Tuesday 31 July 2012

நொறுக்ஸ்

குடிப்பது இப்போது சமூக அந்தஸ்தாக மாறி வருகிறது. குடிக்கும் பழக்கம் இல்லையென்றால் சற்றே அதிர்ச்சியாகவும், விநோதமாகவும் பார்க்கிறார்கள்.  பேருந்து வசதி இல்லாத கிராமத்தில் கூட மதுக்கடைகளை திறந்து, சிறந்த 'குடி'மக்களை உருவாக்கும் மகத்தான பணியை அரசு செய்துகொண்டிருக்கிறது.
               
அண்மையில், செய்தித்தாளில் வந்த செய்தி ஒன்றில், பள்ளி பெஞ்சுகளை விற்று மாணவர்கள் சிலர் மது குடித்ததாகவும்,  சில மாணவர்கள் குடித்துவிட்டு வகுப்புக்கு வருவதாகவும் ஆசிரியர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். 
               
இதனை, அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் எனது உறவுக்காரர் ஒருவரும் உறுதிபடுத்தினார். அப்படி தவறு செய்யும் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலை இப்போது உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரணம், மாணவர்களை கண்டித்தால், ஆசிரியர் அடித்ததாக பொய் புகார் அளிப்போம் என்று பகிரங்கமாவே மிரட்டுவதாக வருத்தப்பட்டார். 
               
எனவே, எதற்கு வம்பு என்று, வந்ததோமா, வேலையை பார்த்தோமா, முதல் தேதியானால் சம்பளம் வாங்கினோமா என்று ஆசிரியர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர்.  
             
மதுவிலக்கு இப்போது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால், பார்களை ஒழிப்பதுடன், பொது இடங்களில் குடித்துவிட்டு நடமாடுவதற்கும் தடை விதித்தால், பள்ளி மாணவர்கள் சீரழிவதையாவது ஓரளவேணும் தடுக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. 

                       
மதுக்கடைகள், ஒயின் ஷாப்புகளாக தனியார் வசம் இருந்தபோது, கடை முன்பு நின்று குடிக்க கடைக்காரர்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போது, அந்த நிலை இல்லை. பாதி தெரு வரை குடிமகன்கள் ஆக்ரமித்துக் கொண்டு, சாலையிலேயே நின்று குடித்து, அழிச்சாட்டியம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பெண்கள் அந்த பகுதியிலேயே நடமாட முடியாத சூழல் உருவாகிறது. 

                       
சில இடங்களில் வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள் அருகிலேயே அரசு மதுக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்வதை என்னவென்று சொல்வது ? 

எலைட் பாரெல்லாம் திறந்து, பெண்களின் தாலியை அறுத்துவிட்டு, தாலிக்கு தங்கமும், மிக்சி, கிரைண்டர், ஆடுமாடுகள் தருவதால் எந்த பிரயோஜனமும் இல்லையென்பதை அரசு உணருமா தெரியவில்லை. 

பின்குறிப்பு : இந்த பதிவை எழுதி முடித்துவிட்டு, டி.வி. பார்த்துக்கொண்டிருந்தபோது, அதில், ஒரு செய்தி ஓடிக்கொண்டிருந்தது. சேலம் அருகே பள்ளி வளாகத்தில் மது அருந்திய நான்கு மாணவர்கள், கண்டித்த ஆசிரியரை  தாக்கினர் என்பதே அது.

 நாடு நல்லாத்தான் முன்னேறிக்கிட்டிருக்கு. 


*****************************

"ஹலோ யார் பேசறீங்க.."

"நான்.. கோட்டூர்புரத்திலேர்ந்து ராஜா பேசறேன்."

"உங்க ரேடியோ வால்யூமை குறைச்சி வைங்க.ராஜா..."

"ம் குறைச்சிட்டேன் மேடம்.." 

"ம்.. இப்போ சொல்லுங்க.. நீங்க யாரை, லவ் பண்றீங்க சார்.."

"நான்.. திவ்யாவை லவ் பண்றேன்.." 

"வெரிகுட்.. எத்தனை வருஷமா லவ் பண்றீங்க.."

"ரெண்டு வருஷமா மேடம்.." 

"அப்படியா.. ம் நீங்க சொல்லுங்க ராஜா.. அவங்களை வெளில எங்கேயெல்லாம் கூட்டிட்டு போயிருக்கீங்க.. 'மேட்டரை'யெல்லாம் முடிச்சிட்டீங்களா ?"

"ஹி ஹி.. அதுவந்து.. மேடம்.." 

- இப்படி போன அந்த உரையாடல்..சத்தியமாக நம்புங்கள்.. ஒரு தனியார் பண்பலை வானொலியில் நான் காதாரக் கேட்டது. அதே வானொலியில், ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளர்.. தன் சக தொகுப்பாளரைப் பார்த்து உதிர்த்த தத்துவ முத்து ஒன்று.. '' எருமைக்கு சுடிதார் போட்டா மாதிரி இருக்கற சப்ப ஃபிகர் நீ '' 

கலையை எப்படியெல்லாம் வளர்த்து டெவலப் பண்றாய்ங்க..

*****************************


பெர்னாட் ஷா தன்னோட வீட்ல உட்கார்ந்து நண்பர்களோட சுவாரஸ்யமாக பேசிக்கிட்டிருந்தாரு. பக்கத்து ரூம்ல.. அவரோட மனைவி பெரிய இரைச்சலோட தையல் மிஷின்ல துணி தெச்சிக்கிட்டிருந்தாங்க.  பெர்னாட் ஷாவோட நண்பர்கள் அவங்கக்கிட்ட போய், 'உங்க கணவர் இவ்வளவு சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருக்காரு.. அவரோட பேச்சை கேக்கறதுல உங்களுக்கு ஈடுபாடு இல்லையா'ன்னாங்க.   அதுக்கு கோபத்தோட அந்தம்மா.. 'என் கைல மட்டும் இந்த தையல் மிஷின் இல்லேன்னா.. நேரா போய் அவரோட கழுத்தை திருகியிருப்பேன். உருப்படியான வேலை பார்க்காம எப்போ பார்த்தாலும் வெட்டி நியாயம் பேசிக்கிட்டு திரிஞ்சிக்கிட்டு'ன்னாங்களாம். 


*****************************



ண்டுக்கு பல்லாயிரம் பேர் சாலை விபத்துக்களில் மரணமடைவதாக அண்மையில் ஒரு புள்ளி விவரத்தை படிக்க நேர்ந்தது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தான் அதிக அளவில் உயிரிழப்பை சந்திக்க நேர்கிறதாம். குடித்துவிட்டு, வாகனம் ஓட்டுவது, கவனக்குறைவு, தலைக்கவசம் அணியாதது என்று பொத்தாம் பொதுவாக பழியை வாகன ஓட்டிகள் மீது போடப்படுவது வழக்கம். ஆனால், மோசமான, பராமரிப்பில்லாத சாலைகளும் ஒரு காரணம் என்பதை ஏனோ யாரும் கவனத்தில் கொள்வதே இல்லை. அண்மையில், சென்னையில், ஒரு அமைச்சரின் மகன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வேகத்தடையில் இடறி விழுந்து மரணமடைந்தார். அவர் அமைச்சரின் மகன் என்பதால், இரவோடு இரவாக, சில இடங்களில் வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. அப்போதுதான், வேகத்தடையில் வர்ணம் பூசியிருக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சாதாரணர்களுக்கு தெரியவந்தது. இறந்தவர், சாதாரண பொது ஜனம் என்றால், அதுவும் நடைபெற்றிருக்காது. வேகத்தடை இருப்பதற்கான அறிவிப்பு பலகைகளை நெடுஞ்சாலைகளில் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். சென்னையில், இதுவரை என் கண்ணில் பட்டதே இல்லை. ஒருவேளை எங்காவது இருந்து நான்தான் கவனிக்காமல் போகிறேனோ என்னவோ ? 


*****************************

பிரிட்டிஷ் மன்னர் தன்னோட பேரக் குழந்தைகளோட டைனிங் டேபிள் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தாரு.  அப்போ, ஒரு பேரன் ஏதோ பேச வாயெடுத்தான். உடனே, மன்னர் அவனை கையமர்த்தி, 'இதோ பாரு.. ஆல்பர்ட்..சாப்பிடும் போது டைனிங் டேபிள்ல பேசக் கூடாது. ராஜ குடும்பத்துல இது அநாகரீகமான விஷயம் அதனால.. எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம்'ன்னாரு.   அமைதியா எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுட்டு எழுந்ததும், பேரன்கிட்ட மன்னர், ' ஏதோ சொல்ல வந்தியே என்ன'ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த பேரன், ' இப்போ அதைச் சொல்லி பயனில்லை'ன்னான். 'பரவால்ல.. எதுவானாலும் சொல்லு'ன்னாரு மன்னர். அதுக்கு அந்த பேரன் கூலா, 'நீங்க சாப்பிட்ட தட்டுல ஒரு பூச்சி செத்து கிடந்துச்சி.. அதைத்தான் சொல்ல வந்தேன். ஆனா.. நீங்க அதையும் சேர்த்து சாப்பிட்டுட்டீங்க'ன்னான். 

*****************************

7 comments:

  1. வேகத் தடையா...? கொய்யால, நிறைய இடங்கள்ல அதுவே மினி பாலம் மாதிரி பெரிசா போட்டு வெச்சு உசிரை வாங்கறாங்க. அதுல நைட் ப்ளோரசண்ட் அவசியம் இருந்தாகணும். அடப்பாவிகளா... பண்பலையில் இப்படில்லாமா பேசி தமிழ் வளக்கறாங்க? இட்ஸ் எ நியூஸ் ஃப்ர் மீ. பெர்னாட் ஷா. பிரிட்டிஷ் மன்னர் துணுக்குகள் ரசனை. நொறுக்ஸ் வயிறு நிரம்ப சாப்பிட்டேன் தாஸ். சூப்பர்.

    ReplyDelete
  2. நொறுக்ஸ் - ஒவ்வொரு விஷயமும் நன்று.. தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நொறுக்ஸ்...நல்ல மொறு மொறு...

    ReplyDelete