Monday 30 January 2012

தொன்போஸ்கோ



த்தாலி நாட்டில் 'மேல்மோன்பெராத்தா' என்னும் பகுதியில் உள்ள 'பெக்கி' என்னும் சிற்றூரில் பிரான்சிஸ் லூயி போஸ்கோ - மார்கரீத் ஒக்கியேனா தம்பதிக்கு 1815-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் நாள் தொன் போஸ்கோ பிறந்தார். அவரது இயற்பெயர் ஜான் போஸ்கோ. ( இத்தாலி மொழியில் 'தொன்' என்பதற்கு 'குரு' என்று பொருள். பின்னாளில் அவர் பாதிரியார் ஆன பிறகு 'தொன் போஸ்கோ' என்று அழைக்கப்பட்டார்)

    தொன் போஸ்கோவுக்கு ஜோசப் என்ற உடன் பிறந்த அண்ணனும், தந்தையின் முதல் தாரத்திற்குப் பிறந்த அந்தோணி என்ற மூத்த அண்ணனும் உண்டு. தமது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்த போஸ்கோவை, அவரது அன்னை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தெய்வ பக்தியில் பழக்கி வளர்த்தார். 

          ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த போஸ்கோவுக்கு கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருந்தது. ஆனாலும், கொடிய வறுமையை பொருட்படுத்தாமல் ஆடு, மாடு மேய்த்தும், கிடைத்த சிறு சிறு வேலைகளை செய்து, அதன் மூலம் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டும் கல்வி பயின்றார். அவருடைய லட்சியம் பாதிரியாராகி, ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படியே, 1841-ம் ஆண்டு ஜுன் மாதம் 5-ம் நாள் குரு பட்டம் பெற்று பாதிரியாரானார். அதே ஆண்டு டிசம்பர் 6-ம் நாள் அவருடைய துறவற வாழ்க்கையில் திருப்புமுனை நிகழ்ந்தது. அன்று அவர் தேவாலயத்தில் திருப்பலி பூசை நிறைவேற்ற தயாராகி கொண்டிருந்தபோது, 'பார்த்தலோமே காரெல்லி' என்ற அனாதைச் சிறுவனை கோயில் கணக்கர் அடித்துக்கொண்டிருந்தார். அவரைத் தடுத்து, அந்த சிறுவனை தனியே அழைத்து வந்து, அவனைப் பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்டார். தெருவில் அனாதையாக திரிந்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் தான், அவர் தொடங்கிய கல்வி மற்றும் சமுதாயப்பணியின் அடிக்கல். 

       அதன் பின்னர் தான் அவர், 'ஆரட்டரி' (இளைஞர் மன்றம் என்ற அமைப்பை ஏற்படுத்தி, உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க நிழலின்றி வீதிகள்தோறும் சுற்றித் திரிந்த அனாதை சிறுவர்களையும், இளைஞர்களையும் கூட்டி உணவு, உறைவிடம், உடை போன்றவற்றை அந்த இளைஞர்களுக்கு அளித்து, கல்வி, கைத்தொழில் ஆகியவற்றை கற்பித்து சமூத்திற்கு நல்ல குடிமக்களை உருவாக்கும் பணியை சிறப்பாகச் செய்யத் தொடங்கினார். 

      தான் தொடங்கிய பணி, தன்னோடு முற்றுப் பெற்றுவிடக் கூடாது என்று டான் போஸ்கோ விரும்பினார். அவரது அனாதை ஆசிரமத்தில் பயின்ற சில இளைஞர்கள் அவரைப் போலவே சேவை செய்ய ஆர்வம் கொண்டு பாதிரியாரானார்கள். அவர்களை கொண்டு, 1874-ம் ஆண்டு போப்பாண்டவரின் அனுமதியோடு 'சலேசிய சபை' என்ற அமைப்பை நிறுவினார்.தொன்போஸ்கோ ஏற்படுத்திய துறவற சபையைச் சேர்ந்த பாதிரியார்களும், கன்னியாஸ்தீரிகளும் உலகம் முழுவதும் இன்றுவரை அவருடைய கல்வியுடன் கூடிய சமுதாயப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். 

       இளைஞர்களுக்காகவே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த தொன்போஸ்கோ, 1888-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி தமது 72-வது வயதில் இவ்வுலகிலிருந்து விடைபெற்றுகொண்டார். 1934-ம் ஆண்டு போப் 11-ம் பத்திநாதர் தொன் போஸ்கோவுக்கு 'புனிதர்' (செயிண்ட்) பட்டம் வழங்கினார். 


        தொன்போஸ்கோ மறைந்து , 123 ஆண்டுகளாகியும் அவரது வலது கரம் இன்னும் அழியாமல் உள்ளது. அவரது வலது கரம் ஒருபேழையில் வைக்கப்பட்டு,  மெழுகு உடலின் நெஞ்சுப்பகுதியில் பொருத்தப்பட்டது. 

       வரும் 2015-ம் ஆண்டு தொன் போஸ்கோவுக்கு 200-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தொன் போஸ்கோவின் புனித கரம் வைக்கப்பட்டுள்ள மெழுகு வடிவ சிலை உலகம் முழுவதும் புனித பயணம் மேற்கொண்டு 130 நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.கடந்த ஆண்டு தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.   ஏராளமான மக்கள், அவரது உடலை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

          சிறுவர்களை முன்னேற்ற கல்வியால் மட்டுமே முடியும் என்பதை அறிந்த தொன் போஸ்கோ முறை சாரா கல்வி முறையை கொண்டு வந்தார். இம்முறையில் கல்வி பெற்ற இளைஞர்கள் தகுதியான வேலை வாய்ப்பு பெற்று சமுதாயத்தில் உயர்வு பெற வழி வகை செய்தார். தொன் போஸ்கோவின் கல்வி முறையை 130 நாடுகளில் முறையான கல்வியாகவும், முறைசாரா கல்வியாகவும் பின்பற்றப்படுகின்றது. 

ஜனவரி - 31 தொன்போஸ்கோ நினைவு நாள் 

2 comments:

  1. எனக்கு பிடித்தமான மனிதர் .....

    ReplyDelete
  2. எனக்கு பிடித்தமான புனிதரான மனிதர்....

    ReplyDelete