Saturday 17 May 2014

முத்துக்கதை

பயம்

காட்டில் இளைஞன் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசித்தது. ஒரு மரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைப் பார்த்தான். உடனே வேகமாக மரத்தில் ஏறி, அதை ஆசையாகப் பறித்துத் தின்றான். பசி அடங்கவில்லை. கிளையின் நுனியில் இன்னும் சில பழங்கள் இருந்தன.
 அதைப் பறிக்க நுனிக்குச் சென்றான். பாரம் தாங்காமல், கிளை முறிந்தது. அவன் கீழே விழும் சூழல் உருவானபோது, சட்டென்று சுதாரித்து வேறொரு கிளை தாவிப் பிடித்து, அதில் தொங்கினான்.
 தரை வெகு கீழே இருந்ததால், குதிக்கவும் முடியாமல், மேலே ஏறவும் முடியாமல் அந்தரத்தில் அவன் தொங்கிக் கொண்டிருந்தான். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டான்.
 அந்த வழியாக வந்த முதியவர் ஒருவர், மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இளைஞனைப் பார்த்தார். கீழே குனிந்து ஒரு சிறு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தார். இளைஞனுக்குக் கோபம் வந்துவிட்டது.
 காப்பாற்றச் சொன்னால், கல்லால் அடிக்கிறீர்களே என்றான். முதியவர் பதில் பேசாமல், மற்றொரு கல்லை எடுத்து எறிந்தார். வலி தாங்காத இளைஞன், பெரும் முயற்சி செய்து, மற்றொரு கிளையை தாவிப் பிடித்துக்கொண்டு, கீழே வந்தால், உம்மை சும்மாவிட மாட்டேன் என்று எச்சரித்தான்.
 அதைக் காதில் வாங்காமல், பெரியவர் மேலும் ஒரு கல்லை எடுத்து எறிந்தார். இளைஞன், மீண்டும் முயற்சி செய்து, மற்றொரு கிளை மீது கால் வைத்து, மரத்தில் ஏறிவிட்டான். பின்னர், வேகமாக கீழே இறங்கி வந்து, ""உதவி கேட்டால், கல்லால் அடிக்கிறீரே, பைத்தியமா நீர்'' என்று பெரியவரை சரமாரியாகத் திட்டித் தீர்த்தான்.
 பெரியவர், ""தம்பி நான் உனக்கு உதவிதானே செய்தேன்'' என்றார். எப்படி என்றான் இளைஞன் குழப்பத்துடன். ""மரத்தில் நீ தொங்கிக் கொண்டிருந்தபோது, பயத்தால், நீ உறைந்துபோய் இருந்தாய். அதனால், உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை உன் மீது எறிந்தபோது, உன் பயம் மறைந்து, என்னை எப்படி பிடிக்கலாம் என்று யோசிக்கத் தொடங்கினாய். அதனால், பெரும் முயற்சி செய்து, யாருடைய உதவியும் இல்லாமலேயே நீ கீழே இறங்கிவிட்டாய். பயத்திலிருந்து உன்னைத் திசைதிருப்பி, நீ கீழே இறங்க உதவியிருக்கிறேனே'' என்றார்.
 இளைஞன் வெட்கித் தலைகுனிந்தான்.

ஜி.ஆரோக்கியதாஸ், சென்னை.

No comments:

Post a Comment