Thursday 26 April 2012


தமிழகம் முதலிடம்


    ஹிதேந்திரன் தமிழகத்தில் இன்று நெகிழ்வோடு உச்சரிக்கப்படும் பெயர். கடந்த 2008ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி மூளைச் சாவு அடைந்த அந்த 11ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய அவனது பெற்றோர் முடிவெடுத்தபோது, ஒட்டுமொத்த தமிழகம் நெகிழ்வோடு திரும்பிப்பார்த்தது. 

      உறுப்பு தானத்தின் உன்னதத்தை, ஹிதேந்திரன் தனது மறைவின் மூலம் உணர்த்திச் சென்றதால், இன்று தமிழகம் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

   தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்பு தானம் தொடங்கினாலும், ஹிதேந்திரன் மூலமாகவே உறுப்பு தானம் பரவலான கவனம் பெற்றது. இதனால், உறுப்பு தானம் குறித்த செய்திகளை அடிக்கடி செய்திகளில் காண முடிகிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் உறுப்பு தானத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே போன்று, சென்னை முதலிடத்திலும், கோவை இரண்டாம் இடத்திலும் உள்ளது.

          மருத்துவ உலகம் மனித குலத்திற்கு கொடுத்த மகத்தான கொடை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. தினந்தோறும் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஆளில்லாத நிலையில், 15 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். ஒருவர் அளிக்கும் உறுப்பு தானம் மூலம், 10 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம். 

     சாலை விபத்திலோ அல்லது வேறு விதமாகவோ மூளைச் சாவு ஏற்பட்டால் மட்டுமே உறுப்பு தானம் செய்ய முடியும். இதற்கு இறந்தவரின் குடும்ப ரத்த உறவு உறுப்பினர்கள் சம்மதத்துடனேயே இதனை செய்ய முடியும். 

       மனித உடலில் உள்ள சிறுநீரகம், இதயம், கல்லீரல், நுரையீரல், கணையம், சிறுகுடல், இதய வால்வு, எலும்பு, கருவிழி, தோல், தசை நாண் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்யலாம். தானமாக பெற்ற இதயம், ஆறு மணி நேரத்திற்குள்ளும், கல்லீரல் 8 மணி நேரத்திற்குள்ளும், சிறுநீரகம் 12 முதல் 16 மணி நேரத்திற்குள்ளும் நோயாளிக்கு பொருத்தப்பட வேண்டும். உடல் உறுப்புக்களை வாங்குவதும், விற்பதும் குற்றம். 

    உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னணியில் இருந்தாலும், சர்வதேச அளவில் இந்தியா பின் தங்கியே உள்ளது. மத ரீதியான பழக்க வழக்கங்களே உறுப்பு தானத்திற்கு தடையாக உள்ளது என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

3 comments:

  1. உறுப்பு தானம் என்ற நல்லதொரு விஷயம் பற்றி பதிவிட்ட உங்களுக்கு முதல் நன்றி. இன்னும் நிறைய பேருக்கு இதைப் பற்றி தெரியவந்தால் நல்லது.

    ReplyDelete
  2. //மருத்துவ உலகம் மனித குலத்திற்கு கொடுத்த மகத்தான கொடை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை. தினந்தோறும் உடல் உறுப்புகள் தானம் செய்ய ஆளில்லாத நிலையில், 15 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளி விவரம். ஒருவர் அளிக்கும் உறுப்பு தானம் மூலம், 10 பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கிறது மருத்துவ உலகம்.//

    நல்லதொரு பதிவு. இது சம்பந்தமாக அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிக்கூட கல்லூரி பாடங்களிலேயே கொண்டு வரலாம்.

    ReplyDelete
  3. பயனுள்ள பகிர்வு. இன்னும் நிறைய பேருக்கு இதை பற்றி தெரிவதில்லை....:(

    ReplyDelete