Monday 23 April 2018

தெரியுமா இவரை - 18 சாமுவேல் ஹானிமன்

ஆங்கில மருத்துவத்தில் எம்.டி. பட்டம் பெற்ற ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையே ஹோமியோபதி மருத்துவம். ஜெர்மனியின் மிசென் நகரில் ஏழ்மையான குடும்பத்தில் ஏப்ரல் 10, 1755 – ம் ஆண்டு பிறந்தார். 

லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று, வியன்னாவின் எர்லேங்கன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று, சிறந்த மருத்துவராகப் பணியாற்றினார். 

ஆங்கில மருத்துவம் மூலம் நோயாளிகளை முழுமையாக குணப்படுத்த முடியாமலும், அதற்காக உடகொள்ளும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதும் அவருக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தின. இதனால், வெறுத்துப்போன ஹானிமன், மருத்துவத் தொழிலை விட்டு விலகி, புத்தகங்களை மொழி பெயர்க்கும் தொழிலை மேற்கொண்டார். 

வில்லியன் கலின் என்ற புகழ்பெற்ற மருத்துவரின் நூலை மொழிபெயர்க்கும்போது, சின்கோனா மரப்பட்டையின் மருத்துவ குணம் பற்றி அறிந்தார். சின்கோனா மரப் பட்டைகளில் உள்ள கசப்புத் தன்மை மலேரியா காய்ச்சலை குணமாக்கும் என்ற வாசகம் அவரது கவனத்தைக் கவர்ந்த்து.  இதுதொடர்பான ஆய்வில் இறங்கிய ஹானிமன், சின்கோனா மரப்பட்டைச் சாறைக் குடித்து தமது உடலில் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டார். பின்னர், அதிக வீரியம் கொண்ட அதே மரப்பட்டைச் சாறைக் குடித்து காய்ச்சலை குணமாக்கிக் கொண்டார். தொடர்ந்த ஆய்வுகள் மூலம், ‘எது ஒன்றை உருவாக்கும் தன்மை உடையதோ அது தான் அழிக்கும் ஆற்றல் கொண்டது’. இதனைக் கொண்டு ‘லைகாஸ்கேர்லைகாஸ்’ என்ற தத்துவத்தினை உருவாக்கினார். 

விஷத்தன்மை கொண்ட மருந்துகளை தண்ணீர் ஆல்கஹால் போன்றவற்றில் நீர்த்துப்போக செய்து ஆய்வு செய்தபோது முன்பைவிட அதிக அளவில் அறிகுறிகள் கிடைத்தது. இவ்வாறு நீர்த்துப் போகும் நுட்பமான அளவுகளின் வீரியமூட்டும் முறையையும் கண்டறிந்தார். இதன் அடிப்படையில் 1796-ம் ஆண்டு ‘ஓமியோபதி’ என்ற மருத்துவ முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஒத்தநோய் அறிகுறிகளை ஒத்த மருந்துகளால் (முள்ளை முள்ளால் எடுப்பது) இயற்கையான முறையில் நோய்களை குணப்படுத்துவது இம்மருத்துவ முறையின் அடிப்படைத் தத்துவமாகும். பக்க விளைவுகளோ, பத்தியமோ இல்லாத இந்த மருத்துவமுறையில், நோயின் தன்மைக்கேற்ப உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு. 

1807-ல் எழுதிய நூலில் தன் மருத்துவ முறையைக் குறிப்பிட ‘ஹோமியோபதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார். பின்னர், அவர் உருவாக்கிய மருத்துவமுறை ஹோமியோபதி மருத்துவமுறை என்று அழைக்கப்பட்டது. தனி மனிதனாக சுமார் பாடுபட்டு, ‘ஹோமியோபதி’ என்ற புதிய மருத்துவ முறையை உலகுக்கு வழங்கிய சாமுவேல் ஹானிமன் 88-வது வயதில் 1843-ம் ஆண்டு மறைந்தார். இவரது பிறந்த தினம் சர்வதேச ஹோமியோபதி மருத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment