Friday 6 March 2015

தெரியுமா இவரை - 3 சார்லி சாப்ளின்


வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள், எனவே, நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பவர்கள் மருத்துவர்களுக்கு சமம் எனலாம். உலகில் அதிக மக்களை சிரிக்க வைத்தவர், நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். ஊமைப்படங்கள் மட்டுமே வெளிவந்த கால கட்டத்தில் மொழியின் துணையின்றி, தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்.

சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின் 1889 ஏப்ரல் 16 -ம் தேதி லண்டனில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் ஏழை மேடை இசை கலைஞர்கள். கிடைக்கும் சொற்ப வருமானத்தை குடித்தே அழித்தார் அவரது தந்தை. எனவே, நடக்க பழகும் முன்பே நடனமாடவும் பாட்டு பாடவும் கற்பிக்கப்பட்டான் சிறுவன் சாப்ளின். 5 வயதில் அவனுக்கு முதல் மேடை அரங்கேற்றம். 

அடுத்து தந்தையும் தாயும் பிரிந்தனர். குடித்து குடித்தே தந்தை இறந்து போனார். தாயாருக்கு அடிக்கடி உடல் நலமின்றி போனது சாப்ளினும் அவரது அண்ணன் சிட்னியும் அநாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். 7 வயதானபோது சாப்ளின் ஒரு இசைக்குழுவில் சேர்ந்து பணியாற்றினார் ஆனால் அந்த குழு ஓராண்டில் கலைக்கப்பட்டது. அண்ணன் சிட்னி கப்பலில் வேலை பார்க்க சென்று விட்டதால் சில ஆண்டுகளை தனிமையில் கழித்தார் சாப்ளின். 14 ஆவது வயதில் மேடை நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பத்திரிகைகள் அவரது நடிப்பை பாராட்டின. பின்னர் சாப்ளினும் அண்ணன் சிட்னியும் புகழ்பெற்ற ஃபெட்கானோ குழுவில் சேர்ந்தனர் அந்த குழு அமெரிக்காவுக்கு சென்று மேடை நாடகங்களை நடத்தியது. 

1913 ஆண்டு 24 ஆவது வயதில் 'கி ஸ்டோன் பிலிம் ஸ்டுடியோ' என்ற அமெரிக்க திரைப்பட நிறுவனம் சாப்ளினுக்கு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியது. சாப்ளின் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார் 'மேக்கிங் எ லிவிங்' என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு கருப்பு கோட்டும் பெரிய தொப்பியும் நீர் யானை மீசையும் கண்ணாடியும் அணிந்து நடித்தார் பின்னாளில் அதுவே சாப்ளினின் அடையாளமானது. தனது 25 ஆவது வயதிலேயே  முதல் திரைப்படத்தை இயக்கினார் சாப்ளின் அதன்பிறகு பல படங்கள் அவரது கைவண்ணத்தில் உருவாகின. 

வெற்றிகரமான திரைப்பட நடிகராக இருந்த சாப்ளினுக்கு சொந்த வாழ்க்கை சோகமாகவே இருந்தது. 1918 ஆம் ஆண்டு 16 வயது நடிகை மேன்றோ ஹெரிசை காதலித்து மணந்து கொண்டார் அடுத்த ஆண்டு அவர்களுக்கு பிறந்த குழந்தை மூன்றே நாட்களில் இறந்து போனது. பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 1924 ல் மீண்டும் ஒரு நடிகையை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் இரண்டு குழந்தைகள் பிறந்தாலும் அந்த திருமணம் மூன்று ஆண்டுகள்தான் நீடித்தது. அதன் பின்னர் பாலத் கடாட் என்ற நடிகையை மணந்து கொண்டு அவரையும் விவாகரத்து செய்தார். இறுதியாக உனா உனில் என்ற பெண்ணுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தார். அவர்களுக்கு ஏழு பிள்ளைகள் பிறந்தன. 

சாப்ளினின் முதல் முழு நீள திரைப்படமான தி கிட் 1921 ல் வெளிவந்தது. அதில் தனது ஆரம்ப வாழ்கையை சித்தரித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாப்ளினுக்கு பெரும் புகழை சேர்த்தது. 1925 ல் 'தி கோல்ட் ரஷ்' என்ற அவரது படம் வெளியாகி சாப்ளினின் புகழை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதன் பிறகு பல புகழ்பெற்ற படங்களை தந்தார் சாப்ளின் பல ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்தும் அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை விட்டு கொடுக்க வில்லை. மேலும் அவர் கம்யூனிஷ்டுகளை ஆதரிப்பவர் என்ற சந்தேகம் அமெரிக்காவில் நிலவியது அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையை திசை திருப்பியது.

1951 ல் 'தி லைம் லைட்' என்ற புகழ்பெற்ற படத்தை தந்த சாப்ளின் அது வெளியான பிறகு தனது மனைவி பிள்ளைகளுடன் விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றார் அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சாப்ளின் இனி மீண்டும் அமெரிக்காவுக்கு நுழைய முடியாது என்று அறிவித்தது. மனம் தளராத சாப்ளின் சுவிட்ஷர்லாந்தில் குடியேறி தொடர்ந்து படம் செய்ய ஆரம்பித்தார். 1964 ஆம் ஆண்டு தனது சுய சரிதையை வெளியிட்டார். 1967 ல் அவர் இயக்கிய கடைசிப்படம் வெளிவந்தது 1972 ஓர் அதிசயம் நிகழ்ந்தது திரைத்துறையில் பல உன்னத படைப்புகளை தந்தவர் என்பதையும் மறந்து எந்த தேசம் அவரை தனது எல்லைக்குள் மீண்டும் நுழைய கூடாது என்று கட்டளையிட்டதோ அதே அமெரிக்க தேசம் 20 ஆண்டுகள் கழித்து சாப்ளினை மீண்டும் திறந்த கைகளுடன் வரவேற்றது.

அதே ஆண்டில் அவருக்கு அமெரிக்காவில் அகாடமி விருது விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 1974 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டார் சாப்ளின் அதற்கு அடுத்த ஆண்டு அவருக்கு சர் பட்டம் வழங்கி கவுரவித்தார் எலிசபெத் ராணியார். 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88 ஆவது வயதில் காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே கற்றுக் கொண்டிருந்த உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது.



No comments:

Post a Comment