Saturday 17 June 2017

சிங்கத்தை தின்னும் மான்


      காட்டில் வழி தவறிய மான் ஒன்று தனது கூட்டத்தை தேடிக்கொண்டிருந்தது.  
அப்போது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்து பதறிய மான், இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது, அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் மானுக்கு ஒரு யோசனை தோன்றியது.
     
      உடனே, சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளைக் கடித்து சுவைப்பது போல நடிக்கத் தொடங்கியது. சுவைத்து கொண்டே சிங்கத்தின் காதில் விழுமாறு சத்தமாக, “ஆஹா சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், வயிறு நிறைந்து விடும்" என்றது.
      
      இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த  மான் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து, தப்பினால் போதும் என்று அங்கிருந்து ஓடியது. இதையெல்லாம் மரத்தின் பின்னால் ஒளிந்து நின்று நரி ஒன்று  பார்த்துக் கொண்டிருந்த்து.

    ‘சிங்கத்தை ஏமாற்றிய இந்த மானை, சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நட்பை பெறலாம், அதனால் காட்டில் பயமின்றி வாழலாம்’ என்று திட்டம் போட்டது. உடனே சிங்கத்திடம் சென்ற நரி,  மான் செய்த தந்திரத்தை எடுத்துக் கூறியது.  

    நரி சொன்னதைக் கேட்டு கோபம் கொண்ட சிங்கம், "இப்பொழுது அந்த  மானை என்ன   செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று  நரியை முதுகில் ஏற்றிக் கொண்டு மான் இருந்த இடத்தை நோக்கி சென்றது.

      தன்னை நோக்கி சிங்கம் வருவதைப் பார்த்த மான், ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்ந்தது. எனவே,  முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த நரியை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.


      இதை கேட்ட சிங்கம், ‘ஆஹா, தந்திரக்கார நரி, நம்மை ஏமாற்றி, சிங்கத்தை தின்னும் மானிடம் அல்லவா அழைத்துச் செல்கிறது’ என்று கோபம் கொண்டு, நரியை அடித்து துவைத்துவிட்டு,  திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. தனது புத்திசாலித்தனத்தால் சிங்கத்திடமிருந்து தனது உயிரை காத்துக் கொண்ட மான், தனது கூட்டத்தோடு போய் சேர்ந்தது. 

1 comment:

  1. நல்ல தந்திரம் அறிந்த மான்குட்டி.

    இந்த கதையை கார்டூன் படமாக வரைந்து உருவாக்க போகிறேன்.

    நன்றி.

    ReplyDelete