Saturday 21 April 2018

தெரியுமா இவரை – 17 சார்லி சாப்ளின்




ஹாலிவுட்டின் தன்னிகரற்ற கலைஞரும், உலகுக்கே நம்பிக்கையையும் நகைச்சுவையையும் வாரிவழங்கியவரு மான சார்லி சாப்ளின் லண்டனில் உள்ள வால்வோர்த் என்ற இடத்தில் ஏப்ரல் 16, 1889-ம் ஆண்டு பிறந்தார்.  

பெற்றோர் இசை அரங்குகளில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர். குடிப்பழக்கத்தால் சீரழிந்த தந்தை குடும்பத்தை விட்டுப் பிரிந்து போக, தாய் மனநல பாதிப்புக்கு ஆளானார். எனவே, பிழைப்புக்காக 5 வயதிலேயே மேடையேறினார். அவரது தயார் கடைசியாக ஏறிய மேடையே, அவருக்கு முதல் மேடையாகவும் அமைந்தது. 12-வது தந்தை இறந்த போக, தாயார் நிரந்தரமாக மனநலம் பாதிக்கப்பட்டார். 

சகோதரருடன் அனாதை இல்லத்தில் வளர்ந்தார் சாப்ளின்.  14 வயதில் மேடை நாடகங்கள் மூலம் அவரது கலையுலகப் பயணம் தொடங்கியது.
அகதியாக  கார்னோ என்ற நாடக குழுவுடன் அக்டோபர் 2, 1912- அன்று அமெரிக்கா சென்றார். நாடகங்களில் நடித்தபடியே சினிமா வாய்ப்புத் தேடிய அவர், கீ ஸ்டோன் சினிமா நிறுவனத்தில் சேர்ந்தார். அவர் நடித்த 
முதல்  மவுனத் திரைப்படம் ‘மேக்கிங் ஏ லிவிங்’ 1914-ம் ஆண்டு வெளியானது.

 ‘கிட் ஆட்டோ ரேசஸ்’ என்ற இரண்டாவது படத்தில் தொள தொள கால் சட்டை, சிறிய கோட்டு, ஹிட்லர் மீசை, சின்னத் தொப்பி, சிறு தடி’ என்ற இந்த கெட்டப்பில் தோன்றிய கோமாளி கனவான் வேடத்தைப் பார்த்து உலகமே விழுந்து விழுந்து சிரித்தது. பரிதாபத்தையும், சிரிப்பையும் ஒன்றாக வரச்செய்யும்  இந்த தோற்றமே அவரது நிரந்தர அடையாளமாகவும் மாறிப்போனது. அதன் பின்னர் அவரது கலையுலக வாழ்க்கை ஏறுமுகமாகவே இருந்த்து. ஒரே ஆண்டில் 35 திரைப்படங்களில் நடிக்கும் அளவுக்கு பிசியான நடிகரானார். 

அவர் நடித்த அத்தனைப் படங்களும் சாதனைகள் படைத்தன. ஸ்லாப்ஸ்டிக் காமெடி எனப்படும் உடல் மொழி மற்றும் பாவனைகளால் உலக மக்களை குலுங்கிக் குலுங்கி சிரிக்க வைத்தார்.

வெறும் நடிப்புடன் நிறுத்திக்கொள்ளாமல், கதை, வசனம், இயக்கம், இசை, படத்தொகுப்பு நடனம், தயாரிப்பு என திரையுலகில் அத்தனை துறைகளிலும் கோலோச்சினார் சாப்ளின். அவரது படங்கள் நகைச்சுவை 
தோரணங்களாக இல்லாமல் ஏழைகளின் பரிதாப வாழ்க்கையும்,  முதலாளிகளின் பேராசையையும் விமர்சித்தன. பொங்கி பிரவாகமெடுக்கும் சிரிப்பும், மெலிதாக இழையோடும் சோகமும் கொண்ட அற்புத காவியங்கள் அவரது படங்கள்.

இரண்டு முறை ஆஸ்கர் சிறப்பு விருதுகளை வென்ற சாப்ளினுக்கு  இங்கிலாந்து அரசு 1985-ம் ஆண்டு அஞ்சல் தலைவெளிட்டு கௌரவித்த்து. தனித்துவமான நகைச்சுவையால் உலகையே கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் தனிப்பட்ட வாழ்க்கை சோகங்களால் சூழப்பட்டது.

“நான் மழையில் நனைய ஆசைப்படுகிறேன், நான் அழுவது உலகுக்கு அப்பொழுதுதான் தெரியாது!” என்பது சார்லி சாப்ளின் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம்.

நான்கு முறை திருமணம் செய்த சாப்ளினுக்கு முதல் மூன்று திருமணங்கள் தோல்வியில் முடிந்தன. தமது 29-வது வயதில், 17 வயதான நடிகை மில்ட்ரெட் திருமணம் செய்த சாப்ளினுக்கு இரண்டே ஆண்டுகளில் மணமுறிவு ஏற்பட்டது. அவர்களுக்கு பிறந்த குழந்தையும் 3 நாட்களில் இறந்தது.

பின்னர், 16 வயது நடிகை லிடா கிரேவை இரண்டாவது மனைவியாக ஏற்றுக்கொண்டபோது சாப்ளினுக்கு வயது 35. இந்த திருமணமும் தோல்வியில் முடிந்த்து. 2 குழந்தைகள் பிறந்த பிறகு, லிடா கிரேக்கும் சாப்ளினுக்கும் ஒத்துப் போகவில்லை. குழந்தைகளுடன் பிரிந்து சென்ற லிடா கிரே, பின்னர் சட்டப்பூர்வமாக விவகாரத்து பெற்றார்.

பின்னர், 21 வயது பவுலட் கோர்ட் என்கிற நடிகையுடன் நெருக்க மாகப் பழகிய சாப்ளின், அவரை திருமணம் செய்து கொண்டார்.  அப்போது சாப்ளி னுக்கு வயது 43. இந்த வாழ்க்கையும் அவருக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. 

நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த 16 வயது ஊனா ஓநில் என்கிற பெண்ணை சாப்ளின் 4-வது திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 54. சாப்ளின் கடைசிவரை ஒற்றுமையாக வாழ்ந்த ஓநிலைப் பற்றி தன் சுயசரிதையில் ‘அவருடன் ஏற்பட்டது மட்டுமே மிகச் சரியான காதல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தம்பதி 8 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

1952-ல் அமெரிக்காவைவிட்டு வெளியேறிய சாப்ளின், சுவிட்சர்லாந்தில் குடியேறினார். 1972-ல் வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுக்கொள்ள அகாடமி அழைத்தது. தயக்கத்துக்குப் பிறகு அழைப்பை ஏற்று அமெரிக்கா வந்த சாப்ளினுக்கு அரங்கில் அத்தனை பேரும் எழுந்து நின்று இடைவிடாமல் 12 நிமிடங்கள் கை தட்டினார்கள். இது ஆஸ்கர் விருது விழா வரலாற்றில் மிகவும் நீளமான கை தட்டலாகும்.

சாப்ளின் 1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது 88-வது வயதில் இறந்தார். இவரது உடலை வாட் நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். ஆனால், அங்கும் அவரால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.

மார்ச் 1, 1978-ம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள்.

No comments:

Post a Comment