Monday 23 March 2015

தெரியுமா இவரை - 5 அலெக்ஸாண்டர் ப்ளமிங்


பெனிசிலின் என்ற அற்புத மருந்தை உலகிற்கு தந்ததன் மூலம் மருத்துவ உலகின் தலையெழுத்தையே மாற்றி அமைத்தவர் அலெக்ஸாண்டர் ப்ளெமிங்.

1881 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி ஸ்காட்லந்தில் லாக்ஃபில் நகரில்  விவசாய குடும்பத்தில் அலெக்ஸாண்டர் ப்ளமிங் பிறந்தார். ஆரம்பக் கல்வியை முடிந்த அவர், ஒரு நிறுவனத்தில் கணக்கராகச் சேர்ந்து 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதில், கொஞ்சம் பணத்தை சேர்த்த்து, தமது 20 வயதில்  லண்டனில் உள்ள புனித  மேரி மருத்துவ பள்ளியில் சேர்ந்து மருத்துவம் பயின்றார். 

டைபாய்டு காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த சர் ஆம்ராத் எட்வர்ட் ரைட் என்பவர் ப்ளெமிங்கிற்கு பேராசிரியராக இருந்தார். 1906 ஆம் ஆண்டு மருத்துவத்தில் சிறப்பு தேர்ச்சி பெற்று அந்த பேராரசிரியரிடமே உதவியாளராக சேர்ந்தார் ப்ளமிங். பின்னர், பாக்டீரியா கிருமிகளைப்பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், முதல் உலகப்போரில்  இராணுவ மருத்துவ குழுவில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது, போரில் காயமடைந்து, சரியான மருந்து இல்லாமல் மடிந்துபோன வீரர்களின் நிலை அவரை கலங்க வைத்தது.

அந்தக் காலக்கட்டத்தில் கார்பாலிக் அமிலம்தான் கிருமிக்கொல்லியாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அந்த அமிலம் கிருமிகளைக் கொன்றாலும், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களையும் அழித்தது. முதலாம் உலகப்போரில் சுமார் 70 லட்சம் வீரர்கள் காயமடைந்து உயிரிழந்தனர். அப்போது சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்ட கார்பாலிக் அமிலம் உரிய பயனைத் தரவில்லை என்பதை ப்ளமிங்கும் அவரது பேராசிரியரும் உணர்ந்தனர். உலக போர் முடிந்த கையோடு மீண்டும் தன் ஆய்வுக்கூடத்திற்கு திரும்பினார் ப்ளெமிங். கிருமிகளை கொல்லும் மருந்துத்தை உருவாக்குவதற்காக பலவகை கிருமிகளை வளர்த்து அவற்றின் மீது சோதனை செய்தார் ப்ளெமிங். 

1928 ஆம் ஆண்டு லண்டனில் இலையுதிர் காலம் தொடங்கும் முன் இரண்டுவார விடுமுறைக்காக புறப்பட்டார் பிளமிங். அதற்கு முன் அவர்,  ஆய்வுக்கூட வட்டில், நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும்  ஸ்டெபிலோ காக்கஸ் என்ற கிருமியை சேமித்து வைத்துவிட்டு சென்றார். விடுமுறை முடிந்து வந்து பார்த்தபோது அந்த வட்டில் பூசனம் பூத்திருப்பதை பார்த்தார். அந்த பூசனம் படர்ந்திருந்த இடங்களில் கிருமிகள் கொல்லப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். 

அந்த பூசனம் பெனிசிலியம் என்ற ஒருவித காளான் என்பது தெரிய வந்தது. அந்தக் காளானைக் கொண்டு பல்வேறு ஆய்வுகள் செய்தார் அதன் விளைவாக கிடைத்த அருமருந்துதான் பெனிசிலின். இரண்டாம் உலகப்போரின்போது அதிக அளவில் பெனிசிலின் உற்பத்தி செய்யப்பட்டு காயமடைந்த போர் வீரர்களுக்கு பயன்படுத்தப்பட்டது. அதன் பயனாக லட்சக் கணக்கான உயிர்கள் காக்கப்பட்டன. நோய் தொற்று அபாயம் ஏற்படுமே என்று அதுவரை அறுவை சிகிச்சை செய்ய தயங்கிய மருத்துவ உலகம் பெனிசிலின் வரவுக்கு பிறகு தைரியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டது.

பெனிசிலினுக்குப் பிறகு எத்தனையோ வேறுவித ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவற்றுக்கு அஸ்திவாரம் போட்டது பெனிசிலின்தான். அந்த உயிர்காக்கும் கண்டுபிடிப்புக்காக 1945 ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை கொடுத்து  தனது நன்றியை தெரிவித்துக்கொண்டது உலகம்.

ஒரு மனிதனின் விடாமுயற்சியால் கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் எண்ணிலடங்கா உயிர்கள் காப்பாற்றப் பட்டிருக்கின்றன. விலைமதிக்க முடியாத மருந்தை உலகுக்கு தந்த ப்ளெமிங் 1955-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி லண்டனில் காலமானார். 

No comments:

Post a Comment