Thursday, 2 February 2012

பகை வளர்ப்போம்.


  கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவான்மியூர் சிக்னல் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில், நம்மூர் இளம் பெண்கள் இரண்டு பேர் சிகரெட்டை வாங்கி, சிம்னி விளக்கில் பற்ற வைத்து ஊதிக் கொண்டே சென்றதைப் பார்க்க நேர்ந்தது. திரைப்படங்களில் மட்டுமே அதுவும் வெள்ளைக்கார பெண்கள் சிகரெட் பிடித்துப் பார்த்திருக்கிறேன். (இன்றைய தேதி வரை ஒரு சிகரெட்டின் விலை என்னவென்று கூட எனக்கு தெரியாதாக்கும்) ஆண்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கையில் ஆறாவது விரலைப் போல எந்நேரமும் சிகரெட் புகைந்துக்கொண்டே இருக்கிறது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதற்கு தடை இருந்தும், அடுத்தவரைப் பற்றி கவலைப்படாமல் பழைய ரயில் இஞ்ஜின்கள் போல புகை விடுபவர்களை என்னவென்று சொல்ல? 

  புகைப்பதற்கென்று விதவிதமான காரணங்கள் உலா வருகின்றன. பெண்களை கவர்வதற்காக, (சிகரெட் பிடிப்பவன் தான் உண்மையான ஆண்மகன் என்று பெண்கள் நம்புவதாக கேள்வி), மனக் கவலைகளைப் போக்க, டென்ஷனை குறைக்க, சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக, காலைக் கடன்களை எளிதாக முடிக்க என்று பலவிதமான விநோதமான காரணங்கள். (எப்படியெல்லாம் சிந்திக்கிறாய்ங்க..) ஆனால், இவை எல்லாமே ஜமுக்காளத்தில் வடி கட்டின மூட நம்பிக்கைகள். 

       மாறாக புகைப்பவர்களின் ஆயுள் 5 முதல் 8 ஆண்டுகள் வரை குறைவதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு சிகரெட்டை முழுமையாக புகைப்பவர்களது ஆயுள் 14 நாட்கள் குறைகிறதாம். இதைவிட முக்கியமாக, புகைப்பிடிப்பவர்களில் 60 சதவீதம் பேர் புற்று நோய்க்கு ஆளாகின்றராம். 

   புற்றுநோயை உற்பத்தி செய்வதில் புகையிலைப் பொருட்களுக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. மெல்லும் வகை புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 90 சதவீதம் வாய்ப்புள்ளதாம்.  இதேபோன்று, புகைக்கும் வகை புகையிலைப் பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளதாம். இதைத் தவிர, ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை போன்றவையும் ஏற்படுமாம். 

   ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.2 கோடி பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 70 லட்சம் பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைகின்றனர். இந்தியாவில், ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் ஏற்படுவதற்கு 60 சதவீத காரணம் புகைப்பது. 

     உலகிலேயே புகையிலையை உற்பத்தி செய்வதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.  சிகரெட், பீடி, சுருட்டு எல்லாமே புகையிலையிலிருந்து தயாரிக்கப்படுபவை. புகையிலையில் 'நிக்கோடின்' என்ற மிகக் கொடிய விஷம் அடங்கியுள்ளது. ஒரு சிகரெட்டில் 8 முதல் 20 மி.கி. வரை நிக்கோடின் அடங்கியுள்ளது. இரண்டு சிகரெட்டுகளில் அடங்கியுள்ள நிக்கோடினை நேரடியாக ரத்தத்தில் செலுத்தினால், உடனடியாக மரணம் நேரிடும். ஆனால், சிகரெட் புகைக்கும் போது, பெரும்பான்மையான நிக்கோடின் காற்றில் கரைந்துவிடுகிறது. நான்கில் ஒரு பங்குதான் உடலுக்குள் செல்கிறது. இப்படித்தான், மனித உடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு உள்ளே செல்கிறது. 

          நரம்பு மண்டலத்தின் மிக முக்கியமான பகுதி மூளை. இந்த மூளையானது உட்புறமும், வெளிப்புறமும் மிக நுட்பமான சுவர்களால் பாதுகாக்கப்படுகிறது. இந்த நுண்சுவர்களைக் கடந்து உள்ளே நுழைய மூன்று நுண் துளைகள் உண்டு. வேறு எந்த பொருளும் இதன் வழியே உள்ளே நுழைய முடியாது. ஆனால், 'நிக்கோடின்' மிக எளிதாக நுழைந்து மூளையைத் தாக்குகிறது. 
புகைபிடிப்பதால் ரத்த அழுத்தமும், இதயத்துடிப்பும் அதிகரிக்கிறது. பசி உணர்வு குறைந்து போய்விடுகிறது. புகைப்பிடிப்பவர்களை, மூச்சுக்குழல், நுரையீரல் புற்றுநோய் எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம். ஏனென்றால், ஒவ்வொருமுறை புகையை உள்ளிழுக்கும் போதும்,  'கார்பன் மோனாக்சைடு' என்ற விஷ வாயு உள்ளே செல்கிறது. 

    புகை, மது போன்ற போதை வஸ்துகளுக்கு மிக எளிதாக இலக்காவது இளைய தலைமுறையினர். நண்பர்களுடன் இருக்கும்போது, ஜாலிக்காக ஆரம்பிக்கும் இந்த பழக்கங்களுக்கு ஒரு கட்டத்தில் அவர்கள் அடிமையாகிப் போகின்றனர். இன்னும் சிலர், 'ரிலாக்ஸ்' செய்துகொள்ள என்று போதை வஸ்துகளை நாடுகின்றனர். ஆனால், இது மனித உடலுக்கும், மனதுக்கும் எந்தவிதமான நன்மையை தருவதில்லை. மாறாக நோய்களையே உண்டாக்குகிறது. எனவே, புகைக்கு எதிராக பகையை வளர்ப்போம். 

'கவலையை மறக்க மதுவை நாடாதீர்கள். கடினமான வேலையை நாடுங்கள். தொழிலில் வளர்வதைவிட போதையான விஷயம் வேறு இல்லை' - எமர்ஸன் 

    பிப்ரவரி - 4  சர்வதேச புற்றுநோய் எதிர்ப்பு தினம் 

No comments:

Post a Comment