Friday, 24 August 2012

லட்சியங்களை வகுத்துக்கொள்வது எப்படி?


சொந்த ஊருல, கிராமத்து பள்ளிக் கூடத்தில் மூணாப்பு படிச்சப்போ, எங்க கிளாஸ் டீச்சரா இருந்தவங்க கற்பகம் டீச்சர். எப்பவுமே நான் முத ரேங்க் எடுக்கறதாலயும், என்னோட அமைதியான சுபாவத்தாலும் எம் மேல அவங்களுக்கு பிரியம் அதிகம். ஒரு நா வகுப்பில, ''நீங்க படிச்சி என்னவாக போறீங்கன்னு வரிசையா ஒவ்வொருத்தரா எழுந்து சொல்லுங்க''ன்னாங்க. 
எல்லாருமே எழுந்து ''தெரியாது டீச்சர்''ன்னாங்க. என் முறை வந்தப்போ நானும், ''தெரியாது டீச்சர்''ன்னேன். ஒரே ஒருத்தன் மட்டும், ''எங்க மாமா மாதிரி நானும் போலீஸ் ஆகப்போகிறேன் டீச்சர்''ன்னான். மக்குப் பையனான அவனுக்கு அன்னிக்கு ஏக பாராட்டு. டீச்சர் எங்கிட்ட ரெண்டு நாள் பேசவே இல்லை. அப்போ எனக்கு லட்சியம்னா என்னன்னு கூட தெரியாது.  

பள்ளி படிப்பை முடிச்ச காலக்கட்டத்தில, ஒரு பிரபல பத்திரிகையில பத்திரிகையாளர் பயிற்சி முகாம் நடத்தினாங்க. அதுல நானும் கலந்துக்கிட்டேன்.  மொத்தம் நாங்க 25 பேர். குழு விவாதம் செஞ்சப்போ நாங்க தனித்தனியா எழுந்து, சுய அறிமுகம் செஞ்சுக்கிட்டோம். அப்போ, எங்களோட லட்சியம் பத்தி பேசறப்போ, பத்திரிகையாளர் பயிற்சி முகாமில கலந்துக்க வந்துட்டு, சம்பந்தமே இல்லாம எல்லாரும், டாக்டராகணும், வக்கீலாகணும், இன்ஜினியராகணும் சொன்னாங்க. 25 பேர்ல நான் மட்டுந்தான், பத்திரிகையாளனாகணும்னேன். 

அதுக்கு ஏத்தமாதிரி, எழுதறது படிக்கறதுன்னு, எப்பவும் என் சிந்தனை அதை நோக்கியே இருந்திச்சி. என் இலட்சியம் நிறைவேறிட்டதாதான் இப்போ நினைக்கிறேன். 

நீங்க வெற்றியாளராகணும்னா, முதல்ல இலட்சியங்களைப் பத்தி சிந்திங்கங்கறாரு ஒரு அறிஞரு. வாழ்க்கையோட மாற்றத்துக்கும், வளச்சிக்கும் இலட்சிய நோக்கு முக்கியம். நாம் போக வேண்டிய இலக்கு முடிவாய்ட்டா, பாதையும், திசையும் அதுவாவே தெளிவாயிடும். அதனால, வாழ்க்கையோட இலங்கை தீர்மானிச்சு, அதை நோக்கி நீங்க கவனம் செலுத்தத் தொடங்கிட்டா.. பின்னால அதுவே உங்களை இயக்கும். 

இதுதான் இலட்சியமா இருக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல. உங்களுக்கு பிடிச்ச எந்த துறையிலயும் உங்க லட்சியம் அமையலாம். வாழ்க்கையில ஒருத்தருக்கு பல லட்சியங்கள் இருக்கலாம். ஆனா.. ஏதோ ஒண்ணுதான் முக்கிமானதா இருக்கும். பெரிய இலட்சியத்தை அடையறதுக்கு சின்ன லட்சியம் உதவியா இருக்கும். 

லட்சியங்களை உருவாக்கறது எப்படி ? அதுக்கான பத்து விதிகள் இது 

1. உங்களுக்கு ஆர்வமான துறையில, உங்க லட்சியம் எதுன்னு தீர்மானிச்சுக்கங்க. பணம் சம்பாதிக்கறதோ, பதவிய பிடிக்கிறதோ ஏன் ஒரு நடிகையை கல்யாணம் பண்றதாக் கூட உங்க லட்சியம் எதுவா வேணா இருக்கலாம். 

2. வகுத்துக்கிட்ட லட்சியத்தை எந்த காலக்கட்டத்துக்குள்ள அடையறதுன்னும் திட்டமிடுங்க. அதுதான் முக்கியம். 

3. அந்த லட்சியத்தை அடையறதுக்குள்ள வாய்ப்புக்களை உருவாக்குங்க. ( வாய்ப்பு கிடைக்கும்னு காத்திருக்காம, அதை நீங்களே உருவாங்குங்கன்னு பெரியவங்க சொல்லுவாங்க)

4. உங்க லட்சியம் இதுதான்னு தீர்மானிச்சப்புறம், அது தொடர்பான தகவல்களை சேகரிங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்க திறமைகளையும் வளர்த்துக்கங்க. அந்த துறை சம்பந்தமான மனிதர்களை சந்திச்சு, அவங்களோட ஆலோசனைகளை கேளுங்க. 

5. லட்சியத்தை அடையறதுக்கு நீங்க மேற்கொள்கிற முயற்சிகள்ல தடை ஏற்பட்டா, அதை சமாளிக்கவும் கத்துக்கங்க. 

6. திட்டமிட்ட குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள்ள லட்சியத்தை அடைஞ்சிட்டா, அதால கிடைக்கக் கூடிய சாதக பாதகங்களை தெரிஞ்சிக்கங்க. 

7. உங்க லட்சியத்தை அடையறதுக்கான மூலத்திட்டம் வடிவம் ஒண்ணையும் உருவாக்கிக்கங்க. 

8. உங்க லட்சியம் என்னங்கறது எப்பவும் உங்க ஞாபகத்துல இருக்கட்டும். நீங்க செய்யற செயல்கள் ஒவ்வொண்ணும் அதை நோக்கியே இருக்கணும். 

9. அப்புறம், உங்க லட்சியத்தை நீங்க அடைஞ்சிட்டதாவே கனவு காணுங்க. 

10. தகுந்த திட்டமிடல்களோட, உங்க லட்சியத்தை நோக்கி பயணப்பட துவங்குங்க. 


நிறைவா வார பத்திரிகையில படிச்ச குட்டிக்கதை ஒண்ணு 

ஒரு சாமியார்கிட்ட வந்த ஒருத்தன், 'நான் சாதிக்கணும்னா என்ன சாமி செய்யணும்' ன்னான். அதுக்கு அவரு, 'உன் பலத்தையெல்லாம் ஒண்ணா திரட்டி, தொடர்ந்து முயற்சி செய்'ன்னார். 'அது எப்படி?'ன்னு திரும்பவும் கேட்டான் அவன். அவனை ஒரு குளத்துக்கு கூட்டிட்டு போன சாமியார், 'கண்ணை மூடி, கடவுளை வேண்டிக்கிட்டு மூணு முறை முங்கி எந்திரி'ன்னாரு. அவன் முதல் தடவை முழ்கினதும், அவன் எதிர்பாராத நேரத்தில, அவன் தலையைப் பிடிச்சி பலமா அவன் எந்திரிக்காத மாதிரி தண்ணிக்குள்ள அமுக்கினாரு. கொஞ்சம் தாமதிச்சாரும் உயிர் போற நிலை. அவன், தன்னோட முழு பலத்தையும் திரட்டி, திமிரிக்கிட்டு வெளியே வந்தான். அப்போ சாமியார் சொன்னார், 'சாதிக்கணும்னா இந்த மாதிரிதான் முழு பலத்தோட முயற்சி செய்யணும்னாரு. சரிதானே.  


3 comments:

  1. இனிய பகிர்வு. கதையும் சூப்பர்...

    வாழ்த்துகள் நண்பரே.

    ReplyDelete
  2. ஆஹா... லட்சியங்களை வளர்த்துக் கொள்வதற்கான வழிமுறைகளைச் சொன்னதை விட அந்தக் குடடிக் கதை அபாரம். சட்டென்று மனசைப் பிடிச்சது தாஸ். அருமை.

    ReplyDelete