Tuesday 20 March 2012

இது மூக்கைப் பொத்துகிற சமாச்சாரம் அல்ல.


ஒரு மனிதன் சதை துணுக்குகளாய் சிதறிக்கிடந்த காட்சியை சில மாதங்களுக்கு முன் காண நேர்ந்தது என் வாழ்க்கையின் மிக உச்சபட்ச அதிர்ச்சி. வழக்கமான ஒரு காலை நேரத்தில் சைதாப்பேட்டை மார்க்கெட் சுரங்கப்பாதையை கடந்து அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் டிராக் அருகே பெருங்கூட்டம் ஒன்று கூடியிருந்தது. ஆர்வமிகுதியில் எட்டி பார்த்து, முதல் வரியில் உள்ள அதிர்ச்சியை அடைந்தேன். எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் ரயில் தண்டவாளத்தில், சில மீட்டர் தூரத்திற்கு மனித சதை துணுக்குகள் சிதறிக்கிடந்தது. விசாரித்தபோது, இயற்கை உபாதையை கழிக்க, அங்கே ஒதுங்கியபோது, ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்தது தெரிந்தது. 

தாம்பரம் சென்னை கடற்கரை இடையிலான ரயில் பாதை, மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பிடமாக, கழிப்பறை வசதியில்லாத, சென்னை நகரத்து அடித்தட்டு மக்களால் இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வப்போது, இதுபோன்ற விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படுகின்றன. சென்னையின் நீர்வழித்தடங்களின் ஓரம் வசிக்கும் அடித்தட்டு மக்கள் திறந்தவெளிக் கழிப்பிடங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.  அவர்களுக்கு வேறு வழியே இல்லை. 

இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைப்பாடு, வசிப்போரின் வாழ்க்கைத்தரம் ஆகியவைபற்றி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம் இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்துவோர் 49.8% பேர்.  கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டில் வசிப்போர் திறந்தவெளிகளைத் தங்கள் இயற்கையின்அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 3.2% பேர் மட்டுமே பொது கட்டணக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.  தேசிய அளவில் 49.8% பேர் திறந்தவெளியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 45.7% பேரின் நிலைமை அதுதான். இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன 
கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருப்பதற்கு, மக்களின் அறியாமை மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் அலட்சியமும் முக்கிய காரணம். 
சென்னையில் உள்ள கட்டணக் கழிப்பிடங்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவற்றை பயன்படுத்துவதற்கு பதிலாக, திறந்தவெளி கழிப்பிடங்களை பயன்படுத்துவதே ஆரோக்கியமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டியவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே பொதுக் கழிப்பறைகள் பயன்படுகின்றன. அவற்றில், குறைந்த பட்ச பராமரிப்பு கூட கிடையாது என்பது வெட்கக்கேடு. ஆனால், நாம் உள்ளே செல்வதற்கு முன்பாகவே, பணத்தை மட்டும் பிடுங்கிக்கொள்வார்கள். அதனால்தான் கட்டணக் கழிப்பறைகள் அருவருப்பான சூழலில் உள்ளன.



ஆட்சிகள் மாறும் போது, எழில் மிகு சென்னை என்றும், சிங்காரச் சென்னை என்றும் கோசங்கள் மாறுகின்றன.  எத்தனை ஆண்டுகளானாலும் சென்னையின் நிலையில் மட்டும் மாற்றமே இல்லை.  கோடிகளை கொட்டி, சமாதிகளை சீரமைப்பதைவிட, போதிய அளவில் கழிவறை வசதிகளை ஏற்படுத்தித் தருவது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.  ஆனால், அரசுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை கிடையாது. சந்துக்கு சந்து சரக்குக் கடைகளைத் திறந்து, குடிமக்களை குடி மக்களாக மாற்றுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது. 
ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும் குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட அரசாங்கத்தால் முடியவில்லை என்பது வெட்கக்கேடு. அப்புறம் எதற்கு  மாநகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளும்?

கொழுத்த பணக்காரர்கள் நடை பயிற்சி செய்ய பூங்காக்கள் உருவாக்குவதற்கும், நீர் வழித்தடங்களின் ஓரம் வசிக்கும் அடித்தட்டு மக்களை சென்னைக்கு வெளியே விரட்டுவதற்கும் தானா ?

பத்திரிகையில் படித்த சுவாரசிய செய்தி ஒன்று :

கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால் அங்கிருந்து வெளியேறி தாய் வீட்டுக்கு திரும்பிய இளம்பெண்ணுக்கு, சுத்தம், சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக டெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது. மத்தியப்பிரதேச மாநிலம் பீதுல் மாவட்டத்தில் உள்ள சின்சோலியை சேர்ந்தவர் அனிதாவுக்க கடந்த ஆண்டு மே மாதம்  திருமணம் நடந்தது.  கணவன் சிவராம் நாரேவுடன் ஜீதுதானா கிராமத்தில் உள்ள புகுந்த வீட்டுக்கு சென்ற அனிதாவுக்கு அதிர்ச்சி.  சிவராமின் வீட்டில் கழிப்பறை இல்லை. மேலும், அந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதி கிடையாது. கிராமத்தை சுற்றியிலும் உள்ள திறந்தவெளியைதான் கழிப்பறையாக பயன்படுத்தி வந்தனர். 

 இந்த திறந்தவெளி கழிப்பிட முறையை அனிதாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டிலேயே கழிப்பறை கட்டினால்தான் உங்களோடு வாழ்வேன் என்று சிவராமுடன் சண்டைபோட்டார்.  சிவராம் மறுக்கவே, அனிதா தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.  இந்த பிரச்னையால் திருமண வாழ்க்கையே முடிந்துவிடுமோ என்று பயந்த சிவராம்,  தன்னுடைய வீட்டில் கழிப்பறை கட்டியதோடு, கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்ட வேண்டும் என்று கிராம பஞ்சாயத்திடம் முறையிட்டார்.

அந்த கிராமத்தை சுலப் இன்டர்நேஷனல் நிறுவனம் தத்து எடுத்து, கழிப்பறைகளை கட்டியது.  கணவன் வீட்டுக்கு அனிதா திரும்பினார். கிராம மக்களிடையே சுத்தம், சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய அனிதாவை அந்த கிராமமே பாராட்டியது. சுலப் இன்டர்னேஷனல் நிறுவனம் வழங்கும் விருதுக்கு அனிதா தேர்வு செய்யப்பட்டு,  டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விருது வழங்கினார். 

2 comments:

  1. மிகவும் தேவையான ஒன்று.....

    பொது கழிப்பறை... கேவலமான பராமரிப்பு.. பார்த்தாலே பயம் வருகிறது...

    ReplyDelete
  2. உண்மை சுடும். கருத்தாழமிக்க அற்புதமான பதிவு. ஆனால், ஆவன செய்ய வேண்டுமே அரசு.
    - சைதை முரளி.

    ReplyDelete