Monday, 18 November 2013

எழுத்தாளர் புஷ்பா தங்கதுரைஎழுத்தாளர் புஷ்பா தங்கதுரை அவர்களோட படைப்புக்களை குறைஞ்ச அளவுலதான் படிச்சிருக்கேன். ஆனா.. அவரோட எழுத்து நடை ரொம்ப புடிக்கும். அவரோட 'ஊதாப்பூ' புத்தகத்தை அவ்வப்போது வாங்கியிருக்கேன். கதைகள் 'ஒரு மாதிரியா' இருக்கும்ன்றதால அதை படிக்கறதுக்கு வீட்டுல அனுமதிக்க மாட்டாங்க. 

'ஊஞ்சல்' மாத இதழ்ல வந்த அவரோட 'எனது பீத்தல் குடை' அப்படிங்கற கட்டுரைத்தொடர் ரொம்ப பிரபலம். அதுல அவரோட எழுத்து அனுபவங்களை சுவாரஷ்யமாக எழுதியிருப்பாரு. 

'ஊஞ்சல்' மாத இதழ்ல உதவி ஆசிரியராக வேலை பாத்திட்டிருந்தப்போ, ஒருமுறை பேட்டிக்காக, நானும், நண்பர் ஸ்ரீநிவாஸ் பிரபுவும் எழுத்தாளர் புஷ்பா தங்கதுரையை அணுகினோம். வீட்டுக்கு வரச்சொன்னார். போனோம். புத்தகக் குவியலுக்கு மத்தியில உக்காந்திருந்தார். வீட்டுல எந்த பக்கம் திரும்பினாலும் புத்தகங்கள் தான். 

அதுதான் எங்களுக்கு அவரோட முதல் அறிமுகம். பாத்த மாத்திரத்திலேயே ஜாலியா பேச ஆரம்பிச்சுட்டார். எங்களுக்காக ஒரு மணிநேரம் ஒதுக்கியிருந்தார். ஆனா.. பேச்சு நீண்டு.. கிட்டத்தட்ட அரைநாள் ஓடுடிடுச்சு. ஜோதிடம் சம்பந்தமாக.. ஏதோ ஆராய்ச்சியெல்லாம் பண்ணிட்டிருந்தாரு. அதையெல்லாம் கூட்டிட்டு போய் காண்பிச்சு குழந்தை மாதிரி குதூகலப்பட்டார். 

புறப்படும்போது, பேட்டியை 'எடிட்' பண்ணி, அச்சுக்கு போறதுக்கு முன்னாடி.. அவரோட பார்வைக்கு காண்பிக்கச் சொன்னார். அவர் ஜாலியா சொன்ன சில விஷயங்களை பத்திரிகையில எழுதிடுவோமோன்னு அவருக்கு சின்ன சந்தேகம். நாங்களும், சரின்னுட்டு வந்துட்டோம். 

ஆனா.. வேலை நெருக்கடியால.. அவர் கேட்டுக்கிட்ட மாதிரி முன்னமே காண்பிக்க முடியலை. போன் பண்ணி கடுமையா கோவிச்சுக்கிட்டார். எங்களால அவரை சமாதானப்படுத்த முடியலை. ஆனா.. கடைகளுக்கு வந்த புத்தகத்தைப் பாத்துட்டு இரண்டொரு நாள் திரும்பவும் அவரே போன் பண்ணி, பேட்டி நல்லா வந்திருக்கிறதா பாராட்டினாரு. பேசினதோட மட்டுமில்லாம தன் கைப்பட அவர் கடிதமும் எழுதி எங்களை பெருமைப்படுத்தினாரு. 

இந்த பெரிய மனசு யாருக்கு வரும்?

'நேரம் கிடைக்கும்போது வாங்களேன்..பேசுவோம்'ன்னார். ஆனா.. மறுபடியும் அவரை சந்திக்கறதுக்கான வாய்ப்பு அமையலை. இனி அமையப்போறதும் இல்லை. 

Sunday, 4 August 2013

நண்பர்கள் தின வாழ்த்துகள்

இன்னைக்கு காலைல, நெருங்கிய நண்பனுக்கு போன் பண்ணி, எங்கயாவது வெளில போய்ட்டு வரலாமான்னு கேட்டேன். வழக்கமா.. சாதாரணமா பேசறவன், இன்னிக்கு என்னமோ, வேலை இருக்குன்னு முகத்துல அடிச்சா மாதிரி சொல்லிட்டு கட் பண்ணிட்டான். எனக்கு ஒரு மாதிரியா போச்சு.
அப்புறம்.. கடை பக்கம் போயிருந்தப்போ, வோறொரு நண்பனை பாத்தேன். திடுதிப்புன் கட்டிப்புடிச்சு வாழ்த்துகள்ன்னான். என்ன ஏதுன்னு விசாரிச்சா.. இன்னிக்கு நண்பர்கள் தினமாம்.

அதனால.. நண்பர்கள் எல்லோருக்கும் என்னோட வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். 

Wednesday, 26 June 2013

முதலிடம்தற்கொலை சாவு அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்துல இருக்காம். எத்தனை வேதனையான செய்தி இது..?

தேசிய குற்றப்பிரிவு ஆவணத்தின் அறிக்கையின்படி 2012ம் ஆண்டு இந்திய அளவுள தற்கொலை செஞ்சுக்கிட்டவங்கள்ல தென் மாநிலங்களைச் சேர்ந்தவங்கதான் அதிகம்னு தெரிவிக்கப்பட்டிருக்கு.  காதல், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால தமிழ்நாட்டுல அதிக அளவுல தற்கொலைச் சாவுகள் நடந்திருக்காம். கடந்த சில ஆண்டுகளாவே தமிழகம் இந்த பெருமையை(?) தக்க வெச்சிருக்காம். 
2012ம் ஆண்டு மட்டும் 12.5 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் தற்கொலை மூலம் மரணத்தை தழுவிருக்காங்க. 


மெட்ரோ நகரங்கள்ல சென்னையில மட்டும் கடந்த ஆண்டு 2 ஆயிரத்த 183 பேர் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க. இதுக்கு அடுத்தபடியா, பெங்களூருவில் ஆயிரத்து 989 பேரும் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்க.  கொண்டுள்ளனர். வறுமை, வேலையின்மை போன்றவைகளால  ஏற்படற மனஅழுத்தமே, பெரும்பாலாவங்களை தற்கொலைக்கு த தூண்டறதா சொல்றாங்க.  கடந்த 2011ம் ஆண்டு இந்த காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டவங்களோட எண்ணிக்கை 41 ஆக இருந்துச்சு. இது 2012ல் 176 ஆக உயர்ந்திருக்கு.

கடந்த 2012ம் ஆண்டு நாடு முழுக்க 14 ஆயிரத்து 151 முதியவர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துக்கிட்டாங்களாம்.  முதியவர்கள் தற்கொலையிலும் தமிழகம்தான் முதலிடமாம்.  எய்ட்ஸ், தீராத நோய், வலி போன்ற பிரச்சினைகளால் 25.6 சதவிகிதம் பேர் தற்கொலை செய்துக்கிட்டாங்க.  இந்த காரணங்களுக்காக, தமிழ்நாட்டில் 20.8 சதவீதம் பேர் தற்கொலைச் சாவை நாடியிருக்காங்க.  காதல் தோல்வி, பரிட்சையில் பெயில்  இந்த காரணங்களால அதிக அளவுல தற்கொலை முடிவினை தேர்ந்தெடுத்திருக்காங்க. குடும்பப் பிரச்சினையில் உணர்ச்சி வசப்பட்டு தற்கொலை செய்துக்கிட்டவங்க. 99 பேர். இதுல 47 பேர் பெண்கள்.

தற்கொலையை கோழை எடுக்கற தைரியமான முடிவுன்னு சொல்லுவாங்க.. இது எந்த அர்த்தத்துல சொல்லப்பட்டது தெரியலை. ஆனா.. எந்த விதத்துல பாத்தாலும் இது தப்பான முடிவு. தற்கொலை சாவுகளை தடுக்க அரசாங்கமும், சமுக ஆர்வலர்களும் ஓரணியில சேரணும். 


விரைவில் முதலிடம்

உலகத்துலயே மக்கள் தொகையில முதல்ல இருக்கற நாடு சீனான்னு பாட புத்தகத்துல படிச்சது.. இப்போ.. அந்த சாதனையை நம்ம நாடு செஞ்சிடும் போல.. இதை நான் சொல்லலைங்க.. ஐக்கிய நாடுகள் சபை சொல்லியிருக்கு. வரும் 2028-ம் ஆண்டுல இந்த சாதனை நடந்துடுமாம். இது சம்பந்தமா ஐ.நா. சபை உலக மக்கள் தொகை பத்தின அறிக்கை ஒண்ணை அண்மையில வெளியிட்டுச்சு.. 

அதுல.. உலக மக்கள்தொகை அடுத்த மாசம் 720 கோடியாக அதிகரிக்கும்னு சொல்லப்பட்டிருக்கு. இது 2100ஆம் ஆண்டுல 1090 கோடியாக உயருமாம். வளர்ந்த நாடுகளை விட  வளரும் நாடுகளில்தான் மக்கள்தொகை வளர்ச்சி அதிகமாக இருக்கும்னும்,  குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் இது 50 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும்னும் அந்த அறிக்கையில தெரிவிக்கப்பட்டிருக்கு. இந்திய மக்கள்தொகை வரும் 2028 ம் ஆண்டல  145 கோடியாக இருக்குமாம். அதாவது.. சீனாவை மிஞ்சிடுமாம். 

மேலும் அந்த அறிக்கையில் என்ன சொல்லியிருக்காங்கன்னா..  ஒட்டுமொத்தமா உலகின் மக்கள்தொகை வளர்ச்சி இப்போது சரிஞ்சிக்குட்டு வந்தாலும், சில வளரும் நாடுகள்ல, குறிப்பா ஆப்பிரிக்காவுல மக்கள்தொகை வளர்ச்சி வேகமாக இருக்கு.  இப்போ தொடங்கி,  வரும் 2050 ஆம் ஆண்டு வரைக்கும், வளர்ந்த நாடுகளின் மக்கள்தொகை மாறாமல் சுமார் 130 கோடியாவே இருக்கும். அதுக்கு மாறா,  குறைந்த பொருளாதார வளர்ச்சி கொண்ட 49 நாடுகளோட  மக்கள்தொகை 2013இல் 90 கோடியில் இருந் து, 2050ஆம் ஆண்டில் இரு மடங்காக, அதாவது 180 கோடியாக உயரும்.  நைஜீரியாவின் மக்கள்தொகை வரும் 2050ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மக்கள்தொகையை மிஞ்சிடும்னு எதிர்பார்க்கப்படுது. 

எதிர்வரும் ஆண்டுகள்ல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மக்களின் ஆயுளும் அதிகரிக்கும்.  உலக அளவுல 2045-2050 காலகட்டத்தில, மக்களோட ஆயுள் சராசரியா  76 ஆண்டா அதிகரிக்குமாம்.  2095-2100 காலகட்டத்தில இது  82-ஆக இருக்கும்னும் எதிர்பாக்கறாங்க.  உலகெங்கிலும் உள்ள 233 நாடுகள் மற்றும் பகுதிகளின் மக்கள்தொகை குறித்த தகவல்களின்படி இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கு.

ஹேப்பி பர்த்டே டூ யூ

‘ஹேப்பி பர்த்டே டூ யூ ன்னு யாரும் சத்தம் போட்டு இனிமே பாட முடியாது போல இருக்கு. 

உலகம் முழுக்க குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுன்னா.. அது இந்த ‘ஹேப்பி பர்த்டே டூ யூ ங்கற   பிறந்த நாள் வாழ்த்து பாட்டுதான். இந்த பாட்டு எழுதி இசையமைக்கப்பட்டு 120 வருஷம் ஆயிடுச்சி.  1893ம் ஆண்டு ‘குட் மார்னிங் டு ஆல் ‘ என்ற பாடல் அமெரிக்காவின் பேட்டி மற்றும் மைல்ட்ரெட் ஹில் சகோதரிகளால் உருவாக்கப்பட்டு அறிமுகப்பட்டுச்சு.  இதை அடிப்படையா வெச்சு,  ஹேப்பி பர்த்டே டு யூ ங்கற பாட்டு உருவாக்கப்பட்டுச்சு. 

இப்போ விஷயம் என்னன்னா... இந்த பாட்டு யாக்குச் சொந்தம்னு சர்ச்சை வெடிச்சிருக்கு.. அமெரிக்காவில் உள்ள வார்னர் சேப்பல் இசை குழு நிறுவனம்,  ஹேப்பி பர்த்டே டு யூ பாட்டு எங்களுக்குத்தான் சொந்தம், இதுக்கு கோடி கணக்குல செலவு பண்ணி அதோட உரிமையை வாங்கியிருக்கோம்.. அதனால.. எங்க அனுமதி இல்லாம யாரும் இதை பயன்படுத்தக் கூடாது அப்படின்னு சொல்லிக்கிட்டு வருது... இந்த பாடலை பயன்படுத்தினவங்கக் கிட்ட பல கோடி ரூபாய் பணமும் வசூல் பண்ணியிருக்காங்க.  

இது சட்டவிரோதம்னு பல தரப்புல இருந்தும் கண்டனக் குரல் எழுந்திருக்கு.. மேலும்.. இந்த பாட்டு உலகம் முழுக்க இருக்கற பொதுமக்கள் அனைவருக்கும் சொந்தமானதுன்னு உத்தரவிடக் கோரி ஒரு தரப்பினர் கோர்ட்ல வழக்கு போட்டிருக்காங்க.  

தீர்ப்பு யாருக்கு சாதகமா வரும்னு தெரியலை.. அதுவரைக்கும்.. யாருக்காவது பிறந்தநாள் சத்தம்போட்டு பாடாதீங்க.. 
Friday, 14 June 2013

50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள்

இந்தியாவில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு இந்தியாவில் எத்தனை குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்று ஆய்வு மேற்கொண்டது. அதில் நம் நாட்டில் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. 

 நாட்டிலேயே அதிகமாக உத்தரகண்ட் மாநிலத்தில் 17.5 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தப்படியாக மேற்கு வங்கத்தில் 5.5 லட்சம் குழந்தை தொழிலாளர்களும், ராஜஸ்தானில் 4.05 லட்சம் பேரும், குஜராத்தில் 3.9 லட்சம் பேரும் உள்ளனர். 
    சர்வதேச தொழிலாளர் அமைப்பு 2013ம் ஆண்டை குழந்தை தொழிலாளர் பிரச்சனையை எதிர்த்து போராடும் ஆண்டாக அறிவித்துள்ளது. 
உலகின் மிக வயதான நபராக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த ஜிரோமேன் கிமுரா, ஜுன் 12 -ம் தேதி, தமது 116 வயதில் மரணமடைந்தார்.  ஜிரோமேன், போஸ்ட்மேனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 116 வயதான அவர் உலகின் மிக வயதான மனிதர் என்ற பெருமையை கடந்த டிசம்பரில் பெற்றவர். கியோடாங்கோவில் அவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவர் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்,  அவர் காலமானார். 

இவருக்கு அடுத்தபடியாக, ஜப்பானின் ஒசாகா நகரைச் சேர்ந்த 115 வயது பெண்ணான மிசாவோ ஒகாவா உலகின் வயதான பெண்ணாக அறிவிக்கப்பட்டுள்ளார். சீனாவில் 127 லுவோ மெய்ஜென் என்ற பெண் நேற்று முன்தினம்தான் இறந்தார். இவருடைய வயதை நிரூபிக்கும் சான்றுகள் சீனாவில் அங்கீகரிக்கப்பட்டபோதும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர் இறந்த அடுத்த நாளிலேயே ஜிரோமேனும் இறந்துள்ளார்.

ஜூலை 15-ஆம் தேதியோடு ' தந்தி' சேவைக்கு மூடு விழா
தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றிவந்த "தந்தி' (டெலிகிராம்) சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதியோடு நிறுத்திவிடுமாறு அனைத்து மாநில மற்றும் வட்ட அலுவலகங்களுக்கு பி.எஸ்.என்.எல். நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தொலைபேசி, செல்பேசி (எஸ்.எம்.எஸ்.), கம்ப்யூட்டர் (இ-மெயில்), "ஸ்மார்ட் ஃபோன்' என தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்து வரும் அபார வளர்ச்சி, 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவைக்கு மூடு விழா காண வைத்துள்ளது.

முன்னர் சமிக்ஜைகள் மூலமும், மனிதர்கள் மற்றும் பறவைகள் மூலமும் தகவல்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறைகளில் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அனுப்புவதில் மிகுந்த கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த கால தாமதத்தைக் குறைக்கும் வகையில், 19-ஆம் நூற்றாண்டில் மின் தந்தி சேவை கண்டுபிடிக்கப்பட்டது.

ரஷியாவைச் சேர்ந்த பவுல் ஷில்லிங் என்பவர்தான், 1832-இல் மின்காந்த அலைகளின் மூலம் செயல்படும் தந்தி சேவையை முதன்முதலில் கண்டுபிடித்தார்.

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இருந்து அவருடைய குடியிருப்பின் இரு அறைகளில் தனித் தனி கருவிகளைப் பொருத்தி, மின் காந்த அலைகள் மூலம் நீண்ட தொலைவுக்கு தகவல் அனுப்பும் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி மின் தந்தி சேவைக்கு அடித்தளமிட்டார்.

மோர்ஸ் கோட்: அதன் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த எஃப்.பி. சாமுவேல் மோர்ஸ் என்பவர் 1837-இல் முழுமையான மின் தந்தி சேவையைக் கண்டுபிடித்து, வெற்றிகரமாக சோதனையும் செய்தார். இதற்கு உதவியாக அவருடைய உதவியாளர் ஆல்ஃபிரட் வெயில் "மோர்ஸ் கோட்' சிக்னலைக் கண்டுபிடித்தார்.

இவருடைய கண்டுபிடிப்பு மூலம், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் 3 கி.மீ. தொலைவுக்கு முதல் தந்தி 1838 ஜனவரி 11-ஆம் தேதி அனுப்பப்பட்டது. இவருடைய கண்டுபிடிப்பே, உலக நாடுகளால் இன்றுவரை பின்பற்றப்பட்டு வரும் தந்தி சேவைக்கு அடித்தளமானது.

இந்தியாவில் தந்தி சேவை: இந்தியாவைப் பொருத்தவரை 1850-ஆம் ஆண்டிலேயே தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் பயன்பாட்டுக்காக, கொல்கத்தா - டயமண்ட் ஹார்பர் இடையே சோதனை அடிப்படையில் தந்தி கேபிள் போடப்பட்டு பின்னர் 1851 முதல் செயல்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

1902 முதல் வயர்-லெஸ் தந்தி சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய அஞ்சல் துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவை, 1990-இல் பி.எஸ்.என்.எல். நிறுவனம் உருவாக்கப்பட்டு பிறகு அந்த நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.

தொலைபேசி சேவை பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகும், தந்தி சேவை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. அந்த அளவுக்கு அவசரச் செய்திகளை பறிமாற்றம் செய்வதில் தந்தி சேவை பெரும்பங்கு ஆற்றி வந்தது.

தந்தி என்றாலே கிலி: குறிப்பாக தொலைபேசி சேவை இல்லாத காலத்தில், உறவினர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டிய சோக மற்றும் மகிழ்ச்சியான செய்திகளைத் தெரிவிக்க இந்தச் சேவையையே மக்கள் நம்பியிருந்தனர். குறிப்பாக, சொல்லப்போனால் அப்போது எந்த வசதிகளும் இல்லாத கிராமப் பகுதிகளுக்கு உறவினரின் இறப்புச் செய்தியை தெரிவிப்பதற்கான ஒரே தகவல் தொழில்நுட்பமாக தந்தி சேவை மட்டுமே இருந்தது. 
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு தந்தி வந்திருக்கிறது என்றால், அதைப் படிப்பதற்கு முன்பே அந்த கிராமம் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துவிடும். அதுமட்டுமன்றி, வர்த்தக ரீதியிலான தகவல் தொடர்பிலும் தந்தி முக்கிய பங்காற்றி வந்தது. வர்த்தகர்கள் இதுபோன்று வரும் தந்தியை, சட்ட ஆவணமாகவும் பாதுகாத்து வைத்தனர்.

இதுபோன்று மக்களிடையே முக்கிய அங்கமாக திகழ்ந்து வந்த இச்சேவையின் பயன்பாடு 2003-ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. செல்பேசிகள், இ-மெயில் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு, தந்தி சேவை பயன்பாடு முற்றிலுமாக நின்றுவிட்டது.

அதாவது, 2009-10-ஆம் ஆண்டுகளில் தந்தி சேவை பயன்பாடு 100 சதவீதம் நின்றுவிட்டது. இதன் காரணாக 2005-இல் 8 பேராக இருந்த தந்தி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை 2010-இல் அலுவலகத்துக்கு ஒரு தந்தி ஆபரேட்டர் என்ற அளவில் குறைக்கப்பட்டது' என்றார் பி.எஸ்.என்.எல். அதிகாரி ஒருவர்.

தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவை 99 சதவீதம் பயன்படுத்தப் படாததைத் தொடர்ந்து, இச்சேவையைக் கைவிட பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தந்தி சேவை பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்ட காரணத்தால், இச் சேவையை வரும் ஜூலை 15-ஆம் தேதி முதல் நிறுத்திவிடுமாறு தொலைத்தொடர்பு இயக்குநரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜூலை 15-ஆம் தேதி முதல் தந்தி சேவை இருக்காது 

இன்று எத்தனை தகவல் நுட்ப வசதிகள் வந்துவிட்டாலும் காலம் காலமாக மக்களோடு ஒன்றியிருந்த தந்தி சேவைக்கு கனத்த இதயத்தோடு விடை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.எந்தெந்த நாடுகளில் தந்தி சேவை உள்ளதுஉலக அளவில் 175 ஆண்டுகள் பழமைவாய்ந்த தந்தி சேவை ரஷியா, ஜப்பான், பெல்ஜியம், கனடா ஜெர்மனி, மெக்ஸிகோ, பஹ்ரைன், ஸ்லோவேனியா, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்றளவும் செயல்பாட்டில் உள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியா, மலேசியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் தந்தி சேவை நிறுத்தப்பட்டுவிட்டது.

பிரிட்டிஷ் அரசு தந்தி சேவையை கடந்த 2003-இல் தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டது.

அமெரிக்க அரசும் 2006 ஜனவரி 27 முதல் தந்தி சேவை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது.

நேபாளத்தில் 2009 ஜனவரி 1 முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

ஆஸ்திரேலிய அரசு 2011 மார்ச் 7-ஆம் தேதி தந்தி சேவையை நிறுத்தி விட்டது. இருந்தபோதும் பீச்வொர்த்தில் உள்ள விக்டோரியா நகரில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்காக தந்தி சேவையை வைத்துள்ளது.

மலேசியாவில் 2012 ஜூலை 1-ஆம் தேதி முதல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது.

அயர்லாந்து அரசு 2002 ஜூலை 30 முதல் தந்தி சேவையை நிறுத்தி விட்டது.

நியூசிலாந்தில் 1999-இல் தந்தி சேவை நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால், வர்த்தக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்காக மட்டும் 2003 முதல் மீண்டும் சேவையைத் தொடங்கியுள்ளது.

தீயா வேலை செய்யணும் குமாரு - சினிமா விமர்சனம்சாப்ட்வேர் அலுவலகம் தான் கதைக்களம். 
பெண்கள் வாடையே பிடிக்காத (அதற்கு சில குட்டிக் குட்டி காமெடி பிளாஷ்பேக்குகள் உண்டு) ஹீரோவுக்கு, அவர் பணியாற்றும் அலுவலகத்தில் புதிதாக சேரும் ஹீரோயின் மீது வழக்கம்போல் காதல் வருகிறது. தமிழ் சினிமா இலக்கணப்படி, அதற்கு காமெடியன்கள் அடங்கிய நண்பர்கள் பட்டாளம் உதவி ஏதும் செய்யவில்லை. மாறாக, தனி அலுவலகமே போட்டு, காதலிக்க கற்பதற்கு, ஐ.. மீன் பிடித்த பெண்களை மடக்குவதற்கு,பீஸ் வாங்கிக் கொண்டு சந்தானம் ஐடியாக்களை வழங்குகிறார். அவரிடம் போய் நம் ஹீரோ உதவி கேட்க, (ஐடியா சொல்வதற்கு முன்பே பீஸ் வாங்கிக் கொண்டு) அவரும் உதவுகிறார். திட்டப்படி, இரண்டாம் ஹீரோ உள்ளிட்ட சில பல தடைகளைத் தாண்டி ஹீரோயின் மனதில் இடம்பிடிக்கிறார் ஹீரோ. திடீரென கதையில் ஒரு ட்விஸ்டாக, காமெடியன் சந்தானத்தின் தங்கைதான் ஹீரோயின் என்று தெரியவர, சந்தானத்திற்கு மட்டுமல்லாமல் நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது. பின்னர், காமெடியன் வில்லன் அவதாரம் எடுத்து, ஹீரோவையும், ஹீரோயினை பிரிக்க முயல, நாரதர் கலகம் நன்மையில் முடிவதுபோல, அவரது முயற்சிகள் காதலர்களுக்கு சாதகமாக முடிகின்றன. பின்னர், சுபம்.சுபம். 

அவெஞ்சர் பைக்கில், சந்தானம் என்ட்ரி ஆகும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. ஆனால், ஏனோ அவர்களது எதிர்பார்த்த அளவுக்கு அவரால் ரசிகர்களை சிரிக்க வைக்க முடியவில்லை. வழக்கமான அவரது நையாண்டி வசனங்கள் மூலம் லேசாக புன்னகைக்க வைக்கிறார். "காலைல தென்னங்கன்னை வெச்சிட்டு, சாயங்காலம் சட்னி எதிர்பார்க்கறே", "செல்வராகவன் படம் செகண்ட் ஹீரோ போல அழகா இருக்கான்" என்பது மாதியான வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. 

ஹீரோயின் வேஷம் கட்டியுள்ள ஹன்சிகா வழக்கம்போல அழகாக இருக்கிறார். சில சீன்களின் பப்ளியாகவும், சில சீன்களின் இளைத்தும் காணப்படுவது ஏனோ. ஹீரோவைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பாய்ஸ் படத்தில் பார்த்த மாதிரியே இருக்கிறார். நடிப்பும் அப்படியேத்தான் இருக்கிறது. 

சுந்தர்.சி. படமாயிற்றே காமெடிக்கு கண்டிப்பாக உத்திரவாதம் இருக்கும் என்று நம்ம்ம்ம்ம்ம்ம்பி தியேட்டருக்குள் போனால், ஏமாற்றம்தான் மிச்சம். லேசாக கிச்சு கிச்சு மூட்டுகிறார். அவ்வளவே.. 

Tuesday, 28 May 2013

உலகின் வயதான மனிதர்

19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்ற ஜப்பானின் ஜிரோமன் கிமுரா என்ற 116 வயது தாத்தா மட்டும் தான் தற்போது உயிருடன் உள்ளார். 

ஜப்பானைச் சேர்ந்தவர் ஜிரோமன் கிமுரா. உலகின் வயதான மனிதர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர். ஜப்பானில் உள்ள அஞ்சலகம் ஒன்றில் 45 ஆண்டுகள் பணியாற்றி கடந்த 1962ம் ஆண்டு கிமுரா ஓய்வு பெற்றார். அவருக்கு 5 குழந்தைகள், 14 பேரப்பிள்ளைகள், 25 கொள்ளுப்பேரப்பிள்கள் உள்ளனர். அவரின் கொள்ளுப்பேரப்பிள்ளைகளுக்கு பிறந்த பிள்ளைகள் 13 பேர் உள்ளனர்.


19ம் நூற்றாண்டில் பிறந்த ஆண்களில் கிமுரா மட்டும் தான் உயிருடன் இருக்கிறார். அதே சமயம் அதே 19ம் நூற்றாண்டில் பிறந்த பெண்களில் 21 பேர் உயிருடன் உள்ளனர். கிமுரா தற்போது கியோடாங்கோவில் தனது 83 வயது மூத்த மருமகள் மற்றும் பேரனின் 59 வயது மனைவியுடன் வசித்து வருகிறார். அந்த இரண்டு பெண்களுமே விதவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, 7 May 2013

சூது கவ்வும் - சினிமா விமர்சனம்
பெட்டிக்கடை ரேஞ்சுக்கு ஆட்களை கடத்தி, அதிகபட்சமாக 45 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து சுயதொழில் செய்துவரும் விஜய் சேதுபதி ஆபத்தில்லாத நல்ல கடத்தல்காரன். பணம் கிடைத்ததும், கடத்தப்பட்டவருக்கு டிப்ஸ் உண்டு. நயன்தாராவுக்கு கோயில் கட்டிவிட்டு சென்னை வரும் இளைஞரும், காலை எட்டுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து முடித்து பயபக்தியோடு தண்ணி அடிக்க அமரும் இளைஞரும், விஜய்சேதுபதியுடன் கூட்டு சேருகிறார்கள். தொழில் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. 

இந்த கோஷ்டியுடன் சாப்ட்வேர் இன்ஜினியர் கூட்டு சேர்கிறார். விஜய்சேதுபதி அன் கோ தங்கள் கொள்கைகளை மீறி, 2 கோடிக்கு ஆசைப்பட்டு அதிகார மட்டத்தில் இருப்பவரின் மகனை கடத்துகிறது. ஆனால், கடத்தப்பட்ட அரசியல்வாதியின் மகனோ இவர்களை விட பக்கா பிராடு என்பது தெரியவருகிறது. நாம் சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தால், கடத்தல் கும்பலை பிடிக்க, என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரம்மா வருகிறார். ரவுடியை பிடித்து, தோட்டத்தில் உயிரோடு புதைப்பது என்று அவரது அறிமுகமே திகிலை ஏற்படுத்துகிறது. 

இன்டர்வெல் வரை விஜய் சேதுபதி கற்பனை காதலியோடு உலா வருகிறார். படத்தில், காதல், மரத்தை சுற்றி டூயட் என்ற அபத்தங்கள் ஏதுமில்லாதது ஆறுதல். விஜய்சேதுபதிக்கு ஏதாவது மனபிறழ்வா என்பது குறித்த விவரங்கள் ஏதும் படத்தில் இல்லை. நாற்பதை கடந்த கெட்டப் எதற்கும் என்றும் புரியவில்லை. 

படம் தொடங்கியது முதல், வசனங்களும், விஜய்சேதுபதி அன் கோவின் கோமாளித்தனங்களும் காமெடி சரவெடி. பிரம்மாவின் என்ட்ரிக்குப் பின்னர், படத்தை சீரியசாக்குவதா, காமெடியை தொடருவதா என்று இயக்குநர் தனது தடுமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். பின்னர், ஒருவழியாக காமெடியே போதும் என்று முடிவுக்கு வந்து, இன்ஸ்பெக்டர், கள்ளத் துப்பாக்கியால் பின்னால் சுட்டுக்கொண்டு, ஆஸ்பத்திரிக்குப் போகிறார். 

கற்பனை காதலி உத்தி நல்ல ஐடியாதான். ஆனால், அதற்கான காரணம் என்று ஏதாவது வைத்திருந்தால், நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. 

நேர்மையான அரசியல்வாதியாக வந்து, மகனைவிட தனது நற்பெயர்தான் முக்கியம் என்று கருதும் கேரக்டரில் எம்.எஸ். பாஸ்கர் அசத்துகிறார். 

சினிமா விமர்சனம் முன்னே பின்னே எழுதி பழக்கம் இல்லை என்பதால், எங்கே ஆரம்பித்து, எங்கே முடிப்பது என்பது தெரியாததால், இத்துடன் முடித்துக்கொள்கிறேன். மொத்தத்தில் படம் ஜாலியாக போகிறது என்பதால், திருட்டி வி.சிடியில் ஸாரி டி.வி.டியில் பார்க்காமல் தியேட்டரில் பார்க்கலாம். 

பின்குறிப்பு 1 -  நீண்ட நாட்களுக்குப் பிறகு.. ம்.. அனேகமாக.. படம் ரிலீசான அன்றே முதல் காட்சி பார்த்த மூன்றாவது படம் இது. ஆனாலும், சோம்பல் காரணமாக விமர்சனம் எழுத சற்றே லேட்டாகிவிட்டது. 

பின்குறிப்பு 2 -  முதல் காட்சி பார்த்த முதல் இரண்டு படங்கள் - காந்தி பிறந்த மண்( விஜயகாந்த்), உதயம் என்.எச்.-4 

இந்த வார குங்குமத்தில்..


Sunday, 21 April 2013

பேஸ் புக்
பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து ஒன்றிரண்டு வருஷம் வரை, அதை வாரத்திற்கு ஒருமுறையோ, மாசத்துக்கு ஒரு முறையோ மட்டுமே திறந்து பாக்கறது என்னோட வழக்கம். அண்மைகாலமாக, தினசரி அதை திறந்து பாக்கலைன்னா, அன்னைக்கு தூக்கமே சரியா வரமாட்டேங்குது. பேஸ் புக்கால என்ன பயன்னு, நேரம் போகாத நேரத்துல யோசிச்சி பார்ப்பேன். ஒண்ணுமில்லைன்னு தோணும். உடனே அந்த கணக்கை முடிச்சிக்கலாம்னு முயற்சிப்பேன். ஆனா, கடைசி நேரத்தில ஏதோ ஒண்ணு, அந்த முயற்சியை தடுத்துடும். 

இப்போ வரைக்கும் பேஸ்புக்ல நான் வெறும் பார்வையாளன் மட்டும்தான். பெருசா ஸ்டேட்டசோ, கமெண்ட்டுகளோ போட்டதில்லை. அரிதாக போடற ஸ்டேட்டசுகளுக்கு ஒரிரு லைக்குகள் மட்டுமே விழும். அவ்வளவுதான் நம்ம செல்வாக்கு. அதைப்பத்தி நான் கவலைப்படறதும் இல்லை. வேலை காரணமா, வெளியூருக்கு பிரிஞ்சு போன நண்பர்களை தொடர்பில் வெச்சிருக்க உதவுதுங்கறது மட்டும்தான் பேஸ்புக்கினால் நான் கண்ட பலன். 

சரி எதுக்கு இந்தனை பீடிகைங்கறீங்களா ? 
அண்மையில பேஸ்புக் பத்தின ஆய்வு ஒண்ணை படிச்சேன். 

பேஸ்புக்ல லைக் போடற ஒருத்தரோட ரசனையை வெச்சு, அவரோட பாலினம், அரசியல் சார்பு நிலை, புத்திசாலித்தனம் வரை எல்லா குணாம்சங்களையும், முழுமையான ஆளுமையையும் கணிக்கமுடியும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்களாம். 

ஒருத்தர் தனது ஃபேஸ்புக்கில் எதையெல்லாம் விரும்புகிறார் என்று தொகுத்துப் பார்த்தால் அவர் ஆணா பெண்ணா, ஒருபாலுறவுக்காரரா என்பது முதல், அவர் எந்த அரசியல் கட்சி ஆதரவாளர், என்னவிதமான பொருளாதார கருத்தாளர், எந்த மதத்தவர், அவரது புத்திக்கூர்மையின் அளவு என்ன என்பது வரை ஒருவரின் பெரும்பான்மை குணாம்சங்கள் மற்றும் ஆளுமைகளை சரியாக கணித்துச் சொல்லமுடியும் என்று இந்த சொல்லியிருக்காங்க.

இந்த ஆய்வுக்காக சுமார் ஐம்பத்தி எட்டாயிரம் ஃபேஸ்புக் தகவல்கள் பயன்படுத்தப்பட்டன. இவர்கள் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னவிதமான விஷயங்களை விரும்பினார்கள் என்கிற விவரங்களும், இவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்கிற விவரங்களையும் சேகரித்த ஆய்வாளர்கள், இவற்றை முதலில் சைக்கோமெட்ரிக் டெஸ்ட் எனப்படும் உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தினார்கள்.

அடுத்ததாக, இந்த இவர்கள் விரும்பி லைக் போட்ட விவரங்களை அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கணக்கிடும் மென்பொருளில் உள்ளீடு செய்தார்கள். உளவியல்தன்மைகளை கண்டறியும் பரிசோதனை முடிவுகளையும், அல்கோரிதம் எனப்படும் நெறிமுறை கணக்கிடும் முறையில் கிடைத்த முடிவுகளையும் ஒன்றுக்கொன்று பொருத்திப்பார்த்தார்கள்.    

இதில் கிடைத்த முடிவுகள் தங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்ததாக தெரிவிக்கிறார் இந்த ஆய்வின் முடிவுகளை தொகுத்தவரான டேவிட் ஸ்டில்வெல். அல்கோரிதம் கணிதக்கணக்கின்படி இந்த பரிசோதனையில் பங்கேற்ற ஃபேஸ்புக் பக்கத்தில் யாரெல்லாம் ஆண்கள் என்பதை கண்டறிவதில் 88 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

அதேபோல ஃபேஸ்புக்கில் எத்தனைபேர் ஆப்ரிக்க வம்சாவளியினர் என்பதை 95 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது. வெள்ளையினத்தவர் யார் என்பதை 85 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

இவர்களின் மத அடையாளங்களை கண்டுபிடிப்பதில் கிறித்தவர்கள் யார், முஸ்லீம்கள் யார் என்பதை 82 சதவீதம் சரியாக கணிக்க முடிந்தது.

ஒருவர் போதைவஸ்துக்களை பயன்படுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதையும் 65 சதவீதம் முதல் 73 சதவீதம் சரியாக கணிக்கமுடிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல் ஒருவருக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்பதையும் லைக் போடுவதை வைத்து தெரிந்து கொள்ளலாம். இந்த கணக்கீடு விளம்பர நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சாதகங்களை அளிக்கிறது. உதாரணமாக, இந்த கணக்கீட்டை பயன்படுத்தி, விளம்பர நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட முகநூலரை குறிவைத்து தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த முடியும். இது வர்த்தக ரீதியில் அவர்களுக்கு சாதகமான விஷயம்.    

அதேசமயம், தனிமனிதரின் ஃபேஸ்புக் செயற்பாடுகளை அவருடைய வெளிப்படையான விருப்பம் இல்லாமலே மற்றவர்களால் பார்க்க முடியும், பயன்படுத்த முடியும், குறிப்பிட்ட நபரின் அந்தரங்க அடையாளங்களை தெரிந்துகொள்ள முடியும் என்கிற நிலைமை, தனிமனித சுதந்திரத்திற்கு மிகப்பெரிய சவாலாக விளங்கும் என்கிற கவலைகளும் எழுந்துள்ளன.

இதை தடுப்பதற்கு சில எளிய வழிகளும் இருக்கின்றன என்றும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். உதாரணமாக, ஃபேஸ்புக்கில் ஒருவர் எதையெல்லாம் விரும்பியிருக்கிறார் என்பதை காட்டும் லைக்குகள் பொதுவாக மற்றவர்கள் பார்க்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஃபேஸ்புக்கில் இருக்கும் அந்தரங்கத்தை பாதுகாக்கும் அடிப்படை கட்டமைப்புக்கு சென்று, இந்த லைக்குகளை மற்றவர்களுக்கு தெரியாதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவுகள், ஃ பேஸ்புக்கில் அதிகரித்துவரும் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை மேலும் அதிகப்படுத்தக்கூடும்.  


Thursday, 18 April 2013

இன்று உலக பாரம்பரிய தினம்


நினைவு சின்னங்களுக்கும், புராதன இடங்களுக்கான உலக பாரம்பரிய தினம் (World Heritage Day, April 18 ) ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தக் கொண்டாட்டம் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் தொடங்கி வைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் ஏப்ரல் 18 ஆம் தேதியை சர்வதேச நினைவிடங்கள் தினமாக (International Day for Monuments and Sites )கொண்டாட பரிந்துரைத்தது. அடுத்த ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் இதனை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக மாறியது. ஒரு நாட்டுக்கு அழகும், பெருமையும் சேர்ப்பது அதன் பழங்கால நினைவுச் சின்னங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்களே. இந்த நாளில் என்ன செய்யலாம் என்று அந்த மாநாடு சிலவற்றை பரிந்துரைத்துள்ளது. 

* பழங்கால கட்டட பெருமைகளை கண்காட்சிகளாக அமைத்து விவரிப்பது

*கட்டணம் ஏதுமில்லாமல் இந்தத் தினத்தில் நினைவிடம், மற்றும் அருங்காட்சியங்களில் பொது மக்களை அனுமதிப்பது

* இந்தத் தினத்தின் தேவை பற்றி பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரிவிப்பது 

* பொது இடங்களில் விவாதங்கள் நடத்துவது 
 பாரம்பரிய பெருமைகளை பறைசாற்ற்றும் புத்தகங்கள், தபால் தலை முத்திரைகள் போன்றவற்றை அச்சிடுவது

*பாரம்பரியத்தை பேணி பராமரித்து வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்குவது 

* பள்ளிக்கூட மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மத்தியில் பாரம்பரியத்தின் பெருமைகளை எடுத்துச் செல்வது..! நிகழ்ச்சிகள் நடத்துவது 

மனித இனத்துக்கே பொதுவானவை இயற்கை வளங்கள். ஆனால் கவனிப்பாரற்று இந்த பழங்கால நினைவுச் சின்னங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.  உலகின் மிக முக்கிய நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனெஸ்கோ உள்ளிட்ட அமைப்புகள் முயற்சி செய்து வருகின்றன. நினைவுச் சின்னங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் உலக பராம்பரிய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

Monday, 8 April 2013

அன்பை அடையும் வழி

ஒரு முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன், கொஞ்ச நாட்களாக  தன்னிடம் அன்பாய் நடந்து  கொள்ளவில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.

முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.

மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து வந்து விட்டாள். மறுநாள் சென்றாள் புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது. ஆனாலும் திரும்பி விட்டாள்.

அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.

புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.

முனிவர் கூறினார் இனி உனக்கு மூலிகை தேவையில்லை. நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய். அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா, என்ன?''

முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.

நம் பயங்களும் சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத் தடையாக இருக்கக்கூடாது.!


Wednesday, 20 March 2013

போப் முதலாம் பிரான்சிஸ்கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவாக (போப்) அர்ஜெண்டினாவைச் சேர்ந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக் லியோ தேர்வு செய்யப்பட்டு, 'முதலாம் பிரான்சிஸ்'ங்கற பெயரோட 266 வது போப்பா கடந்த 19-ம் தேதி பதவி ஏற்றார்.

உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழல் உருவானது. வாடிகன் நகரத்தில் உள்ள சிஸ்டன் தேவாலயத்தில், 115 கார்டினல்கள் கூடி ரகசிய ஓட்டு பதிவை நடத்தினார்கள்.இந்த தேர்தலில் அர்ஜெண்டினாவைச் சேர்ந்த 76 வயதான ஐ£ர்ஜ் மரியோ பெர்கோக் லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். தேர்வு 

போப்பாண்டவரா தேர்வு செய்யப்படுபவர்கள், தங்கள் இயற்பெயரை மாற்றி புதிய பெயரை சூட்டிக்கொள்வது வழக்கம் அதன்படி புதிய போப் தனது பெயராக பிரான்சிஸ் என்பதை தேர்வு செய்துள்ளார். ஏழைகளை நேசித்த புனித பிரான்சிஸ் அசிசி நினைவாகவே அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தா சொல்லியிருக்காரு. 12-13ஆம் நூற்றாண்டில் இத்தாலியின் அஸிஸி பகுதியில் வாழ்ந்த புனித பிரான்ஸிஸ், ஏழைகளிடம் மிகுந்த அன்பு காட்டியவர். அமைதியின் பிரதிநிதியாக விளங்கியவர். சக குருவான பிரேஸிலைச் சேர்ந்த என் நண்பர், நான் போப்பாக தேர்வானதும், ஏழைகளை மறந்து விடாதே'ன்னு சொன்னாரு, அப்போ, உடனடியா புனித பிரான்சிஸ்தான் எனக்கு நினைவுக்கு வந்தார். அதனால அந்த பேரை தேர்வு செய்தேன் என்று கூறியுருக்கிறார்.   

இதுவரை இருந்த போப்புகளுக்குப் பின்னால, 2-ம் போப் ஜான் பால், 16-ம் பெனடிக்ட்'னு ஒரு எண் இருக்கும். ஆனா தற்போது தேர்வாகியிருக்கிற புது போப்புக்கு அந்த மாதிரி எண் இருக்காது. ஆனாலும் அவர் முதலாம் பிரான்சிஸ்னு அழைக்கப்படுவார். 

போப் முதலாம் பிரான்சிஸ் ஐரோப்பியர் அல்லாத முதல் போப்னு சொல்றாங்க. லத்தீன் அமெரிக்கா நாட்டிலேர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காரு. ஆனாலும், அதுல உண்மையில்லை..8-ம் நூற்றாண்டுல, சிரிய நாட்டைச் சேர்ந்தவரு போப்பா இருந்திருக்காருன்னு சொல்றாங்க. அவர் பெயர் போப் 3-ம் புனித கிரகெரி.இவரு கி.பி. 731 முதல் 741 வரை போப்பாக இருந்தாரு. அதேபோல பெத்லேகம், ஜெருசலேம், லிபியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களும் கூட இதுக்கு முன்னாடி போப்பா இருந்திருக்காங்க.   

புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்ஸ் நகரில் மேரியோ ஜோஸ்-ரெஜினா மேரியோ தம்பதிக்கு 5 பிள்ளைகளில் ஒருவராக 1936-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந்தேதி பிறந்தாரு. ரசாயனத்தில் முதுநிலை பட்டம் பெற்றவரு. பின்னர் இறையியல் கல்வி பயின்று இறையியல் பட்டம் பெற்றிருக்காரு. 

1969-ம் ஆண்டு மதகுருவாக திருநிலைப்படுத்தப்பட்டாரு. 1998-ம் ஆண்டு பியூனஸ் அயர்ஸ் ஆர்ச் பிஷப் ஆனார். 2001-ம் ஆண்டு கர்தினால் ஆக உயர்ந்தாரு.

 கடந்த முறை போப் 16-ம் பெனடிக்ட் தேர்வு செய்யப்பட்டபோது, இவருக்கு இரண்டாவது இடம் கிடைச்சது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் பெனடிக்டுக்கும் போட்டி கடுமையா இருந்தப்போ, தனக்கு வாக்களிக்க வேண்டாம்னு கார்டினல்களை அவரு கேட்டுக்கிட்டாராம். 

இவரு ஸ்பானிஷ், இத்தாலிய மொழி மற்றும் ஜெர்மானிய மொழிகளில் சரளமாகப் பேசுவாரு. அவரது இளம்பருவத்தில் நோய்தொற்று ஏற்பட்டு ஒரு நுரையீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாகவும், இப்போ அவரு ஒரேயொரு நுரையீரலில் உயிர் வாழ்வதாக சொல்லப்படுது.

மேலும், மக்களின் போப்பாக பார்க்கப்படுகிறாரு. காராணம், இவர் சாதாரண மக்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டவரு, எளிமையானவர்னு சொல்றாங்க. குறிப்பா அர்ஜென்டினாவில் இவரை ரொம்பவும் புகழ்ந்து தள்ளறாங்க. டவுன் பஸ்லதான் பயணம் செய்வாராம். தனக்கான சாப்பாட்டை அவரே சமைச்சுக்குவாராம். ஆர்ச் பிஷப்பா இருந்தப்போ, மாளிகையில வசிக்காம சாதாரண வீட்டுலதா குடியிருந்தாராம். 

முந்தைய போப்புகளைப் போலவே இவரும் அபார்ஷன், ஓரினச் சேர்க்கைத் திருமணம் ஆகியவற்றுக்கு எதிரானவர்னு சொல்றாங்க. அபார்ஷன் சட்டம் தொடர்பாக அர்ஜென்டினா அதிபர் கூடவே மோதியிருக்காராம். 

புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அங்கு குழுமியிருந்த மக்களுக்கு ஆசி வழங்கி உரையாற்றிய போப் முதலாம் பிரான்சிஸ், 'உலக அமைதிக்காகவும், சகோதரத்துவம் தழைக்கவும் பிரார்த்தனை செய்வதாகவும், உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமை நிலவ வேண்டும்'ன சொன்னாரு. 


புதிய போப் தேர்வு செய்யப்படுவது எப்படி ?

"கான்கிளேவ்' எனப்படும் கார்டினல்களின் கூட்டத்தின் மூலம், புதிய போப் தேர்வு செய்யப்படுகிறார். ரோமன் கத்தோலிக்கர்களின் தலைவராக, புனிதமாக போப் மதிக்கப்படுகிறார். அவரை தேர்வு செய்யும் முறை பழைமையானது. இந்த முறையை, 1274ம் ஆண்டு போப் பத்தாம் கிரிகோரி என்பவர் தோற்றுவித்தார். போப்பாக இருப்பவர் இறந்தாலோ, பதவி விலகினாலோ அந்த இடம் காலியாகிவிடும். அடுத்தவரை தேர்வு செய்யும் வரை, அந்த இடம் "வெற்று அரியணை' என அழைக்கப்படும். இக்காலகட்டத்தில் புதிய போப்பை தேர்வு செய்ய, "கான்கிளேவ்' கூட்டப்படும். உலகம் முழுவதிலும் உள்ள கார்டினல்களுக்கு, அழைப்பு அனுப்பப்படும். ஓட்டளிக்க ஒன்றுகூடும் கார்டினல்களின் வயது 80க்குள் இருக்க வேண்டும். போப் தேர்தலில், வேட்பாளர் பெயர் முன்னரே அறிவிக்கப்பட மாட்டாது. வாடிகனில் ரகசியமாக சிஸ்டைன் சிற்றாலயத்தில் கூடும் "கான்கிளேவ்' கூட்டத்தில், பிடித்தவருக்கு கார்டினல்கள் ஓட்டளிப்பர். மூன்றில் இரண்டு பங்கு ஓட்டு பெறுபவர் புதிய போப் ஆகலாம். ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றவரிடம் கருத்து கேட்கப்படும். அவர் ஒத்துக்கொண்டால் போப்பாக தேர்தெடுக்கப்படுவார். புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டால், சிஸ்டைன் சிற்றாலயத்தின் புகைபோக்கி வழியே வெண்புகை வெளியிடப்படும். ஒருவருக்கு பெரும் பான்மை கிடைக்காவிட்டாலோ, தேர்வு செய்யப்பட்டவர் பதவியை மறுத்தாலோ கரும்புகை வெளியிடப்படும். "கான்கிளேவ்' கூட்டம் நடக்கும் போது, சிஸ்டைன் சிற்றாலயத்தில் வெளியுலக தொடர்பு துண்டிக்கப்படும். புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும்வரை இக்கட்டுப்பாடு இருக்கும். மூன்று நாட்களுக்குள் முடிவு எட்டப்படாவிட்டால், ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் ஓட்டெடுப்பு நடக்கும். ஒருவர் பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று போப் ஆண்டவராக சம்மதம் தெரிவித்தால், தனது பெயரை தானே தேர்வு செய்வார். போப் ஆன பின், பெயரை மாற்றிக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. பின் போப்புக்கான பாரம்பரிய ஆடைகளுடன், வாடிகன் தேவாலயத்தில் தோன்றி முதல் செய்தியை மக்களுக்கு வழங்குவார். போப் ஆண்டவர்: ஏசு கிறிஸ்து விண்ணுலகம் செல்லும் முன், கிறிஸ்தவர்களை வழிநடத்தும் பொறுப்பை முதன்மை சீடர் புனித பீட்டரிடம் ஒப்படைத்தார். புனித பீட்டரின் கல்லறையின் மீதுதான், வாடிகன் தேவாலயம் அமைந்துள்ளது. புனித பீட்டரிடம் ஏசு கிறஸ்து ஒப்படைத்த பணியை, அவரது வாரிசாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரோம் நகர ஆயர்கள் செய்து வந்தனர். இவர்களில் முதன்மையானவரே போப் என அழைக்கப்படுகிறார்.போப் தேர்வு - தேதி வாரியாக


11.2.2013: போப் 16-ம் பெனடிக்ட் தனது முதுமை காரணமாகவும், பணிச்சுமையாலும் பதவியை தொடர முடியவில்லை எனவும், பதவி விலக விரும்புவதாகவும் கூறினார். 

28.2.2013: போப் 16-ம் பெனடிக்ட் பதவியிலிருந்து வெளியேறினார். வாடிகன் நகரில் இருந்தும் புறப்பட்டார். 

5.3.2013: போப் 16-ம் பெனடிக்ட்டுக்கு பதில் புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் அறிவிப்பு வெளியானது. 

8.3.2013: போப் ஆண்டவரை தேர்வு செய்யும் 115 கர்தினால்களுக்கும் அறிவிப்பு அனுப்பப்பட்டது. அதில், 12-ந்தேதி கூட்டம் நடைபெறும் என்றும், அதில் பங்கேற்று புதிய போப்பை தேர்வு செய்யும்படியும் கூறப்பட்டிருந்தது. 

12.3.2013: புதிய போப் தேர்வு கூட்டம் புனித பீட்டர் தேவாலயத்தின் சிஸ்டைன் சேப்பலில் தொடங்கியது. அன்று முடிவு எட்டப்படவில்லை. 

13.3.2013: காலையில் நடந்த கூட்டத்தில் முடிவு ஏற்படாததால் மாலையில் மீண்டும் கூட்டம் நடந்தது. அன்று இரவு 11.38 மணிக்கு புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்பட்டார். 

13.3.2013: இரவு 12.10-க்கு சிஸ்டைன் சேப்பலின் புகை போக்கி மூலம் புதிய போப் தேர்வு முடிவு வெண்புகை மூலம் அறிவிக்கப்பட்டது.

13.3.2013: இரவு 12.45 மணிக்கு கர்தினால் ஜார்ஜ் மரியோ போப் ஆண்டவருக்கான புதிய உடைகளை அணிந்தார். 

13.3.2013: இரவு 12.55 புதிய போப் ஆண்டவர் ஜார்ஜ் மரியோ வாடிகன் பீட்டர் தேவாலய பால்கனியில் தோன்றினார். அவரை கர்தினால்கள் பல்கலைக்கழக டீன் பொதுமக்களுக்கும், கத்தோலிக்கர்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். 

அதன் பின்பு புதிய போப் ஜார்ஜ் மரியோ வாடிகன் தேவாலயம் முன்பு கூடி நின்ற மக்களுக்கு ஆசி வழங்கினார்.

வாடிகன் நகரம் - ஒரு சிறு குறிப்பு 

உலகிலேயே மிகச்சிறிய நாடு, மிகப்பெரிய அரண்மனையை கொண்டது, மிகப்பெரிய தேவாலயத்தைக் கொண்டது போன்ற பெருமைகளை பெற்றது வாடிகன் நகரம்.

11.2.1929 ஆம் தேதி வாட்ரான் ஒப்பந்தப்படி வாடிகன் நகரம் தனிநாடாக திகழ்கிறது. உலகிலேயே மிகச் சிறிய நாடான வாடிகன் 0.44 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது ஆகும்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதகுருவான  போப் ஆண்டவர் வாடிகனிலிருந்து தனியாட்சி செலுத்தி வருகிறார்.

இந்நகரம், இத்தாலி நாட்டின் ரோமின் ஒரு பகுதியாக இருந்தாலும், வாடிகன் ரோமுக்கோ, இத்தாலிக்கோ எந்த வகையிலும் கட்டுப்பட்டதில்லை.

வாடிகனின் மொத்த மக்கள் தொகையே சுமார் ஆயிரம் பேர் தான். போப்பின் அலுவலகத்தில் குடியிருப்பவர்களுக்கு மட்டுமே நாட்டின் குடியுரிமை வழங்கப்படுகிறது. 30 வருடமாக இங்கேயே இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு யாரும் அங்கு குடியுரிமை பெற்றுவிட முடியாது. புனித பணி என்பதால், வாடிகனுக்கு ராணுவமோ, பிற நாடுகளுடன் வணிகமோ கிடையாது.

இந்நாட்டைச் சுற்றி, கற்களால் ஆன சுவர்கள் உள்ளன. வாடிகனுக்குள் நுழைய ஏதாவது ஒரு கேட் வழியாகத்தான் உள்ளே போக முடியும். இந்த வாயில்களை காக்கும் பொறுப்பு, சுவிட்சர்லாந்தில் இருந்து வந்து இங்கேயே தங்கிவிட்ட காவலாளிகளின் பரம்பரையினருக்கு மட்டுமே உண்டு. இந்தப் பணியை,அவர்கள் வாழையடி வாழையாக செய்து வருகின்றனர்.

வாடிகனின் வருமானம் பக்தர்கள் அளிக்கும் காணிக்கையின் வாயிலாகவே வருகிறது. தினமும், லட்சக்கணக்கில் டாலர்கள் கொட்டோ கொட்டென்று கொட்டி அந்நாட்டின் கஜானாவை நிரப்புகிறது. உலகிலேயே காணிக்கை அதிகமாக வரும் இடம் வாடிகன். இரண்டாம் இடம் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில்.


போப்பின் ஆலோசகர்கள் கார்டினல்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். வெவ்வேறு நாடுகளில் வாழும் இவர்கள்தான் போப்பின் அடுத்த வாரிசை தேர்ந்தெடுப்பார்கள். 

வாடிகனில் அமைந்துள்ள செயிண்ட் பீட்டர் தேவாலயம் தான், உலகிலேயே மிகப்பெரிய தேவாலயமாகும். இதன் விதானம் எனப்படும் மேற்கூரை 138 மீட்டர் உயரம் கொண்டது. பொறியாளர்கள், மின்சார வேலைப்பார்ப்பவர்கள், விதானத்தில் மேலே ஏறுபவர்கள் என்று இந்த விதானத்திற்கு மட்டும் நிரந்தரமாக 70 பேர் பணியாற்றுகிறார்கள். இவர்கள் வேலை விதானத்தின் மேலே ஏறி, தேவைப்படும் போது, ஜன்னல்களை திறக்க வேண்டும். இல்லையெனில், மூட வேண்டும். பழுதுபார்க்க வேண்டும். விளக்குகளை பொருத்த வேண்டும். இதுதான் இவர்களது பணி. 5 ஆயிரம் விளக்குகளும், 1000 தீவர்த்திகளும் கொண்டு இந்த விதானம் அலங்கரிக்கப்படும்.

இந்த தேவாலயத்தின் முன்னால், ஒரு லட்சம் பேர் கூடுவதற்கான மிகப்பெரிய முற்றம் உள்ளது. மக்களை ஆசீர்வதிப்பதற்காக, போப் ஆண்டவர், பால்கனியில் தோன்றும்போது, முற்றம் நிரம்பி வழியும்.
இந்த பால்கனியில் இருந்து பார்த்தால், நாட்டின் அனைத்துப் பகுதியும் தெளிவாக தெரியும்.

இந்த தேவாலயம் இயேசு கிறிஸ்துவின் சீடர் புனித பீட்டரின் கல்லறையின் மேல் கட்டப்பட்டதாகும்.

இந்த தேவாலயம், நான்காம் நுற்றாண்டில் மரத்தால் கட்டப்பட்டதாகும். ஆயிரம் ஆண்டுகள் கழித்து இது அழியத்தொடங்கியது. அந்த சமயத்தில் மறுபடியும் பிரம்மாண்டமான ஒரு தேவாலயமாக கட்டத்தொடங்கினார்கள். இதனை கட்டி முடிக்க 150 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. கி.பி. 1453 ல் தொடங்கப்பட்ட கட்டிடப்பணி, கி.பி.1609 ஆம் ஆண்டில்தான் நிறைவடைந்தது.
Tuesday, 12 March 2013

இந்த வார கல்கியில்..


நடுவுல கொஞ்சம் தொப்பையை காணோம்..
ஒரே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம், இரண்டு வாரங்களில், ஒரே வாரத்தில் குறைக்கலாம்னு ஏகப்பட்ட விளம்பரங்களை டி.வியிலயும் பேப்பர்லயும் பாத்திருக்கேன். இன்னிக்கு காலைல ஒரு டி.வியில் ஆறு மணி நேரத்தில் உங்கள் இடுப்பு சுற்றளவு மற்றும் தொப்பையை ஆறு இன்ச் அளவுக்கு குறைக்கலாம்னு (நோ ஆப்பரேசன், நோ உடற்பயிற்சி, நோ மாத்திரை / இது ஒரு சர்வதேச சிகிச்சைன்னு வேற சொன்னாங்க..)ஓடிட்டிருந்த ஒரு விளம்பரத்தைப் பாத்து உண்மையிலயே 'நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்.' (வடிவேலு பாணியில் படிக்கவும்) 

ஆனா.. தொப்பையை அப்படியெல்லாம் குறைக்க முடியாதுங்கறதுதான் நிஜம். அந்த விளம்பரத்தை நம்பி போனா உங்க பர்சோட கணம் ஒரு சில வினாடிகள்ல குறைஞ்சுடும்ங்கறதுக்கு நூத்துக்கு நூறு சதவீதம் கேரண்ட்டி குடுக்க முடியும். 

தொப்பைங்கறது என்ன? மனிதர்களோட உடல்ல சேர்ற அதிகப்படியான கொழுப்பு ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில சேகரமாகுது. அதை தொப்பைங்கறோம். பெண்களுக்கு பின்பக்கம், தொடைகள்ல சேகரமாகுது. அதனால அந்த பகுதிகள் பெருசாகுது. அதை குறைக்கறது ஒண்ணும் கஷ்டமான விஷயம் கிடையாது. நினைச்சவுடனே குறைச்சிடணும்னு பேராசை படறவங்களை குறி வெச்சிதான் இத்தகைய விளம்பரங்கள் வருது. 

தொப்பை வளர வளர, சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், முதுகுவலி, மூட்டுவலின்னு ஏகப்பட்ட பிரச்னைகளும் வளரும். அதனால.. தொப்பையை குறைச்சே ஆகணும்ங்கறதில எந்தவித மாற்று கருத்தும் கிடையாது. ஆனா.. அது எப்படிங்கறதுதான் விஷயமே. 

தொப்பை ஓவர் நைட்டுல உருவாகறது இல்லை. சில மாதங்கள் தேவைப்படுது. அதே மாதிரிதான் அவசரப்படாம கீழ் சொல்லியிருக்கற விஷயங்களை கடைபிடிச்சா சில மாசங்கள்ல உங்க தொப்பை காணாம போயிடும். 

1. தொப்பையை குறைக்கறேன் பேர்வழின்னு எந்த காரணத்தைக் கொண்டும் காலை உணவை தவிர்க்காதீங்க. அதனால பிரச்னைகள் கூடுமே தவிர குறையாது. பசியெடுக்கும் போது அளவா சாப்பிடுங்க.. சாதத்தை குறைச்சு, காய்கறி பழங்களை அதிகம் சாப்பிடுங்க. நொறுக்குத் தீனி சாப்பிடணும் தோணினாலும், காய்கறி, பழங்களையே சாப்பிடலாம். 

2. சாப்பாட்டுல வர்ற கறிவேப்பிலை, மிளகு ஆகியவற்றை ஒதுக்காதீங்க. அதையும் சாப்பிடுங்க. முடிஞ்சா வெறும் வாயில அவ்வப்போது மிளகை மென்னு சாப்பிடுங்க. கறிவேப்பிலை செஞ்சு அவ்வப்போது சாப்பிட்டு வரலாம். 

3. ஒரு நாளைக்கு 8 முதல் 10 டம்ளர் வரை தண்ணி குடிங்க (குடிநீர் என்பதை கவனத்தில் கொள்க)

4. தொப்பையை குறைக்கறதுக்கு டயட்லாம் இருக்கத் தேவையில்லைதான். அப்படி இருந்துதான் தீரணும்ங்கறவங்க.. சாப்பாட்டு அளவை குறைக்காம பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்க. 

5. வாய்ப்பும் வசதியும் இருக்கறவங்க தினசரி கொஞ்ச நேரம் புட் பால், டென்னிஸ் மாதிரியான விளையாட்டுக்களை விளையாடுங்க. (கேரம், செஸ், பல்லாங்குழியெல்லாம் இதுக்கு சரிபடாது)

6. சிகரெட், தண்ணியை விட்ருங்க ( இது டாஸ்மாக் தண்ணி). முடிஞ்சா தினசரி கொஞ்ச நேரம் யோக பண்ணலாம்.

7. அப்பறம் ரொம்ப முக்கியமா.. தினசரி குறைச்ச பட்சம் 45 நிமிஷம் நடையோ நடைன்னு நடங்க. இல்லைன்னா.. வேர்க்க விறுவிறுக்க அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்ங்க.

8. மாத்திரை மருந்ததால எல்லாம் நிச்சயமா தொப்பையை குறைக்க முடியாது. முடியாது நான் மருந்து சாப்பிட்டே தீருவேன்னு பிடிவாதம் பிடிக்கறவங்க.. காலையில எழுந்ததும் ஒரு டம்ளர் வெது வெதுப்பான தண்ணியில (குடிநீர்) எலுமிச்சை சாறு கலந்து, ரெண்டு டீஸ்பூன் தேன் கலந்து வெறும் வயத்துல குடிச்சிட்டு வாங்க. தொப்பை குறையும். 

இதையெல்லாம்.. செஞ்சும் தொப்பை குறையலைன்னா.. மேற்படி விளம்பரதாரர்களை அணுகலாம். உங்க பர்சோட எடையை வினாடிகள்ள குறைச்சிடுவாங்க. 

Monday, 28 January 2013

தெரிந்ததும் தெரியாததும் -2

ஹென்றி ஃபோர்ட் 


நல்ல வேலை, சொந்த வீடு அப்புறம் ஒரு கார் இது சராசரி மக்களோட அதிகபட்ச கனவு. கார்னு சொன்னதும் உடனடியா நினைவுக்கு வர்ற பேரு ஹென்றி ஃபோர்டு. அமெரிக்காவுல கார் உற்பத்தியில மிகப்பெரிய உந்துசக்தியாக விளங்கி, தன்னோட பெயரிலயே கார்களை உலகுக்குத் தந்தவரு. போக்குவரத்து துறையில பெரும் புரட்சியை உருவாக்கி, பெரும் தொழிலதிபரா வளர்ந்தவரு ஹென்றி ஃபோர்டு. 

அமெரிக்காவுல மெக்சிகன் மாகாணத்துல நல்ல வசதியான குடும்பத்தில ஹென்றி ஃபோர்ட் 1863 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி பிறந்தாரு. ஆறு பிள்ளைகளில் இவருதான் மூத்தவரு. சிறுவனா இருந்தப்போ, தங்களோட சொந்த  பண்ணையில வேலை செஞ்சிட்டிருந்தாரு. ஆனா.. அந்த வேலை அவருக்கு சலிப்பை தந்துச்சு. தன்னோட 16 வது வயசுல ஃபோர்ட் குடும்பத்தை விட்டு டெட்ராய்ட் நகரத்துல இருக்கற ஒரு கனரக தொழிற்சாலையில வேலைக்குச் சேர்ந்தாரு. மூணு வருஷம் கடுமையா உழைச்ச அவரு, திரும்பவும் மெக்சிகனுக்கு திரும்பிட்டாரு. அந்தக் காலத்தில் புழக்கத்தில இருந்த நீராவி இயந்திரங்களின் மேல அவரோட கவனம் திரும்பிச்சு. அந்த இயந்திரங்களை இயக்கறதிலயும், அதை கழற்றி ரிப்பேர் பாக்கறதிலயும் ஆர்வமா இருந்தாரு. பின்னாடி, பண்ணை வேலைகளுக்கு பயன்படற மாதிரி எரிவாயுல இயங்கக் கூடிய சில இயந்திரங்களை அவரே உருவாக்கினாரு. 

அவருக்கு முப்பது வயசா இருக்கறப்போ.. சிக்காக்கோவுல நடந்த ஒரு இயந்திர கண்காட்சிக்குப் போனாரு. அங்க பெட்ரோல்ல இயங்கக் கூடிய தண்ணீர் பம்ப் ஒண்ணை காட்சிக்கு வெச்சிருந்தாங்க. அதைப் பாத்ததும் அவருக்கு ஒரு யோசனை. இதை ஏன் ஒரு வண்டில பொருத்தி பாக்கக் கூடாதுன்னு தோணுச்சு. அதை செயல்படுத்தியும் பாக்க ஆரம்பிச்சார். அடுத்த ரெண்டு ஆண்டுகள் கடுமையா உழைச்ச ஃபோர்டு, 1896 ஆம் ஆண்டு மே மாசம் பழைய உலோகங்களையும், உதிரி பாகங்களையும் கொண்டு தனது வாகனத்தை வடிவமைச்சாரு. பாக்கறதுக்கு சைக்கிள் மாதிரி, நாலு சக்கரங்களும் ஒரு இருக்கையும் கொண்டதா அந்த வாகனம் இருந்திச்சு. பிரேக் இல்லாத அந்த வண்டியை பின்னோக்கியும் ஓட்ட முடியாது. குவாட்ரிசைக்கிள் (னிuணீபீக்ஷீவீநீஹ்நீறீமீ) னு பேர் வெச்சாரு. வெற்றிகரமா அந்த வாகனத்தை சாலையில ஓட்டிப் பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டாரு. பல வருஷ கனவு நனவான அந்த தருணத்தில அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால விவரிக்க முடியாது. 

அப்புறம், ஃபோர்டு, 1903 ஆம் ஆண்டு மெச்சிகன்ல ஃபோர்டு மோட்டார் கம்பெனியை(திஷீக்ஷீபீ விஷீtஷீக்ஷீ சிஷீனீஜீணீஸீஹ்) தொடங்கி, மாடல் டி (னீஷீபீமீறீ t)ங்கற காரை உருவாக்கினாரு. செல்வந்தர்கள் மட்டுமில்லாம, சாமானிய மக்களும் கார்களை பயன்படுத்தணும்னு அவரு விரும்பினாரு. அதனால, குறைஞ்ச செலவுல கார்களை உருவாக்கினாரு. அவர் உருவாக்கின மாடல் டி காரோட அப்போதைய விலை வெறும் 500 டாலர்தான். இப்போதைய நவீன கார்களுக்கு முன்னோடியா இருக்கற அந்த மாடல் டி காரை எல்லோரும் போட்டி போட்டு வாங்கினாங்க. பதினெட்டு வருஷத்தில 15 மில்லியன் கார்களை வித்து ஃபோர்டு நிறுவனம் சாதனை படைச்சுது. 

உலகத்தின் மிகப்பெரிய தொழிலதிபரா உயர்ந்த அவரோட வளர்ச்சிக்கு அவரோட தயாரிப்புகள் மட்டுமில்ல, தன்னோட நிறுவனத்தில வேலை பாத்த ஊழியர்களை அவர் நடத்தின விதமும் காரணமா இருந்திச்சு.  


தன்னோட ஊழியர்கள் நலனை மதிச்சதால, ஊதியத்தை உயர்த்தி வேலை நேரத்தை குறைச்சாரு. அதுக்கு முன்னாடி, 9 மணிநேரம் வேலை, இரண்டு டாலர் 34 காசு சம்பளம் தொழிலாளிகளுக்கு குடுத்திட்டிருந்தாங்க.  ஃபோர்டு அந்த சம்பளத்தை இரட்டிப்பாக்கி ஒருநாளைக்கு குறைந்தபட்சம் சம்பளம் 5 டாலரா உயத்தி, வேலை நேரத்தை 1 மணிநேரம் குறைச்சு 8 மணிநேர வேலையாக்கினாரு. சக தொழிலதிபர்கள் அவரை கிண்டல் செஞ்சப்போ அவர் அதையெல்லாம் கண்டுக்கலை. 

அதுமட்டுமில்லாம,'டிசன் இன்ஸ்டட்டியூட்' என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு சமூகநல பணிகளுக்காக தன்னோட சொத்துல பெரும்பங்கை செலவழிச்சாரு. 1943 ஆம் ஆண்டு எதிர்பார விதமாக அவரோட மகன் எட்சல் இறந்து போனதால் தானே ஃபோர்டு நிறுவனத்தோட தலைமை பொறுப்பை ஏத்துக்கிட்டாரு. 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி ஃபோர்டு தன்னோட 84 வயசுல காலமானபோது 'ஃபோர்ட் பவுண்டேஷன்' எனப்படும் உலகின் மிகப்பெரிய அற நிறுவனத்தை விட்டுட்டுப் போனாரு. 


Monday, 21 January 2013

அட்டைக்கத்தி ஹீரோக்கள்
ஜாகிங் போறதுக்காக வழக்கம் போல இன்னிக்கு அதிகாலைல கிரவுண்டுக்குப் போனேன். ஆள் நடமாட்டம் இல்லாம வெறிச்சோடி கிடக்கற அந்த கிரவுண்டில், என்னிக்கும் இல்லாத அதிசயமா நாலஞ்சு பேர், ஏதோ எக்சர்சைஸ் பண்ணிட்டிருந்தாங்க.. நான் கிரவுண்ட சுத்தி மெல்ல ஓட ஆரம்பிச்சேன். மெல்ல இருட்டு விலக ஆரம்பிச்சதும்தான் கவனிச்சேன்.. எங்க தெரு பசங்க அவங்க. காலைல ஒம்போது மணிக்கு முன்னாடி எழுந்ததா சரித்திரமே கிடையாது. வேலை வெட்டிக்குப் போற பழக்கமும் கிடையாது.. கோயில் மாடு மாதிரி ஊரை சுத்திட்டு, தினசரி வீட்ல அர்ச்சனை வாங்கிக் கட்டிக்கறது அவங்களோட வழக்கம்.

 ஆச்சரியமாக கிரவுண்டுக்கு வந்திருக்காங்களேன்னு கிட்டக்க போய் பாத்தா, ஜெட்லீ, புரூஸ் லீ படங்கள்ல குங்பூ சண்டை போடும் போது கத்துவாங்களே.. அதுமாதிரி விநோதமா கத்திக்கிட்டு.. காத்துல கை, காலை தான்தோன்றித்தனமா வீசிட்டிருந்தாங்க.. ஆர்வம் தாங்காம.. ஒருத்தனை ஓரங்கட்டி பேச்சுக்குடுத்தேன். "கராத்தே பிராக்டிஸ் பண்றோம்ணா.." என்றான். 

அட்டைக் கத்தி படத்துல.. எதிர்கோஷ்டிகிட்ட ஹீரோ வம்பிழுத்து அடிவாங்கிக்கிட்டு, நேரா கராத்தே கிளாஸ்ல வந்து விழுவாரு. அந்த சீன், சம்பந்தமில்லாம அந்த நேரத்துல எனக்கு நினைவுக்கு வந்து தொலைச்சது.. பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கிட்டு நகர்ந்துட்டேன். 

*****

கடைசி ஆசை

போருக்கு போன மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றிக் கொண்டு நாடு திரும்பிட்டிருந்தாரு. வழியில அவரு நோய்வாய்ப்பட்டாரு. தலை சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிச்சும் குணமாகலை. மரணம் தன்னை நெருங்கறதை உணர்ந்த அலெக்சாண்டர், தலைமை வீரர்களை அழைச்சி, "சாவு என்னை நெருங்கிட்டுது. கடேசியா எனக்கு மூணு ஆசைகள் இருக்கு.. அதை நீங்க நிறைவேத்தணும்"னாரு..

அதை நிறைவேத்தறதா உறுதி கொடுத்து, என்ன ஆசைகள்னு அவங்க கேட்டாங்க.. அதுக்கு அலெக்சாண்டர், 

"முதல் விருப்பம் என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கிட்டு வரணும், என்னை அடக்கம் பண்றதுக்கு ஊர்வலமாக எடுத்துட்டு போறப்போ, என்னோட ரெண்டு கைகளும் சவப்பெட்டிக்கு வெளில தெரியற மாதிரி வைக்கணும், மூணாவதா, என்னை புதைக்கிற இடத்துக்கு போற வழியை, நான் சம்பாதிச்சு வெச்சிருக்கிற விலை மதிப்பில்லாத கற்கள், செல்வங்களால அலங்கரிக்கணும்"ன்னாரு. 

தலைமை வீரர்களுக்கு இந்த ஆசைகள் வினோதமா தெரிஞ்சது. ஆனாலும், ஏன்னு கேட்க பயந்தாங்க. ஒருத்தன் துணிச்சு, "அரசே! உங்களோட ஆசையைக் கண்டிப்பாக நாங்க நிறைவேத்தறோம். ஆனா..இதுக்கான காரணம்"னு இழுத்தான். அதுக்கு அலெக்ஸாண்டர், 

என்னோட சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிட்டு வர்றதால இந்த உலகத்தில உள்ள எல்லோருக்கும் ஒரு விஷயத்தை நிச்சயமாக தெரிஞ்சுக்குவாங்க..  எந்த டாக்டராலயும் மரணத்தை கொஞ்ச நாள் தள்ளிப் போட முடியுமே தவிர தடுத்து நிறுத்த முடியாது.  ரெண்டாவது, இந்த உலகத்தையே வெல்ல ஆசைப்பட்ட நான் சாகும்போது, வெறும் கையோடதான் போறேன்னு என்னை பாக்கறவங்களுக்கு தெரியணும்.. மூணாவதா, வாழ்க்கையில எவ்வளவு செல்வத்தை சேர்த்தாலும், அதை நம்மோ எடுத்துட்டு போக முடியாது.. சவக்குழி வரைக்கும் மட்டும்தான் அவை வரும். இதை இந்த உலகத்துக்கு உணர்த்தறதுக்குத்தான் இந்த ஆசைகளை நிறைவேத்த சொன்னனேன்னாரு மாவீரன் அலெக்சாண்டர். 

தெரிந்ததும் தெரியாததும்.. 1


முசோலினி 


உலகைப் பயமுறுத்திய சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமாக இருந்தவரு முசோலினி. இவரு 1922 முதல் 21 ஆண்டு காலம் சர்வாதிகாரிய இத்தாலியை ஆட்டிப்படைச்சாரு. இவரோட நெருங்கிய நண்பர் ஜெர்மானிய சர்வாதிகாரி ஹிட்லர். சின்ன வயசுல ஓவியராகணும்னு ஆசைப்பட்டவரு ஹிட்லர். ஆனா.. விதி வேற மாதிரியா விளையாடி.. உலக வரலாற்றையே மாத்திடுச்சு. அதே மாதிரி.. பள்ளிக் கூட வாத்தியாரா இருந்த முசோலினி, சர்வாதிகாரியா மாறினதும் விதியோட வினோத விளையாட்டுக்கள்ல ஒண்ணு. 

இத்தாலியில, 1883-ம் ஆண்டு ஜூலை 29-ந் தேதி முசோலினி பிறந்தாரு. இவரோட அப்பா ஒரு கொல்லர். சொந்தமா இரும்புப் பட்டறை நடத்திக்கிட்டிருந்தாரு. அம்மா பள்ளிக்கூட ஆசிரியை. 
இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சி, மக்கள் ஆட்சி மலரணும்னு முசோலினியோட அப்பா, வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் டீக்கடை அரசியல் பேசிட்டிருப்பாரு. அவரைப் பார்த்து, முசோலினிக்கும் சின்ன வயசிலயே அரசியல் ஆசை வந்துட்டுது. பள்ளிப் படிப்பை முடிச்சதும், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினாரு. நல்லா பேசவும் எழுதவும் தெரிஞ்ச முசோலினிக்கு லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ், ஆங்கிலம் 
ஆகிய மொழிகளும் தெரியும். 

பசங்களுக்கு பாடம் நடத்திட்டிருந்த முசோலினிக்கு அந்த வேலை கொஞ்ச நாள்லயே போரடிச்சிட்டுது. அதனால அதை விட்டுட்டு, ராணுவத்துல சேர்ந்து கொஞ்ச காலம் வேலைபார்த்தாரு. அதுவும் போரடிக்க, ஒரு பத்திரிகையில வேலைக்குச் சேர்ந்தாரு. பத்திரிகையில அவர் எழுதிக கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ஓராண்டு ஜெயில் தண்டனை கூட  அனுபவிச்சாரு. இந்த காலக்கட்டதுத்துல 1914-ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் மூண்டுச்சு. அப்போ.. மறுபடியும் முசோலினி ராணுவத்துல சேர்ந்தாரு. இதே காலக்கட்டத்துலதான் ஜெர்மனியில் ஹிட்லரும் ராணுவத்தில் சேர்ந்தாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயம். 

அப்புறம்.. 1939-ம் ஆண்டு ரெண்டாம் உலகப் போர் மூண்டது. ஹிட்லரும், முசோலினியும் ஒரணியில் நின்னு நேச நாடுகளை எதிர்த்தாங்க. முதல்ல இவங்களுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைச்சது. அப்புறம் போரின் போக்கு மாறி ஹிட்லருக்கும், முசோலினிக்கு தோல்விகள் தொடர்ந்துச்சு. போரில் தோற்றபிறகு ஒரு வேனில் ஏறி எல்லையை கடந்து தப்பிக்க முசோலினி முயற்சி பண்ணாரு. கூடவே தனது காதலி கிளாரா பெட்டாசியையும் கூட்டிட்டு போனாரு. 

1945, ஏப்ரல் 26 அதிகாலையில் எல்லையை கடக்க முயன்றப்போ, புரட்சிப்படை அவங்களை மடங்கிடுச்சு. முசோலினியை அடையாளம் கண்டுக்கிட்ட அவங்க, காதலியோடு சேர்த்து அவரை கீழே இறக்கினாங்க. முடிவு நெருங்கிட்டதை உணர்ந்த முசோலினி, அவங்க முன்னாடி மண்டியிட்டு, 'என்னை கொன்னுடாதீங்க'ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. அப்போ பேண்ட்லயே அவரு 'ஒண்ணுக்கு' போயிட்டாராம். 

ஆனா.. அவர் மீது இரக்கம் காட்டாத அவங்க, துப்பாக்கியால முசோலினியையும், அவரோட காதலியையும் சல்லடையாக துளைச்சி, அவங்க உடலை மிலான் நகரின் நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல எல்லாரும் காறி துப்புயும், சிறுநீர் கழிச்சும் அவமானப்படுத்தினாங்க. அப்புறம் அவங்க உடல்களை ஒரு கம்பத்துல தலைக்கீழா கட்டி தொங்கவிட்டுட்டு போயிட்டாங்க. 

சர்வாதிகாரிகளோட கடைசி காலம் மிகவும் கொடூரமானதாவே இருக்கும்ங்கறதுக்கு முசோலினி ஒரு உதாரணம். 

(வரலாற்று நாயகர்களை பத்தி இந்த மாதிரி குட்டி குட்டியா எழுதணும்னு ஆசை. புடிச்சுருந்தா சொல்லுங்க.. )

Monday, 7 January 2013

அக்கம் பக்கம்


சத்தமில்லாமல் ஒரு சாதனை? 

எதிலேன்னு கேக்கறீங்களா? 'சரக்கு' விற்பனையில தான் இந்த சாதனை தமிழகம் செஞ்சிருக்காம். கொண்டாட்டம்னாலே இப்போ 'குடி'ன்னு ஆகிப்போச்சு. ஆங்கிலப் புத்தாண்டுக்கு மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆச்சாம். இது போன வருஷத்தை விட இந்த வருஷம் அம்பது சதவீதம் அதிகம். 

அதே மாதிரி, தென் மாநிலங்கள்ல சரக்கு விற்பனைல தமிழகம் முதல் இடத்தை தக்க வெச்சிட்டிருக்காம். 2003 ம் ஆண்டுலேர்ந்து, மது விற்பனையை தமிழக அரசு செய்துட்டு வருது. மாநிலம் முழுக்க மொத்தம் 6 ஆயிரத்து 805 கடைகள் இருக்கு. உள்நாட்டு சரக்கு, வெளிநாட்டு சரக்குன்னு, குடிமக்களோட தாகத்தை தீர்த்த வகையில, 2011-12  மார்ச் மாசம் வரைக்கும் 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சதாம். இது  2013 ஆண்டு முடிவுல 20 ஆயிரம் கோடி ரூபாயா அதிகரிக்கும்னு எதிர்பார்க்கறாங்களாம். 

நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில, அரசோட நேரடி கட்டுப்பாட்டில் 338 கடைகளில் மட்டுமே மதுபான விற்பனை நடக்குதாம். கேரள நுகர்வோர் அமைப்பின் சார்பில், 45 கடைகள் நடத்தப்படுதாம். கடந்த, 2011-12 நவம்பர் மாதம் வரையில் கேரள அரசுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமா கிடைச்சதாம். காலை, 9 மணி முதல் திறக்கப்படும் மதுபான கடைகள் இரவு, 9 மணி வரை செயல்படுமாம். மதுபானங்களில் தண்ணீர் கலக்கறது, கூடுதல் விலைக்கு விக்கறதுன்ற அக்கபோரெல்லாம் அங்க கிடையாதாம். 

மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஆந்திர அரசு ஈடுபட்டு வருது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுத்து, தனியாரே நடத்தி வர்றாங்க. 2011-12 நவம்பர் மாதம் வரையில் 1அரசுக்கு 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதே மாதிரி கர்நாடகாவும், 

மொத்த விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வருது. 2011-12 நவம்பர் மாதம் வரையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சிருக்கு. 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் 'சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்துக்கிட்டே வருது. சென்னையில 15 முதல் 19 வயசுக்குட்பட்டவங்க குடிக்கறது அதிகரிச்சிருக்கறதா ஒரு புள்ளி விவரம். பாக்கெட் மணி ஈஸியா கிடைக்கறதும், தங்களை ஒரு ஹீரோவா காட்டிக்கற முனைப்புமே இந்த பழக்கத்துக்கு பள்ளிக்கூட பிள்ளைங்க ஆளாகறாங்களாம். 

 ••••• 

தெரிஞ்சவங்கக் கிட்ட கவனமா இருங்க..

செய்தித் தாள்கள்ல தினசரி பக்கத்துக்குப் பக்கம், கடந்த சில நாட்களா பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள் அதிகம் வந்திட்டிருக்கு. செய்திகள்ல வர்றது எல்லாமே கொஞ்சம்தான்னும், அவமானம் கருதி பெரும்பாலான சம்பவங்கள் வெளில தெரியறதே இல்லைன்னும் சொல்றாங்க.. இன்னைக்கு ஒரு பத்திரிகையை புரட்டிக்கிட்டிருந்தப்போ, அறிமுகமான நபர்களாலதான் பெண்கள் அதிகமா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படறதா போட்டிருந்தாங்க. அதாவது, அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள்தான் இந்த காரியத்தை துணிச்சலா, எதுவும் செய்ய முடியாதுன்ற தைரியத்துல செய்யறாங்களாம். முகம் தெரியாத நபர்கள் செய்றது ரொம்ப குறைவாம். 

அந்த பத்திரிகையில இருந்த ஒரு புள்ளி விவரத்துல, 2011-ம் ஆண்டுல தமிழ்நாட்டு பதிவான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் 677. இதுல ரெண்டு சம்பவங்கள் மட்டுமே முன்பின் தெரியாதவங்களால நிகழ்த்தப்பட்டிருக்கு. இதுல 249 பேர் அண்டை வீட்டுக்காரர்களாலயும், 96 பேர் உறவினர்களாலயும், 2 பேர் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களாலயும் பாதிக்கப்பட்டிருக்காங்க. 328 பேர் முன்பின் தெரியாத நபர்களால பாதிக்கப்பட்டிருக்காங்க. 

அதே ஆண்டுல சென்னையில பதிவான 76 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 74 தெரிஞ்சவங்களால பாதிக்கப்பட்டதா புகார் செய்யப்பட்டிருக்கு. இந்திய அளவுல 24 ஆயிரத்து 206 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 22 ஆயிரத்து 549 பேர் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளிட்டோரால பாதிக்கப்பட்டாங்களாம். 

' கடவுளே.. நண்பர்கள்கிட்டேயிருந்து என்னை காப்பாத்து, எதிரிகளை நான் பாத்துக்கறேன்'ங்கறது ஒரு பிரபலமான டயலாக். ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் கூட சொன்னதா ஞாபகம். அதனால.. நான் சொல்ல வர்றது என்னன்னா.. (மறுபடியும் தலைப்பை படிங்க..)

 •••••                                                                   

பிறந்தா சுவிஸ்ல பிறக்கணுமாம்..

மறுபடியும் ஒரு புள்ளி விவரம்

சுகாதாரம், பாதுகாப்பு, செல்வவளம், ஆரோக்கிய வாழ்வு போன்றவற்றின் அடிப்படையில, இந்த ஆண்டுல பிறக்க, உலகில் எது சிறந்த நாடுங்கற தலைப்புல ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்திச்சாம். சொன்னா.. நம்புங்க.. அதுல இந்தியாவுக்கு 66 வது இடம். இலங்கைக்கு 63 வது இடம். அமெரிக்காவும், ஜெர்மனியும் 16 வது இடத்துல இருக்குதாம். 49 வது இடத்தை சீனாவும், 72 வது இடத்தை ரஷ்யாவும் பிடிச்சிருக்காம். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் முறையே 75 மற்றும் 77 வது இடத்துல இருக்காம். 

முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆஸ்திரேலியா, நார்வேவும், அடுத்தடுத்த இடங்களை சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடிச்சிருக்கின்றன. எட்டாவது இடத்தை நெதர்லாந்தும், 9 வது இடத்தை கனடாவும், 10 வது இடத்தை ஹாங்காங்கும் பிடிச்சிருக்காம். 

 ••••• 

ஒரு படை வீரனை நெப்போலியன் முன்னாடி நிறுத்திய ஒரு அதிகாரி, 'இவன் திறமையானவன் கிடையாது, படையில இருந்து இவனை நீக்கணும்'ன்னாரு. 'ஏன் அப்படி சொல்றீங்க'ன்னு கேட்டாரு நெப்போலியன். 'எதிரிகள் நடத்திய தாக்குதல்கள்ல இவன் ஒன்பது முறை கீழே விழுந்துட்டான். அப்புறம், எழுந்து நின்னு சண்டை போடறான்'ன்னாரு அந்த அதிகாரி. உடனே நெப்போலியன், அந்த படை வீரன் கிட்ட, ' ஒன்பது முறை கீழே விழுந்தாலும், விடா முயற்சியோட எழுந்த நின்னு சண்டை போடற நீதான் உண்மையான வீரன்'னு அவனை பாராட்டினாராம். 

 ••••• 

Tuesday, 1 January 2013

புத்தாண்டு வாழ்த்துக்கள்
புது வருஷம் பிறந்துடுச்சி. புத்தாண்டு சபதத்தை ஒழுங்கா கடைபிடிக்கிறதில்லைங்கறதால, புத்தாண்டு சபதம் எதையும் எடுக்கறதில்லை. நிறைய எழுதணும்னு திட்டம் போட்டிருக்கேன். நிறைவேறுதான்னு பாக்கணும். வழக்கமா புத்தாண்டு பிறக்கற நேரத்தில கோயில்ல இருப்பேன். இந்த ஆண்டு அலுவலகத்தில இரவுப் பணியில இருந்தேன். 

புது வருஷம் தொடங்கறதை எல்லாரும் ஒருவித பரபரப்போடயும், பதற்றத்தோடயும் கொண்டாடறதாவே படுது. அது ஏன்னுதான் தெரியலை. 31-ம் தேதி இரவு ஒம்போது மணிக்கு அலுவலகம் கிளம்பி போட்டிருக்கேன். அன்னிக்கு வழக்கத்துக்கு மாறா சென்னை மாநகரம் ஒருவித பரபரப்போட இயங்கிட்டிருக்கறதா தோணிச்சு.

புத்தாண்டை ஒரு சாரார் வழிபாட்டுத் தலங்கள்லயும், ஒரு சாரார் மது விடுதிகள்லயும் கொண்டாடறது வினோதம்.