Friday 20 January 2012

தானம்






சென்னை போன்ற பெருநகரங்களில், விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் பெரும்பாலும் அதிக ரத்த போக்கின் காரணமாகவே உயிரிழக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளி விவரம். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வகை ரத்தம் கிடைக்கும்போது, விலைமதிப்பற்ற மனித உயிர் காப்பாற்றப்படுகிறது. எனவேதான், தானத்தில் ரத்த தானம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. 

  ஒரு மனிதனின் உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருக்கும். உயிர் வாழ்வதற்கு நான்கரை லிட்டர் ரத்தம் போதுமானது. உபரியாக அரைலிட்டர் இருக்கிறது. அதிலிருந்து 300 மி.லிட்டர் ரத்தம் தானமாக எடுக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட ரத்தம் ஊற்றுநீர் போல ஊறிவிடும். புதிய ரத்தம் ஊறிவிடுவதால், புத்துணர்ச்சி கிடைக்கிறது. ரத்த தானம் செய்வதால், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. 

   ஆண்டிற்கு 60 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. நாட்டிற்கு, ஆனால், கிடைப்பதோ 30 லட்சம் யூனிட்கள் மட்டுமே. 1818 ஆம் ஆண்டில்தான் உலகில் முதன்முதலாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. 1937 ஆம் ஆண்டில் தான் முதல் ரத்த வங்கி ஸ்பெயின் நாட்டில் தொடங்கப்பட்டது. 1939 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள கிங் நிலையத்தில் டாக்டர் அரங்கநாதன் என்பவரால் ரத்த வங்கி தொடங்கப்பட்டது. 

   நம்மில் பலபேருக்கு ரத்த தானம் செய்ய ஆர்வம் இருக்கும். ஆனால், கூடவே, அதுகுறித்த பயங்களும் குழப்பங்களும் அதிகம் உண்டு. எனவே, ரத்த தானம் பற்றிய சில குறிப்புகள் உங்களுக்காக.. 

   ரத்தம் எல்லாருக்கும் ஒரே மாதிரியாக சிவப்பு நிறமாக இருந்தாலும், வெவ்வேறு ரத்தப் பிரிவுகளாக மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது. இதற்கு காரணம் ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், ரத்த சிவப்பணுக்களின் மேல் படிந்துள்ள ஆன்டிஜின் மூலக்கூறுகள் மனிதனுக்கு மனிமதன் வேறுபடுகிறது. எனவே தான் இத்தனை வகையான ரத்தப்பிரிவுகள் உள்ளன.

   இரத்ததை 'A' குரூப் என்றும், 'B' குரூப் என்றும், 'AB' குரூப், 'O' குரூப் என்றும் வகைப்படுத்தியவர் லான்ஸ்ட்டீனர் என்றும் மேனாட்டு மருத்துவ விஞ்ஞானி ஆவார். 1909 ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுபிடித்தார். இரத்தம் செலுத்தும் துறைக்கு ஹீமட்டாலஜி என்று பெயர் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய இரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
   
   பொதுவாக, 'O' குரூப் ரத்தம் பெற்றிருப்பவர்களை 'யூனிவர்சல் டோனர்' என்றும், 'AB' குரூப் ரத்தம் பெற்றிருப்பவர்களை 'யூனிவர்சல் ரெசிப்டன்ட்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். 'O' குரூப் ரத்தம் கொண்டர்கள் யாருக்கு வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம். 'AB' குரூப் ரத்தம் கொண்டவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் ரத்தத்தை பெற்றுக்கொள்ளலாம். 

   இந்தியாவின் மிகப்பெரிய ரத்த வங்கி சென்னையில் உள்ள அரசு பெரிய மருத்துவமனையில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் 20 ஆயிரம் யூனிட் ரத்தம் சேமித்து வழங்கப்படுகிறது. 

யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம்?

18 முதல் 60 வயது உள்ள எல்லா ஆண்களும் பெண்களும் ரத்ததானம் செய்யலாம். 

நம்முடைய ஒவ்வொருவர் உடலிலும் சுமார் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. இதில், இரத்த தானத்தின் போது, 300 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 

இரத்த தானம் செய்பவரின் எடை குறைந்த பட்சம் 45 கிலோ இருக்க வேண்டும். 
ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும். 
இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 

ஒருவர் 3 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம். 

இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே போதுமானது. 

இரத்த தானம் செய்தவுடன், வழக்கம் போல அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம். 

யாரெல்லாம் ரத்த தானம் செய்யக்கூடாது?

பெண்கள் கருவுற்றிருக்கும்போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் இரத்த தானம் செய்யக்கூடாது. 

பெரிய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 6 மாதங்களுக்கும், சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 3 மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

மலேரியாவுக்கு சிகிச்சை பெற்ற 3 மாதங்களுக்கும், மஞ்சள் காமாலை சிகிச்சை பெற்ற 6 மாதங்களுக்கும் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

பால்வினை/ எய்ட்ஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும். 

No comments:

Post a Comment