Monday 9 July 2012

பள்ளி பாடத்திட்டத்தில் ஆர்.டி.ஐ. - மத்திய அரசு பரிசீலனை


     தகவல் பெறும் உரிமைச் சட்டம் (ஆர்.டி.ஐ.,) குறித்து, மக்களிடம்  விழிப்புணர்வை  ஏற்படுத்துவதற்காக,  இந்தச் சட்டத்தின் பல அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

    தகவல் பெறும் உரிமைச் சட்டம் தொடர்பான விவகாரங்களில், முதன்மையான நிறுவனமாகச் செயல்படும் மத்தியப் பணியாளர் நலத்துறை இதுதொடர்பாக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் (என்.சி. இ.ஆர்.டி.,) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான வரைவுத் திட்டமும் விரைவில் தயாராக உள்ளது.

     தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ள முக்கிய அம்சங்களை, பள்ளிப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யும் விவகாரம், தற்போதுதான் ஆரம்பகட்ட நிலையில் உள்ளது. என்.சி.இ.ஆர்.டி., உடன் கலந்து ஆலோசித்த பின்னரே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்தியப் பணியாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் கூறுகையில், மத்திய, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு துறைகளிலும், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்கள் கேட்டு, ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்து வருவதால், பள்ளிப் பாடத்திட்டத்தில் இந்தச் சட்டம் தொடர்பான விவரங்களை இடம் பெறச் செய்யும் யோசனை உருவாகியுள்ளது.  அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.சில துறைகளின் செயல்பாடுகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் திறமைகள் எல்லாம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மூலம் தெரியவந்துள்ளன. அதனால், இந்தச் சட்ட அம்சங்களை பள்ளிப் பாடத்திட்டங்களில் இடம் பெறச் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஏழாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடத்திட்டங்களில், இவை இடம் பெறலாம் என்றார். 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சில குறிப்புகள் 

* இச்சட்டத்தின்படி அரசு அலுவலகங்கள், அரசின் நிதி உதவிபெறும் அமைப்புகள் முதலியவை பற்றிய எந்த தகவலையும் கோரி பெற இந்திய குடிமகனுக்கு உரிமை உண்டு. 

* தகவல் கோருகிறவர், அதற்கு எந்த எவ்வித காரணமும் கூற வேண்டியதில்லை. 

* இந்தியாவில் உள்ள எந்த சட்டத்தைக்காட்டிலும் இந்த சட்டம் மட்டுமே உயர்வானது. அதாவது எந்த ஒரு சட்டத்தையும் சுட்டிக்காட்டி அரசு அலுவலர்கள் தகவல் தர மறுக்க முடியாது. 


* தமிழக அரசு அதனுடைய அலுவலகங்களில் தகவலைக் கோர ரூ. 50 கட்டணம் நிர்ணயித்துள்ளது. 

*  தகவல் கோருபவர் ரூ. 50 கட்டணம் செலுத்தி, அசல் ரசீதோடு, தான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக குடும்ப அட்டையின் நகலையும் இணைத்து வெள்ளைத்தாளில் எழுதி விண்ணப்பித்தாலே போதுமானது. 

* ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் ஒரு உதவிப் பொதுத்தகவல் அலுவலரும், மேல்முறையீட்டு அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதலில் உதவிப் பொதுத்தகவல் அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

* கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களில் வந்து சேரவில்லையென்றாலோ,  போதுமான தகவல்கள் இல்லையென்றாலோ, மேல்முறையீட்டு அலுவலருக்கு முதல் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும். 

* மேல் முறையீட்டிலும் உரிய தகவல்கள் கிடைக்கவில்லையென்றால் 90 நாட்களுக்குள் மாநிலத் தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் முறை மேல்முறையீடு செய்யலாம். 

 * சரியான தகவல் தர மறுக்கும் அதிகாரிக்கு நாளொன்றுக்கு ரூ. 250 வீதம் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்க ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. தவிர அந்த அதிகாரி மேல் துறைத் தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும். 

* அச்சுத்தாள், குறுந்தகடு அல்லது மென்தகடு ஆகியவற்றையும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். 

* அரசு அலுவலகங்களில் எந்த கோப்பையும் நாமே நேரடியாக பார்வையிடலாம். சான்றிட்ட நகலையும் பெறலாம். நேரில் பார்வையிடுவதற்கு முதல் ஒரு மணிநேரம் இலவசம் ஆகும். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ. 5 கட்டணம் செலுத்த வேண்டும். 

* மத்திய அரசைப் பொருத்த வரை தகவல் அறிய ரூ. 10 கட்டணம் செலுத்தினால் போதுமானது. 

* தகவல் பெற விரும்புபவர் ஊரில் உள்ள தலைமை அஞ்சல் நிலைய தலைவரிடம் விண்ணப்பித்தால் போதுமானது. அவர் உரிய அலுவலகங்களுக்கு அனுப்பித் தகவல் பெற்றுத் தருவார். 

* தகவல் பெறுவதற்காக கட்டணத்தையும் ரொக்கமாக அந்ததந்த அஞ்சல் நிலையத்திலேயே செலுத்தி ரசீது பெறலாம். 

1 comment:

  1. மிக பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி

    ReplyDelete