Thursday 15 June 2017

ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்


          ஒருநாள் கௌதம புத்தர் பிக்சைக்கு சென்று கொண்டிருந்தார்.  அவர் உபதேசங்களில் உடன்பாடில்லாத ஒருவன் அவரைக் கண்டபடி ஏசினான். அவன் திட்டத் திட்டப் புன்னகை மாறாமல் புத்தர் சென்று கொண்டிருந்தார்.

       பின்னாலேயே வந்து திட்டி ஓயந்தவனுக்கு அவர் புன்னகை சகிக்க முடியாததாகவும் வியப்பைத் தருவதாகவும் இருந்தது. என்ன மனிதனிவர் என்று வியந்தவன் "ஏனய்யா இத்தனை நான் திட்டியும் கொஞ்சமும் சூடு சுரணை இல்லாத ஆளாய் இருக்கிறாயே?" என்று கேட்டான்.

      கௌதமர் அமைதியாகக் கேட்டார். "ஐயா, ஒரு பொருளை ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கையில் அவர் வாங்கிக் கொள்ள மறுத்தால் அப்பொருள் யாருக்குச் சொந்தம்?"

      "கொடுக்க முயன்றவருக்குத் தான் சொந்தம். இதிலென்ன சந்தேகம்?" என்றான் அவரைத் திட்டியவன்.

     "ஐயா. அது போல நான் தாங்கள் வழங்கிய ஏச்சுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே அதெல்லாம் தங்களுக்கே" என்று சொல்லிய கௌதமர் புன்னகை மாறாமல் அங்கிருந்து நகர, அவரைத் திட்டியவன் பேச்சிழந்து நின்றான்.

No comments:

Post a Comment