஆப்பிளுக்கு பிறகு கொடைக்கானல் ஆப்பிள்தான் சுவையானது என்று சொல்லலாம். எனவே கொடைக்கானல் சுற்றுலா வரும்போது ஆப்பிளை சுவைத்து மகிழ்வதோடு, வீட்டுக்கு வாங்கிச் செல்லுங்கள்.


கும்பகோணம் வெத்தலை


கும்பகோணம் வெத்தலையை ஒரு தடவ போட்டுப் பாருங்க..நாக்கு சும்மா செவ செவன்னு எப்படி சிவக்கும் தெரியுமா? அப்பறம் வெத்தல போட்டு சோக்குலன்னு பாட்டு கூட பாடுவீங்க!


காரைக்குடி செட்டிநாடு உணவு


காரைக்குடி என்று சொன்னாலே காரசாரமான செட்டிநாடு சாப்பாடுதான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். அது அசைவமா இருந்தாலும் சரி, சைவமா இருந்தாலும் சரி எல்லோரும் ஒரு புடி புடிக்கத்தான் செய்வாங்க.


மதுரை மல்லி


மல்லிகை பூவ எங்க வேணாலும் பாக்க முடியும். அந்த அளவுக்கு பரவலாக கிடைக்கக்கூடிய பூ அது. ஆனால் மதுரை மல்லியின் வாசனையே தனி. அந்த ஊரின் தெய்வீக மனத்துடன் இந்த மல்லியின் மனமும் சேர்ந்து நம்மை மயக்கம் கொள்ளச்செய்து விடுகின்றன.


காஞ்சிபுரம் பட்டுப்புடவை


கல்யாணம் காட்சியென்றால் இந்தியாவிலுள்ள பெரும்பாலோனோர் காஞ்சிபுரத்துக்குத்தான் வருகிறார்கள். காஞ்சிபுரம் பட்டுப்படவை இல்லாமல் தமிழ்நாட்டில் பல திருமணங்கள் நடப்பதே இல்லை!


பொள்ளாச்சி இளநீர்


'தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையை பெத்தா கண்ணீரு'ன்னு தென்னைமரத்தின் சிறப்பை பற்றி கூறுவதுண்டு. அந்த தென்னை மரங்கள் பொள்ளாச்சியில் அதிகமாக காணப்படுவதுடன், பொள்ளாச்சி இளநீருக்கென்று தனி கிராக்கி இருக்கிறது.


திருவாரூர் தேர்


ஆசியாவிலேயே மிகப்பெரிய தேராக அறியப்படும் திருவாரூர் தேர் 96 அடி உயரமும், 360 டன் எடையும் கொண்டது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டிருப்பதுடன், இது ஹைட்ராலிக் ப்ரேக் கொண்டு நிறுத்தப்படுகிறது. இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்று இருப்பது இதன் சிறப்பை உணர்த்தும் மற்றொரு அம்சம்.


சிவகாசி பட்டாசு


சிவகாசி எதற்காக பிரபலம் என்று கேட்டால் சின்னக் குழந்தைகூட பதில் சொல்லும். சிவாகாசியில் தயார் செய்யப்படும் பட்டாசு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


பழனி பஞ்சாமிர்தம்


தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து அமுதங்களை (பஞ்ச + அமிர்தம்) கொண்டு செய்யப்படுவதால் இதற்கு பஞ்சாமிர்தம் என்று பெயர் வந்தது. அதிலும் பழனியில் கிடைக்கும் பஞ்சாமிர்தம் அமிர்தத்திலும் அமிர்தம். இங்கு சித்தநாதன் விபூதி ஸ்டார் எனும் கடை பஞ்சாமிர்தத்துக்கு மிகவும் பிரசித்தம்.


சேலத்து மாம்பழம்


'மாம்பழமாம் மாம்பழம் சேலத்து மாம்பழம்' என்று குழந்தைகளுக்கான பாடல் ஒன்று உள்ளது. அந்தப் பாட்டில் வருவது போல சேலத்து மாம்பழம் அவ்வளவு தித்திப்பாக இருக்கும். மேலும் இராஜாஜி அன்றைய சேலம் மாவட்டத்தில் பிறந்தவர் என்பதால் அவரை 'சேலத்து மாம்பழம்' என்று செல்லமாக அழைப்பதுண்டு.


ஊட்டி வரிக்கி


கருக் முருக்கென்று வரிக்கியை கடித்து சாப்பிடும் சுவையே தனி. அதிலும் ஊட்டி வரிக்கி என்றால் உணவுப் பிரியர்களின் நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.


திண்டுக்கல் பூட்டுதிண்டுக்கல் பூட்டு என்றாலே பூட்டு ஞாபகம்தான் அனைவருக்கும் வரும். ஆனால் இன்று சீன மற்றும் மற்ற நவீன பூட்டுகளால் திண்டுக்கல்லில் பூட்டு விற்பனை நலிவடைந்துள்ளது. எனினும் திண்டுக்கல் பூட்டுகளில் காணக்கூடிய தரத்தினை இந்த வகை நவீன பூட்டுகளில் காண்பது அரிது.Monday, 2 February 2015

கோபம் - மனித குலத்தின் எதிரி

தொலைக்காட்சி சேனல்களில் பேட்டிக் கொடுக்கும் மார்க்கெட் போன நடிகைகள், முன்னால் வந்த விழாத தலைமுடியை வம்படியாக பின்னால் ஒதுக்கி விட்டுக் கொண்டே, 'என்கு பல்வீனம் என்னன்னா.. என்கு நெற்யா கோபம்' என்பார்கள். தான் ஒரு முன்கோபி, தொட்டாலே தனக்கு கோபம் வந்துவிடும் என்று சிலர் பெருமையாக சொல்லக் கேட்டிருக்கலாம். ஆனால், கோபம் கொள்வது என்பது ஒன்றும் பெருமையான விஷயம் கிடையாது. 

கோபம் மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய இயல்பான உணர்ச்சி. அதை தேவையான இடத்தில், அளவாக பிரயோகித்தால் உரிய பலன் கிட்டும். அந்த கோபத்திற்கும் மரியாதை இருக்கும். நம் சுய மதிப்பை காத்துக்கொள்ள அளவான கோபம் அவசியம். அதே நேரத்தில், 'எனக்கு கோபம் வந்தால், என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது' என்ற ரகத்தில் கோபப்படுவது ஆபத்தானது. அப்படியான கோபத்தின் தீமைகளை நமது புராணங்கள் விபரமாகவே விளக்குகின்றன. 

துர்வாசர் என்ற முனிவர், அடிக்கடி கோபப்படக் கூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவ வலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம் இருக்கு முடியும்? எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற, முதலில் நம்முடைய கோபத்தை அடக்கியாள பழக வேண்டும். 

தேவையில்லாமல் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டால், அழிவு நிச்சயம் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

சுவீடன் நாட்டில் உள்ள 'ஸ்ட்ரெஸ்' என்ற ஆய்வு மையம் இதைக் கண்டுபிடித்துள்ளது. ஆரோக்கியமான 2 ஆயிரத்து 755 தொழிலாளர்களைத் தேர்ந்தெடுத்து, 1992 முதல் 2003 வரை அந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவில், அவர்களில் 47 பேர் மாரடைப்பு மற்றும் இதய வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் சிலர் இறந்துவிட்டனர். இவர்களின் பாதிப்புகளுக்கு அடிப்படையாக இருந்தது கோபம். 

பொருளாதார காரணங்கள், வேலைப்பளு, பிடிவாத குணம், உடலியல் பாதிப்புகள், உறவுகளால் ஏற்படும் பிரச்சினைகளே கோபம் ஏற்படுவதற்கான காரணங்கள். பணி செய்யுமிடத்தில், மேலதிகாரி மற்றும் உடன் பணி செய்பவர்களிடம் ஒத்துழைப்பு கிடைக்காதது அல்லது கொடுக்காதது உள்ளிட்டவை கோபத்தை ஏற்படுத்துவதற்கான முக்கிய காரணங்கள். இவ்வாறாக உருவாகும் கோபமும், அதிகப்படியான உணர்ச்சிகளும் இதயம் சம்பந்தமான பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே கோபத்தைக் குறைத்தால் நலமாக வாழலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். 

அதுசரி கோபத்தை எப்படி கட்டுப்படுத்துவதாம்? அதற்கும் அவர்களே வழி சொல்கிறார்கள். முடிந்தால் முயற்சித்துப் பாருங்களேன். 

உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதை பொருட்படுத்தாதீர்கள். அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் போனால், உங்கள் எதிரிகள் ஏமார்ந்து போவார்கள். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.

ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கையானது. எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.

எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள். உங்களுக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூட பார்க்காதீர்கள். அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

பூண்டி மாதா - இயேசுவின் திருச்சிலுவையை கொண்ட தேவாலயம்


இத்தாலி நாட்டைச் சேர்ந்த மறை போதகரான வீரமாமுனிவர் தமிழகத்தில் தங்கி பணியாற்றியபோது, பல்வேறு பகுதிகளில் தேவாலயங்களைக் கட்டினார். தஞ்சாவூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே பூண்டி மாதா தேவாலயமும் அவரால் உருவாக்கப் பட்டதுதான். 1714-ம் ஆண்டு தொடங்கிய இதன் கட்டுமானப்பணிகள் 1718-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த ஆலயம் கட்டப்பட்ட நேரத்தில் இது ராணி இமாகுலேட் மேரி தேவாலயம் என்றே அழைக்கப்பட்டது. 

1858-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னெதெத் என்ற சிறுமிக்கு மேரி மாதா காட்சியளித்தார். பெர்னதெத்திற்கு மாதா காட்சியளித்த அதே தோற்றத்துடன் செய்யப்பட்ட 3 மாதா சுரூபங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டன. அவற்றில் ஒரு சுரூபம் இந்த பூண்டி தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த சுரூபத்தை பொதுமக்கள் பக்தியோடு வழிபட்டு வருகின்றனர். 

கால சுழற்சியில் இந்த தேவாலயத்தின் சில பகுதிகளில் பழுது ஏற்பட்டது. 1955-ம் ஆண்டு, இந்த ஆலய பங்குத் தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை லூர்துசேவியர், ஆலயத்தை பழுது பார்க்கத் திட்டமிட்டார். அதற்காக, தேவாலயத்தின் நடுச்சாலைப் பகுதியை இடிக்க வேண்டும். ஆனால், போதிய நிதி இல்லை. கையில் இருக்கும் பணத்தை இடிப்பதற்கு செலவிட்டால், கட்டுமானப் பணிகளுக்கு காணாது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். மேரி மாதாவிடம் தமது வேண்டுதலை முன் வைப்பதைத் தவிர அவருக்கு வேறு வழி தெரியவில்லை. 


அப்போதுதான், ஆலயத்தில் அந்த அதிசய சம்பவம் நடைபெற்றது. 1956-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி இரவு, தேவாலயத்தின் எந்த பகுதியை இடிக்க வேண்டும் என்று அருட்தந்தை திட்டமிட்டாரோ, அந்த பகுதி மட்டும் அளவெடுத்தாற்போல் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தேவாலயத்திற்கு சிறு கீறலும் ஏற்படவில்லை. பின்னர், ஆலயம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. அடுத்தடுத்து இங்கு பணியாற்ற வந்த பங்குத் தந்தையர்கள் தேவாலயத்தை மேலும் அழகு படுத்தினார்கள். 1995-ம் ஆண்டு இந்த தேவாலயம் திருத்தலமாக அறிவிக்கப்பட்டது. 


இந்த ஆலயத்தின் சிறப்பு முக்கிய அம்சமாக, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இயேசு கிறிஸ்து சுமந்து சென்ற சிலுவையின் சிறு பகுதி, இங்குள்ள மாதா பீடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை பக்தர்கள் தொட்டு வணங்கி வருகின்றனர். வாட்டிக்கன் நகரத்தில், போப் ஆண்டவருக்கு உதவியாக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த கர்தினால் லூர்துசாமியின் முயற்சியால் கொண்டுவரப்பட்டது. 

போப் இரண்டாம் ஜான்பால் அனுமதியுடன் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி இந்த ஆலயம் பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டது. பசிலிக்கா என்பதற்கு 'பெரிய ஆலயம்' என்பது பொருள். தமிழ்நாட்டில் உள்ள நான்கு பசிலிக்காக்களில் பூண்டி தேவாலயமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயம் - திருக்காவலூர் கலம்பகம் பாடப்பெற்ற திருத்தலம்தமிழகத்தின் அரியலூர் மாவட்டம், திருமானூரை அடுத்து அமைந்துள்ள ஊர் ஏலாக்குறிச்சி. கொள்ளிடம் ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள இந்த ஊரின் முந்தைய பெயர் திருக்காவலூர். தெய்வத் திருக்காவல் மிகுந்த இடம் என்ற பொருளில் இந்த பெயரை இந்த ஊருக்கு வைத்தவர் வீரமாமுனிவர். 

பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தஞ்சை பகுதியில் வசித்து வந்த கிறிஸ்தவர்கள் இன்னல்களுக்கு ஆளானபோது, கொள்ளிடம் ஆற்றைக் கடந்த சில கிறிஸ்தவக் குடும்பங்கள் நடுக்காட்டில் அடைக்கலமடைந்தன. 1716-ம் ஆண்டில், அந்த பகுதிக்கு வந்த வீரமாமுனிவர், அவர்களுக்காக சேவையாற்றத் தொடங்கினார். கிறிஸ்தவர்கள் அடைக்கலமடைந்த அந்த பகுதியில் மேரி மாதாவுக்கு தேவாலயம் ஒன்றைக் கட்டி, அடைக்கல அன்னை என்று பெயரிட்டார். 

ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை  ஆண்ட சிற்றரசன் அரங்கப்ப மழவராயர நயினார் என்பவர், ராஜப்பிளவை என்னும் தீராத நோயினால் துன்பப்பட்டார். மருத்துவ முறைகள் பயனற்றுப் போக, இறுதியாக அவர், அடைக்கல அன்னை தேவாலயத்தை நாடி வந்தார். வீரமாமுனிவர் அவருக்கு உதவ முன்வந்தார். அவரது நோய்க்கான மூலிகையைத் தேடி, வெயில் சுட்டெரிக்கும் கோடை காலத்தில் வீரமாமுனிவர் அலைந்தார். அன்னையின் அற்புத செயலாக, வறண்டுபோன பூமியிலிருந்து தண்ணீர் கொப்பளித்து வந்தது. வீரமாமுனிவர் அந்த தண்ணீரை சேற்றுடன் அள்ளி, மன்னரின் ராஜப்பிளவை கட்டியில் பூசி விட்டாராம். ஆச்சரியமாக, ஏழு ஆண்டுகளாக ராஜப்பிளவை நோயினால் அவதிப்பட்டு உறக்கத்தைத் தொலைத்த மன்னர், அன்றிரவு நிம்மதியாக தூங்கினார். நோயும் படிப்படியாக குணமானது. 

தமக்கு ஏற்பட்ட தீராத நோயை அடைக்கல அன்னைதான் குணப்படுத்தியதாக நம்பிய மன்னர், அதற்கு நன்றியாக, வீரமாமுனிவர் எழுப்பிய அடைக்கல அன்னை தேவாலயத்திற்கு 175 ஏக்கர் நிலத்தை காணிக்கையாக எழுதி வைத்தார். அரசர் அளித்த இந்த காணிக்கைக்கு ஆதாராமாக கல்வெட்டு இன்றும் ஏலாக்குறிச்சியில் அடைக்கல அன்னையின் புதுமைக்கு சாட்சியாக இருந்து வருகிறது. 

வீரமாமுனிவர் இந்த பகுதியில் தங்கி பணியாற்றியபோதுதான், திருக்காவலூர் கலம்பகம் என்ற புகழ்பெற்ற நூலை உருவாக்கினார். தமிழ் மொழியில் உள்ள கலம்பக நூல்கள், ஆண்பால் கலம்பகங்களாக உள்ளன. அதாவது, பாட்டுடைத் தலைவர் ஆண்களாகவே உள்ளனர். ஆனால், வீரமாமுனிவர் உருவாக்கிய இந்த திருக்காவலூர் கலம்பக நூல், பெண்பால் கலம்பகமாக உள்ளது. திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல மாதாவை பாட்டுடைத் தலைவியாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த ஒரே கலம்பக நூலும் இதுமட்டுமே. திருக்காவலு£ரில் கோயில் கொண்டுள்ள அடைக்கல அன்னையின் அருமை பெருமைகளை இந்த செய்யுள்கள் மூலம் வீரமாமுனிவர் விளக்குகிறார்.