Monday 28 March 2016

தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள்!


தமிழ் சினிமாவுக்கு இந்த ஆண்டும் (2016) கணிசமான தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 விருதுகளை தமிழ் சினிமா பெற்றுள்ளது இந்த ஆண்டு. இரு மொழிப் படம் என்ற வகையில் ‘பாகுபலி' யையும் சேர்த்தால் மொத்தம் 7 விருதுகள்

வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான ‘விசாரணை' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த 71 வருட வரலாற்றில் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமைக்கு உரியது ‘விசாரணை'.

இந்தப் படத்தை தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து தயாரித்த காக்காமுட்டை படமும் தேசிய விருதைப் பெற்றது

இதேபோல், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றிமாறனுக்கும் தேசிய விருது கிடைத்தன.
விசாரணை படத்துக்காக உயிரைக் கொடுத்து உழைத்த மறைந்த டி இ கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்துள்ளது.

அதே படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சமுத்திரக்கனிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.


'இறுதிச் சுற்று' படத்திற்காக  சிறந்த நடிப்புக்கான சிறப்பு விருதினை ரித்திகா சிங் பெற்றுள்ளார். 

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துச் சாதனைப் புரிந்த இளையராஜாவுக்கு, அவரது ஆயிரமாவது படமான 'தாரை தப்பட்டை' படத்தின் பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, 'சலங்கை ஒலி' , 'சிந்து பைரவி' , 'ருத்ர வீணை' படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை பெற்ற இளையராஜா, 'பழஸிராஜா' படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார். இப்போது 5-வது முறையாக 'தாரை தப்பட்டை' படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


'பாகுபலி' தெலுங்குப் படம் என்றாலும், அது தமிழிலும் நேரடிப் படமாகவே வெளியானது. அந்தப் படத்துக்கு தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருதும், சிறந்த கிராபிக்ஸுக்கான விருதும் கிடைத்துள்ளது.


No comments:

Post a Comment