Wednesday, 14 November 2012

அக்கம் பக்கம்


எனக்கு 23, உனக்கு 70 


கேரள மாநிலம் திருவனந்தபுரம் போத்தன்காடு பகுதியைச் சேர்ந்த 23 வயது ஒரு பொண்ணுக்கு, ஓரு வருஷத்துக்கு முன்னாடி, கண்ணூர் பகுதியைச் சேர்ந்த, அம்சாங்கறவரு, மொபைல் போன் மூலம் அறிமுகமானாரு. . எம்.டெக்., பட்டதாரியான, அந்த பொண்ணும், அம்சாவும், அடிக்கடி போன்ல பேசிக்கிட்டாங்களாம். வழக்கம் போல ரெண்டு பேருக்கும் காதல் வந்திருச்சி. அப்புறம் என்னா.. ஒரு வருஷமா, ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்காமலேயே, 'காலமெல்லாம் காதல் வாழ்க' படம் மாதிரி போன்லயே காதலிச்சிட்டிருந்தாங்களாம். திடீர்னு ஒருநாள், அந்த பொண்ணுக்கு தன்னோட காதலன் அம்சாவை நேர்ல பாக்கணும் ஆசை. உடனே, போன ஒம்பதாம் தேதி திடுதிப்புன்னு கிளம்பி கண்ணூர் கூத்துப்பரம்பு பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுச்சி. 

அங்கேயிருந்து தன்னோட காதலனுக்கு பலமுறை போன் செஞ்சுதாம். ஆனா.. என்னமோ தெரியலை காதலன் போனை எடுக்கலை. என்ன பண்றதுன்னு தெரியாம.. பஸ் ஸ்டாண்டுலயே அந்த பொண்ணு சுத்திக்கிட்டிருந்திருக்கு. இத பாத்து, அங்க இருந்தவங்க போலீசுக்கு சொல்ல, போலீஸ்காரங்க வந்து, அந்த பொண்ணை ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விசாரிச்சிருக்காங்க. பொண்ணு விஷயத்தைச் சொன்னதும், காதலன் அம்சா போன் நெம்பரை வாங்கி..போன் பண்ணி அவனை வரச் சொன்னாங்க. பொண்ணு முதல் முதலா தன்னோட காதலனை பாக்கறதுக்கு ஆவலோட காத்திருக்க, வந்தவனை, ஸாரி வந்தவரை பார்த்ததும் பயங்கர அதிர்ச்சியாகி, மயக்கம் போட்டு விழுந்திருச்சி. 

வந்தவருக்கு வயசு 70 வயசு. அவரோட உண்மையான பேரு இப்ராகிம். அவருதான், அந்த பொண்ணுக்கிட்ட அம்சான்ற பேர்ல பேசிக்கிட்டிருந்தவராம். அப்புறம், என்ன போலீஸ்காரங்க பொண்ணுக்கு மயக்கம் தெளிய வெச்சி, புத்திமத்தி சொல்லியிருக்காங்க. அப்புறம், 'தனக்க இளம் வயசுன்னு சொல்லி, போன்ல காதலிச்சு ஏமாத்துன இப்ராகிம் மேல அந்த பொண்ணு புகார் குடுத்திருக்கு.  

இதுல இன்னொரு விசேஷம் என்னன்னா, அந்த பொண்ணுக்கு சொந்தமா மொபைல் போனே கிடையாதாம். இப்ராகிம் ஒரு தடவை கூட அந்த பொண்ணுக்கு தானா போன் பண்ணதில்லையாம். இந்த பொண்ணுதான், லேண்ட் லைன்லேர்ந்து அடிக்கடி போன் பண்ணி காதலை உரம் போட்டு வளர்த்திருக்கு. அப்புறம் போலீஸ்காரங்க.. பொண்ணோட சொந்தக்காரங்ககிட்ட பொண்ணை ஒப்படைச்சிருக்காங்க. 

கலி முத்திடுத்து.. 


ரெண்டாம் இடம்..

சமூக கட்டமைப்பு இல்லாதது, கலாசார சீரழிவு, பணிச்சுமை, மன உளைச்சல், போதைக்கு அடிமையாகறது போன்ற காரணங்களால தங்களை தாங்களே மாய்ச்சிக்கற சம்பவங்கள் நாட்ல அதிகரிச்சிக்கிட்டே வருது. தேசிய குற்றப்பதிவேடுகள் துறையின் அறிக்கைப்படி, இந்திய அளவுல, தற்கொலைகள் அதிகரிசிருக்கறதில மேற்குவங்க மாநிலத்துக்கு அடுத்தபடியா, ரெண்டாவது இடத்துல தமிழகம் இருக்காம்.

மேற்குவங்கத்தில் வறுமை காரணமாக ஆண்டுக்கு 16 ஆயிரம் பேர் தற்கொலை செய்துக்கறாங்களாம். இது தமிழகத்தில, ஆண்டுக்கு 15 ஆயிரத்து 963 பேராம். இதுல, கடன் தொல்லையால 2.2 சதவீதம் பேரும், போதை பழக்கத்தால 2.4 சதவீதம் பேரும், காதல் தோல்வியால 3.55 சதவீதம் பேரும், நோய் பிரச்னைகளால 19.6 சதவீதம் பேரும், குடும்ப சண்டை காரணமாக 24.3 சதவீதம் தற்கொலை செஞ்சுக்கிறாங்களாம். 

தமிழக அளவில், திருப்பூர் மாவட்டத்தில அதிகம் பேர் தற்கொலை செஞ்சிக்கிறாங்களாம். பனியன் தொழில் வளர்ச்சி காரணமாக, உலக அளவில் தனி இடத்தை பெற்றுள்ள திருப்பூர், பல்வேறு மாவட்ட மற்றும் மாநில மக்களுக்கு, படிச்சவர், படிக்காதவர்ங்கற பாரபட்சமில்லாம வேலை வாய்ப்பு தரும் நகரமாக இருக்கு. ஆனா.. குடும்பங்கள் சீரழிவு காரணமா இங்க 80 சதவீத தற்கொலை சம்பவங்கள் நடக்குதாம். இந்த மாவட்டத்துல மாவ கடந்த 2009 ம் ஆண்டு 871 பேரும்; 2010ல், 940 பேரும்; 2011ல், 859 பேரும், 2012ல், கடந்த அக்., வரை, 511 பேரும் தற்கொலை செய்துக்கிட்டிருக்காங்களாம். அதாவது சராசரியா இங்க தினமும் 
மூணு பேர் தற்கொலை செய்துக்கறதும், 60 பேர் வரை தற்கொலைக்கு முயற்சி பண்றதும் சர்வ சாதாரணமாக நடந்துட்டிருக்காம். அதுவுமில்லாம ஆண்டுக்கு 400 பேர் வரை காணாம போறதாவும் போலீசில் புகார்கள் பதிவாகுதாம். 

இது இனிப்பான செய்தி இல்ல


இன்னிக்கு உலக நீரழிவு நோய் தினம். மனித உடல்ல இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகள்ல குறை ஏற்பட்டுதுன்னா.. ரத்தத்தில சர்க்கரையோட அளவு அதிகரிக்குது. இதனால, உணவிலிருந்து சக்தியை எடுக்க முடியாம ஏற்படறதே நீரிழிவு நோய். இந்த நோய்க்கான 'இன்சுலின்' அப்படிங்கற மருந்தை, சார்லஜ் ஹெர்பர்ட் பெஸ்ட் என்பவரோட சேர்ந்து, கனடாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர் "பிரெட்ரிக் பேண்டிங்கை' கவுரப்படுத்தற விதமாக, அவரது பிறந்த நாளான இன்னிக்கு (நவ., 14) உலக நீரிழிவு நோய் தினமாக ஐ.நா., அறிவிச்சது. இதோட மையக்கருத்து, 2009 - 2013 வரை, 'நீரழிவு நோய் கல்வி மற்றும் அதை தடுப்பதுங்கறதுதான். 

இந்த நோயில, ரெண்டு வகை இருக்கு. இன்சுலின் சுத்தமா சுரக்காம நிக்கிறது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவுல சுரக்காம இருக்கறது. இவ்வகை தான் 90 சதவீத நீரழிவு நோயாளிகளுக்கு இருக்கு. இந்த வகையால 45 வயசுக்கும் மேற்பட்டவங்க. அதிகம் பாதிக்கப்படறாங்க.

இன்னிய தேதில, உலகம் முழுசும் 34 கோடி பேர் நீரிழிவு நோயால  பாதிக்கப்பட்டிருக்காங்க. 2030ம் ஆண்டுல இது ரெண்டு மடங்கா அதிகருக்கும்னு உலக சுகாதார நிறுவனம் பீதிய கிளப்பியிருக்கு. நீரிழிவு நோயால இறக்கறவங்கள்ல 80 சதவீதம் பேர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவங்களாம். இந்தியாவில மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானவங்க பாதிக்கப்பட்டிருக்காங்களாம். இன்னும் சில ஆண்டுகள்ல இது, 7 கோடியாக உயருமாம். 


ஒரு முறை வந்துட்டா.. வாழ்நாள் முழுசும் தொடர்ந்திட்டிருக்கற இந்த நோய், சமீப காலமா குழந்தைகள் பக்கம் தன்னோட பார்வையை திருப்பியிருக்காம். அதனால, பெற்றோர்கள் கவனமா இருங்க. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கறதோ, குறையறதோ கூட ஆபத்தில் முடியலாம். அதனால மருத்துவ பராமரிப்பும், அலோசனையுடன் கூடிய உணவுக் கட்டுப்பாடு அவசியம். அதிக உணவு, குறைவான வேலைன்னு இருக்கக் கூடாது. நல்லா உடல் பயிற்சியும், முறையான உணவு பழக்க வழக்கமும் இருந்த இந்த நோய் பக்கத்துல வர்றதுக்கு அஞ்சும். 

எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இதுக்கான பொதுவான அறிகுறிகள். துவக்கத்திலேயே சிகிச்சை எடுக்கத் தவறினா கண், இருதயம், சிறுநீரகம், கால் ஆகியவற்றை பாதிப்படையும். 


அங்கீகாரம். 

என்னதான் இலவம் பஞ்சு மெத்தையில படுத்தாலும், பாய்ல படுத்து தூங்கற சுகத்துக்கு அது ஈடாகாது. நாகரீகம் மற்றும் அறிவியல் வளர்ச்சியால பல பொருட்கள் வழக்கொழிஞ்சி போனாலும், பாய் இன்னும் மக்களோட பயன்பாட்டுல உயிர் வாழ்ந்திட்டிருக்கு. காஞ்சிப் பட்டு, திண்டுக்கல் பூட்டு, திருநெல்வேலி அல்வா, தஞ்சாவூர் பொம்மை, ஊத்துக்குளி நெய், திருப்பாச்சி அருவான்னு சில இடங்கள்ல உற்பத்தி செய்யப்படற பொருட்களுக்கு மவுசு அதிகம். 

அந்த வகைல பத்தமடை பாய்க்கும் தனி மவுசு உண்டு. தாமிரபரணி ஆத்தோட கரையில கிடைக்கிற கோரைப் புல்லுல விதவிதமா இந்த பாய் தயாரிக்கப்படுது. இந்த கோரையை வெச்சி, துணி மாதிரி கூட பாய்களை நெய்யறாங்க. கர்ச்சீப் மாதிரி நாலா, எட்டா மடிச்சி பாக்கெட் வெச்சுக்கற அளவுக்கு மெல்லிசாவும் தயாரிக்கறாங்க. மறுபடியும் விறிச்சிப்போட்டா.. எந்த மடிப்பும் தெரியாது. 

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடைங்கற ஊர்ல முற்றிலும் கைத்தறியால தயாரிக்கப்படற பாய்க்கு உலகம் முழுசும் வரவேற்பு இருக்கு. அதை உறுதிப்படுத்தற விதமா.. இந்த பாய்க்கும், கும்பகோணம் பக்கத்துல உள்ள நாச்சியார்கோவில்ல தயாராகிற குத்து விளக்குக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைச்சிருக்கு. 

அறிவுசார் சொத்துரிமை துறையின் கீழ், புவிசார் குறியீடு வருது. பிரசித்தி பெற்ற பொருட்களுக்கு, புவிசார் குறியீடு பதிவு கிடைச்சா, அந்தப் பொருளை, வேறு எந்தப் பகுதியிலும் தயாரிச்சு, உரிமை கொண்டாட முடியாது. இந்தக் குறியீட்டை பெறணும்னா, முதல்ல அந்தத் துறையிடம் விண்ணப்பிக்கணும். பத்தமடை பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு ரெண்டையும் புவிசார் குறியீடு பதிவேட்டில், பதிவு செய்யறதுக்காக, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டுக் கழகம் சார்பில், விண்ணப்பிச்சாங்க. புவிசார் குறியீடுத் துறை அதை பரிசீலனை பண்ணி புவிசார் குறியீட்டுக்கான இதழ்ல வெளியிட்டது.


கொண்டாட்டம் 

உறவுகளை புதுப்பிக்கவும், மனச்சோர்வை நீக்கி புத்துணர்வை பெறுவதற்காகவும் தான் பண்டிகைகளை நம்ம முன்னோர்கள் உருவாக்கி வெச்சிருக்காங்க. ஆனா.. இப்போ.. தீபாவளியை அப்படியான பண்டிகையா நினைக்க முடியலை. எங்க திரும்பினாலும் வேட்டுச் சத்தம். வயசாளிகள், நோயாளிகள், குழந்தைகள்னு எதைப்பத்தியும் கவலைப்படாம அன்னிக்கு வெடி போட்டதை சகிக்க முடியலை. அன்னிக்கு முழுசும் சென்னை நகரம் கந்தக புகையால சூழப்பட்டிருந்திச்சு. என்னோட டூ விலர் சீட்டை நகத்தால பிராண்டி வைக்கிற பூனை, அன்னிக்கு, வெடி சத்தத்துக்கு பயந்துக்கிட்டு ஒரு இடுக்குல பயந்து நடுங்கிக்கிட்டு ஒண்டிக்கிட்டிருந்ததை பாக்கவே பாவமா இருந்திச்சி. 

பட்டாசு வெடிச்சதாலா சென்னையில மட்டும் சின்னதும், பெரிசுமா 150 க்கும் மேற்பட்ட தீ விபத்துக்கள் ஏற்பட்டதாம். ராக்கெட் வெடி போட்டதால, 20 க்கும் மேற்பட்ட குடிசைகளும் எரிஞ்சி, அதுல இருந்தவங்க நடுத்தெருவுல நின்னு கதறினதை கண்கொண்டு பாக்க முடியலை. இரு ஒரு சோறு பதம். மாநிலம், நாடுன்னு போனா, உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் அதிகம். இதையெல்லாம் எப்படி கொண்டாட்டமா எடுத்துக்கறதுன்னு தெரியலை. 

அதுவுமில்லாம, டாஸ்மாக்குகள்ல கூட்டமும், சினிமா கொட்டகைகளில் பால் மற்றும் பீர் அபிஷேகங்கள், தொலைக்காட்சி பெட்டிகள்ல நடிகர், நடிகைகளோட தத்துப்பித்து உளறல்களும் இப்போ பண்டிகைகளோட அம்சமா மாறினது வேதனையா சோதனையான்னு தெரியலை. 


ஒருவாட்டி உச்சா போனா.. 6 மணி நேரம் கரண்ட் 

எங்க போனாலும் கரண்ட் பெரிய பிரச்னையா இருக்கு. நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வர்ற ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுலம் இதே பிரச்னை. அந்த நாட்டோட பல பகுதிகள்ல மக்கள் இன்னும் கரண்ட்டுன்னா என்னன்னு தெரியாமயே காலத்தை கழிச்சிட்டிருக்காங்க.  இந்த நிலைமையிலதான் 14 வயசான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயசா£ன பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கற முறையை கண்டுபிடிச்சிருக்காங்க. 

லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டுல அவங்க, தங்களோட கண்டுபிடிப்பை காட்சிக்கு வெச்சாங்க. 

சிறுநீரை முதலில் இவங்க, நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கிறாங்க. அப்புறம், ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள்ள அனுப்பி சுத்திகரிக்கிறாங்க. அது ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகுது.
அங்க ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுது. அப்புறம், அதிலேர்ந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்யுது. 
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினா 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்குதாம். 

நம்மூர்ல கரண்ட் இல்லாத டிரான்ஸ்பார்மர் பக்கம் ஒதுங்கற பிரகஸ்பதிகளைப் பிடிச்சாலே பல வருஷத்துக்குத் தேவையான கரண்டை எடுக்கலாம் போலிருக்கே. 1 comment:

  1. பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றி

    ReplyDelete