Monday 7 January 2013

அக்கம் பக்கம்


சத்தமில்லாமல் ஒரு சாதனை? 

எதிலேன்னு கேக்கறீங்களா? 'சரக்கு' விற்பனையில தான் இந்த சாதனை தமிழகம் செஞ்சிருக்காம். கொண்டாட்டம்னாலே இப்போ 'குடி'ன்னு ஆகிப்போச்சு. ஆங்கிலப் புத்தாண்டுக்கு மட்டும் 300 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை ஆச்சாம். இது போன வருஷத்தை விட இந்த வருஷம் அம்பது சதவீதம் அதிகம். 

அதே மாதிரி, தென் மாநிலங்கள்ல சரக்கு விற்பனைல தமிழகம் முதல் இடத்தை தக்க வெச்சிட்டிருக்காம். 2003 ம் ஆண்டுலேர்ந்து, மது விற்பனையை தமிழக அரசு செய்துட்டு வருது. மாநிலம் முழுக்க மொத்தம் 6 ஆயிரத்து 805 கடைகள் இருக்கு. உள்நாட்டு சரக்கு, வெளிநாட்டு சரக்குன்னு, குடிமக்களோட தாகத்தை தீர்த்த வகையில, 2011-12  மார்ச் மாசம் வரைக்கும் 18 ஆயிரத்து 81 கோடியே 16 லட்சம் ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சதாம். இது  2013 ஆண்டு முடிவுல 20 ஆயிரம் கோடி ரூபாயா அதிகரிக்கும்னு எதிர்பார்க்கறாங்களாம். 

நம்ம பக்கத்து மாநிலமான கேரளாவில, அரசோட நேரடி கட்டுப்பாட்டில் 338 கடைகளில் மட்டுமே மதுபான விற்பனை நடக்குதாம். கேரள நுகர்வோர் அமைப்பின் சார்பில், 45 கடைகள் நடத்தப்படுதாம். கடந்த, 2011-12 நவம்பர் மாதம் வரையில் கேரள அரசுக்கு, 6 ஆயிரம் கோடி ரூபாய் வருமானமா கிடைச்சதாம். காலை, 9 மணி முதல் திறக்கப்படும் மதுபான கடைகள் இரவு, 9 மணி வரை செயல்படுமாம். மதுபானங்களில் தண்ணீர் கலக்கறது, கூடுதல் விலைக்கு விக்கறதுன்ற அக்கபோரெல்லாம் அங்க கிடையாதாம். 

மதுபான மொத்த விற்பனையில் மட்டுமே ஆந்திர அரசு ஈடுபட்டு வருது. 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளை ஏலம் எடுத்து, தனியாரே நடத்தி வர்றாங்க. 2011-12 நவம்பர் மாதம் வரையில் 1அரசுக்கு 9 ஆயிரத்து 169 கோடி ரூபாய் வருமானம் கிடைச்சிருக்கு. இதே மாதிரி கர்நாடகாவும், 

மொத்த விற்பனையில் மட்டுமே ஈடுபட்டு வருது. 2011-12 நவம்பர் மாதம் வரையில், 9 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாக கிடைச்சிருக்கு. 

ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களை காட்டிலும், தமிழகத்தில் 'சரக்கு' விற்பனை ஆண்டுதோறும் உயர்ந்துக்கிட்டே வருது. சென்னையில 15 முதல் 19 வயசுக்குட்பட்டவங்க குடிக்கறது அதிகரிச்சிருக்கறதா ஒரு புள்ளி விவரம். பாக்கெட் மணி ஈஸியா கிடைக்கறதும், தங்களை ஒரு ஹீரோவா காட்டிக்கற முனைப்புமே இந்த பழக்கத்துக்கு பள்ளிக்கூட பிள்ளைங்க ஆளாகறாங்களாம். 

 ••••• 

தெரிஞ்சவங்கக் கிட்ட கவனமா இருங்க..

செய்தித் தாள்கள்ல தினசரி பக்கத்துக்குப் பக்கம், கடந்த சில நாட்களா பாலியல் வன்முறை தொடர்பான செய்திகள் அதிகம் வந்திட்டிருக்கு. செய்திகள்ல வர்றது எல்லாமே கொஞ்சம்தான்னும், அவமானம் கருதி பெரும்பாலான சம்பவங்கள் வெளில தெரியறதே இல்லைன்னும் சொல்றாங்க.. இன்னைக்கு ஒரு பத்திரிகையை புரட்டிக்கிட்டிருந்தப்போ, அறிமுகமான நபர்களாலதான் பெண்கள் அதிகமா பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படறதா போட்டிருந்தாங்க. அதாவது, அண்டை வீட்டுக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள்தான் இந்த காரியத்தை துணிச்சலா, எதுவும் செய்ய முடியாதுன்ற தைரியத்துல செய்யறாங்களாம். முகம் தெரியாத நபர்கள் செய்றது ரொம்ப குறைவாம். 

அந்த பத்திரிகையில இருந்த ஒரு புள்ளி விவரத்துல, 2011-ம் ஆண்டுல தமிழ்நாட்டு பதிவான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் 677. இதுல ரெண்டு சம்பவங்கள் மட்டுமே முன்பின் தெரியாதவங்களால நிகழ்த்தப்பட்டிருக்கு. இதுல 249 பேர் அண்டை வீட்டுக்காரர்களாலயும், 96 பேர் உறவினர்களாலயும், 2 பேர் பெற்றோர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களாலயும் பாதிக்கப்பட்டிருக்காங்க. 328 பேர் முன்பின் தெரியாத நபர்களால பாதிக்கப்பட்டிருக்காங்க. 

அதே ஆண்டுல சென்னையில பதிவான 76 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 74 தெரிஞ்சவங்களால பாதிக்கப்பட்டதா புகார் செய்யப்பட்டிருக்கு. இந்திய அளவுல 24 ஆயிரத்து 206 பாலியல் வன்முறை வழக்குகள்ல, 22 ஆயிரத்து 549 பேர் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளிட்டோரால பாதிக்கப்பட்டாங்களாம். 

' கடவுளே.. நண்பர்கள்கிட்டேயிருந்து என்னை காப்பாத்து, எதிரிகளை நான் பாத்துக்கறேன்'ங்கறது ஒரு பிரபலமான டயலாக். ஒரு தடவை நம்ம சூப்பர் ஸ்டார் கூட சொன்னதா ஞாபகம். அதனால.. நான் சொல்ல வர்றது என்னன்னா.. (மறுபடியும் தலைப்பை படிங்க..)

 •••••                                                                   

பிறந்தா சுவிஸ்ல பிறக்கணுமாம்..

மறுபடியும் ஒரு புள்ளி விவரம்

சுகாதாரம், பாதுகாப்பு, செல்வவளம், ஆரோக்கிய வாழ்வு போன்றவற்றின் அடிப்படையில, இந்த ஆண்டுல பிறக்க, உலகில் எது சிறந்த நாடுங்கற தலைப்புல ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆய்வு நடத்திச்சாம். சொன்னா.. நம்புங்க.. அதுல இந்தியாவுக்கு 66 வது இடம். இலங்கைக்கு 63 வது இடம். அமெரிக்காவும், ஜெர்மனியும் 16 வது இடத்துல இருக்குதாம். 49 வது இடத்தை சீனாவும், 72 வது இடத்தை ரஷ்யாவும் பிடிச்சிருக்காம். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் முறையே 75 மற்றும் 77 வது இடத்துல இருக்காம். 

முதல் இடத்தை சுவிட்சர்லாந்தும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ஆஸ்திரேலியா, நார்வேவும், அடுத்தடுத்த இடங்களை சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர் ஆகிய நாடுகள் பிடிச்சிருக்கின்றன. எட்டாவது இடத்தை நெதர்லாந்தும், 9 வது இடத்தை கனடாவும், 10 வது இடத்தை ஹாங்காங்கும் பிடிச்சிருக்காம். 

 ••••• 

ஒரு படை வீரனை நெப்போலியன் முன்னாடி நிறுத்திய ஒரு அதிகாரி, 'இவன் திறமையானவன் கிடையாது, படையில இருந்து இவனை நீக்கணும்'ன்னாரு. 'ஏன் அப்படி சொல்றீங்க'ன்னு கேட்டாரு நெப்போலியன். 'எதிரிகள் நடத்திய தாக்குதல்கள்ல இவன் ஒன்பது முறை கீழே விழுந்துட்டான். அப்புறம், எழுந்து நின்னு சண்டை போடறான்'ன்னாரு அந்த அதிகாரி. உடனே நெப்போலியன், அந்த படை வீரன் கிட்ட, ' ஒன்பது முறை கீழே விழுந்தாலும், விடா முயற்சியோட எழுந்த நின்னு சண்டை போடற நீதான் உண்மையான வீரன்'னு அவனை பாராட்டினாராம். 

 ••••• 

1 comment:

  1. முதல் மேட்டர்... சியர்ஸ்! (வேறென்னத்தைச் சொல்ல... மனசைத தேத்திப்போம்) இரண்டாவது விஷயம் பெண்களுக்கான எச்சரிக்கை மணி. நன்று. எனக்கு இந்திய வாழ்க்கையே திருப்தியா இருககு. ஸ்விஸ்மேல ஆசையில்லப்பா. நெப்போலியன் கதை அருமை தாஸ்.

    ReplyDelete