Sunday 3 April 2016

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' தொடக்கம்

பாரதிராஜா இயக்கத்தில் 'குற்றப்பரம்பரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.  

தென் தமிழகத்தின் குறிப்பிட்ட சில பகுதி மக்கள் திருட்டையே தொழிலாகக் கொண்டிருந்ததாக கூறி அவர்களை ‘குற்றப்பரம்பரை' என அப்போது பிரிட்டிஷ் அரசு முத்திரை குத்தி சட்டத்தின் கீழ் வகைப்படுத்தி தமிழகத்தில் உள்ள 90 சாதி மக்களை குற்றப் பரம்பரையினர் என்று பட்டியலிட்டு அவர்கள் மீது ரேகை சட்டத்தை 1911-ல் திணித்தனர்.

அப்பாவி மக்களை 'பிறவிக் குற்றவாளிகளாக' அடையாளப்படுத்தி சமூக நீதிக்கெதிராகக் குற்றம் சாட்ட வழி வகுத்தது இந்தச் சட்டம். மாலை 6 மணிக்குப் பிறகு இரவு நேரங்களில் யாரும் வீட்டில் தங்க கூடாது, இருமுறை காவல் நிலையத்தில் ஆஜராகி கைரேகை பதிக்க வேண்டும் என்பன போன்ற பல கொடுமைகளுக்கு இந்த மக்கள் ஆளானார்கள்.  இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. 

1920 ஆம் ஆண்டு உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற கிராமத்தில் இச்சட்டத்தை எதிர்த்தும், ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடைபெற்றது. அதை அடக்குவதற்காக அரசாங்கம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 'மாயாக்காள்' என்ற பெண் உட்பட 17 பேர் மரணம் அடைந்தனர். இறுதியாக இந்த சட்டம் 1947 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் முழுமையாக நீக்கப்பட்டது. 

இந்த வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டதுதான் குற்றப்பரம்பரை கதை. குற்றப்பரம்பரை கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுதியுள்ளார். அந்தக் கதையை இயக்குநர் பாலா திரைப்படமாக எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின.  

தொன்னூறுகளின் பிற்பகுதியிலேயே குற்றம் பரம்பரை கதையை படமாக்க இயக்குநர் பாரதிராஜா முயற்சி செய்தார். அவருக்காக 'கிழக்குச் சீமையிலே', 'கருத்தம்மா' போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதிய இயக்குநர் ரத்னகுமார் குற்றப் பரம்பரை என்ற பெயரில் ஒரு கதையை உருவாக்கினார். 1997-ல் ‘குற்றப்பரம்பரை' படத்தின் கதையை எழுத்தாளர் சங்கத்திலும் பதிவு செய்துள்ளார். இருப்பினும் பல்வேறு காரணங்களால் அந்தப் பட முயற்சி தள்ளித்தள்ளிப் போனது. இந்நிலையில் பாரதிராஜா குற்றப்பரம்பரை படத்தின் படப்பிடிப்பை உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் தொடங்கியுள்ளார். 

No comments:

Post a Comment